ஓவியம் : ஜெயராஜ்
ஓவியம் : ஜெயராஜ்

சிறுகதை - இழப்புகள்!

-மதுமிதா

டைசியாகத்தான் வசுமதி விஸ்வநாதனிடம் வந்தாள்.

எவ்வித வார்த்தைகளுமின்றி அவனிடம் திருமண அழைப்பிதழை நீட்டினாள்.

விஸ்வநாதனுக்கு வலித்தது.

வசுமதி ஒன்றும் பேசவில்லை.

முகம் அழுதுவிடுவதைப் போலிருந்தது.

விஸ்வநாதன் ஒரு வார்த்தை பேசினால் கூட அவள் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். பக்கத்தில் அவளது தோழி இந்து மௌனமாய் நின்று கொண்டிருந்தாள்.

இவர்கள் வேதனை தெரிந்த ஒரே ஆள் அவள்தான்.

வசுமதி மெல்ல நகர்ந்து போனாள்.

பத்திரிகையைப் பிரித்தான்.

வசுமதி வெட்ஸ் ராமகிருஷ்ணன். இவன் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ ஒரு ராமகிருஷ்ணன்.

இவனுக்குத் தன் மேலேயே வெறுப்பாக வந்தது.

பெண் முதலில் தன் காதலை வெளிப் படுத்துவது மிகவும் அபூர்வம்.

வசுமதி அபூர்வமானவள்தான்!

ன்று எதேச்சையாகத்தான் லைப்ரரியில் வசுமதியைப் பார்த்தான்.

இவனைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் பளீரென ஒற்றைப் பூ பூத்தது.

இப்போது எல்லாம் இவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு அலாதியான இளக்கம் வந்து விடுகிறது.

இவன் அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

"விஸ்வநாதன்... உங்களுக்கு எதுவும் வேலையில்லையே... கொஞ்ச நேரம் பேசலாமோ...?”

அவன் எதிர்பார்த்ததுதான்.

என்றோ ஒருநாள் அலுவலகத்தில் நிகழப் போகிறது என்றுதான் நினைத்திருந்தான்.

குல்மொஹர் மரத்தடியில் அமர்ந்தார்கள்.

வசுமதி சுற்றி வளைக்கவில்லை.

"என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க விசு...?"

மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் அவன் விசு.

"நல்ல பெண்... புத்திசாலி...!"

“மட்டும்தானா...?”

"மட்டுமல்ல... அழகான பெண்... மிகவும் அன்பானவள்...!"

அவள் தலைகுனிந்திருந்தாள்.

இவனுக்குச் சற்று வருத்தமாயிருந்தது.

அவளின் தயக்கம் புரிந்தது.

"என்ன வசுமதி?"

அவள் இவன் கண்களுக்குள் நேராகப் பார்த்தாள்.

"புரியவில்லையா விசு?"

விஸ்வநாதன் நீளமாய்ப் பெருமூச்சு விட்டான்.

"புரிகிறது வசுமதி... என்னை நான் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன் வசுமதி...!”

''என்ன சொல்றீங்க விசு?''

"ஆமாம்... என்னுடைய திருமணம் என்பதில் எனக்கு அபிப்ராய சுதந்திரம் கிடையாது. என் குழந்தைப் பருவத்திலேயே என் திருமணம் முடிவாகிவிட்டது...!”

வசுமதி மெலிதாய் அதிர்ந்தாள்.

இதையும் படியுங்கள்:
Wellness Carnival: மக்கள் நலம் காக்கும் திருவிழா! என்ன? எங்கே? எப்போது? யார் நடத்துவது?
ஓவியம் : ஜெயராஜ்

"யார் விசு?"

“என் மாமா பெண்...!”

“ஏன்?”

"நன்றிக் கடன்.''

"நன்றிக்கடனா?''

“ஆமாம்.”

நன்றிக் கடன்தான்.

விஸ்வநாதனுக்கு மூன்று வயதிருக்கும்போது அவன் தந்தை இறந்து போனார்.

அம்மா மிகவும் வெகுளி.

அவளின் உலகம் பற்றிய கணிப்புகள் மிகவும் எளிமையானவை.

மாமாதான் அம்மாவுக்குச் சகலமும் செய்தார்.

மாமா என்றால் அம்மாவின் சொந்த உடன் பிறப்பு அல்ல.

