சிறுகதை: என் அப்பாவின் அப்பா!

Grandson with grandfather
My father's father!
Published on

- ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து 

சென்னை கலைவாணர் அரங்கமே அதிரும் வண்ணம் எழுந்த கை தட்டலுக்கிடையே ‘சிவா’ மேடையை நோக்கி நடக்க, ஆங்காங்கே அமர்ந்திருந்த மாணவர்கள் ‘சிவா!சிவா!’ என்று கோரசாகக குரலெழுப்பினர். பெரியவர்களும், சிறுவர்களுங்கூட அவர்களுடன் உற்சாக மிகுதியால் சேர்ந்து குரல் கொடுத்தனர்!

வேளாண்துறை அமைச்சர் பதக்கத்தையும், பாராட்டுச் சான்றிதழையும்,10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி விட்டு, ’சிவாவுக்குத் தன் கையாலேயே விருது வழங்க வேண்டுமென்று முதலமைச்சரே விருப்பப் பட்டார். ஆனால் எதிர்பாராத விபத்து வயநாட்டில் ஏற்பட்டு விட்டதால், அது சம்பந்தமான ஆலோசனைகள் காரணமாக அவரால் வர இயலவில்லை. சிவாவைப் பாராட்டுவதில் இந்த நாடே பெருமைப்படுகிறது!’ என்றார்.

அடுத்து, அரசுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்த சிவா, மேலும் பேசினான்!

"மிகக் குறுகிய காலத்தில், மிகக் குறைந்த நீரைக்கொண்டு பெரும் விளைச்சலைத் தரும் நெல் ரகத்தை நான் அறிமுகப்படுத்தி, அதனை நிபுணர்களுக்கு பயிரிட்டும் நிரூபித்ததால், அரசு எனக்கு இந்தப் பரிசை வழங்கியுள்ளது. பசிப் பிணியைப் போக்கி விட்டால், பாரதம் மட்டுமல்ல, பரந்த இந்த உலகமே நிம்மதி பெற்று விடும்.

நான் இந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். எனது பத்தாவது வயது வரை நகரத்தில்தான் வாழ்ந்தேன். சின்ன வயதிலிருந்தே எனக்குப் பயிர்களின் மீது காதல்! விடுமுறையில் ‘அப்பாவின் அப்பா’ வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அருகிலுள்ள வயல் வெளிக்குச் சென்று விடுவேன். நகருக்குத் திரும்பியதும் நண்பர்களிடம் பார்த்தவற்றை விளக்குவேன்!

எனக்கு விபரங்கள் புரிய ஆரம்பித்தபோதுதான் அந்தக் கொடூரம் நடந்தது. கம்ப்யூடர் எக்ஸ்பர்டான என் அப்பா பெரிய பொறுப்பில், சிறு வயதிலேயே அமர்ந்து விட்டாராம். எனக்குப் பத்து வயது நடந்தபோது திடீரென அப்பாவின் நலம் குன்ற, அடிக்கடி அவர் மருத்துவமனை செல்ல ஆரம்பித்தார். ஒரு நாள் இரவில், அப்பாவைப் பிணமாகக் கொண்டு வர, அரைத்தூக்கத்தில் நான் அழுதேன். அவருக்கு இரத்தப் புற்று நோய் என்றார்கள்.

அப்பாவின் அப்பாதான் அவரோடு ராப்பகலாக மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருந்தார். அப்பா மறைந்ததும் அவர் கிராமத்திற்கும் நகருக்குமாக அலைவதைக் கண்டு மனசு பொறுக்காத நானும் அம்மாவும் அவரோடு கிராமத்திற்கே வந்து விட்டோம். அரசின் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவரால் முன்பு போல ஓடியார முடியவில்லை. அதோடு மட்டுமில்லாமல், மகனைப்  பறி கொடுத்த ஏக்கத்தில் அவர் மன அளவிலும் ரொம்பவும் சோர்ந்து போய் விட்டார். சில நாட்களில், எங்கிருந்துதான் அவருக்கு மீண்டும் உடற்பலம் வந்ததோ தெரியவில்லை. என்னை வளர்க்க என் அப்பா போல ரெண்டு அப்பா ஆகி விட்டார். திருவிழாக்கள், மாநாடுகள், எக்சிபிஷன்கள் என்று என்னைத் தன் தோள்களில் சுமந்தபடி வலம் வந்தார். ஊராரே அவரின் சுறுசுறுப்பைக் கண்டு வியந்து போயினர்! அதனால்தான் நான் அவரைத் தாத்தா என்றழைக்காமல் அப்பாவின் அப்பா என்றே அழைக்கிறேன்! நெல் திருவிழாவுக்கு நாங்கள் போயிருந்தபோதுதான் எனக்கு மனதில் ஓர் உறுதி வந்தது. புதிய ரகத்தை நாமே கண்டு பிடித்தால் என்னவென்று!

