சிறுகதை: பவித்ரன்!

Tamil Short Story Pavithran
Men and Woman talking
Published on

புதுப் பொலிவு பெற்று விளங்கும் சென்னை விமான நிலையம்! 350 கி.மீ., பிரயாணம் செய்தது காரில் என்றாலும், ரகுவுக்குக் களைப்பாகவே இருந்தது. ’வருகை’ பகுதியி்ன் வாசலிலேயே, ஓர் ஓரமாக இருந்த நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து விட்டான்!

நண்பன் பவித்ரனைப் பார்க்கும் ஆர்வத்தையும் தாண்டி பயணக் களைப்பு அவனைச் சோர்வடையச் செய்திருந்தது. இரவு இரண்டு மணிக்குமேல் ஆகி விட்டிருந்ததால் நித்திரா தேவி அவனை வலிய அணைத்துக் கொண்டாள்! அப்பொழுது அவன் செல் சிணுங்க, தேவியை வலுக்கட்டாயமாக விலக்கி விட்டு, செல்லை எடுத்தான்!

“ரகு! எங்க இருக்க? நான் எறங்கிட்டேன்! இமிக்ரேஷனை முடிச்சிட்டுக் கொஞ்ச நேரத்ல வந்துடறேன்!” என்ற பவித்ரனின் குரல் அவனுக்கு உற்சாகத்தை அளித்து உறக்கத்தை விரட்டியது!

“வா! வா! மெல்ல வா! உன் குரலைக் கேட்டு எவ்வளவு நாளாயிட்டு! அப்பாடா! இப்பதான் மனசுக்கு நிறைவா இருக்கு! பயணமெல்லாம் நல்லா இருந்திச்சில்ல…ம்! நான் ஓர் அவசரக்காரன்! நம்மதான் ரொம்ப நேரம் கார்ல போகப் போறேமே! அப்ப நிறையப் பேசிக்கிட்டே போலாந்தானே! அதுக்குள்ள எனக்கு அவசரம் பாத்தியா!”

“அதனாலதான் நண்பா நான் போன் பண்ணினேன்! நான் ஊருக்கு வர்றது ஒன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதில்ல! நான் கேட்டுக்கிட்ட மாதிரி நீ ரகசியமாத்தானே வந்தே?”

“ஆமாம்… ஆமாம்… எங்கம்மாவுக்குக் கூடத் தெரியாது! திருத்துறைப் பூண்டி போறதா சொல்லிட்டுத் தான் வந்தேன்!”

“நன்றி ரகு… இரு கொஞ்ச நேரத்ல வந்துடறேன்!

இமிக்ரேஷன் க்யூ மெல்ல நகர, பவித்ரனின் மனம் பின்னோக்கிச் சென்றது!

பரிமளாவின் நினைவுகள் உள்ளத்தில் உற்சாக ஒளியெழுப்ப, கடைசியாய் சந்தித்தது வீடியோ காட்சியாய் விரிந்தது!

“என்னங்க சொல்றீங்க? இப்ப எதுக்கு ரஷ்யா போகணும்? ஒங்க மாதிரிதானே நானும்! இங்க ‘வர்க் ப்ரம் ஹோம்’ பெசிலிடி வந்ததினாலே நானே சென்னையில தங்காம அதிகமா ஊர்லதான் இருக்கேன். நீங்களும் அப்படித்தானே? அதை விட்டுட்டு எதுக்கு ரஷ்யா போகணும்?”

“இல்ல பரி! அப்பா கடன் வாங்கித்தான் என்னைப் படிக்க வெச்சாரு! கடன் கொடுத்தவரு திடீர்னு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கப் போனதாலே மொத்தப் பணத்தையும் சீக்கிரமாக் கேட்கறாரு! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல! ஆயிரங்கள்னா அட்ஜஸ்ட் பண்ணலாம்! மூணு, நாலு லட்சத்தை ரெண்டு, மூணு மாசத்ல திருப்பிக் கொடுக்கணுமே! இந்தச் சமயத்லதான் என்னோட சீனியர் ஒருத்தரு அங்கயிருந்து கூப்பிட்டாரு! நல்ல சம்பளம்னாரு! உடனே சரி சொல்லிட்டேன்!”

“எனக்காக ஒன் ஆர் டூ இயர்ஸ் காத்திருப்பே இல்ல! திரும்பினதும் நம்ம கல்யாணந்தான்!”

“என்னங்க நீங்க! ஆயுள் பூராவும் கூடக் காத்திருக்க நான் தயார்தான்! ஆனா  ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை போட்டுக்கிட்டிருக்கற இந்த நேரத்ல நீங்க அங்க  போறதைத்தான் மனசு ஏற்கல! அதனாலதான் யோசிக்கறேன்!”

