மாதம் முழுவதும் 'காதல் திருவிழா' - அடேங்கப்பா, அப்பவேவா?!

'love festival' in ancient Tamil Nadu
love festival
Published on

பண்டைய தமிழகத்தில், உண்மையான காதலையும், காதலரையும் போற்றி ‘காதல் திருவிழா’ கொண்டாடப்பட்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாயில்லை? காதல், வீரம் இரண்டும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர் தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது.

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் - இவன் கடைச்சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் இவன் என்று புறநானூற்றுப் புலவர் மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார். பொதியை மலையில் குடி கொண்டிருந்த தமிழ் முனிவர் அகத்தியர் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தை விழாக்கோலம் கொள்ளச் செய்து காதல் விழா நகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான். தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன்’ என்று குறிப்பிடுகின்றார்.

தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவை, காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றிருக்கிறது. அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம். மேலும், காமதேவனுக்காக எடுக்கப்பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. இதேப் போல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; பெருங்கூட்டத்தில் ஒருவன்!
'love festival' in ancient Tamil Nadu

மகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில் அமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம் பின்பனிக் காலம். அக்காலத்தை ஆதித்த மண்டலம் மிதுன வீதியில் இயங்கும் காலமே பின்பனிக் காலம் என்று கூறினர். அத்தகைய பின்பனிக் காலமே, காதல் திருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர்.

குணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு திரையாக அளிக்கும் பொருள்களாகிய அகில், சந்தனம், வாசனைப்பொருள், கருப்பூரம் முதலிய பொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும் வில்விழாவைக் காண வந்த பின்பனிக்காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்? என்று இளங்கோ கேட்பது இங்கு கவனத்திற்குரியது.

இதையும் படியுங்கள்:
இந்தியா - அறிய வேண்டிய சில ஆச்சரியமான உண்மைகள்!
'love festival' in ancient Tamil Nadu

காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், வில்விழா என்றும் வழங்கப்பட்டுள்ளது. கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியேத் தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள். சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
சிரி(று)கதை - வாழையடி வாழை - boomer to gen beta!
'love festival' in ancient Tamil Nadu

காதல் திருவிழாவான இந்திர விழாவை, காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடியிருக்கின்றனர். இவ்விழாவானது பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப்படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது. மதுரைப் பட்டிணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றேக் கொள்ளலாம்.

வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள் காதல் தேவனை வணங்கி,

இதையும் படியுங்கள்:
சங்கடமேற்படுத்தும் சாலை விபத்துகள்! பதரச்செய்யும் புள்ளிவிவரங்கள்! தீர்வுதான் என்ன? - ஓர் அலசல்
'love festival' in ancient Tamil Nadu

"காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டுகின்றனர். 'காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும், காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக் காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன் அவனின் அம்புகள் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டுமென்று காமனை இன்று மட்டுமல்ல, என்றும் இரப்பேன்,"

என்று கலித்தொகையில் ஒருத்தி சொல்வதைக் காணலாம்.

காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டுக் காட்டுகிறது. விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் இவர், இளம் தொழில் முனைவோர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு!
'love festival' in ancient Tamil Nadu

“காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய் விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங்கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்,”

என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான் என்பதில் இத்திருவிழாவிற்கு இருந்த மதிப்பும் ஏற்பாடுகளும் தெரிய வருகின்றன.

இதையும் படியுங்கள்:
கவிதை: இளைஞனே! மனிதர்களைக் காப்பாற்ற வா!
'love festival' in ancient Tamil Nadu

காதல் திருவிழாவிற்குச் செல்லும் காதலர்கள், தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, 'மூதூர்ப் பொழில்' என்று பெயரிடப்பட்டிருந்தது. அவ்விடத்திற்கு, 'இளவந்திகை' என்னும், சிறப்புப் பெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. காமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தோட் செம்பியனுக்குத் திறை செலுத்த காமதேவனே வருகின்றான் என்று விழாவைச் சிறப்பித்துக் கூறும் புலவர், காமதேவன், வேனிலொடும் தென்றலொடும் சேர்ந்து திறை கொண்டு வந்தான் என்கிறார். காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும் பூங்கா அழகுமிக்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
மர ராட்டை தந்த மகிமை வாய்ந்த வேட்டி! 'சர்வதேச வேட்டி தினம்' - மூல காரணமானவர் யார் தெரியுமா?
'love festival' in ancient Tamil Nadu

அந்த மலர்ச் சோலையில் இளவேனில் காலங்களில் மலரும் நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய மலர்களை மலர்விக்கும் மரங்களையும் மலர்க் கொடிகளையும் பயிரிட்டிருந்தனர். காதற் கடவுளாகிய மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில் என்பதால், காதல் விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com