சிறுகதை - உண்மைகள் உறங்கட்டும்!

ஓவியம்; ஜெயராஜ்
ஓவியம்; ஜெயராஜ்

-ராஜேஷ்குமார்

ஜபதி தயக்கமாய் ரிஸீவரை எடுத்து, காதுக்குக் கொடுத்தபடி டயலில் எண்களைத் தட்டினார்.

மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

"ஹலோ..."

"மிஸ்டர் வாத்சல்யன் ப்ளீஸ்."

"நீங்க...?"

"நான் கஜபதி..."

"ப்ளீஸ்... பி... ஆன் த லைன்..."

கஜபதி காத்திருந்தார்.

அரை நிமிஷ அவகாசத்துக்குப் பின் வாத்சல்யனின் குரல் கேட்டது.

“ஹலோ...”

"வணக்கம். நான் கஜபதி...''

"கஜபதி...?”

''ரமாவோட அப்பா..."

''ஓ... நீங்களா...? வணக்கம். ஸாரி லைன்ல உங்களைக் காக்க வெச்சுட்டேன். இன்னிக்கு ஆபீஸ் வொர்க் ரொம்பவும் டைட் ட்யூ டு இயர் எண்டிங்... ''

"தொந்தரவு கொடுத்துட்டேனா...?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. நானே உங்களுக்கு போன் பண்ணணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன்.வேலை மும்முரத்துல முடியலை.”

டெலிபோனில் ஒரு ஐந்து விநாடிகளுக்கு வேண்டாத நிசப்தம் நிலவ அதை கஜபதி கலைத்தார்.

"ரெண்டு நாள்ல தகவல் தர்றதாச் சொன்னீங்க?"

"வாஸ்தவந்தான்..."

"எம் பொண்ணு ரமாவை உங்க பையனுக்குப் பிடிச்சிருக்கா இல்லையா..?"

''உங்க பொண்ணைப் பார்த்த அன்னிக்கே ராத்திரி பையன் வேலை விஷயமா... அவசரமா... டெல்லி போயிட்டான். அவன்கிட்ட எதுவும் பேச முடியலை. எப்படியும் இந்த வாரக் கடைசிக்குள்ளே ஊர் திரும்பிடுவான். வந்ததும் கலந்து பேசிட்டு... உடனே முடிவைச் சொல்லிடறேன்."

"இதை நீங்க தரகர் மூலமாச் சொல்லி விட்டிருந்தா நான் கொஞ்சம் டென்ஷன் இல்லாம இருந்திருப்பேன்...."

"மன்னிக்கணும்... தரகர் குமாரசாமி நாலைஞ்சு நாளா ஊர்ல இல்லை.. ஏதோ 'பெரிய காரியம்' ஆயிடுச்சுன்னு அவரோட சொந்த கிராமத்துக்குப் புறப்பட்டுப் போயிருக்காராம்...."

"அப்படியா...! விஷயம் தெரியாமே நான்தான் உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். உங்க பையன் டெல்லியிலிருந்து எப்ப திரும்பறார்னு சொன்னீங்க...?"

"இந்த வாரக் கடைசியில..."

"உங்க பதிலை எப்போ எதிர்பார்க்லாம்?"

"பையன் டெல்லியிலிருந்து வந்த அடுத்த பத்தாவது நிமிஷம் உங்க வீட்டு டெலிபோன் மணி அடிக்கும்..."

இதையும் படியுங்கள்:
சம்மருக்கு சுவையான சிம்பிள் மில்க் ரெசிபிஸ் இதோ...
ஓவியம்; ஜெயராஜ்

"ரொம்ப சந்தோஷம்..."

"வேற விசேஷம் ஒண்ணுமில்லையே..?"

"இல்லை... "

"வீட்ல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க."

பேசிவிட்டு ரிஸீவரை வைத்த வாத்சல்யன் தனக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த தரகரைப் புன்னகையோடு பார்த்தார்.

"போன்ல யார் தெரியுமோ...?"

"தெரியும். புரிஞ்சுட்டேன்...."

"யாரு..? "

"கஜபதி... "

''நம்ம சைடிலிருந்து எந்தப் பதிலும் போகலைன்னதும்... மனுஷன் பதறியடிச்சுகிட்டு போன் பண்ணிட்டார்..."

"பொண்ணைப் பெத்தவராச்சே..."

