
ராமசாமி தன் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒன்று போலத்தான் வளர்த்தார். ஆனால் அவர்கள்தான் ஒன்று போல வளரவில்லை. மூத்தவர்கள் இருவரும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்ந்து விட்டார்கள். மூன்றாவது பையன் மட்டும் எவ்வளவு உற்சாகப் படுத்தினாலும் எதிலும் சிரத்தை காட்டவில்லை. படிப்பிலும் சரி, மற்ற விஷயங்களிலும் சரி, எல்லாவற்றிலுமே ரொம்ப ஸ்லோ. அவன் பிறந்ததே வேடிக்கைதான்!
ராமசாமிக்குப் பெண் குழந்தைகள் மீது அலாதிப் பிரியம். விபரம் புரிய ஆரம்பித்ததிலிருந்தே தனக்குப் பிறகும் பெண் குழந்தை எப்படி இருக்குமென்று கனவில் மிதப்பார். அதற்கு மூல காரணம் அவரின் தாய் என்றே கூற வேண்டும். எத்தனை ஆண் குழந்தை பிறந்தாலும் நாம கண்ணை மூடினபிறகு விழுந்தடித்து அழ ஒரு பெண் குழந்தை வேண்டுமென்பார் அவர். அது ராமசாமியின் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டது. அதனால்தான் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகும்... அவர் மனைவி மூன்றாவது கர்ப்பத்தை மறுத்தபோதும்... பிடிவாதமாக மூன்றாவது குழந்தை வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார். மூன்றாவது குழந்தை பெண்தான் என்று ஏகமாக நம்பினார். 'ஆண்...பெண் பிறப்பதெல்லாம் மனிதர்கள் கையிலா இருக்கிறது? மகேசன் அல்லவா தீர்மானிக்கிறார்!'
ராமசாமியின் ஆசைக்கு எதிராக மூன்றாவது குழந்தையும் ஆணாகவே பிறக்க ராமசாமி அதிர்ந்து போனார். அவர் அதிர்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. மூன்றாவது குழந்தை பிறந்த மூன்றாம் நாளே எதிர்பாராத விதமாக அவர் மனைவி இறந்து போக... குடும்பத்தின் முழுப் பொறுப்பும் அவர் தலையில் இறங்கியது. எதற்கோ ஆசைப்பட்டு எதையோ அடைந்ததைப்போல, அவர் தன் விதியை நொந்தபடி வினையாற்ற முடிவு செய்தார்.
- அரசாங்க உத்தியோகம் - நிலையான வருமானம் - கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வயதான தாய் - சஞ்சலப்படாத மனசு... இவையெல்லாம் இருந்ததனால் வாழ்க்கைச் சக்கரம் சங்கடமின்றி சுழன்றது. தந்தைமட்டுமல்லாது மூன்று குழந்தைகளுக்கும் தாயுமாக இருந்து கண்ணுங்கருத்துமாக அவர்களை வளர்த்தார். நண்பர்கள் மத்தியில் தாயுமானவர் ஆனார். நெருங்கிய நண்பர்கள் சிலர் அவருக்காக வருத்தப்பட்டு, அவர்கள் ஆதங்கத்தை அவரிடம் வெளிப்படையாகவே தெரிவிக்கும்போது, மிகவும் பண்பட்டவராக அவர் கூறுவார்... 'என்னப்பா நீங்க!எனக்குப் பிறந்திருந்தா கூட ஒரு மகள்தான் கெடைச்சிருப்பா. இப்ப எனக்கு மூணு மகள்கள். என்ன ஒரு சின்ன பிரச்னை? பையன்களுக்குக் கல்யாண வயசு வர்ற வரைக்கும் காத்திருக்கணும். அப்புறந்தான் அந்த மகள்கள் மருமகள்கங்கற பேர்ல என் வீட்டுக்கு வருவாங்க. ம்! எல்லாத்துக்கும் கொடுத்து வெச்சிருக்கணும்.' அப்படி அவர் கூறுகையில் பெண் வைத்திருக்கிற நண்பர்களெல்லாம், 'பேசாம நம்ம பெண்ணை இவர் பையனுக்கே கட்டி வெச்சிட்டா... பிரச்னையே இல்லாம அதுங்க வாழ்க்கை கழிஞ்சிடுமே!' என்று ஆசைப்படுவார்கள்.
ஆனால், அதற்கும் ஒரு முடிவு செய்து வைத்திருந்தார். 'எந்தக் காரணம் கொண்டும் ரத்த சொந்தத்திலோ அல்லது தெரிந்தவர்கள்... நண்பர்கள்... பழகியவர்கள் வீடுகளிலோ சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை' என்பதில் உறுதியாக இருந்தார்!
அதற்குக் காரணமும் உண்டு. அவரின் நெருங்கிய அலுவலக நண்பர் தன் இரண்டு பெண் குழந்தைகளையும், அக்கா மற்றும் தங்கச்சி பையன்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர் பட்ட பாடு இருக்கிறதே; நரக வேதனையைத் தான் அனுபவித்தார். அவர் பட்ட கஷ்டத்தில் பாதியை, நெருங்கிய நண்பர் என்ற முறையில் ராமசாமியும் அனுபவித்ததாலேயே இந்த முடிவை எடுத்தார்!
