
-ஹரணி
கூடத்தில் சேர் போட்டு பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தார். ராகவன்.
அவரைத் தாண்டித்தான் வாசலுக்குப் போகவேண்டும் சங்கரி.
பேசாமல் தாண்டிப் போக முடியாது ஏதாவது சொல்ல வேண்டும். சொல்லாவிட்டாலும் அவரும் விடப்போவதில்லை. கேட்டு அனுப்பித்தான் பழக்கம். புதிதா என்ன! வழக்கமா?
வழக்கம்தான். இருபத்திரண்டு வருடங்கள் மாறாமல் இப்படித்தான். இதுவரை சங்கரிக்கு அப்படியொரு சந்தர்ப்பம் நேர்ந்ததில்லை. நேரும் எனவும் எதிர்பார்க்கவில்லை. நேர்ந்துவிட்டது. சந்தித்துத்தானே ஆக வேண்டும்?
காரணம் வசுமதி.
அவளின் காதல்.
காதலின் பொருட்டு வசு, ராகவனை உதறிய துணிச்சல்.
அது மட்டுமா?
நாலைந்து தெருக்கள் தள்ளி, மார்க்கெட் போகிற பாதையில் தனிக்குடித்தனம் வேறு!
ராகவன்தான் தினமும் மார்க்கெட் போவார். போகும்போது பார்வையில்படும் முகம்.
தவிர்க்க முடியாது.
மார்க்கெட் போவதைத் தவிர்த்துவிடலாம்.
முடியாது ராகவனால்.
பென்ஷன் வாங்கும் சூழலில் காலையில் மார்க்கெட், லைப்ரரி, மதியம் வீட்டில் தூக்கம், மாலையில் கடைத்தெரு அல்வா, மிக்சர். இரவு தூங்கப் போகும் வரை டீ.வி. விட்டால் மனுஷன் செத்துப் போகக்கூடும்.
ஒரே பெண். ஏராளமான கௌரவம். உடைத்து தூசாக்கி ஊதிவிட்டுப் போய்விட்டாள் வசுமதி.
இப்படித்தான் எண்ணம் ராகவனுள்.
"எதுவும் வேண்டாம் போயிடு! பொண்ணு இல்லை செத்துப் போயிடிச்சுன்னு நினைச்சுக்கறேன்!"
"இல்லேப்பா, நீங்க மாறுவீங்க! காத்திருக்கேன்!"
'காத்திரு! காத்திரு! எப்படியும் மார்க்கெட் வழியாத்தானே சுடுகாடு போகணும்! என் பொணத்தைப் பார்க்கலாம்!"
வாய் பொத்தி அழுதாள் சங்கரி.
எல்லாம் பார்த்து, பேசாது வெளியே போனாள் வசுமதி.
சங்கரி உடை மாற்றி, கிளம்பினாள். முன் கூடம் வந்தாள். ராகவன் பேப்பரை விட்டுக் கண்களை எடுத்தார்.
"மேலத் தெருவிலே வாசுகி மகளுக்குக் கல்யாணம். போயிட்டு வரேன்!"
"அதுக்கு ஏன் இத்தனை நகை?"
"கல்யாண வீட்டுக்குப் பிச்சைக்காரியயவா போக முடியும்?"
"பை எதுக்கு?"
"பட்டுப்புடைவை. தேய்க்கணும். போற வழிதானே கடை? கொடுத்திட்டுப் போகலாம்னு!"
"எப்போ வருவே?"
''உங்களுக்கு சமைச்சு ஹாட் பேக்லே எடுத்து வச்சிட்டேன்! மதிய சாப்பாடு முடிச்சிட்டுத்தான் வருவேன்! இல்லாட்டி வாசுகி வருத்தப்படுவா! உங்களையும் வரச்சொன்னா!"
"சரி! கதையை விடு போயிட்டு வா!"
வாசல் தாண்டியதும் உடன் மகிழ்ச்சி வந்து பரவியது சங்கரிக்கு.
முதலில் மார்க்கெட் வழியாகப் போய் வசுமதி வீட்டுக்குள் நுழைந்தாள். வசுமதி சங்கரியைப் பார்த்ததும் அழுதாள்.
