சிறுகதை – நேர்த்திக்கடன்!

ஓவியம்; அரஸ்
ஓவியம்; அரஸ்

-இரா. முருகன்

எம்.பி குவார்ட்டர்ஸ்.... மூலைத்தார் வேட்டியும் சுருட்டுமாக லானில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் சிவாஜியைப் பார்த்ததும் எழுந்து வந்தார்.

வாய் பேச மறுத்தது. என்னவோ பயம். 'இங்கிலீஷ்லே ரெண்டு வார்த்தை பேச முடியாம என்ன எம்.ஏ படிப்பு படிச்சுக் கிழிச்சே...' என்கிறதுபோல அவர் சுருட்டை எடுக்காமலேயே இவனைக் கூர்ந்து பார்க்க, காகிதத் துண்டை நீட்டினான்.

'அடய்க்கப்பென் எம்.பி. அவர் தொகுதிக்குப் போயிருக்கிறார் போலிருக்கிறதே'. வெள்ளைக்கார பாணி இங்கிலீஷ் நாட்டுச் சுருட்டுப் புகையோடு முகத்தில் அறைகிறது.

சிவாஜிக்கு அடைக்கப்பன் எம்.பியைப் பார்க்க வேண்டாம். அவர் சர்வண்ட் குவார்ட்டர்ஸுக்கு வழி தெரிந்தால்போதும். அங்கே ஒரு... ஐ வாண்ட் டு மீட் எ.... ‘எ'யா 'ஆன்' ஆ... ஓல்ட் ஜென்டில்மேன் ஹூஸ் நேம் இஸ் சாத்தப்பன்... 'இது இங்கிலீஷா' என்கிற பார்வை பதிலாகிறது.

தோளில் துணிப்பையோடு அருகில் வந்ததை ஓரக்கண்ணால் பார்த்தான்.

"யார் வேணும் தம்பி..." அப்பாடா... தமிழ் .

சுருட்டுக்காரரிடம் ஏதோ சொல்ல அவர்,  சிரித்தபடி இவன் தோளில் தட்டி விட்டுத் திரும்பப் போனார்.

"அவர் யார் தெரியுமா... கே.கே. மஜும்தார்.... வங்காளத்து எம்.பி... எதிர்க் கட்சி.. எப்பவும்.. பேச ஆரம்பிச்சா பிரதம மந்திரியே கூர்ந்து கவனிப்பாரு...."

நடந்துகொண்டே சொன்னார். இவர் யார்?

"சாத்தப்பச் செட்டியார்னு ஒருத்தரைப் பாக்க லெட்டர்..."

 ''நான்தான். சாவன்னாம்பாங்க இங்கே எல்லாரும்.."

சிவாஜி அவரை நிமிர்ந்து பார்த்தான். அறுபது வயதுக்கு மேல் தேறும். ஆறடி உயரம். லேசான கூன் முதுகு. பாதி வழுக்கைத் தலை. கிரேக்கச் சிற்பம்போல கூர்மையான மூக்கு. பைஜாமா. வார்செருப்பு.

எம்.பி. சொல்லியனுப்பிப் பார்க்க இவர் என்ன பெரிய ஆளா?

"இங்கிட்டு வா தம்பி... பேரு என்ன சொன்னே...சிவாசியா... நல்லா இரு. எந்த ஊரு?"

"நாட்டரசன்கோட்டை."

"ஏயப்பா... கண்ணாத்தா கோயில் இருக்கிற ஊராச்சே... பர்மாவுலே இருந்த நாள்தொட்டு போகணும்னு நினைக்கறது.. வருஷம்தான் போவுது..."

பர்மாக்காரர் டெல்லியில் என்ன செய்கிறார்?

"ஆச்சு முப்பது வருஷம்... ஆறு எம்.பி. பாத்தாச்சு. எல்லோருக்கும் நான்தான் குவார்ட்டர்ஸ் கவனிச்சுக்க, லெட்டர் போக்குவரத்தைக் கவனிச்சுக்க, வர்றவங்க போறவங்களைக் கவனிச்சுக்க..."

"அண்ணன் அடுத்த வாரம் வரதாச் சொன்னாப்பலே..." சிவாஜி தனக்கும் எம்.பியோடு கொஞ்சம் நெருக்கம் உண்டு என்று காட்டிக்கொண்டான்.

''பதினாலாந்தேதி இல்லே வராக... செஷனே பதினஞ்சு தேதிக்குத்தானே...
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேறே வருது. பார்ட்டி விப் இருக்கே... வராம முடியுமா..."

டெல்லியில் கல்தூணைத் தட்டினாலும் பார்லிமெண்ட் விவகாரம் பேசும்....

 "இதான் நீங்க இருக்கப்போற எடம்.... அங்கிட்டுத் தெரியறதுதான் நம்ப எம்.பியோட வீடு..."

