சிறுகதை; காதல் நெகடிவ்!

Tamil Short story.
ஓவியம்; ஜெ...
Published on

-ரிஷபன்

ந்தரை மணிக்கே வந்து டோக்கன் வாங்கியாகிவிட்டது. டாக்டர் வருவதற்கு ஆறரை மணி ஆகுமாம்.

பசி வயிற்றைக் கிள்ளியது. மெயின் ரோடில் 'ரெடி ஃபுட்ஸ்'. தீர்மானிப்பதற்குள் கால்கள் பத்தடி நடந்து விட்டன.

"சப்பாத்தி இருக்கு..."

முதல் விள்ளல் வாயில் கரைவதற்குள் 'ஹாய்' என்ற அழைப்பு.

நிமிர்ந்தான்.

வினுதா.

"நீயா?"

போன ஞாயிறு ஒரு கல்யாண மண்டபத்தில் அறிமுகம். 'வீடியோ' வின் ஆக்கிரமிப்பு மீறி, குறுக்கே மறைப்பவர்களின் தொல்லை தவிர்த்து, மணமக்களை ஃபிரேமிற்குள் கொண்டுவர சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு மென்கரம் நீண்டது. சூடான காப்பி.

"யாருக்கு" என்றான்.

''உங்களுக்குத்தான்."

காலி தம்ளரை வாங்கிக்கொண்டு போனாள். அத்தோடு மறந்து போயிருக்க வேண்டிய சமாசாரம். இல்லை. முகூர்த்தம் முடிந்து, ஒவ்வொருவராய்த் தேடிப் பிடித்து குரூப் போட்டோ எடுத்து... 'மாலை நலங்கிற்கு மறக்காமல் வா' என்று அவனை விசிறி விட்டபோது மீண்டும் அதே மென்கரம். குறுக்கே கைநீட்டித் தடுத்தவளை பார்த்தான்.

"வினுதா... என் பேர்."

"ஓ... ""நீங்க சாப்பிடவே இல்லை. இன்னும்..."

பசித்து அடங்கிப் போன வயிறு. நிறைய ஃபங்ஷனுக்கு ஃபோட்டோ எடுத்துப் பழகிப் போன அனுபவம்.

"பரவாயில்லே... இன்னொரு இடம் போகணும்..."

பொய். நேராக ஏதேனும் ஒரு ஹோட்டல். ஆறிப் போன - மிச்சம் இருக்கிற கறி, கூட்டுடன் சாப்பாடு லேசாய் ஓய்வு. மீண்டும் இங்கே வர வேண்டும். இப்போதே மணி இரண்டு நான்கு மணிக்கு நலங்கு.

''பரவாயில்லே. வாங்க..." என்றாள்.

ஏறக்குறைய வலுக்கட்டாயம். போனான். பக்கத்து இலையில் அவள்.

"நீ... நீங்களும் சாப்பிடலியா?"

"ம்... உங்களுக்குக் கம்பெனி தர!"

வார்த்தைகள் அதன் அளவில் சுருக்.

ஆனால் செவிகளைத் தீண்டிய மறுவினாடி உள்ளுக்குள் கிளர்ந்து எழும் வண்ணங்கள்.

பாயசம் இரண்டாம் முறை கப்பில் தரச் சொன்னாள். மோர் சாதம் மறுத்தவனுக்கு தம்ளரில் மோர். மண்டப வாசலில் தேங்காய்ப் பையுடன் டாட்டா.

இதையும் படியுங்கள்:
கவிதை: போற்றப்படும் வாழ்வுக்கு போட்டிகள்தானே புகலிடம்!
Tamil Short story.

நான்கு மணிக்கு சந்தன நிற சூரிதார்.

"நைஸ்..." என்றான் அவனையும் மீறி.

மாப்பிள்ளை அவளுடைய பெரியப்பா பையனாம். ஓவராய்க் கேலி செய்தாள். நலங்கில் விட்டுக் கொடுத்தபோது 'இப்பவே சரண்டரா' என்றாள்.

