
-கிருஷ்ணா
'இன்று முதல் அவசர ஓட்டமில்லை!’ காலையில் கண் விழித்ததும் மனதில் எழுந்த முதல் எண்ணம் நினைக்கவே சுகமாயிருந்தது.
கண் விழித்ததுமே வந்து ஒட்டிக்கொள்ளும் பரபரப்பை அப்புறப்படுத்தி சோம்பல் முறித்தேன்.
நேற்றோடு அலுவலகத்தில் மாலை போட்டு மகாத்மா, மாவீரன் என்று கூசாமல் புளுகி சென்றுவா மகனே சென்றுவா என்று அனுப்பி விட்டார்கள்.
காயத்ரி சமையலறையில் மிக்சியை ஓட்டுவது காதில் விழுந்தது. பாவம், அவளுக்குத்தான் ரிடையர்மெண்டே கிடையாது.
மகன் இருக்கிறான், மகள் இருக்கிறாள். வேலைக்கும் காலேஜுக்கும் ஓடும் அவர்களுக்காக இவள் சுழன்றே ஆட வேண்டும்.
“என்னப்பா, ரிடையர்டு லைஃபா? என்ஜாய்!" என்றான் சுந்தர். பாதி ஷேவிங்கில் இருந்தான்.
‘டேப் ரிகார்டரில் ஏதாவது பக்தி பாடலைப் போட்டால் என்ன?’
சிந்தனையைச் செயல்படுத்தினேன்.
"கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே, உனை மறவேன்."
டி.எம்.எஸ். குரல் நின்றுவிட்டதே, ஏன்?
டூத் பிரஷ்ஷை பிடித்தபடி மீண்டும் ஹாலுக்கு வந்தேன்.
''காலையிலேயே இதை கத்த விடாதீங்க. ஒரு வேலையும் ஓடாது. ஏய் ரேணு, குக்கரில் வெயிட் போடு."
காயத்ரியின் அதட்டலில் சுருங்கிப் போனேன். பிறகு, மனசு சமாதானம் ஆனது. பரவாயில்லை. பாட்டு இல்லாவிட்டால் என்ன?
''காயத்ரி, காப்பி வேணுமே."
''போச்சுடா ஏன் லேட்டாய் எழுந்தீங்க. நாங்க வழக்கம் போல அஞ்சரைக்கு எழுந்து, கலந்து குடிச்சாச்சு. குக்கரை இறக்கினதும் தரேன்."
பல் தேய்த்தவுடன், காப்பியின் கசப்பை உணர்ந்தே பழக்கப்பட்ட நாக்கு கெஞ்சியது. இல்லாவிட்டால் தலைவலி வந்துவிடும் எனக்கு.
ஒரு காப்பிக்குக் கூட கெஞ்ச வேண்டுமா?
பொருமிய மனதை, ஹிண்டுவில் திருப்ப முயன்றேன். அடம் செய்தது நாக்கு.
"பற்றாக்குறை விகிதம் பாதாளத்தை நோக்கிப் போகுதே இப்படி."
மனசு பதைக்க படிக்கும்போது, பேப்பர் பிடுங்கப்பட்டது.
"அப்பா, இது என் நேரம். காலையில் ஆறிலிருந்து ஆறரை வரைதானே உங்க டைம்."
ரேணுகா பிடுங்கிக் கொண்டாள் தினசரியை.
"மோனிகா செலஸ் ஜெயிப்பாளா? அட, கிரிக்கெட் டீமில் தமிழ்நாட்டு ப்ளேயர்கூட செலக்ட் பண்ணியிருக்காங்களே! ஆச்சரியம்தான்."
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வாசலுக்குப் போனேன்.
"வெந்நீர் ரெடி. போய் குளிங்க."
கறிகாய்க்காரனிடம் பேரம் முடிந்து, காய்கறிக் கூடையுடன் வந்தாள் காயத்ரி.
"என்ன அவசரம்? கொஞ்ச நேரம் போகட்டுமே."
