சிறுகதை – காதல்!

ஓவியம்; லதா
ஓவியம்; லதா

-கிருஷ்ணா

"ஸ்ரீதர், உங்களோடு பேசணும்" என்று குறுக்கிட்டவளை வியப்போடு பார்த்தேன்.

இன்று மாலை மாப்பிள்ளை கோலத்தில் காரில் ஊர்வலம் வரப்போகும் என்னிடம் இவளுக்கு என்ன அப்படி முக்கியமான பேச்சு இருக்கும்? புரியாமல் சுதாவைப் பார்த்தேன்.

"ப்ளீஸ், எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்குங்க. நான் தனிமையிலே உங்களோட பேசணும்" என்று கண்களை விரித்துக் கெஞ்சியவளைத் தட்ட முடியாமல் நின்றேன்.

அருகில் கோயில் இருந்ததால் அதற்குள் நுழைந்து ஒதுக்குப்புறமாய் அமர்ந்தோம். இப்போது யாராவது என்னை இவளுடன் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற பயம் தோன்றியது. நாளை நான் பூமாவின் கணவன். இன்று இவளுடன் இப்படித் தனியாக வந்தது தவறில்லையா...?

"ப்ச்!" என்ற அலுப்பு மனசுக்குள் ஓடியது.

இவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எத்தனை முறை முயன்றிருப்பேன்.  இவளைக் காதலித்து என்னமாய் உருகியிருக்கிறேன்... அப்போதெல்லாம் நிராகரித்துவிட்டு, இப்போது வேளை கெட்ட நேரத்தில் என்ன பேச்சு என்னிடம் இவளுக்கு....?

"ஸ்ரீதர்"என்று அழைத்தவளை நேராகப் பார்த்தேன்.

முகம் குழைந்து கண்ணில் நீர் திரண்டிருந்தது.  என்ன அழகான முகம், ஓவியம்போல...!

"சட், இது தப்பு" என்று மனம் எச்சரித்தது.

"நான் ஒரு முட்டாள்,  ஸ்ரீதர்" என்றவளை வியப்போடு பார்த்தேன்.

"நீங்க என்னைச் சுற்றிச் சுற்றி வந்தப்ப அலட்சியப் படுத்தினேன். அது என் கர்வத்தினால்தான்.  என் பின்னாடியும் ஓர் இளைஞன் அலையறான் பாருன்னு தோழிகளிடம் அலட்டிக்கத்தான் அப்படி செஞ்சேன். நீங்க என்னைத் தொடர்ந்து வந்ததைத் தொந்தரவுன்னு சொன்னேன். வேற வேலை இல்லாத வெட்டிப்பயல்னு கிண்டல் கூட செஞ்சேன்......".

அவள் சொன்ன அவமானங்களை எல்லாம் தாங்கியும் அவளைக் காதலித்தேன். ஆனால், எதற்கும் ஒரு கால அளவு உண்டல்லவா? வீட்டில் பெற்றோர் அவசரப்படுத்தவே, மனதைக் கஷ்டப்பட்டுத் திசை திருப்பி இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தேன்.

"ஆனால் ஸ்ரீதர், நீங்க என்னை விட்டுட்டு வேற பெண்ணைத் திருமணம் செஞ்சுக்கப் போறது தெரிஞ்சதும் மனசுக்குள்ளே கனம். என்னோட அலட்சியமும், கர்வமும் என்னைக் குடைய ஆரம்பிச்சது. என்னை அறியாமலேயே உங்களை நான் காதலிக்கற உண்மையை உணர்ந்தேன். ஆனாலும் மனசைக் கட்டுப்படுத்திக்க முயன்றேன். நான் எவ்வளவு பிடிவாதமா உங்களை மறக்க முயல்கிறேனோ, அதைவிட அதிகப் பிடிவாதமா என் உள்ளம் உங்க மேலே அன்பு செலுத்தறது புரிஞ்சது. என்னோட இத்தனை நாள் அலட்சியம், போலியாப் போட்டுக்கிட்ட வேலின்னு புரிஞ்சது."

