சிறுகதை – கமலாம்பா!

ஒவியம் -  ஸ்யாம்
ஒவியம் - ஸ்யாம்

-சீதா ரவி

ண்ணா இன்று கோபப்படவில்லை. "இந்தத் திருவாரூரில் கைடு உத்தியோகம் பார்க்கத்தான் சரியாயிருக்கு" என்று ஆத்திரப்படவில்லை. அவனுக்குக் கோபம் வந்தால் அதில் முக்கால் திட்டும் அவள் பேரில்தான் திரும்பும். கொடியிலிருந்து வேஷ்டியை உருவும் வேகத்திலும் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றிக் குளிக்கும் பரபரப்பிலும் கால்வாசிதான் கரையும்... "கமலாம்பா!" என்று இரைந்து "துப்புகெட்டவளே"வில் தொடங்கி அவளைக் காரணமில்லாமல் கரித்துக் கொட்டி முடித்த பிறகு மீதியும்.

அண்ணாவுக்கு அதட்ட வசதியாயிருக்கட்டும் என்றுதான் தனக்கு அம்மா, கமலாம்பா என்று பெயர் வைத்தாளோ?

"கமலாம்பா!" அண்ணாவுடைய குரலின் கோபத்தை மனத்தில் நினைத்துப் பார்த்தபோதே வயிறு கலங்கியது.

மூன்றாம் வகுப்பு 'சி' செக்ஷனில் தன்னுடன் படிக்கும் அஜிதாவையோ, வனிதாவையோ, தேவியையோ, கே.ஷைலஜாவையோ, பி.ஷைலஜாவையோ, தமிழரசியையோ இப்படிக் கோபமாய்க் கூப்பிட முடியுமா...?

தனியாயிருந்த சமயங்களில் கமலாம்பாள். இந்தப் பெயர்களையெல்லாம் கோபமாய் உச்சரித்துப் பார்த்தாள் - அண்ணாவைவிட அதிக கோபமாய்... ஏனோ அந்தப் பெயர்களுடன் கோபம் ஒட்டவில்லை.

"கமலாம்பா!" அதுதான் கோபத்துக்கென்றே ஏற்பட்ட பெயர்.

'ஏன் இந்தப் பெயரை வைத்தாய்?' என்று சண்டை பிடிக்க அம்மா இல்லை. போட்டோவில் சிரிக்கும் அவளிடம் கேட்டால் பதில்தான் சொல்வாளா..!.

பாட்டியிடம் கேட்டிருக்கிறாள்.

"அம்பாள் பேருடீ!. பொண் குழந்தைகளுக்கு இந்த ஆத்திலே அதைத்தான் வைக்கிறது..."

பாட்டி சொன்னது நம்பிக்கை தரவில்லை. அதட்ட வசதியாய் இருக்கட்டுமே என்று வைத்ததுதான்- "கமலாம்பா!"

இதையும் படியுங்கள்:
நகைச்சுவையும் கற்றுக்கொடுக்கும்..!
ஒவியம் -  ஸ்யாம்

னால் இன்று அண்ணா ஒரு தடவை கூட அப்படி அதட்டவில்லை. மெட்ராஸிலிருந்து வந்திருந்த ராமகிருஷ்ணனைச் சுற்றி சுற்றி பவ்யமாய் நடந்தான்.

கமலாம்பாளிடமிருந்து காப்பியைப் பிடுங்கி தானே நுரைக்க ஆற்றி ராமகிருஷ்ணனிடம் கொடுத்தான்.

"கமலா, வெந்நீர் தயாராயிடுத்தா பாரும்மா..." அவளிடம்கூட அனுசரணையாய்ப் பேசினான்.

கமலாம்பாளுக்கு எல்லாமே கனவில் நடப்பதுபோல் இருந்தது. 'இந்த ராமகிருஷ்ணன் நிச்சயம் பெரிய ஆளாக இருக்க வேண்டும். அண்ணாவுக்குப் பிடித்த கமலஹாசன். இல்லை ரஜினிகாந்த் மாதிரி...'

'மெட்ராஸில் பாட்டுக் கச்சேரி செய்பவர் என்று பாட்டி சொன்னாள்.

