-ராஜேஷ்குமார்
பனிக்கட்டித் துண்டுகள் மிதக்கும் ஆரஞ்சு ஜூஸை ஒரு வாய் பருகிய கோவிந்தராஜ் - அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, "எஸ்," என்றார்.
கருநீல ஃபுல் சூட் தரித்த ராஜமாணிக்கம், வியர்வை மின்னும் வழுக்கைத் தலையோடு உள்ளே வந்தார்.
ராஜமாணிக்கம் கோவிந்தராஜின் சக-பார்ட்னர்.
''அடேடே! வா... ராஜ்... நல்ல வெயில் நேரத்துல வந்திருக்கே. ஆரஞ்சு ஜூஸ் சொல்லட்டுமா...?''
"வேண்டாம்..."
ராஜமாணிக்கம் ஃபோம் தைத்த நாற்காலியில் 'தொப்'பென்று உட்கார்ந்து, தலையைப் பிடித்துக் கொண்டார். கோவிந்தராஜ் ஆச்சர்யமாய் அவரை ஏறிட்டார்.
"ராஜ்...! உனக்கு என்னாச்சு...? ஏன்... ரெஸ்ட்லஸ்ஸா தெரியறே...? எனி ப்ராப்ளம் வித் யூ...?"
''வித் அஸ்ன்னு சொல்லு..."
''நீ என்ன சொல்றே?"
''இன்னிக்கு காலை 'தபால்'ல எனக்கு ஒரு லெட்டர் வந்தது. அந்த லெட்டரைப் படிச்சதிலிருந்து வேர்த்து ஒழுகிட்டிருக்கேன்..."
"லெட்டரா...? என்ன லெட்டர்...?"
"படிச்சுப் பாரு...''
ராஜமாணிக்கம் தன் கோட் பாக்கெட்டில் வைத்திருந்த அந்தத் தபால் கவரை எடுத்து நீட்ட - கோவிந்தராஜ் வாங்கிப் பிரித்தார். தமிழ் டைப்ரைட்டிங் மெஷின் ஒன்று - வார்த்தைகளை வாக்கியங்களாக மாற்றியிருந்தது.
திருவாளர்கள் கோவிந்தராஜ் - ராஜமாணிக்கம் அவர்களுக்கு என் வணக்கம்.
நான் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி இந்தக் கடிதத்தில் இப்போது சொல்லப் போகிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டிலேயே நெம்பர் ஒன் பேரிங் கம்பெனி உங்களுடையதுதான். அதில் சந்தேகமில்லை. கம்பெனியின் இந்த வளர்ச்சிக்குக் காரணமான உங்களைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
நிற்க. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை கம்பெனியில் - உங்களையும் சேர்த்து மூன்று பார்ட்னர்களாக இருந்தார்கள். இப்போது ஒரு பார்ட்னரான லாரன்ஸ் டேவிட் உயிரோடு இல்லை. காரணம், திடீரென்று வந்த உடல்நலக் குறைவு. படுக்கையோடு படுக்கையாய் - இரண்டு மாத காலம் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு - ஒருநாள் கண்ணை மூடிவிட்டார். லாரன்ஸ் டேவிட்டின் மரணம் மற்றவர்களுக்கு இயற்கையானதாகத் தெரியலாம். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து 'ஸ்லோ பாய்ஸன்' மூலமாக அவரைப் படுக்கையில் தள்ளி உயிரைப் பறித்திருக்கிறீர்கள். தினமும் இரவு மூன்று பேரும் ஒன்றாய் உட்கார்ந்து மது குடிக்கும்போது - அவருடைய மது தம்ளரில் மட்டும் - அவருக்குத் தெரியாமல் 'ஸ்லோ பாய்ஸனை' கலப்பது உங்கள் வழக்கம். உங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த அந்த உண்மை எனக்கு எப்படித் தெரிந்தது என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்... உண்மை நெருப்பைப் போன்றது. அதை அடைகாக்க எந்தப் பொருளாலும் முடியாது.
கடிதம் நீண்டுகொண்டே போகிறது. நான் விஷயத்துக்கு வருகிறேன். பாவத்தில் பெரிய பாவம் கொலை செய்வது. அந்தப் பாவத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள். எந்தப் பாவத்துக்கும் பரிகாரம் உண்டு என்று சொல்வார்கள். அதேபோல் இந்தப் பாவத்துக்கும் பரிகாரம் உண்டு. அந்தப் பரிகாரம் என்ன என்பது நாளைய கடிதத்தில் தெரியும்.
