சிறுகதை - மழைக்கால விசாரணை!

ஓவியம்: நடனம்
ஓவியம்: நடனம்

-சித்தார்த்

“மழை தொடங்கிவிட்டது!" என்றாள் மனைவி, ஜன்னல் வழியே பார்த்துவிட்டு.

"இந்த வருஷமாவது ஒரு குடை வாங்கி விட வேணும்!" என்றேன் படு உறுதியுடன்.

"எதற்கு வாங்கணும்? எதற்கு வாங்கணும் என்கிறேன்!'' என்றபடியே, ஏதோ காற்றிலிருந்து வரவழைப்பதுபோல், ஒரு குடையைத் திடீரென்று விரித்துப் பிடித்தாள். "நேற்று அடை மழை பிடித்துக்கொண்டதல்லவா? அப்போது பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து வாங்கினேன்!''

''அதைக் காலையிலே திருப்பிக் கொடுப்பதற்கென்ன? அவர்களுக்குத் தேவையாய் இருக்குமென்று தெரியாதா உனக்கு?"

''அப்படி உடனே திருப்பிக் கேட்க அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. நம்மிடம் குடை எதுவும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்!" என்றாள் அருமை மனைவி, துளியும் புன்னகை செய்யாமல்.

இதையும் படியுங்கள்:
நீர்ச் சுருக்கு - பெண்களை அதிகம் தாக்கும் நோய்!
ஓவியம்: நடனம்

எனக்கு மகா கோபம். 'தெய்வப் பிறவி'யில் பத்மினி எஸ். எஸ். ஆரை ஒரு சீனில் குடையால் அடி அடியென்று அடித்து வெளுப்பாரே, அது மாதிரி செய்ய (மனசுக்குள்) ஆசை. முடியுமா அதெல்லாம்? அதுவும் தவிர, அது சினிமா. அதற்காக, பத்மினிக்குச் சிறந்த நடிப்புக்கான அவார்டு எல்லாம் கொடுத்திருப்பார்கள். இந்தக் காலத்தில் என்றால், பத்மினிக்கு மட்டுமல்ல, எஸ். எஸ். ஆருக்கும் (அடிவாங்கியதற்காக) கொடுத்திருப்பார்கள். குடைக்கும்கூட மூணு நாலு பரிசுகள் கொடுத்திருப்பார்கள் - கைப்பிடிக்கு ஒன்று, கறுப்புத் துணிக்கு ஒன்று, கம்பிகளுக்கு ஒன்று -என்று. ஏதுடா, குடை, தானே நடந்து மேடைக்குப் போய்ப் பரிசு எல்லாம் வாங்கிக்கொள்ளுமா என்றெல்லாம் தமிழ்ப்பட ரசிகர்களும் சரி, பரிசு கொடுக்கும் நீதிபதிகளும் சரி யோசனையே செய்ய மாட்டார்கள்... ஹ்ம்...

"சரி, அது போகட்டும். கீஸர் வேலை பண்ணவில்லை என்று போன வாரம் எதிர் வீட்டுக்காரரிடமிருந்து ஸ்டவ் வாங்கி வந்தாயே, வெந்நீர் வைக்க? திருப்பிக் கொடுத்து விட்டாயோ?"

"எதற்குத் திருப்பிக் கொடுக்கணும்? எதற்குத் திருப்பிக் கொடுக்கணும் என்கிறேன்! நாளைக்கே காஸ் தீர்ந்து விடும் போல் இருக்கிறது. அப்புறம் மறுபடி அவர்களிடம் தானே ஸ்டவ்வுக்குப் போய் நிற்கணும்? இப்படியே வாங்கிக் கொண்டு போய், திருப்பிக் கொடுத்து, திருப்பிக் கொடுத்து வாங் கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் ஸ்டவ் அவர்களுடையதா, நம்மோடதா என்று சந்தேகம் வந்துவிடும். எதற்கு அநாவசியக் குழப்பம் உண்டாக்கணும்?"