அவள் சந்தேகப்பட்டதுதான் நடந்தது! வேலை என்று கூப்பிட்ட ரஷ்ய நிறுவனம்  பவித்ரனையும் அவனைப்போலச் சிலரையும் போர்ப்பயிற்சிக்கு உட்படுத்தியது இரண்டு, மூன்று முறை போர் முனைக்கும் அனுப்பியது! அவனுடைய நல்ல காலம், உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பி வந்து விட்டான்!

அப்புறம் திடீரென ஓர் இரவில் எழுப்பி, போர் முனைக்கு அனுப்ப, போகும் வழியில் வண்டிகள் ஓர் இடத்தில் நின்றபோது அவனும், அவன் சீனியரும் தப்பித்து விட்டனர். உக்ரைன் பார்டரில் அந்த வண்டிகள் தாக்கப்பட, அதில் சென்ற அனைவரும் இறந்து விட்டனர். பட்டியலில் அவன் பெயரும் இருந்ததால் அவனும் இறந்ததாக செய்தி பரவிற்று!

இதையும் படியுங்கள்:
சிறுகதை - வைகையாத்தா!
Tamil Short Story Pavithran

ஊரையும்  செய்தி எட்ட, பவித்ரன் குடும்பம் பரிதவித்து ஓய்ந்தத! பரிமளா அதிர்ச்சியில் மயக்கமாகி, அப்புறம் எப்படியோ சமாளித்துக் கொண்டாள்! அவர்கள் காதலை அவன் புறப்படும் முன்னர்தான் இரு வீட்டாரிடமும் தெரிவித்திருந்தார்கள் இருவரும்! பெற்றோர்கள் சம்மதத்துடன் அவன் திரும்பியதும் திருமணம் என்ற முடிவுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.

இறந்தவர்கள் லிஸ்டில் பவித்ரன் பெயர் வந்தது ஒரு விதத்தில் அவனுக்கு உதவியாக இருந்தாலும், பல விதத்தில் அதுவே இடைஞ்சலாகவும் அமைந்து விட்டது! எனவே, தான் உயிருடன் இருப்பதை அவனால் வீட்டாருக்கும் தெரிவிக்க முடியவில்லை.

பல போராட்டங்களுக்குப் பிறகே அவனால் சென்னைக்கு விமானம் ஏற முடிந்தது!

எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாகத் திடீரென்று போய் நிற்க வேண்டுமென்று விரும்பியதால் ரகுவைத் தவிர வேறு யாருக்கும் உண்மையைச் சொல்லவில்லை! அவன் உயிருடன் இருப்பதையும் தெரிவிக்கவில்லை!

பரிமளா தன்னைப் பார்த்ததும் எப்படி ஆனந்தப்படுவாள் என்ற கற்பனையுடனே நின்றதால், தனக்கு முன்னால் கவுண்டர் காலியானது கூடத் தெரியவில்லை!

“சார் வாங்க!” என்ற அலுவலரின் குரலே அவனைக் கனவிலிருந்து மீட்டது!

வெளியே வந்தவனை ரகு வரவேற்க, காரில் அமர்ந்ததுந்தான் ரகு அந்த இடியை இறக்கினான்!

“பரிமளாவைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விட்டதாகவும், அவள் எவ்வளவோ முயன்றும் செத்துப்போன ஒருவனுக்காக எப்படிக் காத்திருக்க முடியும் என்று கேட்டே அவள் பெற்றோர் காரியத்தைச் சாதித்ததாகவும் கூற, உணர்ச்சிகளை அடக்கிக் கொண்ட பவித்ரன் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டான்!

“ரகு! நண்பர் ஒருத்தரைப் பார்க்க வேண்டி இருக்கு! நீ ஊருக்குப் போ! யாரிடமும் இப்போதைக்கு நான் வந்ததைச் சொல்லாதே! ரெண்டு நாள்ல நான் ஊருக்கு வந்திடறேன்!” என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து இருளில் மறைந்தான் பவித்ரன்! நடக்கும்போதே மனதில் ஒரு பவித்ரமான முடிவை எட்டினான்!

இதையும் படியுங்கள்:
சிறுகதை - ரமணனா இப்படி!
Tamil Short Story Pavithran

‘ஊருக்குப் போய் பரிமளாவின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்த வேண்டாம்! அவள் எப்படியோ மகிழ்வாக வாழ்ந்தால் போதும்! நாம் மீண்டும் ஏதாவது ஒரு வெளிநாடு சென்று நிரந்தரமாகத் தங்கி விடலாம்! அவளைப் பொறுத்தவரை நான் இறந்து விட்டதாகவே இருக்கட்டும்!’ என்று யோசித்தபடி அருகிலுள்ள ஹோட்டலில் ரூம் எடுத்தான்!

கட்டிலில் படுத்து டிவியை ஆன் செய்தான்! காதலி தன்னை ஏற்காததால் ரெயிலில் தள்ளிக் கொன்ற வாலிபனின் வழக்கு குறித்த செய்தி திரையில் ஓட, புனிதமான காதலை இப்படிக் கொலை வெறிக் காதலாக மாற்றியவர்களைச் சபித்தபடி கண்களை மூடினான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com