சிறுகதை – முகம்!

Short story...
ஓவியம்: ராமு
Published on

-கனகராஜன்

 யரமான இரும்புக் கதவுகளைத் தாண்டி நடக்க ஆரம்பித்தபோது, கருப்புசாமி வெயிலின் உஷ்ணத்தை உணர்ந்தான். அவனுக்குள் பெருத்த ஏமாற்றம் பொங்கி எழுந்ததைப்போலவே, வெயிலின் கொடுமையும் தாக்கியது. இளைப்பாற நினைத்தான். நிழலாய் இருந்த சில இடங்களில் ஏற்கெனவே ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். தாகம் வேறு வறண்ட நாக்கைத் தடவி ருசி பார்க்கிறது. பசிக்கிறது.

பெரிய ஹோட்டல் ஒன்றின் முன்னால், 'சாப்பாடு ரெடி' என்கிற அறிவிப்புப் பலகை வெயிலில் காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். பஸ்ஸிற்கு அளவாகக் காசுகள் இருப்பதை யோசித்தபடி நடந்து கொண்டிருந்தான். பஸ் ஸ்டாண்டை அடைய ஒரு பதினைந்து நிமிட நடையாவது வேண்டும். வெயிலில் நடக்க வேண்டுமென்பதை நினைக்கையில் கஷ்டமாக இருந்தது. பாதங்களில் 'விண், விண்' என்ற வலி கிளம்ப ஆரம்பித்துவிட்டது.

குடையோடு நடந்து போகிற மனிதர்களைக் கவனித்தான். நிழல்களைச் சுமந்து நடப்பவர்களைப் பார்க்கையில் அவனுள் பெருமூச்சு சுருண்டு எழுகிறது. பெருகிய வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டான். எதிரே சைக்கிளில் வந்த ஒருவரிடம் -

"சார்... மணி என்னங்க...?" என்று கேட்டான்.

அவர் வந்த வேகத்தில் இவனைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கடந்து போனார். பலமான தாக்குதலைப் போல இருந்தது அவனுக்கு.

அவர் கடிகாரம் கட்டி இருந்தாரே...?

தன் உருவம் பற்றி அபிப்பிராயம் அவரைப் பாதித்து இருக்குமோ என்று அவன் சந்தேகப்பட்டான்.

அவர் எந்த வகையான மனிதர் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதெப்படித் தெரியும், போகிற போக்கில்?

ஆனால், அவனுக்குத் தெரியும். அவனைப் பற்றி... அவன் முகத்தைப் பற்றி.

கண்ணாடி எதிரே தோன்றும் அவன் முகம்... ஒருவித அந்நியத் தன்மையை தினமும் அவனுக்கு உணர்த்துகிறதாக உணர்கிறான்.

எனக்கு மட்டும் ஏனிந்த முகம்? இந்த முகம் சுமக்க, எத்தனை வேதனைச் சுமைகள்!

"டேய்... குரங்குமூஞ்சி!”

தேவராஜ் கத்திக்கொண்டு ஓடுவான். அது கிளாஸ் ரூம் முழுக்க ஒலிக்கும்.

"உனக்கு யார்ரா கருப்புசாமின்னு பேர் வச்சது...? அவார்டு கொடுக்கணும்..."

விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு ஆசிரியர் சொன்னது.

"கருப்புசாமி" - கட்டுரை நோட்டுக்களை விநியோகம் செய்த சசியின் குரல் வெறுப்புடன் உச்சரித்தவாறு கட்டுரை நோட்டை வீசி எறிந்தாள். அவள்தான் கிளாஸ் லீடர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பவித்ரன்!
Short story...

பள்ளி நாட்கள் கொடுமையாக அமைந்தது. மற்ற முகங்கள் இந்த முகத்தை அலட்சியப்படுத்தின. நண்பர்கள் என்று யாரும் பழகவில்லை.

அழகான முகம் இருந்தவர்கள் லீடர் ஆனார்கள். ஆண்டு விழா, இலக்கிய மன்றம், நாடகம் என்று மேடை ஏறுவார்கள். அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருங்கிய உறவுபோலச் சிரித்துப் பேசுவார்கள்.

ஒரு முறை புதிதாக வந்த கணக்கு வாத்தியார் இவனுடைய அழகான கையெழுத்தைப் பார்த்து ரசித்தவாறு -

"யாரு கருப்புசாமிங்கறது...?" என்று விசாரிக்க - இவன் எழுந்து நின்றான். இவனைப் பார்த்த வினாடியில் ஆசிரியரின் முகம் சுருங்கிப் போய்விட்டது. அவர் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. இவனும் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் உட்கார்ந்துகொண்டான்.

தனக்கு முகம் அழகாக அமையாமல் போனது பற்றிய அவன் கவலைகளும் வேதனைகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டன. இப்போது சினிமா தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழிக்கிறான்.

