சிறுகதை - கனவுக் குடித்தனம்!

ஓவியம்;  ஜெயராஜ்
ஓவியம்; ஜெயராஜ்

-கிருஷ்ணா

யாருக்குமே நேரக்கூடாத நிகழ்ச்சி! அதிர்ச்சி! படிக்கும்போதும், கேட்கும்போதும் சாதாரணமாய்ப்படும் சொல்லின் முழு வீர்யம் தந்த விளைவில் செயலற்றுப் போனேன்.

மாலை மூன்று மணிக்கு அலுவலகத்துக்கு போன். அப்பாதான் பேசினார். உடனே வா! தந்தி போல வார்த்தை.  

ஸ்கூட்டரில் பத்தே நிமிடத்தில் வீடு. வாசலிலேயே அம்மா. முகத்தில் ஆழ்கடல் அமைதி. மஞ்சள் பூசிய முகம் வெளுத்துப் போயிருந்தது. உள்ளே வந்ததும் தயக்கமாய் ஏறிட்டாள்.

“அம்மா...”

''உள்ளே வா."

ஹாலில் அப்பா! குட்டி போட்ட பூனையாய் நடை.

"என்னப்பா?"

நடையை நிறுத்தி என்னை ஊடுருவிப் பார்த்தார். பார்வையில் தெரிவது பரிதாபமா,  இல்லை சோகமா?

''ஓடிப் போயிட்டாளாம்."

ஹனுமானைவிட அப்பா ஷார்ப்! கத்தி முனையைவிட கூரான வார்த்தை.

"சம்பந்தி போன் பண்ணினார். நித்யா யாரோடவோ ஓடிப் போயிட்டாளாம்."

"எப்ப?"

"நேத்து ராத்திரியாம். காலையிலே எங்கெங்கோ தேடிட்டு, மதியம் போன் பண்ணினார்."

யந்திரகதியில் அப்பா ஒப்புவிக்க, என்னால் முகத்தை நிமிர்த்த முடியவில்லை.

இன்னும் இருபது நாளில் திருமணம். பாவிப் பெண்!

சட்டென எழுந்து என் அறைக்குள் நுழைந்தேன். தனிமை! யாரோடும் பேசவோ, பார்க்கவோ முடியாத மனநிலை. எதிரே சிரித்தபடி போஸ்ட் கார்டு சைசில் நித்யா! தினசரி காலையில் கண் விழிப்பதே அவள் முகத்தில்தான். வாகாய் நிலைக்கண்ணாடியில் செருகி வைத்திருந்தேன் போட்டோவை. ஜீரணிக்க முடியாத நிலை. எவ்வளவு பெரிய அதிர்ச்சி இது?

என்னென்ன கனவுகள் கண்டேன்! போன மாதம்தான் நிச்சயம். பார்த்ததுமே கவர்ந்துவிடும் அழகி, படபடக்கும் கண்கள். குழைந்த முகம்.  உடனேயே ஓகே. அன்றே நிச்சயதார்த்தம்.

தினசரி கனவுகள். கனவுகளில் மட்டுமா? நினைவுகளிலும் நித்யா. உணர்வுபூர்வமாய் ஒரு கனவுக் குடித்தனம். எல்லாமே போச்சு!  மணலில் எழுதிய எழுத்துக்கள் அலை அடித்ததும் அழிவதுபோல ஆகிவிட்டதே!

அந்தக் குழைவு முகத்தின் பின்னே, இப்படி ஒரு வரலாறா?

பக்கத்து ஊர்தானே! இருபது நிமிட பஸ் பயணம். அவளே வந்து தன் மனத்தில் வேறொருவன் இருப்பதை சொல்லியிருக்கலாமே! அட, போனிலாவது ...ப்ச்!

ப்பா அருகில் வந்து அமர்ந்தார். கூடவே அம்மாவும்.

“ராஜா, துக்கம்தான். விழுங்கித்தான் ஆகணும்."

அப்பாவின் ஸ்பரிசத்தில் கரைந்து போனேன். விம்மலாய் என் சோகம் வெளிப்பட, அம்மா பதறிவிட்டாள்.

என் பெற்றோர் யாருக்கும் தீங்கு எண்ணாத நல்லவர்கள். கொள்கையுடன் வாழ்க்கை நடத்துபவர்கள்.

வரதட்சணை, சீர்... மூச்! மருமகள்தான் சீதனம்!

பெருந்தன்மையாய் நடந்துகொள்வதையே இயல்பாக்கிக் கொண்டவர்கள்.

 "கல்யாணத்துக்கு முன்னாடி இது நடந்ததேன்னு சந்தோஷப்பட்டுக்கடா." அம்மா சொன்ன ஆறுதல் நிஜமாய்ப்பட்டது.

"ராஜா, நீ உன்னை மட்டுமே யோசிக்கறே...'

"அப்பா?"

"நித்யாவோட அப்பா, அம்மா நிலைமையை எண்ணிப் பாரு."

"அப்பா!"

"ஆமாண்டா. துக்கம் நம்ம ரெண்டு குடும்பத்துக்குமே இப்ப பொது. நீ அங்கே போய் அவங்களுக்கு ஆறுதல் சொன்னால் நல்லாயிருக்கும்."

பிரமிப்புடன் அப்பாவை ஏறிட்டேன். தன் துக்கத்தை புறந்தள்ளி இந்த நேரத்திலும் அப்பா அவர்களைப் பற்றி சிந்திப்பதென்றால்... ரியலி கிரேட்!