கமலாம்பாள் கச்சேரி கேட்டதில்லை. அண்ணா எப்போதாவது சினிமாவுக்கு அழைத்துப் போவான். 'நடுவில் பேசக்கூடாது; தண்ணி கேட்கக் கூடாது; திங்கத்துக்கு வாங்கித்தர மாட்டேன்' என்று நிபந்தனைகளுடன்

'கச்சேரி எப்படியிருக்கும்...?"

கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த ராமகிருஷ்ணனை இன்னொரு முறை எட்டிப் பார்த்தாள் கமலாம்பாள்.

அண்ணாவுக்கு ஒரு அண்ணாபோல் இருந்தார். ஆனால், கோபமே வராத அண்ணா.

பெளர்ணமி சந்திரன் மாதிரி முகம். மீசை அளவாக உதடு தாண்டாமல் நின்றது. பிரகாசமான திராட்சைப்பழக் கண்கள். நெற்றியை மறைக்காத தலைமூடி. கீழே கீற்றாக விபூதி, நடுவில் குங்குமம்...

"இங்க வா, குழந்தை..."

ராமகிருஷ்ணன் கூப்பிட்டபோது கமலாம்பாளுக்குக் கூச்சமாகிவிட்டது. திரும்பி உள்ளே ஓடுவதற்கு முன் ஒரு முறை மீண்டும் அந்தக் கண்களைப் பார்த்தாள் - 'கோபமே வரரது'  என்று அவை சத்தியம் செய்தன.

ராமகிருஷ்ணனைக் கோயிலுக்கு அழைத்துப் போனார்கள். அண்ணாவும் அவரும் நடந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க, கமலாம்பாள் பாவாடை தடுக்க ஓடினாள்.

சற்று திரும்பிப் பார்த்த ராமகிருஷ்ணன் நிதானித்து வேகம் தணித்தார்.

''உன் பேர் என்ன குழந்தை...?"

"கமலாம்பாள்."

"அடடா!..." ராமகிருஷ்ணன் ஒரு கணம் நடக்க மறந்து நின்றார். "எத்தனை அழகான பேர்... தினமும் அம்பாள் பேரைச் சொல்லணும்னுதான் உனக்கு இந்தப் பேர் வைச்சிருக்கு..."

'இல்லை... ஜோராக அதட்டிக் கூப்பிடத்தான் அப்படி வைச்சிருக்கு' - கமலாம்பாள் சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். அதற்குள் ராமகிருஷ்ணன் "வா..." என்று கைநீட்டி அவள் கையைப் பிடித்துக்கொண்டார்.

அண்ணா வடக்கு வாசலைத் தவிர்த்து வலது பக்கமாகப் போய் மேலை வாசல் நோக்கி அழைத்துப் போனான்.

கமலாலயத்தை நெருங்கியதும் ராமகிருஷ்ணன் அப்படியே நின்றுவிட்டார். எல்லோரையும்போல் விறுவிறுவென்று படியிறங்கிப் போய்த் தண்ணீரை எடுத்துத் தலைக்குத் தெளித்துக்கொண்டு அடுத்த வேலை பார்க்க ஓடவில்லை.

இறங்கிப் போய், படிகளில் உட்கார்ந்துவிட்டார். கமலாம்பாளும் அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள். அண்ணாதான் நின்று கொண்டிருந்தான்.

இலேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. ராமகிருஷ்ணன் மௌனமாக இருந்தார். கமலாம்பாள் அவர் முகத்தைப் பார்த்தாள். புதிதாக வைத்த ரோஜா செடியில் முதல் பூவைப் பார்த்த பூரிப்பு அதில் பரவியிருந்தது.

கமலாலயம் 'சளக் புளக்'கென்று அலை யடித்தது.

"போகலாமா...? பெரிய கோயில்; பார்க்கிறதுக்கு நேரமாகும்..." அண்ணா தயக்கமாய்க் கேட்டான்.

"இந்த கமலாலயத்துல எப்படி தாளம் தப்பாம அலையடிக்கறது பார்த்தாயா...?" கேட்டபடியே ராமகிருஷ்ணன் எழுந்தார்.

கமலாம்பாளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ராமகிருஷ்ணனைப் போல அவளும் ஒருநாள் உட்கார்ந்து அலையின் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தாள். "கமலாம்பா! இருட்டுற நேரத்தில் இங்கென்னடி கனா...!" என்று அண்ணா முதுகைப் பதம் பார்த்துவிட்டான்.

