
-பானுகுமார்
அந்த மரணத்தில் சோகத்தைவிட அதிர்ச்சிதான் இருந்தது. மரணம் இல்லை... மரணங்கள்... அவளும், அவளது இரண்டு குழந்தைகளும். போலீஸ் என்கொயரி, போஸ்ட்மார்ட்டம் எல்லாம் முடிந்து வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தார்கள். வெள்ளிக்கிழமை இரவு, மூவரும் தற்கொலை செய்துகொண்டார்கள். மூன்று தற்கொலை என்பதைவிட இரண்டு கொலை, ஒரு தற்கொலை என்றுதான் சொல்லவேண்டும். எட்டு வயது, ஐந்து வயது பிள்ளைகளுக்குத் தற்கொலை பற்றி என்ன தெரியும்? அம்மாதான் இருவருக்கும் விஷத்தைக் குடிக்கக் கொடுத்து, தானும் குடித்து இறந்துவிட்டாள்.
எப்படித்தான் மனசு வந்ததோ. செக்கச்செவேலென்று கொழுத்த கன்னத்துடன், சற்றே நீலம் படர்ந்த முகத்துடன் அமைதியாகப் படுத்திருந்த அந்தக் குழந்தைகளைப் பார்த்து மனம் தாங்கமுடியாமல் தவித்தது.
அப்படி என்னதான் கஷ்டம்?
பணக்கார வீட்டில் பிறந்து, பட்டு மெத்தையில் வளர்ந்து, வாழ்க்கைப்பட்டதும் வசதியான இடத்தில்தான். பிஸினஸில் கொடி கட்டிப் பறந்தான் அவள் கணவன்.
திருமணமான பத்து ஆண்டுகளில் அவளும் அவனும் வாழ்ந்த வாழ்க்கையின் முழுமையைக் கண்டு பொறாமைப்பட்டவர்கள் அதிகம். இராப் பகல் உழைத்து பணம் சம்பாதிக்கவும், அதை அனுபவிக்கவும் தெரிந்தது அவனுக்கு. ஒவ்வொரு சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை பகலும் வெளியில் சுற்றுவதும், பலவிதமாக உடுத்திக்கொண்டு, அலுக்காமல் புதுப்புது நகைகளைப் போட்டுக்கொண்டு முகமெல்லாம் சிரிப்பாக... முக்கியமாக அவள் வெள்ளை முகத்தில் இருந்த பூரிப்பு, சிரிப்பு... இப்படி உலர்ந்து உறைந்துபோனதின் காரணம்?
அன்பைக் கொட்டிய காதல் கணவன், தன்னந்தனியாக விட்டு விட்டுச் சென்றுவிட்டானே என்ற ஆதங்கமா? இரண்டு நாள் சுரத்தில் எமன் வாயில் விழுந்துவிட்டது தாங்கமுடியாத துக்கம்தான். எதிர்பாராத இழப்புதான். ஆனால், நடந்து மூன்று மாதங்களாகியுமா இன்னும் இவள் மனதை தேற்றிக்கொள்ளவில்லை? பிள்ளையை இழந்த இவள் மாமியாரும் சரி, மச்சினர், நாத்தனாரும் சரி.. இவள்கூட இருந்து எவ்வளவோ தைரியம் கூறியும் அதற்குப் பலனில்லாமல் போய்விட்டதே. அன்பான குடும்பம் அவர்களுடையது. எனக்குப் பல வருடங்களாகப் பழக்கம். நிச்சயம் இவளைக் கை விடமாட்டார்கள். பண உதவி இவளுக்குத் தேவைப்படாது. பத்துத் தலை முறை குந்தித் தின்றாலும் குறையாத சொத்துகூட. அதில் வரும் வட்டியில் மூன்று என்ன, முப்பது பேர்கூடச் சாப்பிடலாம். வாழ்க்கைத் தரத்தில் கொஞ்சம்கூட மாறுதல் இல்லாமல் வாழலாம்.
ஆனால் அவன் இல்லாமல் வாழ அவளுக்குச் சம்மதமில்லையோ... அதெப்படி? நிஜமான அன்பு இருந்திருந்தால் அவன் விட்டுச்சென்ற அவன் வாரிசுகளை வளர்த்து மனிதர்களாக, அவன் நினைவுச் சின்னங்களாக உருவாக்கிப் பெருமை கொண்டிருக்க வேண்டுமில்லையா? கணவனின் அன்பு வேண்டும், அவன் பணம் தந்த வசதி வேண்டும். ஆனால் விட்டுச் சென்ற பொறுப்புகள் மட்டும் சுமையாகிவிடுமா?
இதோ... இருபத்தி ஆறாவது வயதில் கணவன் இறந்தபின் இரு மகன்களையும் ஒரு மகளையும் தானே வளர்த்து ஆளாக்கிய அந்தத் தாய்... அவள் மாமியார்... இத்தனைக்கும் அவள் படிக்காதவள். அவளுக்கு இருந்த மனோதிடம் இவளுக்கு இல்லாமல் போனதேன்?