"பொண்ணு சொர்ண விக்கிரகம் மாதிரி இருக்கா. ஆனா... அவளைப் பத்தி கேள்விப் படற விஷயம் மனசுக்குச் சங்கடமாயிருக்கே..."

எனக்கென்னமோ நீங்க கேள்விப்படற விஷயம் உண்மையா இருக்காதுன்னு படுது. ஒரு பொண்ணு லட்சணமாயிருந்தா அது நாலு பேரோட கண்ணைக் குத்தத்தான் செய்யும்...."

"யோவ் தரகு...! விஷயம் புரியாமே பேசாதே...! அந்த ரமாப் பொண்ணு அஞ்சு வருஷத்துக்கு முந்தி விஜயவாடாவில் இருக்கிற ஷ்யூர் க்யூர் மென்ட்டல் ஹாஸ்பிடலில் ஒரு பேஷண்டா இருந்திருக்கா விஷயத்தை என்கிட்ட வந்து சொன்னது சாதாரண ஆளில்லை... எனக்கு வேண்டப்பட்ட நெருக்கமான சிநேகிதர். அவர் பொய் பேசி நான் கேட்டதில்லை. பொண்ணோட போட்டோவைப் பார்த்ததும் அதிர்ச்சியாய் அவர் முகம் போன போக்கு இன்னும் என் கண்ணிலேயே ஒட்டிக்கிட்டு இருக்கு...''

''நீங்க அப்படி சந்தேகப்படற பட்சத்தில் பொண்ணோட அப்பா கஜபதிகிட்டேயே போய்க் கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கலாமே?"

"எம் பையன் அப்படி கேட்கக்கூடாதுன்னு சொல்றானே..."

''சரி... இதுக்கு என்னதான் முடிவு...?"

''இப்போ ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்."

"என்ன...?"

டெல்லியில் இருக்கிற என் பையன்கிட்ட பேசிட்டேன். இன்னிக்கு ராத்திரி ரயிலில் நீயும் நானும் விஜயவாடா புறப்பட்டுப் போறோம். ஷ்யூர் க்யூர் ஹாஸ்பிடல்ல போய்ப் பழசைத் தோண்டறோம்.

டாக்டர் புன்னம்சந்தரின் பிரத்யேக அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த ஃபோம் சோபாவில் புதைந்தபடி காத்திருந்தார்கள் வாத்சல்யனும் தரகரும்.

ஒரு நர்ஸ் அவர்களைச் சமீபித்தாள்.

"டாக்டரைப் பார்க்க மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறது நீங்கதானே...?"

"உள்ளே போங்க... டாக்டர் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்...."

எழுந்து போனார்கள்.

"குட்மார்னிங் டாக்டர்."

“குட்மார்னிங்... ப்ளீஸ்... பீ... ஸீட்டட்..."

உட்கார்ந்தார்கள்.

வாத்சல்யன் ஆங்கிலத்தில் பேச்சை ஆரம்பிக்க, புன்னம்சந்தர் புன்னகைத்தார்.

இதையும் படியுங்கள்:
அனுபவம் கற்றுத் தருவது எதை தெரியுமா?
ஓவியம்; ஜெயராஜ்

"எனக்குத் தமிழ் தெரியும்.... நான் மெட்ராஸ் மெடிகல் காலேஜ்லதான் படிச்சேன்..."

"ஈஸிட்..? கேட்கவே சந்தோஷமாயிருக்கு டாக்டர்...."

"மெட்ராஸிலிருந்து யார் என்னைப் பார்க்க வந்தாலும் தமிழ்லதான் நான் பேசுவேன்" சொல்லிவிட்டு சிரித்த புன்னம்சந்தர் கேட்டார். "சொல்லுங்க...என்ன விஷயம்.... யாரையாவது இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணணுமா...?"

"அதெல்லாம் இல்லை டாக்டர். ஒரு சின்ன என்கொய்ரிக்காக வந்தோம்."

"என்கொய்ரி...?"

"எஸ்...!" சொன்ன வாத்சல்யன் தனது சட்டைப் பையில் வைத்திருந்த ரமாவின் போஸ்ட் கார்டு சைஸ் போட்டோவை எடுத்து புன்னம்சந்தரிடம் நீட்டியபடி கேட்டார்.

"இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா டாக்டர்?"

புன்னம்சந்தர் போட்டோவை வாங்கிப் பார்த்தார். நெற்றி சுருங்கி மூன்று வரிகள் உற்பத்தியாகி, சட்டென்று மறைந்தன. தலை நிமிர்ந்தார்.

"எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமான்றது ஒரு பக்கம் இருக்கட்டும்; டாக்டர் தங்கள் பேஷண்டுகளைப் பற்றி வேற ஒருத்தர்கிட்டே பேசக் கூடாதுன்றது உங்களுக்குத் தெரியுமா? மெடிகல் எதிக்ஸ்..."

"அப்ப, இந்தப் பொண்ணு உங்ககிட்ட பேஷண்டா இருந்திருக்கா... "

"ஆமா, ஒரு மென்ட்டல் பேஷண்ட். ஹைலி டிஸ்டர்ப்ட். இது ரொம்ப வருஷமாச்சே...?"

"அஞ்சு வருஷம் இருக்குமா டாக்டர்...?"

"மே... பி..." என்று தலையசைத்தார். கேட்டார் : "இப்ப எதுக்காக இந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்கிறீங்க...?"

"டாக்டர்! இந்தப் பொண்ணைத்தான் என் பையனுக்குக் கல்யாணம் பண்ண முடிவெடுத்து அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிட்டிருந்தேன். இனி சம்பந்தம் பேச வேண்டியதுதான் பாக்கி. எனக்கு வேண்டப்பட்ட நண்பர் ஒருத்தர்... ஹி... ஈஸ் வொர்க்கிங் ஏஸ் ஏ மெடிக்கல் ரெப். அவர் உங்க ஹாஸ்பிடல்ல இந்தப் பொண்ணை அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு பேஷண்டா பார்த்திருக்கிறதாச் சொன்னார். அவர் சொன்னது உண்மையா பொய்யான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான் இங்கே வந்தோம். இப்போ உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வந்தாச்சு... ரொம்ப நன்றி டாக்டர் என் பையனை ஒரு பெரிய விபத்திலிருந்து...."

டாக்டர் குறுக்கிட்டு கையமர்த்தினார்.

"பொறுங்க...! நீங்க.. இப்ப பேசிக்கிட்டிருக்கிறது எனக்குப் புரியலை. குழப்பமா இருக்கு. இந்தப் பொண்ணை உங்க பையனுக்குக் கல்யாணம் பேச முடிவு பண்ணியிருந்தீங்களா?"

"ஆமா... "

"அப்படி... இருக்க முடியாதே!"

"டாக்டர்... நீங்க... என்ன சொல்றீங்க...?"

"இந்தப் பெண் இப்போ உயிரோடு இல்லை. அவ செத்துப் போய் அஞ்சு வருஷமாச்சு... "

"டா...க்...ட...ர்..." வாத்சல்யன், தரகர் இரண்டு பேர்களின் முகங்களும் ஒரு பெரிய அதிர்ச்சிக்குப் போயிற்று. "எ... என்னது... செத்துட்டாளா..?"

"எஸ்... "

"நோ டாக்டர்... இந்தப் பொண்ணு உயிரோடுதான் இருக்கா... போன வாரம் அவ வீட்டுக்கே போய் பெண் பார்த்தோமே...?" புன்னம்சந்தர் புன்னகைத்தார்.

"இம்பாஸிபிள்...! இந்த போட்டோவில் இருக்கிற பெண்ணோட பேர் சென்னம்மா. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் அஞ்சு வருஷத்துக்கு முந்தி புத்தி பேதலிச்ச நிலையில் உட்கார்ந்திருந்தாளாம். யாரோ கொண்டு வந்து இங்கே அட்மிட் பண்ணிட்டுப் போயிட்டாங்க... அவ யாரு என்னங்கிற விவரம் தெரியலை. அவளைக் குணப்படுத்திட்டா விவரம் தெரியும்னு நினைச்சு ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சேன். ஆனா அவ குணமாகிற மாதிரி தெரியலை. ஒருநாள் ராத்திரி திடீர்ன்னு வெறி அதிகமாகி, ஆர்டர்லிகளைத் தாக்கிட்டு ரூமை விட்டு வெளியே வந்து, ஹாஸ்பிடலுக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் மேல ஏறிட்டு... யாரும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் நாங்க எல்லாரும் பார்த்துட்டிருக்கும்போதே - அவளை மின்சாரம் தாக்கி கரிக்கட்டையாக்கி வீசிடுச்சு..."

வாத்சல்யனின் விழிகள் வியப்புக்குப் போயின.

