
-தி. சிவசுப்ரமணியன்
சில அவசர வேலைக்காரர்களைத் தவிர, முக்கால்வாசி ஜனம் மழைக்குப் பயந்து எங்கேனும் கடை வாசல்களிலோ, பஸ் ஸ்டாண்ட் ஷட்டரின் கீழோ ஒடுங்கிக்கொண்டு இருந்தது. எங்கள் கடை வாசலில் கூட சிலர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். கோடை மழை அல்லவா. திடுமெனப் பெய்யும். நிற்கும்.
உள்பக்கம் ஜெராக்சும், வெளி வராண்டாவில் 'ஜாப் டைப்பிங்கும்' சேர்ந்த கடை எங்களது.
நல்லவேளை, சாரல் இந்தப் பக்கமாய் வந்து விழவில்லை. விழுந்திருப்பின், டைப் அடிக்க முடியாது. மிஷினை நகர்த்திக்கொண்டு உள்ளே செல்ல வேண்டி வரும்.
அடித்து முடித்த மேட்டரைத் தனியே எடுத்து அதன் இரண்டு கார்பன் பிரதிகளோடு கஸ்டமரிடம் கொடுத்துக் காசை முதலாளியிடம் கொடுக்கச் சொன்னேன். விரல்களில் இதமாய் நெட்டி முறித்துக்கொண்டபோது ஒரு காப்பி குடிக்கலாம் போல் தோன்றிற்று.
அடுத்தாற்போலவே 'காப்பி' குடிக்க ஒரு சின்னக் கடை இருக்கிறது. ஆனால் வாசலில் மழைக்கு ஒதுங்கிய கும்பலினூடே சற்று சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். எதற்கு...? காப்பி வேண்டாம் என்று தோன்றிற்று.'இரண்டு ரூபாய் மிச்சம்' என்கிற எண்ணத் திருப்தி கூடவே உண்டாயிற்று.
ஆனால், இவ்விதம் மிச்சப்படுத்தி, இதில் வாங்குகிற ஐநூறும், சாயங்காலம் வக்கீல் வீட்டிற்குப் போய் ஓவர்டைம் வேலை பார்த்து, கொண்டு வருகிற சில நூறுகளும்தான் ஓரளவு கௌரவமாய் வாழ உதவுகிறது என்பது ஏனோ மணிக்குப் புரியாது போயிற்று.
மணி எனக்கு அடுத்துப் பிறந்தவன். அப்பா இருக்கையில் ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என்று நாங்கள் பிறந்தோம். ஆனால், 'ஆஸ்தி' எல்லாம் அப்பாவோடு போயிற்று. தம்பி ஆஸ்தியை அழிக்க வந்தவன் மாதிரிதான் நடந்துகொண்டான்.
அதனாலேயே அவனுக்கும் எனக்கும் வரவர அதிகம் பேச்சுவார்த்தை நேருகிறதில்லை. சின்னச் சின்ன வார்த்தைகளாய், "ஆமாம்", "உண்டு", "அப்படியா", "பார்க்கலாம்"- இது மாதிரியேதான் சம்பாஷனை நிகழும். நேற்றைக்குத்தான் சற்று அதிகப்படியாகி விட்டது.
நேற்று சாயங்காலம் வேலை முடிந்து வரும்போதே லேசாய் தலைவலித்த மாதிரி இருந்தது. அதோடு வழியில் சுமதி பார்த்துச் சொன்ன தகவல் அதிகம் மண்டைக் குடைச்சலை ஏற்படுத்திவிட்டது.
யாரோ கல்யாணியாம். அவள் டைப் அடிக்க இன்ஸ்டிடியூட் போகும் சமயம் பார்த்து, தினமும் பின்னால் சென்று கேலியும் கலாட்டாவும் செய்கிறானாம். கல்யாணியின் அம்மா என் தோழி சுமதியிடம், "உன் பிரெண்டுகிட்ட சொல்லி, அவ தம்பியைக் கண்டிச்சு வைக்கச் சொல்லும்மா. நாங்க என்ன பொழுது போகாதயா பொண்ணை வெளிய அனுப்பறோம். ஏதோ பிளஸ் முடிச்சிருக்கா. இதையும் கத்து வச்சிக்கிட்டா, வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. அது சம்பாதிச்சுதான் அது வாழ்க்கையைக் கரையேத்திக்கணும். ஆரம்பத்துலயே இப்படி இம்சை பண்ணினா என்ன பண்றது. நாங்க தாயும் மகளும் கிணத்துலதான் போய் விழணும” என்று சொல்லியிருக்கிறாள்.
அவள் சொல்லச் சொல்ல என்னு ரௌத்திரம் பொங்கிற்று. பாவம் அந்தப் பெண். என் மாதிரித்தான் அதுவும். நாளை என் போலவே எங்கேனும் 'ஜாப் டைப்பிங்' செய்யக் கூடும். அதைப் போய் தொந்தரவு செய்திருக்கிறானே இவன்? வீடு இருக்கிற நிலைமையும், அக்கா சம்பாதித்து வாழ வேண்டி இருக்கிறதே என்ற உணர்வும் கொஞ்சமேனும் இருப்பின், இப்படிச் செய்து இருப்பானா?
அந்தக் கோபம்தான் வீட்டினுள் நுழைந்ததும் நுழையாததுமாய் அவனைப் பளாரென்று கன்னத்தில் அடிக்கத் தூண்டிற்று. ஆனால் அதற்கே ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு.
"வேலை பார்க்கிற திமிர்ல, வளர்ந்தவன்னு கூடப் பார்க்காம கை நீட்டி அடிச்சிட்டேயில்ல? போறேன். இனிமே இந்த வீட்டு வாசப் படிய மிதிக்க மாட்டேன்."
சட்டையை மாட்டிக்கொண்டு 'விர்' என்று போனான். போகட்டும். எப்படியோ போகட்டும். வளர்ந்தவனாம் வளர்ந்தவன்... வளர்ந்தவன் செய்கிற காரியமா இது என்று தோன்றிற்று. ஆனால், அம்மா முகம்தான் வாடி இருந்தது. 'என்ன இருந்தாலும் பொம்பளைப் புள்ளை வேற வீட்டுக்குப் போறவ . நாளைக்கு நம்மைக் காப்பாத்தறதுக்கு அவன்தானே வேணும்' என்கிற ரீதியிலான சிந்தனை அவள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.
"உங்களைத்தாம்மா...'' எதிரே இருந்தவர் இரண்டாம் முறையாகக் கேட்டபிறகே, எண்ண ஓட்டங்களில் மூழ்கி விட்டிருந்தது புரிந்தது. அதன்பின் விரைவாய் அவருக்கு மேட்டர் அடித்துக் கொடுத்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினேன்.
வீட்டிற்குள் நுழைகையில், சமையலறையில் அம்மா சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டிருக்க, தம்பி மணி சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
என்னைப் பார்த்ததும் சாப்பிடுவதை நிறுத்தி, சற்றுத் தலை குனிந்துகொண்டான்.
"ஏண்டா வருத்தப்படறே. சும்மா சாப்பிடு. அவ யாரு. உன் அக்காதானே. அன்னிய மனுஷியில்லையே. ஏதோ கோபம். அவ அடிச்சிட்டா. அவளுக்கு அதுக்கு உரிமையுண்டு. நீயும் ஏதோ மனத்தாங்கல் பட்டுப் போனே. அதான் வந்து, என் வயித்துல பாலை வார்த்துட்டியே, இனிமே என்ன... எல்லாம் சரியாப் போகும். நீ காப்பி குடிக்கலையாடி?''
அம்மாவால் எப்படி இதை இவ்வளவு எளிதாய்ப் பார்க்க முடிகிறது? பிள்ளைப் பாசமா? இருக்கும்.
சாப்பிட்டு முடித்ததும் தம்பி அறை வாசலில் தயங்கி நின்றான்.
"அக்கா" என்றான் மெல்லிய குரலில். ஏறிட்டுப் பார்த்தேன், 'என்ன' என்பது போல். ''மன்னிச்சிருக்கா. ஏதோ போறாத நேரம். அப்படி நடந்துகிட்டேன்."
ஆச்சரியமாயிருந்தது. யார், மணியா இப்படிப் பேசுவது? பரவாயில்லை. இந்த மட்டும் புத்தி இருக்கிறதே. இதுவே போதும் என்று தோன்றிற்று.
"ஒரு இருவத்தஞ்சி ரூபா இருக்குமாக்கா...? போஸ்டல் ஆர்டர் வாங்கணும். ரெயில்வேல் ஒரு வேலைக்கு 'கால்ஃபார்' பண்ணிருக்கான்."
எடுத்துக் கொடுத்தேன். நிச்சயம் அது பொய்தான். எந்த வேலைக்கும் ரெயில்வேயில் கால்ஃபார் செய்ய வில்லை. நன்றாகத் தெரிகிறது. முடியாது என்று சொல்லி விடலாம். ஆனால் அது மேலும் பிரச்னையை வளர்க்கத்தான் செய்யும்.
இப்போது வீட்டில் நிலவுகிற இந்த 'இணக்கமான' சூழலை ஏன் கெடுக்க வேண்டும்? யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தபோது, மழை தூறிக் கொண்டிருந்தது. கோடை மழையில் பூமி குளிராதுதான். ஆனால் வெப்பம் குறையுமே, போதாதா?
பின்குறிப்பு:-
கல்கி 05 மே 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்