இதையும் படியுங்கள்:
எலெஃபென்ட் ஆப்பிள் என்பது என்னவென்று தெரியுமா?
ஓவியம்; லதா

"சுதா, உணர்ச்சிவசப்படாதே. யதார்த்தமாய் யோசி. நாளைக்கு நான் பூமாவை கைப்பிடிக்கப் போறேன். பத்திரிகை அடிச்சு, எல்லா ஏற்பாடும் முடிஞ்சிடுச்சு. பெண் வீட்டுக்காரங்க இத்தனை நேரம் கல்யாண மண்டபத்துக்குக்கூட போயிருப்பாங்க. இந்த நிலைமையிலே நான் எப்படி பின் வாங்கறது?"

"மற்றவர்களை விடுங்க. நீங்க என்னை விரும்பறீங்களா, இல்லையா?" என்றவளின் கண்ணோடு கண் நோக்கினேன்.

பெருமூச்சு விட்டேன்.

"இதோ பாருங்க, நான் பேசறேன் பெண்ணைப் பார்த்து. இரண்டு பக்கத்துப் பெற்றோர்களிடமும் நானே பேசிச் சம்மதிக்க வைக்கறேன்.'

''நல்லாயிருக்காது சுதா இது. அந்த பூமா நிலையில் நீ இருந்தால் எவ்வளவு ஏமாற்றமாய் இருக்கும் இதுன்னு நினைச்சுப் பாரு."

"நான் கொஞ்சம் சுயநலமாய் நடக்க விரும்பறேன்."

மௌனித்தேன்.

"இதோ பாருங்க, எந்த எதிர்ப்பையும் நான் சமாளிக்கறேன். கிளம்புங்க" என்று கையைப் பிடித்து இழுத்தாள்.

அவள் பிடிவாதத்தின் முன் நான் தோற்றேனோ இல்லை மனத்தில் அவள் மேல் உள்ள ஆசையில் பேசாமல் இருந்தேனோ தெரியாது! அவள் முன் செல்ல, தொடர்ந்தேன் .

என் பெற்றோரை நினைத்துப் பயமாயிருந்தது. அதைவிட பூமாவை நினைத்து வருத்தமாய் இருந்தது. என்னை வைத்து எத்தனை கனவுகளை வளர்த்துக் கொண்டாளோ,

பாவம்! மனம் நிறைய தயக்கத்துடன் நடந்தேன். பெண்ணின் அப்பாவுக்கு எத்தனை பெரிய அதிர்ச்சியாய் இருக்கும் இது..! கோபத்தில் திட்டுவாரோ, இல்லை அதற்கும் மேலே போய் அரிவாளை எடுத்து விடுவாரோ?

நான் செய்வது பச்சைத் துரோகம் என்று தெரிந்தும் எப்படி சுதாவைப் பின் தொடர்கிறேன்...?

இதையும் படியுங்கள்:
‘ஜங்கிள் ஜிலேபி’ எனப்படும் கொடிக்காய்ப் புளி பழம் பற்றி தெரியுமா?
ஓவியம்; லதா

மண்டபத்தின் வாசலிலேயே பூமாவின் பெற்றோரும், கூட சிலரும் நிற்பது தெரிந்தது. ஏன் அவர்களிடம் ஒரு பதற்றமும், கவலையும், கோபமும் தெரிகிறது? ஒரு வேளை கோயிலில் எங்களைப் பார்த்துவிட்டு யாராவது வந்து சொல்லியிருப்பார்களோ? நடுங்கியபடி அவர்களை நெருங்கினேன். மனச்சாட்சி வேறு முள்ளாய் உறுத்தியது. எனக்கு இரண்டடி முன் சுதா.

என்னைப் பார்த்தார் பூமாவின் அப்பா. அவர் முகம் இறுகிப் பாறை போலிருந்தது. எதுவும் பேசத்தோன்றாமல் நானும் அவரைப் பார்த்தபடி நின்றேன்.

"மன்னிச்சுக்குங்க மாப்பிளே! என் மகள் இப்படி ஒடுகாலியா இருப்பான்னு நினைச்சுக் கூடப் பார்க்கலே...." என்று கதறியபடி என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

பின்குறிப்பு:-

கல்கி 06  செப்டெம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com