சிறுகதை - புதிய கீதங்கள்!

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ

-மதுமிதா

ப்பா சற்று அதட்டலாகவே கேட்டார்.

"முடிவா என்னதான் சொல்றே மீரா?"

அவர் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

''நீ சின்னப்பொண்ணு இல்ல மீரா...  நல்லா யோசிச்சுப் பாரு... நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். எவ்வளவு நாளைக்கு இப்படியே இருந்துட முடியும்..?"

"நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன்... நீங்களே உங்க பொண்ணைப் புரிஞ்சுக்கலேன்னா எப்படி...?"

"என் பொண்ணுங்கறதாலதான் நான் சொல்றேன்... ஆம்பிளை கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பான். நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கணும். உன் அம்மா எவ்வளவு பொறுமைசாலி... அவளுக்குப் பொண்ணாப் பொறந்துட்டு இப்படி அட்டகாசம் பண்றியே...!"

மீராவுக்கு எரிச்சல் வந்தது.

அப்பாவும் அடிப்படையில் ஓர் ஆம்பிளைதான். பெண்களின் அவஸ்தை இவருக்கு எங்கே புரியப் போகிறது?

"நல்லா யோசி மீரா...!''

ப்ச்... திரும்பத் திரு திரும்ப அதையே சொல்ல வேண்டாம். நான் நல்லா யோசிச்சுத்தான் முடிவெடுத்துருக்கேன். ஒரு வருஷமில்ல, ரெண்டு வருஷமில்லை... எட்டு வருஷம்! உங்க அருமை மாப்பிள்ளைகிட்ட அவ்வளவு அவஸ்தைப் பட்டுருக்கேன்! எவ்ளோ ஹிம்சை... எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கறது?"

மீராவின் கண்களில் நீர் திரண்டது.

இதையும் படியுங்கள்:
பகீர் கிளப்பும் கடை இட்லி மாவு!
ஓவியம்; கரோ

ப்பொழுது நினைத்தால்கூட உடம்பு நடுங்குகிறது.

ராஜசேகர் ஒரு மிருகம்! எவ்வளவு அவமானங்கள்; எவ்வளவு ஆபாசங்கள்!

அப்பாவாயிருந்தாலும் அவரும் ஓர் ஆண். ஓர் ஆணிடம் சொல்ல முடியாத ஆபாச அவமானங்கள்.

அம்மாவுக்குப் புரிந்தது.

இருப்பினும் அம்மா அப்பாவின் நிழல்.

அப்பாவை மீற மாட்டாள்.

"புருஷனை டைவர்ஸ் பண்ணிட்டு என்ன பண்ணப் போறே?" யோசித்தாள்.

முதலில் இவனிடமிருந்து தப்பிக்க வேண்டும். அடுத்த நடவடிக்கை அடுத்த நிகழ்ச்சி.

"வேலை பாக்குற திமிர்தானே இப்படி பண்ணச் சொல்லுது!"

அப்பா குரூரமாய்க் கேட்டார்.

"இந்த வேலை புதுசா வரலை - எட்டு வருஷமாப் பாத்துட்டுத்தான் இருக்கேன். என்னைக்கோ புருஷனைப் பிரிஞ்சு வந்துருக்கலாம். ஆனால் வரலை! ரொம்ப யோசித்துத்தான் இப்ப வெளில வந்துருக்கேன். ஏம்பா,உங்க பொண்ணு நான். என்னோட நல்லது உங்களுக்கு முக்கியமாப்படலையா...?"

"எதுடி நல்லது? இப்படி புருஷனை விட்டுட்டு வந்துட்டா, ஊர்ல நாலு பேர் என் மூஞ்சிலதான்டி காறித் துப்புவான்!''

"யாருப்பா அந்த நாலு பேரு?  பாதி ராத்திரினு பாக்காம கழுத்தைப் புடிச்சி  புருஷன் வெளில தள்ளினப்ப எங்கப்பா போயிருந்தாங்க அந்த நாலு பேரு? உடம்பு முழுக்க பெல்ட்டால வீறினானே,  அப்ப எங்க போனாங்க நீங்க சொல்ற நாலு பேரும்!"

''ஒத்துக்கறேன்... அவன் அயோக்கியன்தான்... ஆனா ஒரு பொம்பிளை நினைச்சா எது வேணா செய்யலாம்... அவனை நல்லவனா மாத்தலாம். உனக்கு யோக்கியதை இல்லே;  நாய்க்குட்டி மாதிரி உன்னை வளைய வர்றாப்பல நீ பண்ணியிருக்கணும்; அதுக்கு யோக்கியதை இல்லே...!''