னியார் நிறுவனம் ஒன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தி யிருந்ததைப் பார்த்து அப்ளிகேஷன் போட்டான். அந்த நேர்முகத் தேர்விற்காகத்தான் இப்போது சென்றுவிட்டுத் திரும்புகிறான்.

டைகட்டி, கோட்டும் சூட்டும் போட்ட பலபேர் நேர்முகத் தேர்விற்கு வருகை புரிந்திருந்தார்கள். கருப்புசாமிக்குக் கூச்சமாகப் போய்விட்டது. இவனிடம் நல்ல பேண்ட், சட்டை இல்லை. அவனுக்கான முடிவு அப்போதே அறிவிக்கப்பட்டு விட்டதைப் போல இருந்தது. போய் விடலாமா என்று நினைத்தான். அவன் நினைத்ததைப் போலத்தான் நடந்தது. சீக்கிரமே விசாரணை நடத்தி அனுப்பி வைத்தார்கள். அவனுக்குப் புரிந்துவிட்டது.

பஸ் ஸ்டாண்டை அடைந்தான்.

"சார்... மூணாம் நம்பர் பஸ் வருமா?"

நின்றபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்த ஒருவரைக் கேட்டான்.

"ம்... வரும்..." என்றார். அவர் நிமிரவில்லை. படித்தபடியே பதில் சொன்னார். அவர் இவனைப் பார்க்காமல் சொன்னது ஒருவிதத்தில் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

ப்போதுதான் அவர்கள் கண்ணில் பட்டார்கள்.

ஜெயபாலும் சுமதியும். இருவருமே இவனோடு படித்தவர்கள்தாம்.

ஒரு முறை இருவரும் சேர்ந்து சினிமாவிற்கு வந்தார்கள். இருவரின் பார்வையிலுமே - மிரள மிரள விழிப்பும் - திருட்டுத்தனமும் இருந்தது. கருப்புசாமிதான் டிக்கெட் கிழித்தான். இருவருமே இவனைக் கண்டுகொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்:
அரிசி மாவு சப்பாத்தி, சுவையான பன்னீர் மஞ்சூரியன் செய்யலாம் வாங்க!
Short story...

கருப்புசாமி இப்போது வானத்தைப் பார்வையால் வெறித்தான். வாழ்க்கையில் அர்த்தமுள்ளவை எல்லாம் எவை என்று கேட்கத் தோன்றுகிறது. சினிமா டிக்கெட் கிழிக்கும் தொழிலைக் கேவலமாக நினைக்கவில்லை.

ஜெயபால் இவனைக் காட்டிச் சுமதியிடம் சொல்ல, அவள் சிரிப்பது தெரிந்தது.

"யோவ்... கெழவா... சாவுகிராக்கி... நீ வுழுந்து சாகறதுக்கு என் வண்டிதான் கெடைச்சுதா...?"

வயதான கிழவர் ஒருவர் நடுரோட்டில் தடுமாறி நின்றுகொண்டிருந்தார். கையில் தடி இருந்தது. காரிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்து - இன்னும் அவரை நோக்கி வசைச் சொற்கள் வீசிப் பறந்து போனது.

கிழவர் தடுமாறினார். ஊன்றுகோலை அங்கும் இங்கும் வீசினார். எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். அவருக்குப் பார்வையில்லை.

கருப்புசாமிக்கு என்னவோ செய்தது. வேகமாக அவரை நோக்கிச் சென்றான்.

"தாத்தா... எங்கே போகணும்...?"

''சாமி... சிக்னல் தாண்டி விட்டுடுங்க..." என்றார்.

ரோட்டைக் கடப்பதில் அவருக்கு உதவினான். எல்லோருடைய பார்வையும் கருப்புசாமியின்மேல் விழுந்தது.

முகத்தில் நன்றி பெருக, கிழவர் அவனை, தடுமாறித் தடுமாறித் தொட்டுப் பார்த்தார். முகத்தைத் தடவிப் பார்த்தார்.

"ராசா... எத்தனை நல்ல மனசு உனக்கு? உன் மனசைப் போலவே மொகமும் அழகாத்தான் இருக்கணும் உனக்கு. எனக்குத்தான் பார்க்கக் கொடுத்து வைக்கலை, நல்லாயிரு!"

கருப்புசாமி பழைய இடத்திற்கு வந்து நிற்கிறான். இந்த நாள் அர்த்தமுள்ளதாகக் கழிந்ததில் அவனுக்கு மனம் நிறைந்தது.

ஜெயபாலும் சுமதியும் எதற்கோ சிரித்தார்கள். இவனைப் பற்றி ஜெயபால் நிச்சயம் ஏதாவது கிண்டலடித்திருக்கக் கூடும்.

கருப்புசாமி மனசுக்குள் சிரித்துக்கொண்டான்.

பின்குறிப்பு:-

கல்கி 24  ஏப்ரல் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com