சிறுகதை; பெருங்கூட்டத்தில் ஒருவன்!

Tamil Short Stories
Short Story
Published on

சிட்லபாக்கம் -

சென்னைக்குத் தெற்கே இத்தனாவது கி.மீ.யில் அமைந்துள்ள, சாக்கடைகள் நிறைந்த புண்ணிய க்ஷேத்ரம். கணேஷுக்கு உத்தண்ட ராமனைக் கண்டுபிடித்து விட்டால் போதுமென்றிருந்தது.

"வரதராஜா தியேட்டர் தெரியுமா? அங்க போய்க் கேட்டா, ஏன் கேப்பானேன். வரதராஜா தியேட்டர்லேருந்து நேரா கீழே போனா வலது பக்கம் திருப்பம் வரும். அங்கேருந்து மூணாவது லெப்டோ, நாலாவதோ...வாசல்ல கொய்யாமரம்கூட இருக்கும்."

உத்தண்டராமனின் விலாசம் இது! உதவி ஆசிரியர் கல்யாணராமன் கொடுத்தது. சொல்வதைச் செய்வதே நிருபன் வேலை. திருப்பிக் கேட்டால், கல்யாணராமன் தமது சர்வீஸ் சலுகையைப் பயன்படுத்தி, கூடிய விரைவில் சென்னை மொழியில் 'கல்தா' கொடுத்தாலும் கொடுக்கலாம்.

வரதராஜா தியேட்டர். இங்கே ஒரு முறை பெரியப்பாவோடு இடம் பார்க்க வந்த ஞாபகம். பெரிதாய் ஏரி உண்டு. அதைத் தூர்த்து தூர்த்து வீடாக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

நேராகக் கீழே! என்றால் எந்த பக்கம்...?

யாரைக் கேட்பது? உத்தண்டராமன் தன் எழுத்தின் வலிமையால், குறைந்தபட்சம் சிட்லபாக்கத்தில் ஒளி பரப்பியிருக்கக் கூடாதோ! பரபரக்கும் கூட்டம். பெரும்பாலும் சைக்கிள். கொஞ்சம் டி.வி.எஸ்-50. சென்னை நகருக்குள் நுழையும் ஆயத்தங்கள் அனைவர் முகத்திலும்.

"கவிஞர் பத்ரிநாராயணனைப் பத்தி உத்தண்டராமனுக்கு நல்லா தெரியும். ரெண்டு பேரும் சின்ன வயசுல திருவல்லிக்கேணி ரூம்ல ஒண்ணா இருந்தவங்க. நீங்க ஒரு பதினெட்டு இன்ச்சுக்கு மேல போகாம ஒரு இரங்கல் எழுதி வாங்கிட்டு வந்துடுங்க."

இப்போதைக்கு பத்ரி நாராயணன் செய்திப் பொருள். காலமாகிவிட்ட கவிஞர் பத்ரிநாராயணன்.

அமெரிக்கப் பல்கலைகள், கனடாவின் பல்கலைகளிலெல்லாம் வருகைதரும் பேராசிரியர். ஆறேழு கவிதைத் தொகுதிகள். தன் பிள்ளைப் பருவம், பால பருவம், காளைப் - பருவம், பின்னர் தரணி புகழ் சென்னையில் ஒரு வெள்ளைக்காரன் கம்பெனியில் குப்பை கொட்டியது எல்லாம் இளம் பருவத்து நினைவுகளாய், மூன்று தொகுதிகளில் வழ வழா தாளில் எல்லோர் கைகளிலும் தவழ விட்டிருக்கிறார்.

கணேஷ் அதன் பைரேடட் எடிஷன் வைத்திருக்கிறான். பிடித்தது. ஜனரஞ்சகமான மொழி. எப்பேர்ப்பட்டவனையும் கவர்ந்துவிடும். முடித்தவுடன் வாசகன் பிரமித்துப் போய்விடுவான். அனுபவங்களைத் துளி சிந்தாமல் பகிர்ந்துகொண்டுள்ள லாவகவம் அசத்தும்.