அப்பாவின் அப்பாவிடம் அதைச் சொன்னபோது, அப்பாவின் இறப்பையும் மறந்து எனக்காகச் சிரித்தார். ’பலே! பலே!’ நல்ல முடிவு… உடனே களத்தில் குதிப்போம் என்று கூறியபடி அடுத்த நாளே வயலுக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை – லாபம்! (ஸ்டாக் மார்க்கெட் கதை)
Grandson with grandfather

இரண்டு, மூன்று நெல் பயிர்களை இணைத்துப் புதிய ரகத்தை உருவாக்க முனைந்தபோதுதான் மீண்டும் அந்த புற்று நோய் அரக்கன் வந்தான். இந்த முறை அவன் குறி வைத்தது என் அப்பாவின் அப்பாவை…” -

சொல்லிய சிவா சற்றே நிறுத்த, ’அவருக்கு என்ன ஆனது? இப்பொழுது எப்படி இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா?’ என்று கூட்டத்தினர் பெருங்குரலெழுப்ப, சிவாவே மீண்டும் பேசினான்.

“பதற்றம் வேண்டாம்! இதோ அவரே வருகிறார்!”

கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்த, வயதான உயர்ந்த உருவம் மெல்ல நிதானமாக மேடைக்கு வந்தது!

“அனைவருக்கும் வணக்கம். நான்தான் சிவாவின் அப்பாவின் அப்பா! அதாவது தாத்தா… 38 வயதில் என் மகன் இரத்தப் புற்று நோய்க்கு ஆளானான். நானும் எவ்வளவோ போராடினேன்… அவனைக் காப்பாற்ற… மருத்துவர்களிடம் மன்றாடினேன்! என்ன செய்வது? விதி வலியதல்லவா? ஆனால் அதற்குள் அவன் நிறையச் சாதித்து விட்டான்! கடைசி நாள் முன்னிரவு… இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பு என்னிடம் பேசிய மகன் சொன்னான், 'அப்பா கவலைப்படாதீங்க…நான் பிழைக்க மாட்டேன்! ஆனால் என்னோட வயசையும் கடவுள் உங்களுக்குக் கொடுப்பார். நீங்க 90 வயசு வரை வாழ்வீங்க!' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே மயங்கி விட்டான். அப்புறம் அவன் கண் விழிக்கவேயில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - ஐ மிஸ் யு!
Grandson with grandfather

என்னை கான்சர் தாக்கியபோது 75 வயதுதான். அவன் சொல்லியது அசரீரியாக என்னுள்ளே ஒலித்துக் கொண்டேயிருக்க நான் துணிச்சலுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதுவே என்னைக் காப்பாற்றியது! மீண்டு வந்தேன்… இன்று என் சிவாவின் விழாவையும் பார்த்து விட்டேன்! இனி என்ன வேண்டும்? ”

என்று அவர் நெகிழ, கூட்டம் உச்சுக் கொட்டியபடி அமைதி காத்தது!

மீண்டும் பேசிய சிவா சொன்னான், ”எது எனக்கு நடந்ததோ, அதே இன்று வய நாட்டுச் சிறுவர்கள் பலருக்கு நடந்துள்ளது. எனக்கு இருந்தது போல் ஓர் அப்பாவின் அப்பா அவர்களுக்கு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. என்னால் முடிந்த சின்ன உதவி! இந்த 10 லட்ச ரூபாய் பணத்தை அவர்களுக்கு வழங்குகிறேன்! நீங்களும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்!”

பேசி விட்டுக் கீழே இறங்கினான்!

தொடர்ந்து மீண்டும் அரங்கமே அதிரக் கைதட்டல் தொடர்ந்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com