இதோ இரு குழந்தைகளின் சவத்திற்கு நடுவில் அமர்ந்துகொண்டு தலைவிரி கோலத்தில்... நடுத்தெருவில் உட்கார்ந்து அரற்றும் இந்தப் பாட்டியின் சோகம்தான் சத்தியம். குழந்தைகளின் கன்னத்தைத் தடவிப் பார்த்து. அதில் சூடு இருக்கா... என்றா..? என்ன வயிற்றெரிச்சல். அவள் செய்த தியாகம், உழைப்பு எல்லாம் வீண் வியர்த்தம்.
பணக்காரக் கும்பல்... பலர் உறவினர்கள், சிலர் நண்பர்கள்... தெருவாசிகள்.. வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இதில் சம்பந்தப்படாத ஒரு சிறு பெண்... ஓரமாக நின்றுகொண்டிருந்தாள். முகத்தில் அலாதி வருத்தம். சின்னப் பெண். பன்னிரெண்டு வயது இருக்கும். யார் இது? ஆ! ஞாபகம் வந்தது. இவர்கள் வீட்டு வேலைக்காரக் குட்டி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், ''இடுக்கிக் கொள்ள" ஏற்பாடு செய்யப்பட்ட பெண். இவர்கள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சிறு சிறு வேலைகளைச் செய்யும் பட்டாம் பூச்சி. இன்று அமைதியாக ஓர் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள் . நடப்பதில் கலந்துகொள்ள உறவுமில்லை. அந்நிய துக்கம் என்று விலகவும் முடியவில்லை.
மற்ற விதிகள் நடந்துகொண்டிருக்கையில் அவளிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.
"உம் பேர் என்னம்மா?"
"விஜயா."
"அஞ்சு வருஷமாச்சா நீ இங்க வேலைக்கு வந்து?"
"ம். சின்னப் பையன் பிறந்து ஒரு வாரத்துக்கெல்லாம் வந்தேன். அது எங்கிட்டதான் எப்பவும் இருக்கும்
"என்ன சம்பளம் உனக்கு இங்க"
"சாப்பாடு துணிமணியோட மாசம் இருநூறு ரூபா.."
"சேத்து வச்சிருக்கியா?"
"இல்லீங்க, பணத்தை எங்கம்மா வாங்கிக்கிடும். எங்கப்பாரு செத்துப்போனப்ப இங்க கொண்டுவிட்டாங்க. அம்மாவும் நாலு வீட்டுல வேலை செய்யுது. அதில் ஒரு ஐந்நூறு வருது அதிலதான் அம்மா, என் தம்பிங்க இரண்டு பேர் சாப்பாடு, வாடகை கட்டி, ஸ்கூல் பீஸ் அடைச்சு, என்னையும் படிக்க வைக்க ஆசை. ஆனா முடியாது."
"இப்ப நீ என்ன பண்ணுவே?"
"வேற வேலைக்குப் பார்க்கணும் ஏறத்தாழ இருந்தாலும் சம்பளம் வேணுமே. நானும் அம்மாவும் சம்பாரிச்சாதான் குடும்பம் நடக்கும்."
"உங்கப்பா ஒண்ணும் விட்டுப் போகலியா
"பெரிசா ஒண்ணுமில்லீங்க அவர் வாட்சமேனா வேலை பார்த்தாரு. நல்ல சம்பளம்தான். அவர் உயிரோட இருந்தவரைக்கும் அம்மா வீட்டோடதான் இருக்கும். நானும் பள்ளிக்கூடம் போயிட்டு இருந்தேன். சந்தோஷமாக இருந்தோம். ஆனா பெரிசா சேமிக்க எல்லாம் முடியலே. அப்பா லாரி மோதி செத்தப்ப, எங்கம்மா ஓடிஞ்சு போயிட்டாங்க. அப்புறம் மெதுவா தேத்திக்கிட்டு ஒரு மாதிரி தைரியமாயிட்டாங்க. இப்ப எப்படியாவது எங்களை பெரிசாக்கிடணுமனு உழைக்கிறாங்க. நானும் வேலை செஞ்சா சமாளிக்கலாம்." என்று அவள் கூறக் கூற, ஓர் உண்மை பளிச்சென்று புரிந்தது.
வாழ்க்கையை வாழ்வதற்கு பெரிய படிப்போ, வசதியோ, பணமோ தேவையில்லை, மனோதைரியமும் கஷ்டங்களைச் சந்திக்கத் துணிவும் இருந்தால் போதும்.
பிணங்களைத் தூக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. வந்திருந்த பலர் புடைவை, புதுத் துணிகளுடன் காத்திருந்தார்கள், சுற்றி வந்து காலடியில் வைத்து மரியாதை செய்ய. எங்களில் இந்த வழக்கம் உண்டு. நான் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன.
கடைசி யாத்திரை புறப்பட்ட பின்னும் என் கையில் கொண்டுவந்த புடைவைத் துணி அப்படியே ஏதோ ஓர் உத்வேகத்தில் அந்தப் பார்சலை வேலைக்காரப் பெண் கையில் தந்துவிட்டு... நீ கட்டிக்கோ என்று கூறிவிட்டு திரும்பிப் பாராமல் வெளியே நடந்தேன்.
பின்குறிப்பு:-
கல்கி 11 ஆகஸ்ட் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்