எனக்குக் கோபமான கோபம். "சீ! அவர்கள் என்ன நினைப்பார்கள்?"

"உளறாதீர்கள்! ராஜி மாமி ரொம்ப நல்லவளாக்கும். எதையும் கொடுத்தால் திருப்பியே கேட்கமாட்டாள்! அதுவும் தவிர, அவர்களுக்கு வேணும் என்றால் திருப்பிக் கேட்க மாட்டார்களா என்ன!”

பார்வையை அவளிடமிருந்து திருப்பியது தவறாகப் போச்சு. கீழ் வீட்டிலிருந்து, வாங்கிய பெரிய தெர்மாஸ் பிளாஸ்க்! போன வாரம் முழுக்க மழைத் தூறலில் நனைந்தபின் ஜலதோஷமும் லேசாக ஜுரமும் வந்தபோது, ஹார்லிக்ஸ் போட்டு வைத்துவிடலாம் என்று வாங்கிக்கொண்டு வந்தது.

"அதை ஏன் இன்னும் கீழ் வீட்டில் கொடுக்கவில்லை?"

"எதை?"

“அந்த மஞ்சள் பிளாஸ்க்கை?”

"சும்மா கூச்சல் போடாதீர்கள். அதைத் திருப்பிக் கொடுக்க எடுத்துக் கொண்டு போனேன் நேற்று. மாலதி என்ன சொன்னாள் தெரியுமா?"

இதையும் படியுங்கள்:
ஹைதராபாத் போனா இந்த அஞ்சு இடங்களை மிஸ் பண்ணாம பாருங்க!
ஓவியம்: நடனம்

"என்ன சொன்னாள்?"

''மறுபடி உனக்கு வேண்டி வந்தால் யாரிடம் போய்க் கேட்பாய்? உன்னிடமே இருக்கட்டும் அது. என்கிட்டே வேறு ஒரு பிளாஸ்க் இருக்கிறது என்றாள்."

இன்னும் வேறு என்னென்ன திருப்பிக் கொடுக்காத அந்நியப் பொருள்கள் இருக்கின்றன என்று சுற்று முற்றும் பார்த்தேன்.

நாலு செல் டார்ச்! போன வாரம் கரண்ட் போனபோது மிஸஸ் ஜெயராமிடமிருந்து வாங்கியது!

"இன்னுமா டார்ச்சைத் திருப்பிக் கொடுக்கவில்லை?"

"எதற்குக் கூச்சல், கூப்பாடு எல்லாம் இப்போது? நாம் என்ன திருடிக்கொண்டா வந்து விட்டோம்? கரண்ட் ஒரு நாள் விட்டு ஒருநாள், அதிகாலையிலும் ராத்திரியிலும் போகிறது. ஒவ்வொரு தடவையுமா போய் அவளிடம் வாங்கிக்கொண்டு வர முடியும்?”

இவளை ஒன்றும் செய்ய முடியாது. சண்டை போட்டால், ரசாபாசமாகி விடும்.

இவள் குணத்தைத் திருத்த என்ன செய்யலாம் என்று நண்பனிடம் விசாரித்தேன்.

"ஒன்று செய் உன் மனைவி பக்கத்து வீடு,கீழ் வீடு, எதிர் வீடு, மேல் வீட்டி லிருந்தெல்லாம் கொண்டு வந்திருக்கும் பொருள்களை ஒரு எக்ஸிபிஷன் மாதிரி வை. ஐடியல் ஹோம் எக்ஸிபிஷன் மாதிரி இருக்கும். பலருக்கு உபயோகமாக பல ஐடியாக்கள் தோன்றும்!”

போயும் போயும் அவனைப் போய் யோசனை கேட்டேனே என்று நொந்துகொண்டேன். எக்ஸிபிஷனில் வைப்பதற் கென்றே சுற்று வட்டாரத்தில் எட்டு, பத்து வீடுகளிலிருந்து மேலும் பல பொருட்களை வாங்கி வந்துவிடுவாள் என் மனைவி என்பது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது!

பின்குறிப்பு:-

கல்கி 15  நவம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com