சிறுகதை - மண்ணில் தெரிகிற வானம்!

ஓவியம்: சசி...
ஓவியம்: சசி...

-சுபஸ்ரீ

கைத்தலம் பற்றிய கணவனுடன் குணவதி புதுக் குடித்தனம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கல்யாணமான காந்தி தன் மேனியில் பிரகாசிப்பதை இதமாக உணர்ந்தாள்.

ரகு கைதேர்ந்த மானேஜ்மென்ட் நிர்வாகி என்பதுபோல், இந்த மூன்று அறை பிளாக், உணவு மேஜை, குளிர்பதனப் பெட்டி, கட்டில் மெத்தை, ஆசனங்கள் என்று பார்த்துப் பார்த்து வாங்கி வைத்திருந்தான்.

ஆனாலும் அம்மாவுடன் இரண்டு அறை ஒட்டுக் குடித்தனத்தில் இரு மடக்கு நாற்காலிகளுடன் நடத்திய வாழ்க்கை பழைய அமுதுபோல ருசியான நினைவுகள் தந்தன. 22 வருஷம் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவை விட்டுப் பிரிந்து, முன்பின் பரிச்சயமில்லாத ரகுவுடன் புலம் பெயர்ந்து வந்து, இதுதான் லட்சிய வாழ்க்கை என்று தனிக்குடித்தனம் போட்டிருப்பது எப்படி சாத்தியமாயிற்று?

அம்மா என்ற சொல்லை நினைக்குமுன் நரம்புகளில் ஒரு பாச வெள்ளம் விரைந்து ஓடுகிறது. அன்று அன்னையும் அவள் கணவனுடன் குடித்தனம் நடத்த ஆயிரம் கனவுகளுடன் வந்தவள்தான். ஆனால் மாடியில் குடியிருந்த இரண்டு வயது மூத்த கைம்பெண்ணுடன் கணவன் தொடர்பு வைத்திருப்பதை உணர்ந்தபோது, அவளது இதயம் தாங்க முடியாமல் தவித்தது. அதை முறிக்கும் வலிமை அவளது இளமைக்கு இல்லை. அவர் அந்தப் பெண்ணுடன் ஓடிப் போனபோது, குழந்தை குணவதிக்கு வயது இரண்டு. அப்புறம் கணவன் சாவுச் செய்திதான் கிடைத்தது. இல்வாழ்க்கையைக் கூறுபோட இன்னொருத்தி இருந்தாலும் அவன் கடன்களைத் திருப்பும் கடமை அம்மா தலையில் விழுந்தது. வீட்டை விற்று கோர்ட்டில் கட்டிவிட்டு, குழந்தையுடன் புதிய வாழ்க்கை தொடங்கினாள்.

பிறந்தகம் செல்லாமல் அம்மா வாழ்வில் எதிர்நீச்சல் போட்டாள். பயிற்சி அற்ற நிலையில் நர்ஸரிப் பள்ளியில் உத்யோகம். ஏதோ சம்பளம். பிறகு மெள்ள மெள்ளப் படித்துப் பட்டதாரியாகி,  ஆசிரியப் பயிற்சி பெற்று, தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டவள். 17 வயது வித்யாசம் இருந்தாலும் தோழிபோல தன் அன்னையிடம் உறவாடுவாள், குணா. கல்லூரியிலிருந்து திரும்பியதும் அவ்வளவு வம்புகளையும் ஒப்புவிப்பாள். காலையில் எழுந்ததும் அம்மாவிற்கு முத்தமிட்டு விட்டுத்தான் காபி. அன்னையின் உலகமும் அவளது பெண்தான்.

இதையும் படியுங்கள்:
நம்மைச் சுற்றியே இருக்கு நமக்கான வாழ்க்கைப் பாடம்!
ஓவியம்: சசி...

இப்பொழுது தனியாக அம்மா என்ன செய்வாள்? வேளா வேளைக்குச் சாப்பிடுகிறளோ இல்லையோ? தனக்காக இத்தனை தியாகம் செய்த அம்மாவைத் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக்கொள்ள வேண்டுமெனத் துடித்தாள் குணவதி.