மணல் கடிகாரமோ... க்வார்ட்ஸ் கடிகாரமோ... நேரம் என்னவோ எப்பொழுதும் ஒரு போலத்தான் கழிகிறது. விஞ்ஞானம், சாதனங்களில் வேண்டுமானால் புதுமையைப் புகுத்தியிருக்கலாம். காலம் கழிவதில் அல்ல. அப்பொழுதும்... இப்பொழுதும்... ஏன்? எப்பொழுதுமே ஒரு நாளைக்கு 24 மணி நேரந்தான்! அதில், ராமசாமியைப் போல் உழைப்பவர்கள் வெற்றி பெறுவதும், சோம்பேறிகள் தோற்றுப் போவதும் சகஜந்தானே?
மூத்தவன், எஞ்சினியர் ஆகிக் கைநிறையச் சம்பாதிக்க ஆரம்பித்ததும், அவனுக்குத் தகுந்தாற்போல் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்தை முடித்து வைத்தார். அந்தப் பெண்ணும் எம்.பி.ஏ., முடித்திருந்ததனால், இருவரும் சம்பாதித்து, வீடு... கார்... என்று நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.
இரண்டாமவன், கம்ப்யூட்டர் படித்ததனால் அவன் வாழ்வும் சிரமமமின்றிக் கழிகிறது. அவன் மனைவி பட்டதாரி என்றாலும், அவளின் பெற்றோருக்கு அவள் ஒரே பெண் என்பதால், வேலைக்கெல்லாம் செல்லவில்லை. நகரின் முக்கியப் பகுதியில் அவர்கள் வீடு என்பதால், வீடு கட்டும் தொல்லை அவனுக்கு இல்லாமலே சொந்த வீடு கிடைத்துப் போனதால், அவன் வாழ்வும் திருப்திகரமாகவே போகிறது.
மூன்றாவது பையன்... மூன்றாவது நாளே தாயை விழுங்கியவன்... பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவன்... எவ்வளவோ செல்லமாக வளர்த்தும்... எதிர்பார்த்தபடி தேறவில்லை. படிப்பு அவனுக்கு எட்டிக் காயாகக் கசந்தது. +2 வுக்கு மேல், அவனுக்கு அதிர்ஷ்டமில்லாமல் போனது. அதற்குள்ளாகவே பல சறுக்கல்கள். நண்பர்கள் உதவியால், அவனுக்கு ஒரு சூப்பர் மார்க்கட்டில் சூபர்வைசர் வேலையை மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்து கொடுத்தார் ராமசாமி.
படிப்பில்தான் அவன் பின் தங்கியிருந்தானேயொழிய பாக்கி விஷயங்களில் அவன் சுறுசுறுப்பு. ஆறே மாதத்தில், அங்கு வேலை பார்த்த சேல்ஸ் கேர்லைக் கைப் பிடித்தான். ராமசாமி தன் ஆற்றாமையை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவன் செய்கைகளை ஏற்றுக் கொண்டார்.
மூன்று பிள்ளைகளும் குடும்பமாகிப் போனதில் அவருக்கு சந்தோஷம் என்றாலும், மூன்றாமவன் மீது மட்டும் அவருக்குப் பிரியமும் வாஞ்சையும் அதிகம். சிறு வயதுமுதலே தாயில்லாமல் வளர்ந்தவன். அவர் எதிர்பார்த்தபடி முன்னேறாதவன். பொருளாதாரத்தில் ரொம்பவும் பின் தங்கியவன்.
அண்ணன்கள் இருவரும் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும், தாங்கள் சொன்ன எதையும் தம்பி கேட்பதில்லை என்ற காரணத்தால் அவர்கள் இருவரும் அவனைக் கண்டு கொள்வதில்லை. அவனை மட்டுமல்ல; ராமசாமியையுந்தான்! அவன் இப்படி ஆனதற்கே காரணம் தங்கள் அப்பா ராமசாமியின் செல்லந்தான் என்பது அவர்களின் கணிப்பு. அவர்களின் எண்ணத்தை ராமசாமியும் அறிவார். ஆனாலும் அவருடைய தனி ஆற்றலே, எதையும் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.
ஒரு வருடத்தில், ஒவ்வொரு பிள்ளை வீட்டிலும் நான்கு மாதங்கள் தங்குவதென அவராகவே ஒரு முடிவை எடுத்து அதனைச் செயல்படுத்தியும் வந்தார். பிள்ளைகளும் அதற்கு உடன்பட்டார்கள். மருமகள்களைத் தன் மகள் போலவே பாவித்து வந்ததால், எந்த மருமகளும் அவர் செயல்களுக்கு ஆட்சேபணை தெரிவித்ததில்லை. எந்த மகன் வீட்டில் தங்கினாலும், அவரால் முடிந்த உதவிகளைக் குறைவின்றிச் செய்வார். வருகின்ற பென்ஷன் பணத்தை எந்த மருமகள் வீட்டில் இருக்கிறாரோ அந்த மருமகளின் கைகளில் கொடுத்து விடுவார். வேண்டாமென்று அவர்கள் மறுத்தாலும் விட மாட்டார். அவர்களின் குடும்ப விஷயங்களில் அனாவசியமாகத் தலையிட மாட்டார். எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கத் தவறவும் மாட்டார்.