- கடிதம் கையெழுத்தில்லாமல் முடிந்திருந்தது.
இப்போது - கோவிந்தராஜ் நெற்றியில் மின்னும் வியர்வையோடு கலக்கமாய் நிமிர்ந்தார்.
"ரா... ராஜ்...! இந்த லெட்டர் எப்ப வந்தது?"
"இப்பத்தான் பத்து நிமிஷத்துக்கு முந்தி."
"யார்க்கோ... உண்மை தெரிஞ்சிருக்கு..."
"அதுவும் இத்தனை நாள் கழிச்சு..."
கடிதம் வந்த தபால் கவரைத் திருப்பி - தபால் முத்திரையை உன்னிப்பாய்ப் பார்த்தார்... கோவிந்தராஜ்.
உள்ளூர் தபால் முத்திரை.
"ராஜ்...! எவனோ லோக்கல் ஆசாமிதான்..."
"யாராயிருக்கும்...? 'லாரன்ஸ் டேவிட் டை'த் தீர்த்துக் கட்டின விஷயம் - வெளியே கசிய வாய்ப்பே இல்லையே...?"
"எங்கேயோ தப்புப் பண்ணிட்டோம்..."
"எங்கே...?"
தீர்க்கமாய் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த நாள். காலை பதினோரு மணி.
ஆபீஸுக்குத் தபால் கட்டில் அந்தக் கடிதம் வந்திருந்தது. கோவிந்தராஜும், ராஜமாணிக்கமும் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்கள்.
கடிதம் மொட்டையாய் ஆரம்பித்திருந்தது.
நீங்கள் செய்த பாவத்துக்குப் பரிகாரம் இதுதான். 'லாரன்ஸ் டேவிட்'டைத் தீர்த்துக் கட்டிய விஷயம் போலீஸ் ஸ்டேஷன் படி ஏறாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் - எனக்குப் பத்து லட்ச ரூபாய் தரவேண்டும். பணத்தை ஒரு கிழிந்த கோணிப் பையில் போட்டுக் கட்டி - திருவேற்காடு போகும் வழியில் ஏழாவது கிலோமீட்டர் கல்லுக்குப் பக்கத்தில் - இன்று இரவு பதினோரு மணிக்கு வைத்துவிட வேண்டும். பணம் என் கைக்கு வந்ததும் லாரன்ஸ் டேவிட்டை நான் மறந்துவிடுவேன். நீங்களும் என்னை மறந்துவிடலாம்.
பி.கு. : சினிமாவிலும், நாவல்களிலும் வருகிற 'பளாக் மெயிலர் மாதிரி என்னை நினைத்துவிட வேண்டாம். நான் அடிக்கடி பணம் கேட்க மாட்டேன். நீங்கள் தரப் போகும் பத்து லட்சத்தோடு சரி.
கடிதம் முடிந்து போயிருக்க - கோவிந்தராஜ் தம் மூக்கை இடதுகை ஆட்காட்டி விரலால் நிரடிக்கொண்டே - ராஜமாணிக்கத்தை ஏறிட்டார்.
"பத்து லட்சம் கேக்கறான்...''
'குடுத்துட வேண்டியதுதான்... பணம் பெரிசில்லை நமக்கு..."
"அடிக்கடி பணம் கேட்க மாட்டேன்னு... சொல்லியிருக்கான். அவனை எப்படி நம்பறது...?"
"வேற வழியில்லை. நம்பித்தான் ஆகணும். கேட்ட பணத்தை எடுத்து வைப்போம்... "
மேஜைமேல் இருந்த டெலிபோன் ஒலித்தது. பிரைவஸி டெலிபோன் அது.
கோவிந்தராஜ் ரிஸீவரை எடுத்தார்.
"ஹலோ... "
மறுமுனை கேட்டது.
"என்ன லெட்டர் கிடைச்சுதா?"
“நீ... நீ...?"
"பாவத்துக்குப் பரிகாரம் சொன்னவன்."
"இதோ பார்... நீ கேட்ட பணத்தைக் கொடுத்துடறோம்... ஆனா திரும்ப... திரும்ப...''
"கேட்க மாட்டேன்...! ஆனா நீங்க என்னை ஏமாத்த நினைச்சா... நான் போலீஸுக்குப் போகத் தயங்க மாட்டேன்..."
"அதெல்லாம் வேண்டாம். கேட்ட பணத்தைக் கொடுத்துடறோம்.''
''பணத்தோடு வந்து சேருங்க..."
ரிஸீவர் வைக்கப்பட்டு விட்டது.
இரவு பதினோரு மணி.
திருவேற்காடு போகும் சாலை. ஏழாவது கிலோ மீட்டருக்குப் பக்கத்தில் காரை நிறுத்தினார் ராஜமாணிக்கம். என்ஜினை அணைக்காமலேயே அருகில் உட்கார்ந்திருந்த கோவிந்தராஜை ஏறிட்டார்.
''பணத்தை வைச்சுட்டு வந்துடு..."
கோவிந்தராஜ் காலுக்குக் கீழே இருந்த - பணம் இருந்த கோணிப்பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
சுற்றிலும் இருட்டு.
தூரத்தில் மட்டும் ரகசியம் - பேசுகிற மாதிரி 'மினுக், மினுக்' வெளிச்சம்.
கோவிந்தராஜ் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு திருவேற்காடு ஏழு கிலோமீட்டர் என்று சொன்ன கல்லுக்குப் பக்கத்தில் வந்து நின்றார். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள, நெற்றி வியர்த்தது.
ராஜமாணிக்கம் காரிலிருந்து குரல் கொடுத்தார்.
"கோவிந்தராஜ்...! கோணிப் பையை கிலோமீட்டர் கல்லுக்குப் பின்னாடி மறைவா வை..."
கோவிந்தராஜ் வைத்துவிட்டு காருக்குத் திரும்பும்போது தள்ளாடினார். ராஜமாணிக்கம் பதறினார்.
''கோவிந்தராஜ்! என்னாச்சு...?''
''திடீர்னு நெஞ்சு வலிக்குது..."
"டென்ஷன் பட்டாலே இப்படித்தான்... சரி... கார்ல ஏறு. நம்ம டாக்டர்கிட்டே போயிட்டுப் போகலாம்..."
கோவிந்தராஜ் காருக்குள் ஏறி உட்கார்ந்து - நெஞ்சை நீவியபடி சாய்ந்துகொண்டார்.
"பெய்ன் ரொம்ப இருக்கா...?'
''கொஞ்சம் கொஞ்சமா ஜாஸ்தியாயிடுத்து..."
"இதோ... பத்து நிமிஷத்துல டாக்டர்கிட்டே போயிடலாம்."
காரை விரட்டினார் ராஜமாணிக்கம்.
அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் –
விக்னேஷ்வரா நர்ஸிங்ஹோமில் - டாக்டர் ஹரிஹரன் கோவிந்தராஜைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு 'மைல்ட் ஹார்ட் அட்டாக்' என்றார். ராஜமாணிக்கம் பதற்றப்பட்டார்
"ஆபத்தில்லையே டாக்டர்?"
"நத்திங் டு ஒர்ரி... நீங்கதான் சரியான நேரத்திலே கொண்டு வந்துட்டீங்களே...? ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டாப் போதும்..."
கோவிந்தராஜை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துவிட்டு - ராஜமாணிக்கம் வீடு திரும்பியபோது - பன்னிரண்டு மணி.
போர்டிகோ தூண் ஓரமாய்ச் சுருண்டு படுத்திருந்த வேலைக்காரன் எழுந்து நின்றான்.
''தருண் வந்தானா... மணி...?"
"என்னய்யா... இன்னும் வரலைங்கய்யா...''
"போன் ஏதாவது...?"
''வரலை...''
''சரி... நீ அவுட் ஹவுஸுக்குப் போய்ப் படுத்துக்க..."
தலையாட்டிவிட்டு - அவன் சற்றுத் தொலைவில் இருந்த அவுட் ஹவுஸை நோக்கிப் போனான். இருட்டுக்குள் அவன் மறைந்த அதே விநாடி காம்பௌண்ட் கேட்டில் வெளிச்சம் விழுந்தது.
மாருதி ஜிப்ஸி உள்ளே நுழைந்து - போர்டிகோவை நோக்கி வேகமாய் வந்து நின்றது.
ட்ரைவிங் சீட்டிலிருந்து அந்த இளைஞன் வெளிப்பட்டான். ராஜமாணிக்கத்தின் சாயல். அவனை வேகவேகமாய் நெருங்கிய ராஜ மாணிக்கம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கேட்டார்.
"என்ன தருண், காரியம் முடிந்ததா?"
"முடிந்தது டாட்..."
"ஏன் இவ்வளவு லேட்...?"
''வழியில லெவல் க்ராஸிங் கேட்டைப் போட்டுட்டான். அரை மணி நேரம் பாழ்..."
''சரி... கோணிப்பையை எடுத்துக்கிட்டு உள்ளே வா...! யார் கண்ணிலேயும் நீ தட்டுப்படலையே?"
தருண் சிரித்து - ட்ரைவிங் சீட்டுக்குக் கீழே இருந்த கோணிப்பையை எடுத்துக்கொண்டு- ராஜமாணிக்கத்தைப் பின்தொடர்ந்து உள்ளே போனான்.
"என்னைப் பத்திய கவலையை விடுங்கப்பா... உங்க பார்ட்னரைப் பத்திச் சொல்லுங்க... அவருக்கு உங்க மேலே சந்தேகம் வந்துடலையே...?"
"எப்படி வரும்...?" சிரித்த ராஜமாணிக்கம் சோபாவில் சாய்ந்துகொண்டு சொன்னார்.
''அவனுக்குச் சந்தேகம் வரலை. நெஞ்சு வலிதான் வந்தது. கம்பெனி பணம் பத்து லட்சம் இப்படி யாருக்கோ ஒருத்தனுக்குப் போகுதேன்னு டென்ஷன் படப் போய், மைல்ட் ஹார்ட் அட்டாக். என்னோட பார்ட்னர் இப்போ விக்னேஷ்வரா நர்ஸிங்ஹோம்ல ஒரு பேஷண்ட். ரெண்டு நாளைக்கு பெட் ரெஸ்ட் வேணும்னு டாக்டர் சொல்லிட்டார்."
''டாட்! அந்த மிரட்டல் கடிதங்கள் ரெண்டும் இப்ப உங்ககிட்ட இருக்கா... இல்ல... பார்ட்னர்கிட்டே இருக்கா...?"
"யார்கிட்டேயும் இல்லே... அது அப்பவே சாம்பலாயாச்சு..."
''ரெண்டு மாசம் கழிச்சு... இதே மாதிரி லெட்டர் போட்டு ஒரு அஞ்சு லட்சம் கேட்கலாமா...?"
"பின்னே... கோவிந்தராஜ் கணக்குலே இருக்கிற லாபம் பூராவும் நம்ம பாக்கெட்டுக்கு வரவேண்டாமா...?"
அப்பாவும் மகனும் பரஸ்பரம் தோளைத் தட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே வாசலில் அந்த வாகன இரைச்சல் கேட்டது.
திரும்பிப் பார்த்தார்கள். அதிர்ந்தார்கள்.
ஒரு டாக்ஸியோடு - போலீஸ் ஜீப். கோணிப் பையை சோபாவுக்குக் கீழே தள்ளினான் தருண்.
தபதபவென்று பூட்ஸ் சத்தம். ஒரு இன்ஸ்பெக்டர், நான்கைந்து கான்ஸ்டபிள்கள்... ஹாலுக்குள் நுழைந்து சூழ்ந்தார்கள்.
'எங்கே தப்பு செய்தோம்...?
வியர்வையோடு - அப்பாவும் மகனும் யோசித்துக்கொண்டு நிற்க - இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை நெருங்கினார்.
''உங்க கம்பெனி பார்ட்னர் லாரன்ஸ் டேவிட்டை 'ஸ்லோ பாய்ஸனிங் மூலமாய்க் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்ய அரெஸ்ட் வாரண்ட்டோடு வந்திருக்கோம்...''
ராஜமாணிக்கம் அவஸ்தையாய்ச் சிரித்தார் .
"என்ன சொல்றீங்க... இன்ஸ்பெக்டர்...? என்னோட பார்ட்னர் லாரன்ஸ் டேவிட்டைக் கொலை செய்தேனா...?"
''ம்... உங்க வாக்குமூலம் சொல்லுதே...?"
''வாக்குமூலமா...?"
"எஸ்... இதைக் கொஞ்சம் பார்க்கறீங்களா ...?" இன்ஸ்பெக்டர் இரண்டு காகிதங்களை முகத்திற்கு நேராய்ப் பிடிக்க ராஜமாணிக்கம் அவைகளைப் பார்வையில் வாங்கித் திடுக்கிட்டார்.
அவர் டைப் பண்ணிய மிரட்டல் கடிதங்களின் ஜெராக்ஸ் காப்பிதான் அது.
"இ... இது... இது... உங்களுக்கு...?"
"எப்படிக் கிடைச்சதுன்னு கேட்கறீங்களா...? ரொம்ப ஈஸி. கடந்த ரெண்டு வார காலமாகவே... முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துக்கிட்டிருக்கிறதாய் டிபார்ட்மெண்ட்டுக்குத் தகவல் கிடைச்சது... அப்பேர்ப்பட்ட லெட்டர்ஸை எழுதறது எதிர்க்கட்சி ஆட்களாய்த்தான் இருக்கணும்னு நினைச்சு... சில பேரை லிஸ்ட் பண்ணி அந்த ஆட்கள் போஸ்ட் ஆபீஸுக்கு வந்து லெட்டர்களை போஸ்ட் பண்றாங்களான்னு ரகசிய போலீஸை மஃப்டியில் உலாவவிட்டு கண்காணிச்சுக்கிட்டு இருந்தோம். அப்படிக் கண்காணிக்கிற நேரத்துலதான் நீங்க ராத்திரி பதினோரு மணிக்கு மேல கார்ல அடையாறு போஸ்ட் ஆபீஸுக்கு வந்து லெட்டரை போஸ்ட் பண்ணினீங்க...! போஸ்ட் ஆபீஸ் வாசல்ல பிச்சைக்காரர் மாதிரி படுத்துட்டிருந்த எங்க டிபார்ட்மெண்ட் ஆசாமிக்கு உங்களை யாருன்னு தெரிஞ்சிருக்கு. இவ்வளவு பெரிய ஆள் ராத்திரி நேரத்துல... அதுவும் பதினோரு மணிக்குமேல் - லெட்டரைக் கொண்டு வந்து போஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் என்ன...? எங்களுக்கு போன் பண்ணி சந்தேகத்தைச் சொன்னார். நாங்க உடனே சூபரிண்டெண்டென்ட் பர்மிஷனோடு தபால் பெட்டியில் இருந்த உங்க லெட்டரை எடுத்து 'ஸ்டீம் ஓப்பனர்' மூலம் கவரோட வாயைப் பிரிச்சு படிச்சுப் பார்த்தோம்... விவரம் புரிந்தது. அந்த லெட்டரை ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு லெட்டரைப் பழையபடியே ஒட்டி அனுப்பிட்டோம்... ரெண்டாவது நாளும் நீங்க கொண்டு வந்து போட்ட லெட்டரை எடுத்துப் படிச்சோம். திருவேற்காடு ஏழாவது கிலோமீட்டர் கல். பத்து லட்சம், கோணிப்பை - விவரங்கள் கிடைச்சது. அந்த லெட்டரையும் ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு... உங்களைக் கண்காணிக்க ஆரம்பிச்சோம்... தருண் பணம் இருந்த கோணிப்பையை எடுத்துக்கிட்டு வர - ஒரு பிரைவேட் டாக்ஸியில் அவனை ஃபாலோ பண்ணினோம். இந்த விவரம் போதும்னு நினைக்கிறேன். கையை நீட்டறீங்களா.... ரெண்டு பேரும் ...?"
அப்பாவும் மகனும் கைகளை நீட்ட - ஒரே விலங்கு இரண்டு பேர் கைகளிலும் ஏறியது.
ஜீப்பை நோக்கி நடக்கும்போது ஸ்டூலின் மேலிருந்த டெலிபோன் அடித்தது.
இன்ஸ்பெக்டர் போய் ரிஸீவரை எடுத்தார்.
''ஹலோ... ''
''........''
''எஸ்...! சொல்லுங்க... டாக்டர்..."
''........''
''ஈஸிட்...? எப்போ...?''
''........''
''சொல்லிடறேன்...." ரிஸீவரை வைத்த இன்ஸ்பெக்டர் - ராஜமாணிக்கத்தை ஏறிட்டார்.
"ஹாஸ்பிடல்ல... அட்மிட்டாகியிருந்த உங்க பார்ட்னர் கோவிந்தராஜ்... ரெண்டாவது தடவை வந்த ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாராம்.... டாக்டர் போன் பண்ணிச் சொன்னார்."
போலீஸ் ஜீப்பை நோக்கி நடந்த ராஜமாணிக்கத்துக்கு எப்போதோ எங்கேயோ படித்த ஒரு பாடலின் வரி ஞாபகத்துக்கு வந்தது.
"முன்னை இட்ட தீ..."
பின்குறிப்பு:-
கல்கி 17 ஏப்ரல் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்