உத்தண்டராமன் இவருக்கு நேர் எதிர். யோசிக்க வைப்பார். இரண்டே தொகுதிகள் ஒன்று 40 பக்கம். மற்றொன்று 56. முதல் தொகுதி, யார் கண்ணிலும் படவேயில்லை. அதில்தான் தீக்ஷண்யமிக்க கவிதைகள் இடம் பெற்றிருப்பதாய் விமர்சகர் பெருங்கோட்டு வேலன் கூறியிருக்கிறார்.

கணேஷ் இரண்டாவது தொகுப்பைத்தான் படித்திருக்கிறான். ஒவ்வொரு கவிதையும் புத்துணர்ச்சி மிக்கது. கடைசியில் அழகாய் ஒரு சிக்கல். புது விஷயங்களை யோசிக்க வைக்கும் சிக்கல்.

இதையும் படியுங்கள்:
உங்களை நீங்கள் புரிந்துகொண்டாலே போதும் வெற்றி நிச்சயம்..!
Tamil Short Stories

மூன்றாவது லெப்டோ நான்காவது லெப்டோதானே?

மூன்றாவது லெப்டின் முனையில் நின்றான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தென்னை முதுகு வளைத்துத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. தெருவில் செம்மண் பரப்பியிருந்தார்கள். மேலே தார் போடும் உத்தேசமிருக்கலாம்.

கொய்யாமரம் இருக்குமோ?

கொய்யாமரம் எப்படியிருக்கும்? யார் கண்டார்? சைதாப்பேட்டையிலிருந்து தி.நகர் போய்ப் படித்தவனுக்கு பஸ் தெரியும், லாரி தெரியும். கொய்யாவா தெரியும்? ஒவ்வொரு பெயர்ப் பலகையாய்ப் பார்ப்பதென்று முடிவு செய்தான்.

நான்காவது லெப்டின் முனையில் ஒரு வீட்டில் U மற்றும் Rன் பெயிண்ட் காணாமல் போக, இரண்டு TH களோடு பெயர் தெரிந்தது. கேட் திறந்து, மணியடிக்க வெள்ளை வெளேர் மாமி கதவு திறந்தார்.

"உத்தண்டராமன்னு போயட் இருக்காரா?" பார்வையில் ஆச்சரியம் உடனே கதவை அகலத் திறந்தார்.

"வாங்கோ, உக்காருங்கோ"

சின்ன மரச்சேர்கள் கொண்ட வரவேற்பறை, கணேஷ் தன் பத்திரிகையின் பெயர் சொன்னான். இன்னும் ஆச்சர்யம்.

"இருங்கோ, குளிச்சிண்டிருக்கார். கூப்பிடறேன்.''

"எதுக்குய்யா இரங்கல் செய்தியெல்லாம்...?" என்று ஆரம்பித்த எடிட்டர், பத்ரி நாராயணனுக்கு மக்கள் மத்தியில் இருக்கிற முக்கியத்துவத்தைக் கொஞ்சம் அசை போட்டபின்,

''யாருக்குய்யா உத்தண்டராமனைத் தெரியும்?" என்றார்.

கல்யாணராமன் மௌனம் காத்தார். அவர் கேட்கும் 'யார்' பெரும்பாலான மக்கள். அவர்களுக்கு உத்தண்டராமனைத் தெரிய நியாயமில்லைதான். ஆனால் பத்ரி நாராயணனை, உத்தண்டராமனைப்போல் ஆழமாய் யாரறிந்திருப்பார்?

"உத்தண்டராமன், பத்ரிநாராயணனுக்கு ரொம்ப குளோஸ் சார்! அவரப்பத்தி இவருக்கு நல்லா தெரியும். ஒரு காலத்துல இரட்டையர் மாதிரி இருந்திருக்காங்க."

"இருக்கட்டுமய்யா. நமக்கென்ன அதப் பத்தி? நமக்குத் தேவை பெரிய பேரு, கலாநேசனை எழுதச் சொல்லு. விளாசிடுவார். கண்ணுல தண்ணி வந்துடும். கண்டிப்பா அதுக்காகவே, ஆயிரம் காப்பி எக்ஸ்ட்ரா போகும்."

கலாநேசனுக்கு பத்ரிநாராயணனைப் பற்றி ஒன்றும் தெரியாதே என்று வாய்வரை வந்துவிட்டது கணேஷுக்கு. அடக்கிக்கொண்டான். பெரியவர்கள் பேசுகிறார்கள். இடைமறிப்பது அடாத செயல்.