இத்தனை நாட்களில் கேமிராவைத் தொழிலுக்காகக் கையில் பிடித்த முதல் நிமிடம் முதல், பிறர் விருப்பத்திற்காகப் படம்பிடித்தவன் முதன் முறையாகத் தனக்காக எடுத்தான்.

நாலடி தூரத்தில் நின்றிருந்தவன் நகர்ந்து பின்வாங்கினான். லேசாய்ப் படபடப்பு.

யாரும் அவனைக் கவனிக்கவில்லை.

‘"தேங்காயை விடாதே... கெட்டியாப் பிடிச்சுக்க..."

“ஏய்... பிரபு.. ஒரு கைதான் யூஸ் பண்ணணும்."

பத்தடி தொலைவில் நின்றவன் 'Zoom' செய்து வினுதாவை மட்டும் 'கிளிக்'கினான்.

''கிளிக்... '' என்றாள் கையைத் தட்டி.

''எ...ன்ன?''

'என்ன யோசனை. எனக்கும் டிபன் வாங்கித் தரணுமேன்னா..."

"என்ன வேணும்?

''ப்ச்... டிபன் வேணாம்... ஐஸ்கிரீம்..."

உதடுகளின் ஊடே மறைந்த ஐஸ்கிரீம் மீது பொறாமை வந்தது. எப்படித் தற்செயலாய் அடுத்த சந்திப்பு நிகழ்கிறது?

''காதுல என்ன பஞ்சு?" என்றாள்.

''ஆங்... ''

''போச்சு... கேட்காதா? ''

புரிந்தவனாய்ப் பதில் சொன்னான்.

"ரெண்டு நாளா வலி... ஏன்னு புரியலே. 'ஈஎன்ட்டி'கிட்ட வந்தேன். ஆறரைக்குத்தான் வருவாராம்."

வெளியில் வந்ததும் சொன்னாள். ''ஆல்பம் பார்த்தேன்... ரொம்ப நல்லா இருந்தது."

"தேங்க்ஸ்."

"வேற பர்சனலா நீங்க ஆல்பம்... ஐ மீன்... கலெக்ஷன் வச்சிருக்கிங்களம்

முதுகுத் தண்டில் சில்லிட்டது. கண்டுபிடித்து விட்டாளா...

"இல்லே உங்க டேஸ்ட்டுக்கு ஃபோட்டோஸ் எடுக்கிறது உண்டா."

''ம்! வச்சிருக்கேன் பார்க்கணுமா?"

ரிஸ்ட் வாட்ச்சைப் பார்த்தாள்.

"இப்ப நான் ஃப்ரீதான். நீங்க டாக்டரைப் பார்க்கணுமே..."

"நாளைக்குப் பார்த்துக்கிறேன்."

"வேணாம்... ஐ வில் வெயிட் டாக்டர் ஃபாஸ்ட்" என்றாள்.

பயப்படத் தேவையில்லை என்றார் டாக்டர். பிரிஸ்கிரிப்ஷனில் மருந்து வரிசை.

"என்னவாம்..."

"நத்திங் டு வொர்ரி.."

"உங்க வீட்டுக்குப் போகலாமா..."

மொபட் பாக்கியம் செய்தது. தன் வழக்கமான சண்டித்தனங்களைக்கூட விட்டுவிட்டு ரிஸர்விலேயே எத்தனை கி.மீ. வேண்டுமானாலும் ஓடுகிறேன் என்று காதலாய் முனகியது.

''ச்சீ... பேசாமல் இரு" என்றான்.

"என்ன..." என்றாள் இரைந்து.

'உன்னிடம் இல்லை. என் மொபெட்டிற்கு சொன்னேன்' என்றா சொல்லமுடியும்.

தலையசைத்தான்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: விடா முயற்சி - முற்றிலும் திருவினையாக்கவில்லை!
Tamil Short story.

தையுமே தேட வேண்டிய பாச்சிலர் அறை.

''ஆல்பம்னு வைக்கலே... இதோ... இங்கேதான்... ஒரு கவர்ல் வச்சிருந்தேன்."

போட்டோக்களைத் தேடுவதைவிட அறையை ஒழுங்கு செய்ய சிரமப்பட்டான்.

