சிறுகதை - முகம் மாறு தோற்றப் பிழை!

ஓவியம்; மருது
ஓவியம்; மருது

-கிருஷ்ணா

நான் அமர்ந்திருந்த இடத்தை நோட்டம் விட்டேன். செழிப்பு டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது. பெரிய ஹால். தரை விரிப்பு. ஜன்னல் கர்ட்டன். ஆள் புதையும் சோபா. பெற்ற ஷீல்டுகள். தலைவர்களுடன் சிரிக்கும் போட்டோ. சொந்த மிடுக்கை தம்பட்டமடிக்கும் சூழல்.

முள்மேல் அமர்ந்திருப்பதுபோல ஒரு அந்நியத்தன்மை. பாடம் செய்யப்பட்ட மானின் கண்களை கவனித்தேன். ஐயோ பாவம்!

"வாங்க தம்பி!"

குரல் கேட்டு எழுந்து நின்றேன்.

கனகராஜ் ஐயா. வெள்ளை வேட்டி, ஜிப்பாவில், பெரிய மீசையுடன் எதிரில் வந்தார்.

''உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க? காபி? எங்கே மீட்டிங்?"

"திருச்சியிலே ஐயா. வரும் இருபத்தி நாலாம் தேதி.''

"எதைப் பற்றி?"

''சமதர்ம சமுதாயம் - மலர்ச்சியும், வளர்ச்சியும். இந்த தலைப்புல பேசப் போறாங்க. கடிதம் வந்ததா?"

''ம், ம்! நல்ல காரியம்தான். நீங்க தீவிர உறுப்பினரா?"

பெருமையாய் தலையசைத்தேன்.

"எதுக்கு இந்த மீட்டிங்?"

ஒரு விநாடி தடுமாற்றமாய்ப் பார்த்தேன். என்ன கேள்வி இது? அதுவும் இவரிடமிருந்து?

"உங்க பார்வையோட பொருள் புரியுது தம்பி. நீங்க உங்க கொள்கையை எவ்வளவு தூரம் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யறீங்கன்னு  தெரிஞ்சுக்கத்தான்."

எனக்கே பரீட்சையா?

"சமுதாயத்துல ஜாதி, மதம் என்ற பெயரால் மக்களை அடிமையாய் அடக்கி வைச்சிருக்காங்க. அவங்க தளையை நீக்கவும், சமுதாயத்துல விழிப்புணர்வை மலர வைக்கவும்தான் போராடுறோம்."

"பலே, பலே!"

பெரிதாய் புன்னகைத்தார்.

"நீங்க இப்ப பண்ற விழிப்புணர்சியை எங்க அப்பா போன தலைமுறையிலேயே செஞ்சுட்டாரு."

வியப்புடன் அவரைப் பார்த்தேன். அரசியலில் செல்வாக்கான ஆள். புரட்சிக் கருத்துக்களை வரவேற்று, ஆதரவு தருபவர். ஆனால் இவர் அப்பாவைப் பற்றித் தெரியாதே?

"யோவ் கணக்குப் பிள்ளை!"

அவரின் அதிகாரக் குரலுக்கு ஒரு இளைஞன் ஓடி வந்தான். கணக்குப் பிள்ளை என்றால் ஐம்பது வயதுப் பெரியவரையே எதிர்பார்த்த கண்ணுக்கு, அந்த இளைஞன் புதிதாய் தெரிந்தான்.

இதையும் படியுங்கள்:
கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!
ஓவியம்; மருது

"சம்பத்,  அந்த அரிசி மில் விவகாரம் முடிஞ்சிடுச்சா?''

''இன்னிக்கு முடிஞ்சுடுங்க" பவ்யமாய் சொன்னான். படித்த இளைஞனாய்த் தெரிந்தான்.

"எப்பக் கேளு, இதே பதிலு. போ, போ!"

கனகராஜ் ஐயாவின் குரலில் இகழ்ச்சி அதிகமாகவே வெளிப்பட்டது.