"கலாநேசன் யாரைப்பத்தி வேணுன்னாலும்தான் எழுதுவாரு.''

கல்யாணராமன் கீழ் ஸ்தாயியில் முணுமுணுத்தார்.

"இருக்கட்டுமே. ஒரு விஷயம் புரிஞ்சுக்குங்க கல்யாணம். நாம் நடத்தறது வியாபாரம். பத்ரிநாராயணன் மரணம், ஒரு நியூஸ். மக்கள் மத்தியில் அதைப் பத்தி ஒரு பேச்சு இருக்கு. அதை நாம பயன்படுத்திக்கறோம். அவ்வளவுதான். அதுக்கு கலாநேசனை மாதிரி ஒரு பாப்புலர் ஃபிகரை எழுதச் சொன்னா, வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சு, இரங்கல் சொன்ன மாதிரியும் ஆச்சு.''

உடனே கலாநேசன் தொடர்பு கொள்ளப்பட்டார். வேறொரு பத்ரிகைக்குத் தன் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுவிட்டதாக வருந்தினார். அதே வரிசையிலிருந்த பிற பிரபலங்களும் தொடர்பு கொள்ளப்பட, பத்ரிநாராயணன் அமெரிக்காவில் படுக்கையில் சாய்ந்தபோதே பிற பத்திரிகைகள் அவருக்கான இரங்கலைத் தயார் செய்யச் சொல்லியிருந்தது தெரிய வந்தது! முன் யோசனையில்லாமல் போய்விட்டதே என்று வருந்தினார் எடிட்டர். காலமும் கடப்பதால், வேறு ஆளில்லாமல், உத்தண்டராமன் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட வேண்டியவர் ஆனார்.

இதையும் படியுங்கள்:
2025-ல் என்ன நடக்கும்? தீர்க்கதரிசியின் கணிப்பால் மக்கள் அச்சம்!
Tamil Short Stories

"வாங்கோ, வாங்கோ, பெரியவாளெல்லாம் ஆத்துக்கு வந்திருக்கேள்."

செக்கச்செவேல் உத்தண்டராமன். இரண்டாவது தொகுதியின் பின்னே இருந்த போட்டோ பார்த்திருக்கிறான். இங்கே சுத்தமான நரை. வென்னீரின் வெப்பம் சிவக்க வைத்த காது, மூக்கு, சுருக்கங் கண்ட மார்பு. மேல்துண்டால் மார்பை மூடிக்கொண்டார்.

விஷயம் சொன்னான்.

"நாணா பத்திதானே? நன்னா தெரியுமே! இவருக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தம்கூட.''

வாசல் படியில் மாமி நின்றபடி சொன்னாள்."முந்தா நாள் ஹிண்டு பாத்தவுடனே வயத்த என்னமோ பண்ணித்து. இவர் கூடப் பேசலை. தலைக்கு ஜலம் விட்டுண்டு, பெருமாள்கிட்ட ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தார்."

உத்தண்டராமன் வெறுமனே இருந்தார். அழுத்தமான துக்கம். கொஞ்சம் கழித்து.

"நான் எழுதணுமா?"

கணேஷுக்குச் சங்கடமாய் இருந்தது. அனாவசியமாய் எதையோ கிளறிவிடுகிறோம் என்று தோன்றியது.

எடிட்டர் விருப்பப்படறாரு உங்களுக்கு நல்லா தெரியும்னு கல்யாணராமன் சொன்னார்.

அமைதியானார். இரண்டு நிமிடம்

"இப்பல்லாம் பழைய ஞாபகங்கள் திரும்பத் திரும்ப வந்துண்டே இருக்கு. பண்ணின தப்பு, பேசின பேச்சு, செய்கை யெல்லாம் திரும்பத் திரும்ப ஞாபகம் வரது. இப்போ நாணா பத்தி திருப்பியும் யோசிக்கறதுன்னா, நான் இன்னும் ஒரு வாரத்துக்குத் தூங்க முடியாது. இந்தச் சலனமெல்லாம் கூடாதுன்னுதான் நான் ஒதுங்கியிருக்கேன்.

மாமி எலுமிச்சம்பழ ஜூஸோடு பிரசன்னமானார். பெரிய தம்ளர்.