"நாங்க போறதைவிட, நீ போறதுதான் பொருத்தமாய்ப்படுது. ப்ளீஸ்...''

இதையும் படியுங்கள்:
மூலிகைப் பொருட்களின் குணங்களும், உபயோகங்களும்!
ஓவியம்;  ஜெயராஜ்

ப்பாவின் சொல்லைத் தட்டமுடியாது. எனக்குள்ளும் அவர்கள் மேல் இரக்கம் எழுந்தது.

ஸ்கூட்டரிலேயே மீண்டும் பயணம். அதோ வீடு! வாசலில் க்ரில் கேட் பக்கத்தில் முல்லைக் கொடியில் வெள்ளைப் பூக்கள்.  கிரீச்சிட்ட கதவைத் தள்ளி உள்ளே போனேன். என்னைக் கண்டதும் திக்பிரமை நிலையில் நித்யாவின் அம்மா!

முகத்தில் பயமும் குழப்பமும். எதற்கு பயம்?  சண்டை போட வந்திருக்கிறேன் என்ற பயமா?

'வாங்க' என்றுகூட அழைக்கத் தோன்றாமல் உள்ளே ஓடினாள். போன முறை வந்தபோது என்ன கலகலப்பான வரவேற்பு. எப்படி நுழைய வேண்டியவன், இப்படி... விதி!

"மாப்பிள்ளை வந்திருக்காரு.' உறவு இன்னும் வார்த்தையளவில் மாறவில்லை.

"மாப்பிள்ளையா? யாரு?" நித்யாவின் அப்பாவின் எதிர்கேள்வி.

"முதல்ல வெளியே வாங்க ரூமை விட்டு.'"

வந்தார்! ஒரே நாளில் இப்படிக்கூட வதங்கிப் போகமுடியுமா? வெள்ளை வேட்டி, சட்டையில், நெற்றி நிறைய விபூதியுடன் பளிச்சென்று சிரிக்கும் உருவத்தை யார் கொள்ளையடித்து விட்டார்கள்? தளர்ந்து போய் வந்தவரை அருகில் சென்று அணைத்துக்கொண்டேன்.

அவர் முகத்தில் விரிந்த அவமானம், வெட்கம், துயரம்... அப்பப்பா! பரிதாபமான உணர்ச்சி!

என் அணைப்புக்குள் ஒடுங்கிக்கொண்டார். ஒட்டிக் கொண்டவரின் உடல் குலுங்க ஆரம்பித்தது. எதிரே நின்று கொண்டிருந்த மாமியின் கண்ணிலும் நீர்.

"மாப்பிள்ளே!" உடைந்து போய்க் கதறினார் மாமி.

ஒரே பெண்! இப்படி முகத்தில் கரி பூசி விட்ட வேதனை.

சமாதானப்படுத்தும் பொறுப்பு என் தலையில்.

நித்யாவின் அப்பாவை சேரில் அமர வைத்தேன்.

இதையும் படியுங்கள்:
செம்பருத்திப் பூவை சாப்பிடலாமா?
ஓவியம்;  ஜெயராஜ்

''வெறிச்ச பார்வையாய் உட்கார்ந்திருக்காரு. பயமாயிருக்கு." மாமியின் குரலில் நிஜமான கிலி.

"பால் கொஞ்சம் கொண்டு வாங்க.'' மாமி உள்ளே விரைந்தாள். வற்புறுத்தி குடிக்க வைத்தேன். என் சொல்லை மீற முடியாமல் விழுங்கினார்.

"நீங்களும் இப்படி வந்து உட்காருங்க."

மாமி பதில் பேசாது அப்படியே தரையில் அமர்ந்தாள்.

நானே சமையலடி சென்று கையில் இன்னொரு தம்ளர் பாலுடன் திரும்பினேன்.

மாமிக்கு இது! ஒரே மூச்சில் குடித்தாள்.

பக்கத்து வீட்டுப் பையன் எட்டிப் பார்த்தான். தெருமுனை கடைக்கு அனுப்பினேன்.

இரண்டு பொட்டலம் தோசை. கொஞ்சம் தெம்பாய் அழுதார்கள். தேம்பினார்கள். அழுகை மறைந்து மௌனமாய் இருந்தார்கள்.

"என்னை நீங்க மதிக்கறதாய் இருந்தால் பட்டினி கிடக்கறதை விட்டுடணும்." மிரட்டி விட்டுக் கிளம்பினேன்.

வாசல் வரை வந்தார் நித்யாவின் அம்மா. "மாப்பிள்ளே..." தயக்கமாய் அழைத்தார்.

நின்று பார்த்தேன்.

''ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து நீங்க இங்கே வர முடியுமா ஒரு தடவையாவது?"

புரிந்தது. என் வரவு அவர்களுக்கு ஒரு பிடிப்பைத் தருகிறது. முக்கியமாய் நித்யாவின் அப்பாவுக்கு.

"என்ன மாப்பிள்ளே?"

''வரேன். ஆனால் ஒரு கண்டிஷன்...''

"என்ன?"

"இனிமே என்னை மாப்பிள்ளேன்னு கூப்பிடக்கூடாது."

''பின்னே?''

புன்னகைத்தேன். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். கண்கள் பனிக்க என்னைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.

பின்குறிப்பு:-

கல்கி 23  ஜூலை 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com