இன்னும் ஒரு வாரத்தில் குணவதிக்கு இவ்வூருக்கு மாற்றல் ஆர்டர் வந்துவிடும். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற அம்மாவிற்குப் பென்ஷன் வருகிறது. தன் காலில் நிற்க முடியும். ஆனாலும் அவளது பாதுகாப்பில் அன்பு வியூகத்தில்தான் குடித்தனம் போட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

யாரோ ஒருவனை நம்பி பாசமுள்ள அம்மாவை விட்டு விட்டு வர வேண்டும் என எப்படித் தோன்றியது. அதற்கெல்லாம் தாய்தான் காரணம். ஒரு புருஷன் கையில் ஒப்படைத்துவிட்டால் எனக்கு நிம்மதி என்று வாய்க்கு வாய் உச்சரித்து ஒரு கணவன் இமேஜை உண்டாக்கியவளே அவள்தான். அப்புறம் பருவ உணர்ச்சிகள், கல்லூரித் தோழியர்களுடன் அரட்டை, சினிமா, உலகம், டீ.வி.யில் சித்திரஹார் தந்த 'அர்த்தமுள்ள' பாடல்கள், நடனங்கள், நாவல்கள்... இப்படி மனத்திலே ஒரு கணவனின் நிழல் உருவம் மெதுவாகப் பதிந்துவிட்டது. கண்ணுக் கினியான் கைத்தலம் பற்றியபோது அவனே மனத்துக்கினியானாகவும் ஆகி விட்டான்.

ம்மாவை விட்டு விட்டுப் பிரிந்தாலும் பாசம் அடித்துக்கொண்டது. “என்னங்க, என் அம்மாவை இங்கு கொண்டு வைத்துக்கொண்டால் நமக்கும் உதவி. அவங்களுக்கும் ஆதரவு...." தன் ஆதுரத்தை ரகுவிடம் வெளியிட்டாள்.

''இந்த பாரு, சித்தப்பா வீட்டில் வதவதன்னு குழந்தைகளுடன் வளர்ந்தவன் நான். எனக்கு யாருமே அற்ற உலகத்தில் எனது அன்பு மனைவியுடன் தனிக்குடித்தனம் போட வேண்டுமென்ற லட்சியம்..."

"அம்மா மட்டும் ஒரு அறையில் மூலையில் இருந்து விடுகிறாள்... நமக்கு என்ன இடையூறு... உங்க அம்மாவா இருந்தால் நான் உழைத்துக் கவனிக்க மாட்டேனா? எங்கம்மாவிற்கு நமது அருகில் தங்கும் வாய்ப்புக் கொடுத்தால் என்ன?"

"இந்த பாரு, எங்க தாயாரா இருந்தாலும் கிராமத்திலே உட்கார்த்தி வைத்து பணம் அனுப்பி விடுவேன். உன் அம்மாவிற்கு நீ பணம் அனுப்புவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை... எனக்கு வேண்டுவது மனைவி மட்டும். இச்சுவை தவிர வேறு இல்லை..."

இதையும் படியுங்கள்:
பலவித நோய்களுக்கு மருந்தாக ஆவாரம் பூ சூப்!
ஓவியம்: சசி...

"பொல்லாத ஆசாமி..."

"இந்த வீடு முழுக்க உன்னை ஓடிப் பிடிச்சி விளையாடுவேன். டூயட் பாடுவேன். நமது எல்லையில் வேறு ஈ, காக்கை இருக்கக் கூடாது."

"கற்பனையைப் பாரு. கண்ணன் - ராதைன்னு எண்ணமோ..."

இந்த சரஸப் பேச்சைக் கண்டு அவன் அவளை அணுகினான். "தூரவே இருங்க, கொஞ்சம் இடம் கொடுத்தால் போச்சு!" என்று தப்பித்துக் கொள்வாள்.