பூட்டைத் திறந்தார். கொடியில் லுங்கியும், பனியனும் கண்ணில் பட்டன.

"செழியனும் ராசாமணியும் ஆபீஸ் போயிருக்காங்க... சாயந்திரம் ஆறு மணியாயிடும் வரதுக்கு...."

 "அவுக யாரு?"

''உன்னைய மாதிரித்தான். நம்ப பக்கத்துப் புள்ளைங்க... ரெண்டு வருஷமா இங்கேதான் இருப்பு...''

இந்தக் கிழவரோடு தனியே தங்க வேண்டியதில்லை. வயசுக்கு ஒத்த இன்னும் இரண்டு இளவட்டங்கள்... தமிழ் பேசுகிறவர்கள்...

 ஃபட்பட்டி ஆரிய சமாஜவீதியில் ஊர்ந்துகொண்டிருந்தது. சாயந்திரமானாலும் தகிக்கிற அனல் சூடு. குல்பி ஐஸ்கிரீம் விற்கிற கடைகளில் நிரம்பி வழிகிற கூட்டம். எலாஸ்டிக் ஜட்டியும், மாக்சியும் பரத்திய நடைபாதைகள். ஹெல்மெட்டும் பிரம்பு நாற்காலியும் வாங்கிப் போகிறவர்கள். எண்ணெயில் பொரியும் ஜிலேபி வாசனையோடு கரோல்பாக்.

வாகன இரைச்சலை மீறி செழியன் அடுத்தவாரம் நடக்கப் போகிற அக்கிரோ குரசோவா படவிழாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

இதையும் படியுங்கள்:
Hair Sunscreen: முடிக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமா?
ஓவியம்; அரஸ்

இரண்டே மாதத்தில், ஆயுசு பூராப் பழகிய மாதிரி அவனும், ராஜாமணியும் சிவாஜிக்கு நெருக்கமானார்கள்.

"ராஷமோன்னு ஒரு படம்... கதை என்னன்னா...”

"இந்த சந்திலே ஒரு தமிழ்க்காரர் மெஸ் நடத்தறார்..."

செழியனுக்குக் கலை,  இலக்கியம், கண்தான முகாம், பிலிம் பெஸ்டிவல், ராஜாமணிக்கு சாப்பாடு....

"சாவன்னாவையும் கூட்டி வந்திருக்கலாம்..." பட்பட்டியிலிருந்து ஒரு பஞ்சாபிக்கிழவி இறங்க உதவிக்கொண்டு செழியன் சொன்னான்.

சாத்தப்பச் செட்டியார் காலையில் ஆபீஸ் கிளம்புகிறபோது ஐம்பது ரூபாய் கேட்டார். சாயந்திரம் ஆள் கண்ணில் படவில்லை.

"அடுத்த வாரம் எம்.பி. சிம்லாவிலிருந்து வந்ததும் தரேன்...."

"ஏழு மணி ஆச்சுடா... நடராஜன் மெஸ்ஸிலே சாப்பிட்டுட்டுப் போக வேண்டியதுதான்..." செழியன் கடிகாரத்தைப் பார்த்தான்.

குருத்துவாராவுக்குச் சற்று முன்னால் இடப்புறம் திரும்ப, உள்ளே விரிகிற தெருவில் காய்கறிக்கடைகள். தமிழும் கன்னடமுமாக ஒரு வினோதமான கலவையில் பேசுகிற கடைக்காரர்கள். 'என்னம்மா வேணும்' என்ற கேள்விக்கு 'ஆதா கிலோ பிண்டி... ஏக் பாவ் டிண்டா' என்கிற மடிசார் மாமி...

சட்டென்று விளக்குப் போனது. இருட்டில் முட்டி மோதிப் போகிற ஜனக்கூட்டம். மெழுகுவர்த்திகள் பூசணிக்குவியலின் மேல் ஒளிவிட ஆரம்பித்தன.

"அங்கே பார்டா... நம்ப சாவன்னா..." ராஜாமணி காட்டிய திசையில் சாவன்னா யாரோ ஒரு கடைக்காரப் பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். முப்பது வயது காணும். நெற்றியில் திருநீறு பாதி இருட்டிலும் வெளீரெனத் தெரிந்தது.

"இந்த வயசிலும் கேர்ள் பிரண்டா... மச்சம்..." ராஜாமணி சிரித்தான். சாவன்னா பையிலிருந்து எடுத்த பணத்தை, அவள் வேண்டாம் வேண்டாம் என மறுக்க, கையில் வைத்து அழுத்திவிட்டு நடந்தார்.

"என் பணம்டா" என்றான் ராஜாமணி.

திரும்பியபோது குவார்ட்டர்ஸ் வாசலில் தரையில் உட்கார்ந்து சாவன்னா காலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார்.

