சிறுகதை; மழை விழும் நேரம்!

Short Story in Tamil
ஓவியம்: அரஸ்
Published on

''ஜன்யா...!"

அவள் நிமிர்ந்து பார்த்தாள். விதானத்தில் பொருத்தியிருந்த அழைப்புக் கருவி மீண்டும் ஒலித்தது.

"ஜன்யா... நீங்கள் உடனடியாக அழைக்கப்படுகிறீர்கள். ஸெக்டார் 4173 எக்ஸ்... வெலாஸிட்டி 34537... ஸிக்னேச்சர் எம். ஜே. 3333...." கருவி உறங்கிப்போனது. ஜன்யா செய்தியை அப்படியே கைக்கருவியில் பதிவு செய்துகொண்டாள். மறுபடி ஒலிக்கச் சொல்லிச் சரிபார்த்துக் கொண்டாள்:

'வெறும் எண்களின் சங்கேத சாம்ராஜ்யத்தில், கொஞ்சம் கோட்டைவிட்டாலும் காரியம் அவ்வளவும் குட்டிச்சுவராகிவிடும். எச்சரிக்கையுடனேயே அறையைவிட்டு வெளியே வந்தாள். கைப்பையைத் திறந்து அந்தப் பச்சை நிற வில்லையை எடுத்துப் பார்த்தாள்.

கொஞ்சம் பழுப்பேறியிருந்த மாதிரி பிரமை தட்டியது. அருகில் தென்பட்ட சோதனைப் பெட்டியில் செருகி, வில்லையின் சக்தியை அறிய விரும்பினாள். அரைவிநாடி வில்லை 'கிர்'ரென்று சுழன்று நின்றது. இண்டிகேட்டரில் 'பதினேழாயிரம் கி.மீ.' காட்டியது.

நிம்மதியாக மூச்சுவிட்டாள். கனமான கூரைக் கதவைத் தள்ளிக்கொண்டு புறவெளிக்கு மேலே வந்தாள். பாதுகாப்புச் கவசத்தை முழுவதுமாக இழுத்துவிட்டுக்கொண்டாள். புழுதிக் காற்றின் ஓலம் அச்சுறுத்தியது.

பழகிப்போன அச்சங்களை விழுங்கிக்கொண்டு நடந்தாள். அருகில் தென்பட்ட சூரிய விசைக் கார் ஒன்றை நெருங்கினாள். பச்சை வில்லையைக் காரின் கதவுப் பிளவில் செலுத்தினாள். கார்க் கதவு திறந்துகொண்டு இவளுக்கு வழிவிட்டது. உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்த சுருக்கில் மூடிக்கொண்டது.

காரின் இருக்கை பெல்ட்டுகளை நன்றாகச் சேர்த்துத் தன்னைப் பிணைத்துக்கொண்டாள். தரையிலும் படாமல் வானிலும் பறக்காமல் சுகமாக ஒரு வேகம். தங்கு தடையே இல்லாமல் பூமிப் புழுதியைக் கிழித்துக்கொண்டு ஒரு பயணம்.

நிலத்தடிப் பெருச்சாளி வாழ்க்கை வெகுவாய் அலுத்துப் போய்விட்டது அவளுக்கு. பூமிப்பந்தின் மேல்தளத்துக்கு வருவதற்கு நிர்வாகம் அவ்வளவாய் யாரையும் அனுமதிப்பதில்லை. கதிரியக்கம், காற்றுக் கேடு புறச்சூழல் அபாயங்கள் என்று எத்தனையோ காரணங்களைச் சொல்லி இப்படி நிர்வாகம் தடைபண்ணிவிட்டது.

இதுபோல் மானிட்டரில் தகவல் வருகிற அபூர்வமான நேரங்களில் பூமியின் மேல்தளத்துக்கு வந்து தொலைதூரப் பயணம் மேற்கொள்ள முடிகிறது. பலநூறு ஆண்டுகளாக நடைபெற்ற பகைமைப் போர்கள், பலப் பரீட்சைகளின் விளைவாக உலகம் நாசப் பட்டுவிட்டது.