அவ்வளவு வாதம் புரிந்தும் தன்னை பாலூட்டி வளர்த்த தாயை வைத்துக்கொள்ள முடியவில்லை. தான் சம்பாதிக்கும் உரிமை பெற்றும் இந்த விஷயங்களில் முடிவு செய்யும் உரிமை ஆண் இனத்திற்கே அளிக்கப்பட்டிருக்கிறது.

அவள் மனம் அம்மாவை நினைத்து ஏங்கியது.

குணாவிற்கு மாற்றல் ஆர்டர் வந்து காரியாலம் சேர்ந்துவிட்டாள்!

"டூயட்டு பாடினீங்களே.கடைசியிலே என்ன ஆச்சு பாத்தீங்களா?"

"என்னடா கண்ணு."

''நாம் இருவர் நமக்கு ஒருவர்..."

"ஓடி விளையாடு பாப்பாவா? அதுக்குள்ள என்ன முந்திரிக் கொட்டைக்கு அவசரம்?"

ரகு ஒரு குழந்தைக்கு உடனே தகப்பன் ஆகத் தயங்கினான்.

குணவதி உறுதியாக இருந்தாள். "இது நமது இல்லற உச்ச சந்தோஷத்தில் உருவாகிய கரு. அதனைப் போற்றி வளர்ப்போம்" என்றாள்.

பிரசவத்திற்கு குணா தாயகம் சென்றாள். சின்ன இல்லம் என்றாலும் அன்புத் தென்றல் வீசுகிற இடம். கண்ணன் பிறந்தான்.

"என்னவோ போ - பிள்ளையாப் பிறந்ததே..?" அம்மாவிற்கு தான் பெண்ணாய்ப் பிறந்த அவலத்தின் நிழல், உறுத்தி இருக்கும்.

"பெண்ணா இருந்தா என்னம்மா? அதுவும் படித்துப் பாஸ் செய்து பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்."

குணா நிறுத்திக்கொண்டாள். பாரதி கனவு முழுக்க நனவாகிவிட்டதா? தனக்கு புக்ககத்தில் முழு சுதந்திரம் கிடைத்து விட்டதோ! ஆணாதிக்கம் மறையவில்லையே!

அம்மா உடம்பு நலிவு பெற்றது. இழுத்துப் பறித்துக்கொண்டுதான் காரியம் செய்தாள். ஆனால் நெஞ்சில் உரம் இருந்தது. பிரசவ விடுமுறையை நீட்டித்துக் குழந்தையைப் பேணினாள்.

புக்ககம் புறப்பட்டாள். குழந்தைக்கு பொன் சங்கிலி, ரப்பர் ஷீட், பிளாஸ்க், பால் தரும் புட்டி, இத்யாதி...

குழந்தைப் பேறு ஆகி உத்யோகம் பார்ப்பது எளிதல்ல. ஒரு ஆயாவைத் தேடி வைத்தாள். அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாலும் வீட்டை ஒப்படைக்கக் கவலையாக இருந்தது. வேளா வேளைக்கு குழவி முகம் நோக்கி உதவ வேண்டுமே! ஆபிஸிலும் அவளுக்கு நிம்மதியில்லை. எட்டு மணி நேரம் காரியாலயம். மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு வலித்தது. அங்கு கண்ணனுக்கு புட்டிப்பால் என்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இந்தத் தாய்மைப் போராட்டம் எந்தக் கணவனுக்கும் புரியாது.

ஆயா தங்கவில்லை. அம்மாமி வந்தாள். சமையலுக்கும் உதவி. சம்பளம் அதிகம். ஆனால் கை சுத்தமாக இல்லை. அவளும் விட்டுச் சென்று விட்டாள்.

குணா ஒரு வாரம் லீவு.