"பர்மாவிலேன்னா கைகால் பிடிச்சுவிட எப்பவும் நாலுபேரு தயாரா இருப்பாங்க..."

என்னவோ முந்தாநாள்தான் அங்கிருந்து வந்ததுபோல....

''கரோல்பாக் பக்கம் ஆள் கிடைக்குமே" ராஜாமணி மெல்லச் சொன்னது அவர் காதில் விழவில்லை. செழியன் ராஜாமணியை முறைத்தான்.

"சாவன்னா பர்மாவிலே படம் எடுத்ததாக் கேள்விப்பட்டேனே..." சிவாஜி புதிதாக வாங்கிய ஷூவை அணிந்து நடைபயின்றபடி கேட்டான். லேசாகக் கடிக்கிற உணர்வு... சாவன்னாவிடம் எண்ணெய் கேட்டு வாங்கிப் போட்டுப் பார்க்கலாமா..."

''பர்மாவிலே இல்லே தம்பி... இங்கே வந்ததுக்கு அப்புறம்தான்..."

குழந்தைபோலச் சிரிக்கிற சாவன்னா...

''படம் என்னாச்சு?"

''கோவிந்தா... கோவிந்தா" ராஜாமணி படுத்துக்கொண்டே சொன்னான்.

செல்லுலாயிட் கனவுகளால் சீரழிந்த சாவன்னா...

"எல்லாம் போச்சு தம்பி... இன்னமும் ஒரே ஒரு ஆசைதான்... முடிஞ்சா நிம்மதியாக் கட்டையைச் சாச்சிடலாம்... சாலாச்சிக்காக வேண்டிக்கிட்டேன்.... உங்க ஊருக்குத்தான்... கண்மலர் காணிக்கை தரேன்னு..."

"யாரு சாவன்னா சாலாச்சி?''

"மக... பதினஞ்சு வயசுலே பர்மாவிலே வைசூரியிலே போய்ட்டா.... அடுத்த வருசமே ஆச்சியும்..."

இருட்டில் அவர் விசும்புகிற சப்தம்.

"அவளுக்கு நாலு வயசா இருக்கும்போது கண் நோவு வந்தது. கண்ணாத்தாளுக்கு நேர்ந்துக்கிட்டு சரியாப் போச்சு. நேர்த்திக் கடனை இன்னமும்தான் கழிக்கறேன்... சாலாச்சி போனா என்ன... கண்ணும் முழியும் அவ போறவரைக்கும் நல்லா வச்சிருந்தது தெய்வம்தானே... கடன் இன்னும் நிக்குது சிவாஜி.'"

அவர் குரல் மெல்லத் தேய, சிவாஜி தூக்கம் கலைந்து இருட்டில் வெறித்துக்கொண்டிருந்தான்.

இதையும் படியுங்கள்:
சிரிப்பென்னும் அருமருந்து!
ஓவியம்; அரஸ்

டிசம்பர் குளிரில் டில்லி உறைந்துகொண்டிருந்தது. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பதினான்கு மணிநேரம் லேட். ஆட்டோ யாரும் வரத் தயாரில்லை என்று சொல்லிவிட, நல்லவேளையாக மினிபஸ் கிடைத்தது. தீஸ்ஜனவரி தெரு பக்கம் சிவாஜி இறங்கிக்கொண்டான். நடக்க வேண்டும்போல கால் நமநமத்தது.

வழக்கம்போல எம்.பி. குவார்ட்டர்ஸ் அமைதியில் மூழ்கி இருந்தது. லோக்சபை கலைக்கப்பட்டு அடுத்த தேர்தலுக்காக நாடே தயாராகிக்கொண்டு இருக்கிறது. அடைக்கப்பன் எம்.பிக்கு மறுபடி டிக்கட் கிடைத்து, திரும்பவும் ஜெயித்து... தங்க வேறு இடம் பார்க்க வேண்டி இருக்குமா?

கதவு பூட்டி இருந்தது. செழியனும் ராஜாமணியும் எங்கே? வருவதாக ஊரிலிருந்து எழுதின கடிதம் கிடைத்திருக்காதோ? சாவன்னா எங்கே போனார்?

தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்தான். செழியனின் ஸ்வெட்டரும், ராஜாமணியின் புல்-ஓவரும் ஸ்வட்டரும் தாறுமாறாக இரைந்து கிடந்தன. தரையெல்லாம் குப்பையும் கூளமும்.

பெட்டியைக் கட்டிலில் வைத்தான். அம்மா தெக்கத்தி மிட்டாயும் இன்னும் ஏதேதோ எண்ணெய்ப் பலகாரமும் கொடுத்து அனுப்பியிருக்கிறாள்.