"ஹை.. என் ஃபோட்டோ..." என்றாள். திடுக்கிட்டுத் திரும்பினான். வினுதாவின் கையில் அவளை Zoom செய்து எடுத்த ஃபோட்டோ. துளி பிசகாமல் நேர்த்தியாய் வண்ணக் கலவையில் சிறைப்பட்ட அழகு.

"யெஸ்.. உங்க ஃபோட்டோ... வந்து கல்யாணத்துல எடுத்தது. சர்ப்ரைசா... உங்ககிட்டே தரணும்னு... தடுமாறினான்.

"நல்லா இருக்கு... நான் இவ்ளோ அழகா?"

நீயா... என் மனதைக் கேள். அது சொல்லும் பெண்ணே... காதல் கேமிராவில் அடைபட்டுப் போயிருக்கிறேன்.

"இதோட நெகடிவ்..." என்றாள்.

"எதுக்கு?"

"வேணுமே."

சட்டென்று முகம் சுண்டிப்போனது.

ஓ... ஏன் அவள் வலுக்கட்டாயமாய்த் தன்னுடன் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

யூகித்துவிட்டாள். தன்னை மட்டும் தனியே ஃபோட்டோ எடுத்ததை. ஆல்பத்திலேயே இருந்திருந்தால் இத்தனை தூரம் வந்திருக்கமாட்டாள். கல்யாணச் சூழலில் எடுத்ததைத் தனியே ஏன் எடுத்து வைத்திருக்கிறான்.. அவன் நோக்கம் மீதே சந்தேகம்.

நெகடிவ்வும் கேட்டது அதனால்தான்.

எத்தனை சாதுர்யமாய் பிரச்னையைத் தீர்த்துக்கொள்கிறாள். கூச்சல் இல்லை. குற்றச்சாட்டு இல்லை.

பெருமூச்சு விட்டான். என் முதல் ஆசை எனக்கும் பிடித்துப் போன பெண். இனி மன ஆல்பத்தில் மட்டுமே புரட்டிப் பார்க்க வேண்டும்.

''பிளீஸ்.... தேடித் தரேன்."

அவளிடம் துளிக்கூட பதற்றம் இல்லை.

தர முடியாது, போ என்றால்கூட அடுத்ததாய் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவள் மாதிரி தோற்றம்.

தேடியதில் கலர் லேப் கவர் கிடைத்தது.

வெளிச்சத்தில் பார்த்ததில் 'அவள்' இருந்தது புலனானது. காதல் நெகடிவ்!

"இதுதான்..."

விரல்கள் நடுங்க நீட்டினான். தனக்காக பிரத்தியேகமாய்... பொக்கிஷமாய்... வைத்திருக்கத் தீர்மானித்த ஃபோட்டோ. இனி 'அன்எக்ஸ்போஸ்' ஆகிப்போன frame நினைவின் வருடல்கள் தரப்போகிற சுகம் மட்டும்.

வாங்கிக்கொண்டாள்.

வேறு பக்கம் திரும்பியிருந்தான்.

கண்களில், இதயத்தில் மளுக்.

"ஹலோ... உங்களைத்தான்..."

இப்போதும் அதே மென்கரம்.

"எ...ன்ன?"

"இந்த நெகடிவ் வச்சு எவ்வளவு பெரிசா பிரிண்ட் எடுக்கலாம்..."

"ஆஸ்..யூ.. பிளீஸ்... லைஃப் சைசுக்கு பிரிண்ட் போடலாம். கிளாரிட்டி வேணும்னா 15 பை 12 வரை எடுக்கலாம்..."

குரல் அனிச்சையாய் முனகியது.

''எனக்கு 'லைஃப்'தான் வேணும்..."

அவள் குரலில் ஏதோ சீண்டல் புரிய,  நிமிர்ந்தான். அவள் கண்களிலும் காதல் காமிரா தெரிந்தது. காதல் 'பாசிட்டிவ்'தான் என்று சொல்லாமல் சொன்னது.

பின்குறிப்பு:-

கல்கி 22  டிசம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com