
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு
இரண்டாம் வகுப்புப் புத்தகத்தையும்
படிப்பதில் மிகுந்த சிரமமாம்
பாவந்தானே நம் இளந்தலைமுறை!
யாரெல்லாம் இதற்குக் காரணம்
என்றே நாம் ஆய்ந்திடில்
ஆளுகின்ற அரசுகள் அனைத்துந்தான்
என்பதே எண்ணத்தில் உதித்திடும்!
ஒன்பதாம் வகுப்பு வரை
‘ஆல்பாஸ்’ வேண்டு மென்று
எந்த வொரு மாணவனும்
என்றைக்கும் எவரிடமும் கேட்டதில்லை!
‘இடைநிற்றல்’ போக்க வென்று
இப்பொழுது ஒரு காரணத்தை
எல்லாரும் ஒரு மனதாய்
ஏகமாய்க் குரல் தருவர்!
எந்த நல் பெற்றோரும்
எழுத்துக்களை நன்கு அறியாமல்
மேல் வகுப்பு செல்வதையே
விரும்பி யேற்க மாட்டார்கள்!
கல்வியே நம்மிரு கண்களென்பதோடு
எண்ணும் எழுத்துமே என்றைக்கும்
நம்மை உயரத்தில் வைத்து
ஊர் வாழ்த்தச் செய்பவை!
எதனையும் நம் குழந்தைகளுக்கு
நாம் ஏகமாய்க் கொடுக்காவிட்டாலும்
இறைவன் தந்த கண்களை
ஏற்புடைத்தாய் ஆக்கல் நம்கடமையே!
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும்
உண்மையான தேர்வு முறைகளை
நடத்தலே நல் வழியாகும்
கழித்தலும் கணித முறையாகும்!
உறுதி யற்ற அடித்தளம்
உயர் பில்டிங்கைக் காக்காது!
அடிப்படை நல் கல்வியே
அகிலத்தை நமை ஆளவைக்கும்!
ஒவ்வொரு வகுப்பு தனை
உங்கள் குழந்தை கடக்கையில்
அதற்கேற்ப அதன் திறன்
அறிந்திடல் நம் கடமையே!
அரசியலில் வேர் ஊன்ற
அத்தனை பேரும் இன்று
கல்வித் தந்தை ஆகினர்
கல்வி வணிகம் தொடங்கினர்!
அந்தக் கால நாங்களெல்லாம்
அரசுப் பள்ளிகள் படியேறி
நன்கு கற்றுத் தேறினோம்!
நல்ல வாழ்வை வாழ்கிறோம்!
தேர்வு முறை அவசியம்
திறன் அறிதல் நல்லது!
போற்றப் படும் வாழ்வுக்கு
போட்டிகள் தானே புகலிடம்!
இனிவரும் இளந் தலைமுறை
எண்ணும் எழுத்தும் கற்கட்டும்!
தேர்வுகள் பல எழுதியே
திறனை வளர்த்துக் கொள்ளட்டும்!