அப்புறம் குழந்தைக் காப்பக ஏற்பாடு. அவசரச் சமையல். ரகு சற்று ஆதரவுடன் உதவினான். குழந்தைக்கு வேண்டிய பவுடர் பால், உணவு, உடை சுருட்டிக்கொண்டு காப்பகத்தில் கொண்டு விட்டு, இதயம் படபடக்க ஆபீஸ் செல்ல வேண்டும். நல்லவேளை! போகும்போது, ரகு ஸ்கூட்டரில் உதவினான். வரும்போது அவளே சிசு காப்பகம் சென்று கண்ணனை எடுத்து வரவேண்டும். அன்னை தூக்கியதும் அவன் முட்டி முட்டிப் பால் அருந்தும் பசியைக் காணும்போது தாயுள்ளம் கசிந்தது.

காப்பகத்து ஆயா சுத்தமாக இருக்க வேண்டுமே என்ற கவலை. கண்ணனுக்கு மூக்கு ஒழுகினால் மருந்து விவரம் தெரிவித்து வந்தாலும், எப்படியோ என்னவோ என்ற ஓயாத நினைப்பு.

காப்பகச் செலவு, குழந்தையை விட்டுப் பிரிவு, இடையே ஆட்டோ சத்தம் - சம்பாதித்து இப்படிச் செலவழித்து... சம்பாதிக்கிறோம் என்ற பெருமிதம் எதற்கு? குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை பார்க்கும் பெண் தரும் விலை தாய்மை இன்பம்தானே!

ரகு குழைந்து வந்தான்.

"குணா, உன்னுடைய கஷ்டம் பார்க்க முடியவில்லை. குழந்தையைப் பரிவுடன் சீராட்ட ஆளில்லை..."

"வேலையை விட்டு விடவா?"

"உனக்குத்தான் கை ஒடிந்தாற் போல இருக்கும். வேலை பார்த்து, ஒரு சுதந்திர அனுபவம் சுவைத்த பிறகு, விடுவதற்கு மனம் இராது. ஹவுஸ் ஒய்ப் ஆக மாறுவதற்கு மனப் பக்குவம் வேண்டும்..."

இதையும் படியுங்கள்:
கலக்கலான சுவையில் கீரை ரெசிபிகள்!
ஓவியம்: சசி...

"வேறு வழி..."

''உங்கம்மா ஊரிலே தனியாகத் திண்டாடுகிறாள். அவள் இங்கு வந்துவிட்டால் இரு பக்கமும் பிரச்னை தீரும். அவளுக்கும் ஒரு கூரை நமக்கும் ஒரு ஆதரவு. குழந்தைக்குப் பாட்டி..."

''அம்மா - ஆயா, சமையற்காரியாக இந்த வீட்டிற்குள் வரவேண்டும். ஒரு பெண்ணின் பாசத்தைச் சுவைத்து, தனிமை முறித்து, சௌகரியமாக வாழ்க்கை நடத்தும் லட்சியத்தோடு அல்ல..."

"அப்படி அல்ல குணா... உன்னுடைய கஷ்டம் நீங்க, கண்ணனுக்கு ஒரு பாசக் கரம் இருக்கட்டும்னு சொல்றேன்."

"நீங்க டூயட் பாட முடியாது! குழந்தையின் அழுகுரலை அடக்கித் தேற்ற அம்மா வேண்டும். இந்த வீட்டுக் கதவு சுயநலத்துடன் திறக்கும். அப்படித்தானே!”

அவள் அவனை வெறித்து நோக்கினாள்.

''நீ யோசித்து முடிவு செய்..."

"அம்மா வர மாட்டாள்!"

குணா குரலில் உறுதி தொனித்தது. ஆணின் சுயநல விசுவரூபத்தைத் தங்களை அனாதரவாக்கிய அப்பாவிடம் மட்டுமல்ல; கணவனிடமும் கண்டாள்.

கண்ணனின் பிஞ்சுக் கன்னங்களில் முத்தமிட்டு அணைத்தபோது, அம்மாவின் ஞாபகத்தில் நெஞ்சு புதைந்துகொண்டது!

"கண்ணா நீயும் நாளைக்கு இப்படித்தான் இருப்பாயாடா!"

பின்குறிப்பு:-

கல்கி 27  நவம்பர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com