அந்த இளைஞன் அகன்றதும் என்னை அர்த்த புஷ்டியோடு பார்த்தார்.

''இவன் யாரு தெரியுமா?"

பதிலுக்குக் காத்திருந்தேன்.

"இவன் தாத்தாவிடம் என் தாத்தா வேலை பார்த்தாரு. நிறைய நிலம், நீச்சுன்னு கொடி கட்டிப் பறந்த குடும்பம். கண்டாந்துரை! தஞ்சாவூர் பக்கத்து கிராமம். அங்கேதான் இவங்க குடும்ப ஆட்சி."

மீசையை பெருமையுடன தடவிக்கொண்டார். எதற்குப் பெருமை?

"எங்க அப்பாதான் எதிர்த்து குரல் கொடுத்த முதல் ஆள். இவன் பிறந்தப்ப வீடே அமர்க்களப்பட்டது. பத்து நாளைக்கு ஊர் மொத்தமும் அங்கேதான் சாப்பிட்டது. எல்லாம் இப்ப பெருங்காய டப்பா!"

பெரிதாய் சிரித்தார்.

"எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. நான் சிறுவனாய் இருந்தப்ப,  இவன் அப்பா எதிரிலே உட்காரக் கூடாது, பேசக் கூடாதுன்னு ஏகப்பட்ட கெடுபிடி. நில உச்ச வரம்புச் சட்டம்,  உழுபவனுக்கே நிலம் சொந்தம்! இந்த கோஷங்களுக்கு உயிர் கொடுத்தாரு எங்கப்பா, கிராமத்துல."

''பெரிய விஷயமுங்க."

"ஆமாம்! ஜனங்க முதல்ல பயந்தாங்க. அப்புறம் அப்பாவை ஆதரிச்சாங்க. அப்பா அந்த ஊரின் நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்தார். அவரோட புகழில்தான் நான் எம்.எல்.ஏ.ஆக முடிந்தது!"

“ஓ!”

"அதனாலதான் எனக்கும் இதுலே எல்லாம் ஒரு பிடிப்பு. அதே ரத்தம்தானே ஓடுது உடம்புலே?"

மேலும், பத்து நிமிடம் அவரே பேசினார். நான் வந்த நோக்கம் டொனேஷன். மெதுவாய் சொன்னேன். கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
இம்புட்டு மல்பெரி அம்புட்டு ஆரோக்கியமா?
ஓவியம்; மருது

கைகூப்பி விடைபெற்றேன். வீட்டின் வெளி வாசலில் அந்த இளைஞன் நின்றிருந்தான் .

மனசில் சம்பத்தின் மேல் ஒரு வித பரிதாப உணர்ச்சி மண்டியது. வாழ்ந்து கெட்ட குடும்பம்.

"என்ன படிச்சிருக்கீங்க சம்பத்?"

"ப்ளஸ் டூ. அதுக்கு மேலே வசதியில்லை படிக்க. அப்பா வேற இல்லை. அம்மா, நான், தங்கை. இதுதான் வருமானம். ப்ளஸ் டூ முடிச்சதும் ஐயா வந்து கூப்பிட்டாரு."

கனகராஜ் ஐயாவின் மீசை தடவிய பெருமை சிரிப்பொலி காதில் ஒலித்தது.

"உங்களுக்கு கஷ்டமாயில்லையா?"

"எதுங்க?"

"இப்படி உங்களிடமே வேலை செஞ்சவங்க இடத்துல நீங்க கைகட்டி நிக்கறது?"

சம்பத் சிரித்தான்.

"பணம், சாப்பாடு, வேலை. யாரிடம் செஞ்சால் என்ன? காலத்தின் சுழற்சி எல்லாம்!"

என்னால் பேச முடியாதபடி யோசனை.

"அது சரி, நீங்க என்ன விஷயமாய் ஐயாவைப் பார்க்க வந்தீங்க?"

சமதர்ம சமுதாய... என் வார்த்தைகளுக்கு அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு:-

கல்கி 03 செப்டம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com