தூரத்துச் சொந்தம்.

மாமா நினைத்திருந்தால் நழுவியிருக்கலாம்.

சொந்தச் சகோதரன்போல் எல்லாம் செய்தார்.

விஸ்வநாதனை வளர்த்தார். படிக்க வைத்தார்.

விஸ்வநாதனின் வளர்ச்சிக்கு அவர்தான் அடியுரம்.

அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் இவனது குறிக்கோள்.

ராதிகா மனசிலும் அதுவே பதிவாகியிருந்தது.

இருப்பினும் அவனுக்கும் மனசு என்ற ஒன்று இருக்கிறதே!

வசுமதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் சலனப்பட்டான்.

மிகவும் கஷ்டப்பட்டு மனசை இறுக்கிக் கொள்வான்.

இது பெரிய சித்திரவதை.

வசுமதி தானாக மனசைத் திறந்துவிட்டாள்.

வசுமதியின் கண்களில் மெலிதாகக் கண்ணீர்.

"நா என்ன பண்றது வசுமதி?"

"உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன் விசு! உங்கள் பக்கம் நியாயமிருக்கிறது...!”

விஸ்வநாதன் அவள் விரல்களை ஆறுதலாகப் பற்றினான்.

"நீங்கள் வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்ளுங்கள் வசுமதி. எனக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை. அந்த அதிர்ஷ்டசாலியைத் தேடிப் பிடித்து வாழ்க்கையைச் சந்தோஷமாக்கிக் கொள்ளுங்கள்...!"

அதற்கப்புறம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.

சரியாக ஆறு மாதம் கழித்து அழைப்பிதழ் கொடுக்கிறாள்.

விஸ்வநாதனுக்கு அலுவலகத்தில் இருக்கப் பிடிக்கவில்லை.

ம்மா இவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

"ராதிகா வந்திருக்கிறது தெரியுமா?"

விஸ்வநாதனுக்கு எரிச்சலாய் வந்தது.

"ஹாய் விசு...!''

ராதிகா மாடியிலிருந்து இறங்கினாள்.

ராதிகா புயல்.

வசுமதி தென்றல்.

இந்தப் புயல் இவனை எப்படியெல்லாம் புரட்டிப் போடப் போகிறதோ?

''சீக்கிரம் கிளம்புங்க... டிரஸ் மாத்திட்டு வாங்க...!"

“எங்க...?”

''ச்... சொன்னாக் கிளம்புங்க...?"

ராதிகாவுக்கு எப்பவுமே கட்டளையிட்டுத்தான் பழக்கம்.

அம்மா இவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.

விஸ்வநாதனுக்குத் தனிமை தேவைப்பட்டது.

ராதிகாவை மறுக்க முடியாது. விட மாட்டார்கள். அம்மா சிபாரிசு வேறு.

விருப்பமில்லாமல் கிளம்பினான்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட மறுக்கும் குழந்தைகளைக் கவர வண்ண வண்ண உணவுகள்!
ஓவியம் : ஜெயராஜ்

ண்ணாடித் தம்ளரில் ராதிகா தாளம் போட்டுக் கொண்டிருந்தாள்.

விஸ்வநாதன் வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவன் முன் சொடக்குப் போட்டாள்.

"ஹேய்... என்னாச்சு... முக்கியமான விஷயம் பேசலாம்னு வந்தா...இப்படி டல்லடிக்கிற!"

விஸ்வநாதன் வலுக்கட்டாயமாக நிமிர்ந்தான்.

''இன்னும் நாலு மாசத்துல படிப்பு முடியுது...!”

"ஆமாம்... மேலே படிக்க வேண்டியதுதானே...!”

"அப்பாவும் அதான் சொல்றார்... ஆனா கல்யாணம் பண்ணிட்டுப் படிங்கிறாரே...!”

"நீ என்ன சொல்றே ராதிகா?"

"ஏன் விசு... இந்தப் பெரியவங்க எல்லாரும் இப்படிச் சுயநலமாயிருக்காங்க...?”

விசு சடாரென நிமிர்ந்தான்.

"என்ன சொல்றே ராதிகா?"

"அவங்க சந்தோஷத்துக்காகக் குழந்தைகளை வளைக்கப் பாக்குறாங்களே... நல்லாவா இருக்கு?"