காலம், யாருக்கும் எதற்கும் காத்திருக்காமல் போய்க் கொண்டே இருந்தது. ராமசாமி மூன்றாவது பையன் வீட்டிற்கு வந்து நேற்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. மருமகள் ரொம்பவும் புத்திசாலி. ஆனால் என்னவோ தெரியவில்லை, தரித்திரம் மட்டும் அவர்களை விட்டு நீங்கவில்லை. எப்பொழுதும் பணப் பற்றாக்குறைதான்.
இன்று காலை அவர் மூத்த பையன் வீட்டிற்குப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புறப்படவில்லை!
ராமசாமிக்குச் சிறிய வயதிலிருந்தே ஒரு பழக்கம் உண்டு. மற்ற நேரங்களில் எப்படியோ, காலை டிபனுக்குப் பிறகு ஒரு 'டீ' கட்டாயமாகக் குடிக்க வேண்டும்! இது எல்லா மருமகள்களுக்கும் நன்றாகவே தெரியும். சர்க்கரை வியாதி வந்த பிறகு சர்க்கரையை மட்டும் நிறுத்திக் கொண்டாரேயொழிய டீ யை நிறுத்தவில்லை. டீ யை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இன்று சற்றே தாமதமானது. பின்னர்தான் வந்தது. இளஞ்சூடாக ஆற்றி வாயில் ஊற்றியவர் அதிர்ந்தார். டீ இனிப்புடன் இருந்தது. ஒரு வேளை சம்பந்திக்குப் போட்ட டீ யை மாற்றித் தனக்குக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தவராய், இதனைப் பெரிசு பண்ண வேண்டாமேயென்று எண்ணியவராய்க் குடித்து முடித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இனிப்பான டீ குடித்த காரணத்தால் மனசில் சிறிதான மகிழ்ச்சி இழையோடிற்று. அதே சமயம், 'மருமகள் இப்படிக் கவனிக்காமல் விட மாட்டாளே, என்ன காரணம்?' என்று மனது ஏதேதோ கணக்குப்போட ஆரம்பித்தது!
அடுத்த நாளும் இனிப்பான டீ யே வந்தது! மருமகளுக்கு உடம்புக்கு ஏதும் ஆகி விட்டதோ? பயந்தவராய் மருமகளை அவள் அறியாமல் நோக்கினார். நன்றாக இருப்பதாகவே பட்டது. சரி, நாளைக்கு என்னவாகிறதென்று பார்க்கலாம். மூன்றாவது நாளும் டீ யில் இனிப்பு! இன்று சற்று அதிகமாகவே போடப்பட்டிருந்தது.
அவருக்கு நன்றாகவே புரிந்து விட்டது! உடனடியாக முதல் மகன் வீட்டுக்குச் செல்வதென முடிவெடுத்தார். போகும் முன் வங்கிக்குச் சென்றார். அதனை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டார். பின்னர் ஒரு கடிதத்தை மூன்றாவது மருமகளுக்கு எழுதினார்...
அன்புள்ள மருமகளே!
நீ புத்திசாலி என்பதில் எனக்கு என்றுமே சந்தேகம் வந்தது கிடையாது. மூன்று நாட்களாக டீ யில் இனிப்பைப் போட்டு, நான் புறப்பட வேண்டிய நேரம் வந்தும், புறப்படாததால் உனக்கு ஏற்பட்ட மனக் கசப்பை வெளிக்காட்டி விட்டாய்!
எப்பொழுதோ வந்திருக்க வேண்டிய அரியர் பணம் இப்பொழுதுதான் வந்தது. ஒன்றரை லட்ச ரூபாய்க்கானது. அதற்கான செக் எழுதி உன் அக்கவுண்டில் கட்டி இருந்தேன். நேற்று வரை 'செக்' க்ளியர் ஆகவில்லை. இன்றுதான் அது க்ளியர் ஆனது. உன் கணவனிடம் கூடக் காலையில் சொல்லிக் கொள்ளவில்லை. மாலை வந்து அவன் சப்தம் போடக்கூடும். நீ எதையும் காட்டிக் கொள்ளாதே. இது நம் இருவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும். அப்பா - மகளுக்குள் ஒளிவு மறைவு ஏனம்மா? நீ என்னிடம், 'ஏன் மாமா நீங்கள் இன்னும் புறப்படவில்லை?' யென்று நேரடியாகவே கேட்டிருக்கலாமே! சரி விடு... நான் எப்பொழுதும் உனக்குத் துணையாக இருப்பேனே தவிரச் சுமையாக இருக்க மாட்டேனம்மா!
கடிதத்தைப் படிக்க முடியாமல் அவள் கண்ணீர் தடை போட, அவள் தன்னையும் மறந்து "அப்பா!" என்று கேவினாள். ராமசாமி ஏறிய பஸ் அந்த ஊர் எல்லையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது!