சிறுகதை – மனத்தூது!

ஓவியம்; லலிதா
ஓவியம்; லலிதா

-அன்னம்

வாசல் வராந்தாவிலிருந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹெலன்.

ஒரு மாருதி கார் அவள் வீட்டு வாசலில் வந்து நின்றது.

வண்டியிலிருந்து இறங்கியவளைப் பார்த்த ஹெலன் அசந்து போனாள். வசு இவ்வளவு தூரம்... அவளைத் தேடி...

எப்போதும் மான்போல் துள்ளிக் குதித்து ஓடிவரும் வசு பார்த்துப் பார்த்து அடி வைத்து நடந்து வந்தாள். ஹெலனுக்குப் புரிந்தது. வசு தாயாகப் போகிறாள்.

"டீ... மெதுவாக... மெதுவாக..." என அவளை விலக்க முயன்றாள் வசு.

"உன் பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது. உள்ளே வா! இந்த ஊருக்கு நீ எப்போது வந்தாய்? எனக்குத் தெரியாமல் போச்சே!"

நடந்தது வசுவிற்கு மூச்சிறைத்தது. ஹால் சோபாவில் உட்கார்ந்தாள்.

"யார் ஹெலன் அது?" எனக் கேட்டபடி உள்ளேயிருந்து வந்தாள் ஞானம் - ஜபமாலையை உருட்டியபடி.

''என் தோழி அத்தை... வசுமதி. அஞ்சு வருஷம் கழிச்சு இப்பத்தான் பாக்கிறேன்!"

"நல்லா இரு மகளே!" என ஆசீர்வதித்து விட்டுப் போனாள் ஞானம்.

வசு ஞானம் யார் எனத் தன் விழிகளால் விசாரித்தாள்.

''ஆமாம், வசு! இவர்கள்தான் என் மாமியார்.'

"அடுத்த வெள்ளிக் கிழமை எனக்குச் சீமந்தம், இந்த ஊரில்தான்" எனக் கூறித் தன் கைப்பையைத் திறந்து ஓர் அழைப்பிதழை எடுத்துக்கொடுத்தாள் வசு.

ஹெலன் அதை வாங்கிக்கொண்டாள்.

"ரொம்ப சந்தோஷம்!" - என்றாள் ஹெலன். உதடுகள் பிறப்பித்த சொற்களில் தெரிந்த மகிழ்ச்சி உள்ளத்தில் இல்லை. ஒரு வேதனை இருந்தது.

''உன் மாமியாரைக் கூட்டிக்கொண்டு கட்டாயம் வா!''

''உம்!'' என்றாள் ஹெலன்.

வசு தன்னைப் பற்றிச் சொன்னாள். திருமணம் ஆகிக் கணவனுடன் பம்பாய், கல்கத்தா எனச் சுற்றினாள். போன மாதம்தான் இங்கு மாற்றல் ஆகியது. இது அவள் கணவனின் சொந்த ஊர். மாமனார், மாமியார்கூட இருக்கிறார்கள். ஒரு நாள் கடைத்தெருவில் ஹெலனின் கணவன் ராபர்டைக் கண்டு பேசியிருக்கிறாள்.

"அப்படியா? அவர் என்னிடம் சொல்லவேயில்லையே?"

''நான்தான் உன்னிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். உனக்கு 'ஸர்ப்ரைஸா' இருக்கட்டுமேன்னுதான்.

வசு விடை பெற்றபோது வாசல் வரைபோய் வழியனுப்பினாள் ஹெலன்.

காரில் ஏறிக்கொண்ட வசு தயங்கியபடி கேட்டாள்.

"நீயாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட இந்த வாழ்க்கை உனக்குத் திருப்தியாக இருக்கிறதா. ஆர் யூ ஹாப்பி! சாந்தி ?" எனக் கேட்டாள் வசு.

''உம்... உம்" எனத் தலையாட்டினாள் ஹெலன்.

ந்து வருஷங்களுக்கு முன் இவள் பெயர் ஹெலன் இல்லை. சாந்தி.

ஹிந்து வைதீகக் குடும்பத்தைச் சார்ந்தவள். படித்துப் பட்டம் பெற்றபின் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தாள்.

வங்கி ஏஜெண்ட் ராபர்ட் என்ற இளைஞன். சாதாரணமாகப் பேசிக்கொண்டார்கள். நட்பாக மாறியது. பிரேமையாக உருவெடுத்தது.

சாந்தி தன் அம்மாவிடம் தன் விருப்பத்தை மெதுவாக வெளியிட்டாள். அவள் தாய் அப்படியே விக்கித்துப் போய்விட்டாள்.

ராபர்ட்டின் தாய் ஞானமும் இப்படித்தான். அவன் சாந்தியை மணக்க விரும்பியதைக் கேட்டவுடன் திடுக்கிடத்தான் செய்தாள். ஆனால் சுதாரித்துக்கொண்டாள்.

"ராபர்ட் ... நீ கேட்டு நான் எதையும் மறுத்தது இல்லை. இப்போதும் மறுக்கப்போவதில்லை. ஒரே ஒரு நிபந்தனை. அந்தப் பெண் யாராக இருந்தாலும் கல்யாணத்திற்கு முன்பு நம் மதத்தில் சேர வேண்டும்.”

''சரி, அம்மா! நான் சொன்னால் அவள் கேட்பாள்!" என்றான் ராபர்ட்.

ஆனால் சாந்திக்கு அது அத்தனை சுலபமாக இல்லை.

வெள்ளிக்கிழமைதோறும் லலிதா ஸஹஸ்ரநாமம் தவறாமல் சொல்லும் சாந்தி, வீட்டை விட்டு எங்கே புறப்பட்டாலும் விபூதிக் கீற்று இல்லாமல் கிளம்பாத சாந்தி, சனிக்கிழமைதோறும் நவக்கிரகம் சுற்றி வழிபடும் சாந்தி, கிருத்திகை, சஷ்டி என உபவாசம் இருக்கும் சாந்தி–

ராபர்ட் சொன்னதைக் கேட்டுத் தயங்கினாள் .

''சாந்தி... எனக்காக என் அம்மா எதையெல்லாம் விட்டுக் கொடுத்து இறங்கி வந்திருக்கிறாள் தெரியுமா! அவள் தீவிரமான கிறிஸ்துவ ஈடுபாடு கொண்டவள். திருநெல்வேலியைச் சேர்ந்த பரம்பரை கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவள்.. தூத்துக்குடியில் என் அத்தை பெண் எக்கச்சக்கமாக சீருடன் எனக்காகக் காத்திருக்கிறாள். பாளையங்கோட்டையில் என் மாமா எப்போது அம்மா கல்யாணப் பேச்சை எடுப்பாள் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். நம் கல்யாணம் நடந்தால் அவர்கள் எங்கள் வீட்டை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். நான் உன்னை விரும்புவது அறிந்ததும் ஒரு வார்த்தைகூட மறுப்பு பேசாமல் சம்மதித்த பெருந்தன்மையை நினைத்துப் பார்... அவள் பேச்சை மீறி உன்னைத் திருமணம் செய்துகொண்டால் அவள் மனம் எத்தனை வேதனைப்படும். அவள் மறுத்திருந்தால்கூட எனக்கு வீம்பு வளர்ந்திருக்கும். இப்போது அந்த அன்புச் சங்கிலியை உடைத்தெறியும் பலம் எனக்கு இல்லையே!”

“எல்லாம் சரிதான். மதம் மாறித்தான்...”

"சாந்தி! என்னைப் பொறுத்தவரை மதம் என்பது பெரிய விஷயம் இல்லை. நான் சேலத்தில் இருந்தபோது என் நண்பர் ஒருவருடன் கூடப் பத்து நாட்கள் தொடர்ந்து பகவத்கீதை கேட்டிருக்கிறேன். எனக்குப் பல இடங்களில் அது பைபிளைத்தான் நினைவூட்டியது."

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
ஓவியம்; லலிதா

சாந்தி யோசித்தாள். அவளால் ராபர்ட்டை மறக்க முடியவில்லை.

யாரிடமும் சொல்லாமல் ஒருநாள் ஹெலனாக மாறினாள். ராபர்ட் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போய்விட்டான்.

அவள் அப்பாவிற்கு விஷயம் தெரிந்தது. ருத்ரமூர்த்தியாக மாறினார். ஹெலன் - ராபர்ட் திருமணப் பத்திரிகையைக் கிழித்துப் போட்டார். தன் உத்தியோகத்தை வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டு போனார்.

திருமதி ராபர்ட் ஆனபிறகு சாந்திக்கு எந்தக் குறையும் இல்லை. ஞானம் தன் மகளைப்போல் அவளைக் கவனித்துக்கொண்டாள். பாசத்தைப் பொழிந்தாள். ஆனாலும் சாந்திக்கு அடி மனத்தில் ஏக்கம்...