சாவன்னாவுக்காக கண்ணாத்தா கோயில் பிரசாதம் கொண்டு வந்து இருக்கிறான்.

ராத்திரி பதினொரு மணிக்கு காலிங்பெல் சப்தம். செழியனும் ராஜாமணியும். களைத்த கண்கள்.

"எப்ப வந்தே சிவாஜி?" ராஜாமணி குரலில் உயிர் இல்லை.

செழியன் சாக்ஸோடு நாடாக்கட்டிலில் தொப்பென்று விழுந்தான். முனையில் வைத்திருந்த லெதர் பை சரிந்து பலகாரம் உருண்டது.

"அம்மா கொடுத்து விட்டுச்சு... நாளைக்கு சாப்பிடலாம்... சாவன்னாவுக்கு தனியா வாசனைப் புகையிலை கூட வாங்கி யாந்திருக்கேன்...."

செழியன் ராஜாமணி முகத்தைப் பார்த்தான் .

''சாவன்னா போய்ச் சேர்ந்தாச்சு சிவாஜி. இன்னியோட நாலுநாள் ஆச்சு..."

ராஜாமணி மெல்லச் சொன்னான்.

''இவன் ஆபிஸுக்குப் போய்ட்டான். நானும் கிளம்பிட்டு இருந்தேன் . சாவன்னா திடீர்னு மாரைப் பிடிச்சுக்கிட்டு உக்காந்தாரு... வென்னீர் வச்சுத்தான்னாரு.. கொண்டு வந்து கொடுத்தேன்... ஒரு உதவி செய்யணும்னாரு.. சொன்னதும் உசிரு போச்சு...''

செழியன் கண்கள் நிறைந்தன. சிவாஜிக்கு வாய்விட்டு அழ வேண்டும் போல... ஒரு சமவயது சிநேகிதனை இழந்த துக்கம்...

"நாட்டரசன்கோட்டையிலே வெள்ளியிலே கண்மலர் நேர்ச்சை தரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நானாவது கொடுத்திருக்கலாம்.... தோணவே இல்லை. அம்புட்டு தூரம் போய்ட்டு சும்மா வந்திருக்கேன்..."

சிவாஜிக்குத் தன் பேரிலேயே வெறுப்பு வந்தது.

"எல்லா நேர்த்திக் கடனும் கழிச்சாச்சு சிவாஜி. காலையிலே கூட வா...."

காலையில் ஐந்து மணிக்கே அவர்கள் புறப்பட்டார்கள். பனி. மூட்டத்தில் இந்தியா கேட் வழியாக வேகமாகப் போகிற ஆட்டோ. சிவாஜி ஸ்வெட்டரைக் காதுக்குப் பின்னால் உயர்த்திக்கொண்டான்.

"இறங்கு சிவாஜி... இது லயன்ஸ் கண் ஆஸ்பத்திரி..."

வாசலில் நின்ற பெண் இவர்களைப் பார்த்து ஓடி வந்தாள்.

"அண்ணா... பத்து மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னாங்க...''

கரோல்பாக் கறிகாய்க்கடைப் பெண்.

"பிள்ளை எங்கே?" செழியன் கேட்டான்.

"உள்ளே இருக்கானுங்க..."

கட்டிலில் படுத்திருந்த சின்னப் பையனின் கண்களைச் சுற்றிக் கட்டுத்துணி.

நீ எம்மவ சாலாச்சிபோல இருக்கே... அதான் உன்பேர்லே வாஞ்சைம் பாரு... உசிரு போற நேரத்துலேகூட என்னை நினைச்சுக்கிட்டு... உங்க மூலம் என் பிள்ளைக்குக் கண்ணு கொடுத்தாரே.... தெய்வம் எங்க அய்யா...." செழியனைக் கடந்து விழிகள் நிலைக்க, கும்பிடக் குவித்த கைகள்.

சின்னப் பையனை மெல்லத் தொட்டாள்.

"உன் மாமன்மாரெல்லாம் உன்னைப் பாக்க வந்திருக்காங்கடா... ஐயாவோட கண்ணாலே முதல்லே அவங்களைத்தான் நீ பாக்கணும்... அஞ்சு வயசுலே கண்ணைப் பறிச்சுக்கிட்ட தெய்வத்தைக்கூட அப்புறம் பாத்துக்கலாம்....”

"கார்னியல் டிரான்ஸ்பிளாண்ட்... சாவன்னா போய் ரெண்டு மணி நேரத்துலே எடுத்து இவனுக்கு வச்சது..." செழியன் மெல்லச் சொன்னான்.

சிவாஜி கட்டில் பக்கம் குனிந்து கிசுகிசுக்கிற குரலில் கேட்டான்.

"பேரு என்ன தம்பி?"

"கண்ணப்பனுங்க...."

பின்குறிப்பு:-

கல்கி 10  அக்டோபர் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com