"சுத்தி வளைக்காம நேரிடையாச் சொல்லு...!”

"உனக்குன்னு தனி அபிப்ராயம் கிடையாது விசு... என் அப்பாவின் அபிப்ராயம்தான் உனக்கும்...ஏன்னா நீ ஒரு செண்டிமெண்டல் இடியட்... ஆனா நான் அப்படி இல்லே...!”

விஸ்வநாதன் மௌனமாயிருந்தான்.

"ஆனா நான் அப்படியில்லே... நீ சின்னப் பையனாயிருக்கிறதுலேருந்து பார்த்துட்டு வர்றேன்... உன்னப் பாக்க தப்ப பாக்கலியேன்னு மனசு தவிச்சதில்லே...பாக்குறப்ப அம்மாடின்னு நெஞ்சு கொள்ற சந்தோஷத்துல பிரமிச்சதில்லை...!"

அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

"உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் எனக்கு எவ்விதக் கிளர்ச்சியும் ஏற்படலை... இது தப்பா விசு?"

"தப்பில்லே ராதிகா!''

"கோபமா... விசு?"

"இல்லே... ஓப்பனா பேசறது எனக்குப் பிடிக்கும்...!"

''உனக்கு எப்படி?"

"நீதான் சொல்லிட்டியே... எனக்குன்னு தனி அபிப்ராயம் கிடையாதுன்னு... ஆமாம் ராதிகா, நான் ஒரு செண்டிமெண்டல் இடியட்தான்...!"

"எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. நிறையப் படிக்கணும்...!"

''யாரையாவது விரும்பறியோ?"

"ச்சே...யாருக்காகவோ உன்னைப் புறக்கணிக்கிறதா நினைக்காதே...இதுவரைக்கும் யார் மீதும் பிடிப்பு விழலை... கல்யாணம் என்றால் ஒரு பிடிப்பு, ஒரு படபடப்பு, ஒரு லயிப்பு ஏற்படணும். உன்னிடமும் வரவில்லை. எவனிடமும் இதுவரை வரவில்லை. எவனிடம் லயிக்கிறேனோ அவனைக் கல்யாணம் பண்ணிக்கறேன்.. அதுவரை படிக்கணும் விசு...!''

விஸ்வநாதன் உள்ளுக்குள் யோசித்தான்.

ராதிகா! நீ வித்தியாசமானவள்.

இதை ஆறு மாதம் முன்பு சொல்லியிருக்கலாம்.

என் கண்மணியை இழந்துவிட்டேனே!

கோபமா விசு... என்னைப் புரிஞ்சுக்கோங்க.. நான் இல்லாம உங்களால வாழ முடியும் விசு...!"

"வசுமதி இல்லாமலேயே வாழப் போகிறேன் ராதிகா.'

"நான் அப்பாவிடம் பேசுகிறேன். நீங்க அம்மாகிட்டே பேசுங்க.. பழியை என் மேல் போடுங்க.. அதானே உண்மையும் ...!"

"மாமா... ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு ராதிகா...!''

"அவருக்காக நம் வாழ்க்கையைப் பாழ்படுத்திக்க வேண்டாம்... உங்களுக்குப் பிடித்தவளை நீங்க பண்ணிக்கங்க... எனக்குப் பிடித்தவனை நான்
தேடிக்கிறேன்...!”

அதற்கப்புறம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்:
சத்தான கொழுக்கட்டையும், முருங்கைக் கீரை தோசை!
ஓவியம் : ஜெயராஜ்

ம்மாவுக்கு முதலில் அழுகைதான் வந்தது.

''ராதிகாவா அப்படிச் சொன்னாள்?"

"ஆமாம்... அம்மா... அவள் விருப்பம் இதில் முக்கியமில்லையா?"

அம்மா நெடு நேரம் யோசித்தாள்.

"போகட்டும் விடு விசு... ராதிகா இல்லைன்னா என்ன உனக்கு ஆயிரம் பெண் கிடைப்பாள்..." அம்மா சமாதானப்படுத்தினாள்.

ஆயிரம் பெண் கிடைக்கலாம். ஆனால் வசுமதி கிடைக்க மாட்டாள்.

விஸ்வநாதனுக்கு அம்மாவிடம் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 12 ஜூலை  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com