யோக்கியதை இருந்தது.

எவ்வளவோ முயற்சிகள்.

ஆனால் ராஜசேகர் அடிப்படையில் ஒரு வக்ர புத்திக்காரன். இவளின் அத்தனை முயற்சிகளும் அவனை மேலும் முரடனாகவே ஆக்கின.

நிறைய விஷயங்கள் அப்பாவுக்குத் தெரியாது. தெரியப்படுத்த யத்தனித்தபோதெல்லாம் அப்பா நழுவிக்கொண்டார்.

மகளாயிருக்கட்டும் அல்லது மனைவியாக இருக்கட்டும். பெண் எப்போதும் பெண்தான்!

"அப்பா... நான் முடிவாச் சொல்றேன்... டைவர்ஸ் வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன். உங்களுக்கு அவமானம்னு நினைச்சதாலதான் நான் தனியா வீடு பாத்துட்டு இருக்கேன். தயவு செய்து போங்கப்பா... நீங்களும் என்னை ஹிம்சைப் படுத்தாதீங்க...!"

மீரா கையெடுத்துக் கும்பிட்டாள். அப்பா அவளையே முறைத்துப் பார்த்தார்.

பின் சடக்கென எழுந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்:
எப்போதெல்லாம் நீங்கள் அமைதிக்காக்க வேண்டும் தெரியுமா?
ஓவியம்; கரோ

மேஜையில் தலை சாய்த்திருந்தவளைக் கயல்விழி மெலிதாகத் தட்டினாள்.

"என்ன மீரா? ஃபீவரா? ரொம்ப டல்லாயிருக்கே...?"

"இல்லப்பா... அப்பா வந்து கத்திட்டுப் போனாரு...!"

"நல்ல மனுஷனடி உன் அப்பா! இந்த நேரத்துல உனக்கு அனுசரணையா இருக்க வேண்டியவரு. இப்படி தொந்தரவு பண்ணிட்டு இருக்கார்!”

''எனக்கு வாச்ச ரெண்டு ஆம்பிளையும் இப்படித்தான் இருக்கானுங்க!''

"சரி எழுந்து முகம் கழுவிக்கொள்..!"

முகம் கழுவினாள். சற்று தென்பு வந்தது.

அவள் முன் அலுவலக ஃபைல்கள் குவிந்திருந்தன.

மெல்ல வேலையில் மூழ்கினாள்.

வாசலில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்ததும் இவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

''என்னம்மா... இங்கே ஏன் வந்தே...!"

அதற்குள் வீட்டுக்கார அம்மாள் வெளியே வந்தாள்.

''மீரா, உங்க அம்மாவாமே! எவ்வளவோ சொல்லிட்டேன். உள்ளே வந்து உக்காரவே மாட்டேங்கறா... அப்பலேர்ந்து திண்ணைலேயே நின்னுட்டு இருக்கா... கதவைத்திறந்து உள்ளே கூப்பிட்டுக்கிட்டுப் போ...!"

மீரா அவசரமாய் மாடியேறினாள்.

அம்மா ஒரு பெரிய சூட்கேஸை உள்ளே கொண்டுவந்து வைத்தாள்.

மீராவுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தானிருந்தது.

"என்ன இது பொட்டி?”

"என்னதுதான். நான் உன்னோடேயே இருக்கப் போறேன்டி!"

"என்னது! என்னோடயா?  காலைல அப்பா ஆபீசுக்கு வந்து குதிகுதின்னு குதிச்சுட்டுப் போனாரு...?"

"தெரியும். வந்து வீட்லயும் கோவமாக் கத்தினாரு! அதுக்கப்புறம் நான் எடுத்த முடிவுதான் இது!''

"வேண்டாம்மா! எனக்காக அப்பாவைப் பகைச்சுக்காதே...!"

"இங்க பாரு மீரா... இந்த நேரத்துலதான் நான் உன் பக்கத்துல இருக்கணும்... நீ உடைஞ்சு போயிடக் கூடாது. உன்னை மாதிரி நல்லா யோசிச்சுத்தான் நானும் இந்த முடிவை எடுத்திருக்கேன். நீ எனக்குச் சோறு போடுவே யில்லே?"

"என்னம்மா அப்படி கேட்டுட்டே...!" என்ற மீரா அம்மாவுடைய கையைப் பற்றி உள்அறைக்கு அழைத்துப் போனாள்.

பின்குறிப்பு:-

கல்கி 24  ஜனவரி  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com