"வாம்மா!" என்றாள்.
"எங்க மாப்பிள்ளே?"
"வெளியே போயிருக்கார்!'
"வேலை என்ன ஆச்சு?''
"பார்த்திட்டிருக்காரு. எல்.ஐ.சி ஏஜெண்ட். கொஞ்சம் பிஸினஸ் செய்யறார். கஷ்ட ஜீவனம் இல்லே! சரியாக இருக்கும்மா!"
வசுமதியைக் கூர்ந்து கவனித்தாள் வயிறு சிறிது மேடிட்டிருந்ததைக் கவனித்தாள்.
"இது எத்தனை?"
"இரண்டும்மா!" என்றதும் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டாள். பின், சட்டென்று தன் கழுத்தில் போட்டிருந்த தாலிச் சங்கிலி தவிர எல்லாவற்றையும் கழற்றிப் போட்டாள். கைகளில் இருந்து நான்கு வளையல்கள், இரண்டு மோதிரங்கள்.
"இந்தா வசுமதி! எல்லாத்தையும் எடுத்துக்கோ."
"இது உனக்குன்னு செஞ்சது உனக்குத்தான் சொந்தம்! யாரும் உரிமை கொண்டாட முடியாது! பெத்த அப்பாவா இருந்தாலும்,
வசுமதிக்குப் புரிந்தது. எடுத்துக்கொண்டாள்.
"அப்பா எப்படிம்மா இருக்காரு?"
"அவருக்கென்ன, ராஜா!"
"சுகர் மாத்திரை ஒழுங்கா சாப்பிடறாரா அப்பா?"
"அதெல்லாம் கரெக்டா! கவலையை விடு! எப்படி, அன்பா வச்சுக்கிறாரா?"
"நான் விரும்பி வந்த வாழ்க்கைம்மா! குறை சொல்லமாட்டேன்! ஆனால் உண்மையிலே எந்தக் குறையும் இல்லேம்மா!''
பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினாள் கல்யாண வீட்டுக்கு.
''அடிக்கடி வாம்மா!" என்று வழியனுப்பி வைத்தாள்.
திரும்பி வந்தபோது வாசலில் நின்று கொண்டிருந்தார் ராகவன்.
சட்டென்று ஒரு பயம் மனசைக் கவ்வியது.
நகைக்குக் கேட்கப் போகிறார் மனுஷன்! பிரச்னைதான். நாமே பேசிவிடலாம் என எண்ணிப் பேசினாள்.
"எங்கே நகைன்னுதானே பார்க்கறீங்க எனக்கும் ரோஷம் இருக்குங்க! நாம சம்பாதிச்சு வச்சாலும் அந்தக் கழுதைக்குச் செஞ்ச நகைதானே! அது எதுக்கு நமக்கு? அதுக்குன்னு உள்ள எதுவும் இந்த வீட்டுலே இருக்கக் கூடாதுன்னு கழட்டி இந்தான்னு எறிஞ்சிட்டேன், எனக்கு எம் புருஷன் பென்ஷன் போதும்னு!" படபடவென்று பேசி முடித்தாள்.
ராகவன் எதுவும் பேசவில்லை.
"நான் செஞ்சது தப்பாங்க?'' என்றாள் மறுபடியும்.
ராகவன் பேசினார்.
''சங்கரி, நீ செஞ்சது சரிதான். அவளுக்கு உள்ள எதுவும் இந்த வீட்டிலே இருக்கக்கூடாது. அவ பேர்ல போட்டிருந்த ரெண்டு மூணு ஆர்.டி மெச்சூர் ஆச்சு. அந்தப் பணம், அப்புறம் இந்திரவிகாஸ் பத்திரம், எப்.டி பாண்டு, எல். ஐ.சி பாண்டுன்னு அவ பேர்ல உள்ள எல்லாத்தையும் நமக்கு வேண்டாம்னு ஓர் ஆள் மூலம் கொடுத்தனுப்பிச்சிட்டேன் ஒழிஞ்சி போன்னு!" என்றார். சங்கரி அவரைப் பார்க்க, தலையைக் குனிந்து கொண்டார்.
பின்குறிப்பு:-
கல்கி 28 ஏப்ரல் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்