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் ஏக்கத்தை அதிகமாக உணர்ந்தாள்

"உங்க அப்பா, அம்மா இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கலையேனு இனிமே ஏங்காதே. எப்ப அவங்க உன்னை மறந்து வாழத் துணிஞ்சுட்டாங்களோ, அப்போ நீயும் அதையே செய்ய வேண்டியதுதான்..." - ராபர்ட் கோபமாகவே சொல்லி விட்டான்.

எனினும், மனத்துக்குள் மருகினாளே தவிர, சாந்தி வெளியே சொல்லவில்லை. இதனால் தனக்கும் ராபர்ட்டுக்கும் எந்தவிதமான பிணக்கும் ஏற்படுவதை அவள் விரும்பவில்லை.

ந்த ஐந்து வருடங்களில் இருமுறை கரு உண்டாகிக் கலைந்து போயிற்று ஹெலனுக்கு.

இப்போதும்கூட மூன்று மாதம் ஆகிறது. வசுவிற்குச் செய்வதுபோல் யார் அக்கறையாக வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் செய்யப்போகிறார்கள்?

வசு தன் சீமந்தத்திற்கு வரும்படி மறுபடியும் டெலிபோனில் அழைத்தாள்.

ஓவியம்; லலிதா
ஓவியம்; லலிதா

ஹெலனுக்கு அங்கு நடந்த வைபவங்களையும், உற்றார் உறவினர் அடித்த கும்மாளத்தையும், வசு முகத்தில் தெரிந்த பூரிப்பையும் பார்த்தபோது, தான் எதையெல்லாமோ இழந்துவிட்ட ஆற்றாமை அதிகமாகியது. அப்பா, அம்மா, தம்பி,  தங்கைகள்... அவள் மேல் அவர்கள் அன்பு செலுத்தவில்லையா? பாசம் காட்டவில்லையா? அந்த பந்தத்தையெல்லாம் அத்தனை சுலபத்தில் எப்படி அறுத்துவிட்டு வர முடிந்தது!

ஹெலன் திருமணமாகி வந்தது முதல் ராபர்ட்டின் சொந்தக்காரர்கள் யாரும் அதிகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ராபர்ட் - ஞானத்துடன் பேசுவார்களே தவிர ஹெலனை அந்நியமாகவே பாவித்தார்கள்.

இருக்க இருக்க ஹெலனுக்கு ஏக்கம் அதிகரித்தது. பொறுக்கமுடியாமல் ஒரு நாள்,  மனத்து உணர்வுகளையெல்லாம் கொட்டி அம்மாவுக்குக் கடிதம் எழுதினாள் - ஞானம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில்.

ஞானம் எழுந்து வந்தபோது கடிதத்தை ஒட்டித் தபாலில் சேர்க்கக் கிளம்பிக்கொண்டிருந்த ஹெலன் சமாளித்தாள்: "என் தோழிக்கு ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் அதான்." அத்தை ...

ஞானத்துக்குப் புரிந்தது. வசுவின் சீமந்தத்துக்குப் போய் வந்தது முதல் ஹெலனின் மன நிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
ஓவியம்; லலிதா

ரு வாரம் கழித்து ஒருநாள் மாலை 'வாக்' முடிந்து வழக்கம்போல் ஹெலனும் ராபர்ட்டும் வீடு திரும்பியபோது அம்மா வந்து காத்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே 'அம்மா' என்று அழைக்கக் கூடவாய் எழாமல், கரைந்து போய், தோளில் சாய்ந்து நிசப்தமாய் அழுதாள் ஹெலன்.

"நீங்க எங்க இங்க...?" - சற்றே அதட்டலான குரலில் கேட்க முற்பட்ட மகனைச் சட்டென்று அடக்கினாள் ஞானம்.

"நான்தாண்டா அவங்களுக்கு லெட்டர் போட்டு வரச் சொன்னேன்... இந்த மாதிரி சமயத்துல அம்மாவோட அரவணைப்புக்கு ஈடே கிடையாது, தெரியுமா..." ஞானம் நெகிழ்ந்த குரலில் சொன்னாள்.

அம்மாவின் தோளிலிருந்து தலை யுயர்த்தி மாமியாரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஹெலன்.

ஞானத்தின் கண்கள் 'எல்லாம் எனக்குத் தெரியும்; நான் பார்த்துக்கறேன்' என்பது போல் சமிக்ஞை உணர்த்தின.

ஹெலன் நன்றிப்பெருக்குடன் மாமியாரை 'அம்மா' என்று அழைத்தாள் முதல்முறையாக.

பின்குறிப்பு:-

கல்கி 18 அக்டோபர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com