"டாக்டர்.. இந்தப் போட்டோவில் இருக்கிறது ரமா. இண்டஸ்ட்ரியலிஸ்ட் கஜபதியோட பொண்ணு..."

"ப்ளீஸ்... வெயிட் ஏ... மினிட்..." சொன்ன புன்னம்சந்தர் எழுந்து "ரிகார்ட் ரூம்" என்று அறிவித்த பக்கத்து அறைக்குள் நுழைந்து, சற்று நேரத்தில் ஒரு ஃபைலைக் கொண்டு வந்தார். மேஜையின் மேல் வைத்துப் பிரித்தார். பழுப்பேறிய தாள்களை ஒரு ஐந்து நிமிஷ நேரம் புரட்டி, கற்றையாய்ச் சில தாள்களை எடுத்தார்.

''பாருங்க! மிஸ்டர் வாத்சல்யன். இது சென்னம்மாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். அஞ்சு வருஷத்துக்கு முந்தினது. சென்னம்மா உயிரோடு இருந்தப்ப எடுத்த போட்டோவும், இதுலேயே ஒட்டியிருக்கு பாருங்க..."

வாத்சல்யனும் தரகரும் பார்த்தார்கள். ஆச்சர்யம் அவர்களை அள்ளிக் கொண்டது. உதடுகள் தன்னிச்சையாய் முனகின.

இதையும் படியுங்கள்:
வெளிநாடு போறீங்களா?அவசியம் கடைபிடிக்க வேண்டியவைகள்!
ஓவியம்; ஜெயராஜ்

''ரமாவின் முகச்சாயல் அப்படியே இருக்கே."

"உடம்பு மட்டும் கொஞ்சம் மெலிசா இருக்கு... "

டாக்டர் குறுக்கிட்டார். "இந்த சென்னம்மா யாரு... எந்த ஊரைச் சேர்ந்தவ... அவளோட அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக பேப்பருக்கு போட்டோவைக் கொடுத்து விளம்பரப்படுத்தியும் பார்த்தேன். யாரும் சொந்தம் கொண்டாட வரலை. வருஷங்களும் இப்ப ஓடிப் போச்சு...''

வாத்சல்யன் புன்னம்சந்தரை ஏறிட்டார்.

"டாக்டர்...! நான் ஒரு பெரிய தப்பு பண்ண இருந்தேன். ரமாவோட முகச்சாயல் இருந்த சென்னம்மாவை இந்த ஹாஸ்பிடல்ல வெச்சு என்னோட நண்பர் பார்த்திருக்கார். ரமாதான் மென்டல் பேஷண்டா இருக்கணும்ன்னு நினைச்சு என்கிட்ட சொல்லப் போக, நானும் என் பையனும் குழம்பிட்டோம்."

டாக்டர் சிரித்தார்.

"குழம்பியதோடு நிறுத்திக்காமே அது உண்மையா பொய்யான்னு விசாரிக்க வந்தது ரொம்பவும் நல்லதாப் போச்சு... இல்லேன்னா ஒரு பொண்ணோட வாழ்க்கை நாசமாகியிருக்கும்...."

தரகர் தலையாட்டினார்.

"நல்லா சொன்னீங்க டாக்டர். அந்தப் பொண்ணு ரமாவைப் பார்த்தா ரவி வர்மா வரைஞ்ச மஹாலட்சுமி மாதிரி இருப்பா.. நான் ஆரம்பத்திலிருந்தே அவர்கிட்ட பொண்ணைப் பார்த்தா அப்படித் தெரியலை. அவசரப்பட்டு பொண்ணை வேண்டாம்ன்னு சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டேயிருந்தேன். இன்னிக்கு எங்க குழப்பம் தீர்ந்து போச்சு.."

வாத்சல்யன் கைகளைக் கூப்பிக்கொண்டு எழுந்தார்.

"ரொம்ப நன்றி டாக்டர்.."

"மேரேஜ் இன்விடேஷனை அனுப்பி வையுங்க. கல்யாணத்துக்கு வர முடிஞ்சா கண்டிப்பா வர்றேன்..."

"வர முடிஞ்சாங்கிற வார்த்தை வேண்டாம் டாக்டர். நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வர்றீங்க... ரமாவையும் என் பையனையும் ஆசீர்வாதம் பண்றீங்க..." விடைபெற்றார்கள்.

அவர்கள் இரண்டு பேரும் ஹாஸ் பிடல் வளாகத்தைத் தாண்டும் வரையில் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் புன்னம்சந்தர் பின் மெதுவாய் நடந்து மேஜைக்கு வந்து டெலிபோனைத் தொட்டு, ரிஸீவரை எடுத்துக் கொண்டு மெட்ராஸுக்குரிய எஸ்.டி.டி. கோட் எண் களையும், டெலிபோன் எண்களையும் டய லில் தட்டினார்.

இணைப்பு உடனே கிடைத்தது.

"மிஸ்டர் கஜபதி...! நான்தான் டாக்டர் புன்னம்சந்தர் பேசறேன். நீங்க சந்தேகப்பட்டது சரிதான். ரமாவைப் பத்தி விசாரிக்கிறதுக்காக வாத்சல்யனும் தரகரும் வந்திருந்தாங்க... "

கஜபதி தவிப்பாய்க் கேட்டார்.

“டா... டாக்டர்! நீங்க என்ன சொன்னீங்க...?"

புன்னம்சந்தர் சிரித்தார். "மின்சார ட்ரான்ஸ்பார்மரில் சிக்கி அஞ்சு வருஷத்துக்கு முந்தி செத்துப் போன சென்னம்மாங்கிற அநாதைப் பொண்ணை உபயோகப்படுத்திக்கிட்டேன்.... போஸ்ட்மார்ட்டம் ரிப் போர்ட்ல நான் மாற்றி ஒட்டியிருந்த பழைய ரமா போட்டோவைப் பார்த்ததும் நம்பிட்டாங்க..."

"டா... டாக்டர்..."

"சொல்லுங்க..."

"இந்த உண்மை ஹாஸ்பிடலில் வேலை செய்யற மத்தவங்க மூலமா வெளியே வந்துடாதா..?

''வரவே வராது. அஞ்சு வருஷத்துக்கு முந்தி வேலை பார்த்த பலர் இப்போ இந்த ஹாஸ்பிடலில் இல்லை. மேலும், பேஷண்டுகளைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாதுன்றது இங்கே முதல் பாடம். நீங்க தைரியமா கல்யாணத்தை நடத்துங்க...”

"டா... டாக்டர்...! நீங்க எவ்வளவுதான் தைரியம் சொன்னாலும் மனசுக்குள்ளே 'திக்திக்'ன்னு இருக்கு.."

''இதோ பாருங்க கஜபதி...! உங்க பொண்ணு ரமா சேலையைக் கிழிச்சுக்கிட்டு அலைஞ்ச பைத்தியம் இல்லை. ஸ்கூல் ஃபைனலில் எதிர்பார்த்த மார்க்ஸ் வரலைங்கிற காரணத்தினால மென்டலி டிஸ்டர்ப்பாகி யார் கூடவும் பேசாமே இருந்தா. அதைப் பைத்தியம் வகையில சேர்க்க வேண்டியதில்லைன்னு அன்னிக்கே சொன்னேன். இன்னிக்கும் சொல்றேன். இப்ப நான் சொன்ன பொய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களைச் சந்தோஷப்படுத்த மட்டுமே... 'ரமா பைத்தியம் ஒண்ணுமில்லே'ன்னு நான் உண்மையையே சொல்லியிருக்கலாம். ஆனா அதுனால் அவங்க குழப்பம் தீராது. ஒரு கல்யாணம் நடக்க ஆயிரம் பொய்களைச் சொல்லலாம்கிறது பழமொழி. இதுவோ அவசியமான ஒரே ஒரு பொய். ஒரு சில உண்மைகளுக்கு நிரந்தர உறக்கம் தேவை மிஸ்டர் கஜபதி..."

கஜபதி மறுமுனையில் லேசாகிச் சிரித்தார்.

''உங்க உதவிக்கு ரொம்ப நன்றி டாக்டர்...."

"கல்யாண காரியங்களை கவனிங்க. உங்க சம்பந்தி என்னைக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டிருக்கார். கண்டிப்பா நானும் வருவேன்... ஆனா கல்யாண மண்டபத்துல என்னை நீங்களோ உங்க மனைவியோ மகளோ தெரிஞ்சதா காட்டிக்க வேண்டாம்"

- சொல்லி விட்டு டாக்டர் புன்னம்சந்தர் சிரித்த சிரிப்பில் ஒரு கல்யாணத்தின் மொத்த சந்தோஷம் தெரிந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 09 ஜூலை 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com