"வெந்நீர் தயாராயிருக்கே. மறுபடியும் கெய்சர் போட்டு.. அநாவசிய மின்சாரம். முதல்ல குளிங்க."
"காப்பி குடிக்கலியே."
"குளிச்சுட்டுத்தான் குடிங்களேன்."
பாத்ரூமுக்குள் புகுந்தேன். வேறு வழியில்லை.
"நீங்களும் டிபன் சாப்பிட்டுடுங்களேன்."
"அப்புறமாய் காயத்ரி! ஆபீஸ் போறப்பதான் டிபனிலே கண் விழிக்கற டூட்டி. இப்ப என்ன?"
"நான் ரேஷன் கடை வரைக்கும் போகணும்."
"பரவாயில்லே. நானே போட்டு சாப்பிட்டுக்கறேன்."
எரிச்சலுடன் பார்த்தாள் காயத்ரி.
"நீங்க போட்டுக்கற லட்சணம் தெரியாதா? ஒழுங்காய் சாப்பிட்டுக்க மாட்டீங்க. உட்காருங்க."
அவள் சிபாரிசுக்கு சுந்தர் வந்தான்.
"குழந்தை மாதிரி என்னப்பா முரண்டு. அம்மா சொல்றதைத்தான் கேளுங்களேன்."
தின்று தொலைத்தேன். நான் கை கழுவும் முன்னே மூவரும் காணாமல் போய்விட்டனர். டேபிளில் சூடாய் காப்பி. இரண்டாம் டோஸ் டிகாக்ஷனா, ருசியையே காணோம். கழனித் தண்ணீர்!
அடுத்து என்ன செய்வது? தினசரியைப் புரட்ட போரடித்தது.
வாசலுக்கும், கொல்லைக்குமாய் அலைந்தேன். தோட்டத்தைச் சுற்றி வந்தேன்.
"மெழுகின இடம் பூரா திட்டுத் திட்டாய் காலடி உங்க வேலையா இது, ப்ச்"
என் வீட்டில் நான் நடக்கக் கூட சுதந்திரமில்லையா?
குமைந்து போனேன்.
கேபிள் டீ.வியை 'ஆன்' செய்தேன். வழக்கமான ஆட்டம். தாவணி, சேலையெல்லாம் சினிமாவில் அணியத் தடை செய்து விட்டார்களா என்ன?
அடுத்த சேனல் மாற்றினேன்.
"எனக்குத் தலைவலி வெயிலில் போயிட்டு வந்ததுல ரெண்டு பொட்டும் தெறிக்குது. டீ.வி சனியனை அணைச்சுடுங்களேன்."
ஹாலில், 'பள்ளி கொண்டவளை' கோபமாய் பார்த்தேன்.
யாரை சனியன் என்கிறாள் என்று குழப்பமாய் இருந்தது.
"நீ போய் ரூமில் படுத்துக்கயேன் காயத்ரி/
"கட்டிலிலா? விழுப்பாயிடும் மெத்தையிலே படுத்தா."
அமிர்தாஞ்சனை தடவிக் கொண்டபடி கண்ணை மூடினாள்.
டீ.வியை மூடினேன். செய்வதறியாமல் திண்டாடினேன்.
முதன்முதலாய் ரிடையாடு வாழ்க்கை மீது பயம் வந்தது.
'ஹா, நான் எதுக்கு வேற எங்கேயாவது வேலைக்குப் போகணும் மறுபடியும்? சொந்த வீடு, பாங்க் பாலன்ஸ், பென்ஷன்! நிம்மதியாய், வாழ்க்கையோடான ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்கப் போறேன்.'
பொறாமையாய்ப் பார்த்த ஆபிஸ் தோழர்களிடம் ஜம்பம் அடித்தது ஞாபகம் வந்தது.
கொஞ்ச நேரம் தூங்குங்களேன். குட்டி போட்ட பூனை மாதிரி என்ன நடை இது?" தூக்கம் வராமல் வெறுமனே படுத்திருப்பது பெரிய கொடுமை என்பதை உணர முடிந்தது.
சாயந்திரம் ஆனதும் நாலு கால் பாய்ச்சலில் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
மூச்சு முட்டும் அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட சுதந்திரம்.
காலை கண்விழித்ததும் ஆபீஸ் கிளம்பும் பரபரப்பு, பிறகு ஆபீஸ் கலகலப்பு, மாலையில் பூங்காவில் நண்பர்களுடன் ஒரு மணி நேர அரட்டை, வீடு திரும்பி, சாப்பிட்டு, கொஞ்ச நேரம் டீ.வி.யில் மூழ்கி, தூக்கம்.
இதுதான் எனக்குச் சரிப்பட்டு வரும். வீட்டில் எனக்குச் சுதந்திரமேயில்லை. அது சிறை. காயத்ரிதான் வார்டன்.
"என்னப்பா எப்படிப் போச்சு பொழுது?"
"ஐயோ, போர்! ஏதாவது ஒரு வேலை தேடணும். சம்பளம் முக்கியமில்லை!" என்றேன், பூங்கா நண்பரிடம்.
"கவலைப்படாதே! நாளைக்கு எங்க சிட் பஃண்டுக்கு வா. அறுநூறு ரூபா சம்பளம். கணக்கெழுதணும். பரவாயில்லையா?"
"தாராளமாய்" என்றேன் உற்சாகமாய். சம்பளமே தராவிட்டாலும் பரவாயில்லை.
பழைய உல்லாசம் மனத்தில் தொற்றிக்கொள்ள வீடு திரும்பினேன்.
"நாளைமுதல் நான் மறுபடியும் வேலைக்குப் போறேன்” என்றேன்.
''எதுக்கு?"
காயத்ரியிடம் எப்படிச் சொல்ல? உண்மையான காரணம் சொன்னால் பொல்லாப்பு!
''அது... போரடிக்குது வீட்டுல."
''அதுதான் காரணமா? இல்லை, புது செக்ஷனில், புது ஆபீசர் கீழே வேலை பார்க்கற மாதிரி திண்டாட்டமாய் இருக்கா?'' என்றாள் அமைதியாய்.
கள்ளி! கண்டு பிடித்துவிட்டாளே!
"சட்டுனு மாற்றத்தை ஏத்துக்க முடியாதுதான் மனசளவில். நாலு வருஷம் முன்னே புது செக்ஷனுக்கு உங்களை மாத்தினப்ப இப்படித்தானே தடுமாறுனீங்க. அப்புறம் பழகிப் போகலையா? அது மாதிரிதான் இதுவும்" என்றாள் புன்னகையுடன்.
"அது வந்து..."
''புரியுது. ஆபீஸ் வேற வீடு வேறன்னு சொல்லப்போறீங்க. எல்லாம் ஒண்ணுதாங்க. உங்க ஈடுபாடுதான் எங்கேயும் முக்கியம். வீட்டிலே உங்களை ஈடுபடுத்திக்குங்க. செடிக்கு தண்ணி விடலாம். எனக்குக் காய்கறி நறுக்கித் தரலாம். ரேஷன் கடைக்குப் போகலாம். ஏன், பேப்பரில் படிச்சதை எனக்குச் சொல்லலாமே? இங்கிலீஷ் படிக்கத் தெரியாதே எனக்கு. ஒத்த வயசுல, விஷயங்களைப் பகிர்ந்துக்க, எனக்கும் வேற யாரு இருக்கா?''
அவள் பேச்சிலிருந்த நியாயம் என்னை உருக்கிவிட்டது. "சரியா, நான் சொல்றது? சரி, சாப்பிட வாங்க..."
''நீ குழம்பு, ரசத்தை எடுத்த வை. காயத்ரி. நான் தட்டை எடுத்துட்டு வரேன்... ஊறுகாய் ஃப்ரிட்ஜிலதானே இருக்கு.''
செயலில் இறங்கிவிட்டேன்!
பின்குறிப்பு:-
கல்கி 16 ஜூன் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்