கார் புறப்பட்ட ஆறாவது மணி நேரத்தில் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அந்த ஸெக்டார் 4173 எக்ஸ் நிலையத்தில் இவளுடைய கார் போய் நின்றபோது அவன் எதிர்கொண்டு வந்து நின்றான்.

காரை விட்டு இறங்கிக் கதவை மூடிய வேகத்தில், சக்தி வில்லை அவள் கையில் வந்து விழுந்தது. அதை அவன் வாங்கிப் பார்த்தான்.

"ஹாய் டியர்! களைப்பா...?"

"இல்லே டியர்! ஆறு மணி நேரம்தானே.. சுகம்தான்...'

இதையும் படியுங்கள்:
வெள்ளி விழா கொண்டாடும் பன்னாட்டு தாய்மொழி தினம் - 740 மொழிகள் உள்ள நாடு எது?
Short Story in Tamil

ஆனால் அவள் களைத்தே போயிருந்தாள். உடல், மனம் எல்லாவற்றிலும்தான். சம்பிரதாயமான சின்னஞ்சிறு பொய்கள். அவன் புரிந்துகொண்டு சிரித்தான்.

பரிவுடன் அவளை அணைத்தவாறே நிலவறைக் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினான். கவச உறைகளைக் கழற்றி வீசினான். அவளுக்கும் உதவி செய்தான்.

சுகமான குளியல் முடிந்து மருந்து மணம் கமழ இருவரும் மாற்று உடைகளில் தஞ்சம் புகுந்தவரை பேச்சே இல்லை.

அபார்ட்மெண்டின் கண்ணாடிக் கதவுக் குள்ளேயிருந்து கை ஆட்டினான் ஜூனியர். கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனபோது... 'ஹாய் மம்மீ...' என்று கூவிக்கொண்டு வந்து கட்டிக்கொண்டான்.

வெகு இயல்பாக அவளருகே வந்து மெலிதான ஊசியைத் தோளில் ஏற்றித் தடுப்பு மருந்தை ஆயா செலுத்துகிறவரை ஜன்யாவுக்கு எல்லாம் மறந்து போய் இருந்தது.. ஊசி மருந்தின் குறுகுறுப்பு உணரப்பட்ட போதுதான் ஜூனியரின் நிஜமான நினைவு அவளுக்கு வந்தது.

ஜூனியர் அவளைவிட்டு விலகிப் போய் பொம்மைகளுடன் விளையாடப் போனான். அதுதான் அவனுடைய நிரந்தர உலகம்.

'ஹாய் டாடி... ஹாய் மம்மி...' சொல்லுவான். பசி வந்தால் ஆயாவை அழைக்க பஸ்ஸரை அழுத்துவான். தூங்குவான். அவனுக்கு வயது பதினாறு!

ஜூனியரைப் பற்றிய அந்த நிஜமான நினைவு வந்தபோது அவள் விம்மினாள். அழைப்பின் அவசரம் என்ன என்று புரிந்தமாதிரி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'ஆம் டியர்! 'இவனுக்கு தேதி குறித்துவிட்டார்கள். இன்னும் தொண்ணூறு மணி நேரங்கள்தான். இவன் விளையாட, சாப்பிட, தூங்க என்று அனுமதிக்கப்படுவான்... அப்புறம்..." அவன் கூரையைப் பார்த்தான்.

"சுத்தக் காட்டுமிராண்டிகள்... ஏற்கெனவே ஒண்ணை அனுப்பியாச்சு. இவனையும் அதே வழியிலா? நான் அனுமதிக்க மாட்டேன்,'' அவள் கூச்சல் போட்டுக் கத்தினாள்.

''நம்மால் என்ன செய்ய முடியும் டியர்! சட்டம் அதுதானே . குறைபாட்டுக் குழந்தைகளைக் குணப்படுத்த எவ்வளவோ முயற்சிக்கிறார்கள்.எதுவுமே பலன் தராமல் போகிறபோது அழித்து விடுவது ஒன்றுதான் நிர்வாகத்துக்கும் சரி, நமக்கும் சரி - ஏற்பட்ட வழி என்று ஆகிவிட்டது. இதை மீறி நாம் என்ன செய்யப் போகிறோம்? இனிமேல் ஜூனியர் இருந்தால் அவனுக்கும் கெடுதல்... நமக்கும்...''

பட்டென்று அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ஜன்யா. வேதனையோடு சிரித்தான்.

அவள் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். பொம்மை விளையாட்டைப் போட்டுவிட்டு இவர்களைப் பார்த்துச் சிரித்தான் ஜூனியர்.

"உன்னுடைய வேதனை புரிகிறது ஜன்யா. இனிமேல் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள நமக்கு அனுமதியில்லை. பெற்ற இரு குழந்தைகளையும் சுதந்திரமாக நாமே வைத்துப் பாராட்டிச் சீராட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பிறப்புக் கோளாறுகள். கதிரியக்கத் தொற்று நோய்கள் என்று காரணம் சொல்லி இரண்டு குழந்தைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு பெற்றவர்களை அந்நியமாக்கி விட்டார்கள். இன்னும் பத்தாண்டுகளானாலும் இவன் தேறப்போவதில்லை என்று கம்ப்யூட்டர் சொல்லிவிட்டது. இனி இந்த 'ஸ்கிராப்'பை அழித்துவிடப் போகிறார்கள்...

''நாசகாரப் பாவிகளே...!'' என்று மறுபடியும் கத்தினாள் ஜன்யா.

"இவர்களைச் சபிக்காதே ஜன்யா... நம்முடைய மூதாதைத் தலைமுறைகளைச் சபி... அந்த நூற்றாண்டுகளில், அவர்கள் நடத்திய அரசியல் ஆதிக்க வெறி விளையாட்டுக்களின் பலனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.. அவ்வளவுதான்...!'' அவன் கண்களில் நீர் பனித்திருந்தது. கன்னத்தில் ஜன்யாவின் விரல் பதிவு சிவப்பாகத் தெரிய ஆரம்பித்தது. பரிவோடு அவன் கன்னத்தைத் தடவினாள் ஜன்யா.

ஆயா குறுக்கே வந்தாள்.

'அம்மா! என் கடமை முடிந்துவிட்டது. நான் தலைமையிடத்துக்குப் போக வேண்டும். இந்தக் கடைசி நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்...'' இயந்திரமாக அவள் பேசிக்கொண்டு போனாள்.

இதையும் படியுங்கள்:
மனிதன் எங்கே... மனிதம் எங்கே...? இதோ இங்கே...
Short Story in Tamil

''எனக்கு வேறு என்ன உத்திரவு? வழக்கப்படி ஊசிகள் மருந்துகள் என்று பட்டியல் தரப் போகிறாயா?"

இல்லையம்மா... குழந்தைக்கு இனிமேல் மருந்து எதும் கிடையாது. தொண்ணூறாவது மணியில் முனிஸிபல் வண்டி அனுப்புவார்கள். ஏற்றி அனுப்பிவிடுங்கள். அதுவரை நீங்கள் எங்கு வேண்டுமானலும் இவனுடன் போய் வரலாம். உணவுப் பட்டியல் இருக்கிறது. உங்களுக்கு இன்னும் இரண்டு தடுப்பு ஊசிகள் போட வேண்டும். நாளை ஆட்கள் வருவார்கள். எங்கே போனாலும்... தொண்ணூறாவது மணியில் இங்கே வந்து விடுங்கள்..." இயந்திரப் பேச்சை முடித்துக்கொண்டு அவள் நகர்ந்தாள். அடுத்த முகாமில் இதுபோல் இன்னும் ஒன்றைக் கவனிக்க அவள் அனுப்பப்படுவாள்.

சூரிய ஆற்றலைச் சின்ன மாத்திரையில் தேக்கி வைத்துகொண்டு அதன் உதவியுடன் காரில் பலஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் போக முடிந்த காலத்தில், பாதுகாப்புக் கவசம் அணியாமல் வெளியே வரமுடியவில்லை. கதிரியக்கத் தூசுகள் தோலைக் கிழித்து, இரத்தத்தில் இறங்கிவிட்டால் கதை முடிந்துவிடுகிறது. ஜூனியர் மாதிரி காய்கறிக் குழந்தைகள்; என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளமாலே மடியப் போகிற ஜீவன்கள்.

"கவலைப்பட்டு ஏதும் ஆகப்போவதில்லை ஜன்யா. அவனுக்கும் உடை மாற்றிக்கொண்டு கவசம் அணிவித்து வெளியே அழைத்துப் போ... இருக்கிற சில மணி நேரங்களை அவனுடன்...''

'நான் விடப் போவதில்லை டியர். மீறப் போகிறேன்... முடியுமானால் பிரஸிடெண்டிடம் இவனைக் கொல்லக்கூடாது என்று சொல்லி விதிவிலக்குப் பெறப் பாருங்கள். இல்லையென்றால்...''

'எல்லாம் முடிந்துவிட்டது ஜன்யா. இந்த விஷயத்தில் கண்டிப்பாக விதியைத் தளர்த்த முடியாது என்று உத்தரவாகிவிட்டது. நாற்பது மணி நேர அனுமதியை நமக்காகத்தான் தொண்ணூறு மணியாக உயர்த்தியிருக்கிறார்கள், பெரிய மனசு பண்ணி...

குழந்தையைத் தூக்கிக்கொண்டாள். ஆயாவின் குறிப்புக்களின்படி உடம்பைத் துடைத்துவிட்டு மருந்து தடவினாள். பசை உணவுகளைக் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டாள். கவச உறையில் குழந்தையைத் திணித்தாள்... 'பதினாறு வயசில் நாலு வயசுக் குழந்தை மாதிரி வளர்ச்சி...' என்று தனக்குள் முணுமுணுத்தாள். 'ஆனாலும் குழந்தையை அழிப்பதாவது...'

உறைக்குள் அகப்பட்ட ஜூனியரின் கண்கள் வெகு பிரகாசமாக மின்னின. ஒரு விதமான மிரட்சி தெரிய மம்மீ சொன்னது. இந்தக் குரலும், இந்த அழைப்பும் இன்னும் எத்தனை மணி நேரங்களுக்கு என்று நினைத்தபோது அவளுக்கு வேதனையாக இருந்தது. எட்ட இருந்தே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். ஜன்யாவைப் போல் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டு கூடக் குழந்தையைத் தொட அவனுக்கு அனுமதியில்லை.

இரண்டு வாய்ப்புக்களும் கைநழுவிப் போய்விட்டன. இனிமேல் தங்களுடைய தலைமுறைத் தொடர்ச்சிக்கு வழியில்லை. வேதனை அவனையும் அழுத்தியது. ஆண்மையின் கையாலாகாத்தனம் இந்த யுகத்தின் நியாயமாகிவிட்டது. மனசுக்குள் ஒரு வெறுமை சூழ்ந்தது... இவள் எங்காவது குழந்தையுடன் ஓடிவிடுவாளோ என்றும் அவனுக்குப் பயமாக இருந்தது.

'ஜன்யா! அசட்டுத்தனமாக ஏதாவது செய்துவிடாதே... போன வாரம் இதேபோல் மிருத்யூ அவளுடைய குழந்தையுடன் தப்பிப் போக முயன்றபோது, இருவரையும் அப்படியே ஆவியாக்கிவிட்டார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்து தப்பவே முடியாது. இப்போது நாம் பேசுவதைக்கூட நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கும்...'' என்று எச்சரித்தான்.

தளத்தைவிட்டு மேலே வந்தான். அவசரத்தில் கவச உறையைச் சரிவர மூடாததால் புறங்கையில் 'சுரீர்' என்றது. அதை அலட்சியப்படுத்தினான்.

வெளியே இருட்டு நன்றாக மெழுகியிருந்தது. காற்றின் ஊளைச் சத்தம் இப்போது குறைந்திருந்தது. நட்சத்திரங்கள் புலப்படாமல் புழுதிப் படலம் மேலே மறைத்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

இனிமேல் என்ன செய்வது?

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மறுபடியும் கீழே இறங்கினான். தூங்க வேண்டும் போலிருந்தது. உறையைக் கழற்றிவிட்டு, ஒரு மாத்திரையை எடுத்து விழுங்கினான். எரிச்சல் ஏற்பட்டிருந்த புறங்கையில் மறமறத்தது. மருந்து நீரில் கையைக் கழுவி, எரிய எரிய ஒரு திரவத்தைப் பூவாகப் பொழிய வைத்துக்கொண்டான்.

அவ்வளவையும் பார்த்த ஜன்யா மெளனமாக அழுதாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே புறப்படுகிற நேரத்தில் அவன் தூங்கிப் போயிருந்தான். இந்த மாத்திரைத் தூக்கம் மூன்று மணி நேரம் அவனை விடாது.

'டாடி...'' என்றது குழந்தை.

கணவனின் அருகே சென்று அவதுடைய நெற்றியில் பூவாக முத்தமிட்டாள். வெளியே புறப்பட்டாள். குழந்தையுடன் தளத்துக்கு மேலே வந்தாள். புதிய சூரிய வில்லையை எடுத்தாள். பத்தாயிரம் கிலோமீட்டர் பயணத்துக்கு இதுபோதும். கைப்பெட்டியிலிருந்து வரைபடத்தை எடுத்து புரட்டினாள். ஓர் இலக்கு அவள் மனத்தில் பதிந்தது.

விசைக்காரில் ஏறி அமர்ந்து, ஜூனியருக்கும் தனக்கும் பெல்ட்டைக் கட்டிக்கொண்டு அவள் புறப்பட்டபோது காரின் உள்ளே மானிட்டர் ஒலித்தது...

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பெண் அருவி
Short Story in Tamil

"நீ இறுதியாக எச்சரிக்கப்படுகிறாய். உனக்கு அனுமதிக்கப்பட்ட தொண்ணுறாவது மணியில் உன்னுடைய ஸெக்டாரில் இல்லாவிட்டால் நீ அழிக்கப்படுவாய்..."

அறிவிப்பை அலட்சியப்படுத்தினாள். வழக்கமான வேகத்தை இன்னும் கூடுதல் ஆக்கினாள். 'ஸெக்டார். இஸட் 937'ஐ நோக்கி வண்டி பறந்தது.

அங்கே மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை... முள்வேலிக்கு அப்பால் அது ஒரு பூலோக நரகம். உள்ளே அப்பால் அகு போகிற எவரும் நிர்வாகத்தின் தண்டனைக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை. அவர்களே அழிந்துவிடுவார்கள். அவ்வளவு கொடுமையான கதிரியக்கப் பகுதி அது. ஒரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்து இப்போது தடுக்கப்பட்டு விட்ட பகுதி. பழைய தலைமுறைகள் கதிரியக்கச் சோதனைகளால் சீரழித்த நிலப்பகுதி அது.

சாகப் போகிறோம் என்பது தெரிந்தே அவள் போனாள். குழந்தையுடன் தொண்ணூறு மணி நேரம் என்பது இன்னும் கொஞ்ச நேரம் நீண்டு போகாதா என்கிற ஆசை...

வழியில் வானம் இருண்டது... அபூர்வமாக மின்னல் வெட்டியது... மழை?

வண்டியின் வேகத்தைக் குறைத்தாள். பூவாகத் தூறல் இறங்கியது. அவளுக்கு நினைவு தெரிந்து பார்த்ததில்லை. வீடியோப் பதிவுகளில்தான் இந்த மழையின் நிழல்களைப் பார்த்திருக்கிறாள்.

பெரும்பாலும் - வானத்திலேயே ஆவியாகித் திரும்பிவிடுகிற மழை, தரையைத் தொடுவது என்பது அரிதான காட்சி. சற்று மெய் மறந்தாள்...

அங்கே அவன் மாத்திரைத் தூக்கத்திலிருந்து விடுபட்டபோது, அறையில் ஜன்யா இல்லை... ஜூனியர் இல்லை... அச்சம் பிறந்தது.

மானிட்டர் ஒலித்தது. "அவர்கள் தப்பி யோடுகிறார்கள்... அழிக்கப்படுவார்கள்..."

'பாவிப் பெண்ணே' என்று தலையில் அடித்துக்கொள்ளக் கையை உயர்த்தியபோது -

அவனால் முடியவில்லை... புறங்கையில் நன்றாக ரத்தம் கசிந்தது... கால்கள்...கை எல்லாம் வீங்கிக் கனத்தன... அவனுக்குப் புரிந்தது. கண்கள் இருண்டு வந்தன.

ஜன்யாவுக்கு வியப்பு... மானிட்டர் அறிவிப்பைத் தொடர்ந்து காரை நோக்கிப் பாய்ந்து வந்த ஏவுகணை பாதியிலேயே வெடித்தது எப்படி என்று அவளுக்குப் புரியவில்லை.

விசையைக் கூடுதலாக்கி, அந்த அபாய ஸெக்டாருக்குள் நுழைந்தபோது ஜூனியர் நன்கு உறங்கிப்போயிருந்தான்.

ரேடியோவில் செய்தி வந்தது.

''மழை! இடி மின்னல் எல்லாம் புதிய செய்திகள். அறுபது ஆண்டுகளுக்கு அப்புறம் பூமி நனைகிறது... ஸெக்டார் பதினேழில் ஒரு மின்னல் தாக்கி ஏவுகணை வெடித்தது...''

கதவைத் திறந்துகொண்டு வெளியே இறங்கினாள். காற்று இல்லை. வெப்பம் தெரியவில்லை. அறிவிப்புப் பலகையில் புழுதி படிந்து படிக்க முடியாமல் கிடந்தது.

திரும்பவும் காருக்குள் தன்னை அடக்கிக்கொண்டாள். பயமாக இருந்தது.தொண்ணூறு மணிக்கு முன்பே மரணம் வந்து விடுமோ?

அவன் நினைவில் வந்தான். அவனிடம் சொல்லாமல் வந்தது எவ்வளவு தவறு என்பது புரிந்தபோது அழுகையாக வந்தது. காருக்குள் ஜூனியர் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

ஒரு முடிவுக்கு வந்தாள். கவச உடைகளைக் கழற்றி வீசினாள்.

இங்கேயும் வானம் இருண்டது. பூவாக மழை இறங்கியது. தூறல் அவளை நனைத்தபோது இதமாக இருந்தது. ஊசி இறங்குவது போன்ற உணர்வுகள் இல்லை. புதிய அனுபவமாகத் தோன்றியது. புது மழை அவளுக்கு நம்பிக்கையூட்டியது.

உடைகளையும் கழற்றி முழுவதுதாக நனைந்தாள். ஜூனியரையும் இழுத்து உறக்கம் கலைத்தாள். கவசங்களை வீசிவிட்டு அவனையும் நனையப் பண்ணினாள்.

அது இன்னும் 'மம்மீ...' சொன்னது...

மழைத்தூறல் இன்னும் வலுத்தது. விசைக் காரின் அருகே போய் மானிட்டர் மூலம் அவனுடன் தொடர்பு கொண்டபோது-

ஸெக்டாரில் அவனை எரித்துச் சில மணி நேரங்கள் ஆகியிருந்தன.

அழுதாள்... ஜூனியர் இன்னும் சிரித்துக்கொண்டே மழையில் நனைந்தான்.. மின்னல் வெட்டியது!

காத்திருந்தாள்.

எதற்கு?

மரணத்துக்கா? அல்லது மழை காரணமாக முளைவிட்ட நம்பிக்கை, துளிர் இலையாக விரியவா?

பின்குறிப்பு:-

கல்கி 25 மே 1986 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com