இதையும் படியுங்கள்:
உதடுகள் பொலிவுற லிப்ஸ்கரப் எளிதாக தயாரிக்கலாம் வாங்க!
ஒவியம் -  ஸ்யாம்

மேலை வாசல் ஆஞ்சநேயரைத் தாண்டிக்கொண்டு கோயிலுக்குள் போனார்கள்.

''இந்தப் பக்கம் கமலாம்பாள் சன்னிதி... அப்படி கீழ கோபுரம் பக்கமா போய் வாசல்லேர்ந்து வருவமா...?"

"அம்பாளையே முதல்ல பார்த்துடுவோம்... என்ன குழந்தை...?"- ராமகிருஷ்ணன் கமலாம்பாளைப் பார்த்துக் கேட்டார்.

"ம்..."

அம்பாள் சிவப்புப் புடைவையில் அலங்காரங்களுக்கிடையே ஒடுங்கி இருந்தாள். குருக்கள் ராமகிருஷ்ணனைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் ராகம் போட்டு அர்ச்சனை செய்தார். கற்பூர ஆரத்தியுடன் நீளமாய்ப் பூச்சரத்தைக் கெர்ண்டுவந்து ராமகிருஷ்ணனின் கழுத்தில் போட்டார்.

கமலாம்பாளுக்குக் கூட அன்று அம்பாள் காலடியிலிருந்து பூ கிடைத்தது- கிட்டத்தட்ட ஒரு முழ நீள மல்லிச் செண்டு.

கசங்காமல் வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும். பாட்டியிடம் கொடுத்துப் பின்னலில் கோணலாய்ப் பிசிறடிக்காமல் அழகாய் வைத்துவிடச் சொல்ல வேண்டும்.

"பாடுங்கோ..." குருக்கள் ராமகிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னார்.

ராமகிருஷ்ணன் ஒரு கணம் அம்பாளைப் பார்த்துக் கைகூப்பினார். அப்புறம் கமலாம்பாள் பக்கம் அவர் பார்வை திரும்பியது. பூ உதிர்கிறது போல் பளிச்சென்று ஒரு புன்னகை விரிந்தது. கண்களை மூடிக்கொண்டு பாட ஆரம்பித்தார்.

"கமலாம்பாம் பஜரே... ரே மானஸ..."

கமலாம்பாளுக்கு முன்நெற்றி வகிட்டில் ஆரம்பித்து முதுகுத் தண்டு வழியே ஒரு சிலிர்ப்பு ஓடியது. 'இத்தனை அழகாக, இனிமையாக, மிருதுவாக- பருத்தி மாலை திரிப்பதுபோல் தன் பெயரை உச்சரிக்க முடியுமா...?'

இதோ திரும்பவும் பாடுகிறார்:

"கமலாம்பாம் பஜரே... ரே மானஸ

கல்பித மாயா கார்யம் த்யஜரே..."

ராமகிருஷ்ணனின் மூடிய கண்களுக்குக் கீழே வாய் திறந்து அசைந்ததைப் பார்த்தாள். கழுத்தில்கூட நரம்பின் அசைவுகள் தெரிந்தன. ஆனால் அந்தக் குரல் தொண்டையிலிருந்து மட்டும் வரவில்லை. அவர் பௌர்ணமி சந்திரன் முகமும் திராட்சைக் கண்களும் கீற்று விபூதியும் பொட்டுக் குங்குமமும் ப்ரியமான பேச்சும் கலந்து கரைந்து... "கமலாம்பாம் பஜரே...'' என்று ஒலித்தது.

கமலாம்பாள் கண்களை மூடிக்கொண்டாள். அந்த சன்னிதியும் கோயிலும் நான்கு வீதிகளும் தேரும் திருவாரூரும் ராமகிருஷ்ணனின் பாட்டால் நிறைந்தது.

பாட்டு முடிந்தபோது கமலாம்பாளின் மல்லிகைச் சரம் அவள் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்திருந்தது.

ராமகிருஷ்ணன் மாறாத புன்னகையுடன் குனிந்து அதை எடுத்து அவள் கையில் கொடுத்தார். கமலாம்பாளுக்கு மனசெல்லாம் கமலாலயம் போல் நிறைந்து, சந்தோஷத்தில் 'சளக் புளக்'கென்று தளும்பியது.

பின்குறிப்பு:-

கல்கி 10  டிசம்பர்  1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com