"மெட்ராஸ் வந்தான்னா நாணா எங்காத்துக்கு வராம போமாட்டான். மன்னி மன்னிம்பான். பொறிச்ச கூட்டும், அக்காரடைசலும் அப்படி சாப்டுவான்."

மாமியும் உட்கார்ந்துகொண்டாள்.

"எப்ப வந்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுண்டே இருப்பா. ஏதாவது ஒண்ணு கெடைச்சுடும்."

உத்தண்டராமன் மெல்லிதாய்ச் சிரித்தார். லயிப்பிலிருந்து மீண்டவர் போல்,

"சண்டையில்லை அது! விவாதம். ரெண்டு பேரும் ரெண்டு ஐடியா உள்ளவா. என்ன பண்ண முடியும்? பேச்சு முத்தித்துன்னா சண்டைதான்."

தம்ளரைக் கீழே வைத்தபோது, வயிறு திம்மென்றிருந்தது. மணி ஒன்பதரை இருக்கலாம். ஜாலியிட்ட ஜன்னலில் வெயில் உறைத்தது.

"திருப்பித் திருப்பி ஒரே விஷயம்தான். பேரு, புகழ், பணம். திருவல்லிக்கேணியில் இருந்ததுலேர்ந்து இதுதான். நான் கவிதை எனக்கு மட்டும்தான்பேன். அதை அவன் எல்லாருக்கும்பான். எல்லாருக்கும்ன்னு சொல்லும்போது, கூடவே கமர்ஷியல் வேல்யுவும் வந்துடறதேம்பேன். அதுதான் எனக்கு வேணும்பான்."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்!
Tamil Short Stories

''அவன் பேரு, பேட்டி, போட்டோவெல்லாம் பத்திரிகைல வரும்போது, சந்தோஷமா இருக்கும். இவரும் அவன் கூடத்தான் இருந்திருக்கார். வரட்டுப் பிடிவாதம். சொன்னா கோபம் மட்டும் வரும். அதென்னமோ ஆசையே அத்துப்போச்சு. இன்னும் எனக்குப் போகலப்பா. நான்தான் இவர் எழுதற ஒவ்வொரு வார்த்தையையும் படிச்சிண்டிருக்கேன். பத்திரிகைக்கு அனுப்புங்கோம்பேன். அதெல்லாம் உனக்குத் தேவையில்ல. போடிம்பார்."

உத்தண்டராமன் சிரித்தார்.

''இவாளுக்கெல்லாம் இன்னும் புரியலப்பா. உயர்ந்த கவிதை மனசினுடைய விஷயம். உயர்ந்த அனுபவம். மெல்ல அசை போட்டு அனுபவிக்கணும். எழுதும்போதுதான் அதுக்கு வேறொரு வேல்யூ வந்துடறது. அதனாலதான் எழுதறதையே வுட்டுட்டேன்."

ல்யாணராமனுக்குத் தகவல் சொல்ல வேண்டும். டம்மி போட ஆரம்பித்திருப்பார். பக்கம் ஒதுக்கச் சொல்ல வேண்டும்.

"அவரோட நீங்க இருக்கறாமாதிரி, ஏதாவது போட்டோ இருக்குமா சார்?"

மீண்டும் யோசித்தார்.

''இருக்கும். நானும் அவனும் நெறைய சுத்தியிருக்கோம். ஒவ்வொரு கோயிலா. ரெண்டு பேர் ஐடியாவும் ஒத்துக்கலையே தவிர, எப்பவும் சேர்ந்துதான் இருந்திருக்கோம். அதுக்குக் காரணமும் அவன்தான். எதிர்க் கருத்தையும் எடுத்துக்கற மனப்பக்குவம் அவனுக்குத்தான் உண்டு. உன் கவிதையெல்லாம் ரொம்பப் பொய்யாயிருக்கும்பேன். சரி, என்ன பண்றதும்பான். அவன் தேடின தெல்லாம் அடைஞ்சிட்டதா நெனச்சான். பாப்புலரா இருந்தாத்தாண்டா மதிப்பும்பான். என்னால் ஒத்துக்க முடியலை...

"போன தடவை வந்தபோதுதான் நாணா பக்குவத்துக்கு வந்திருக்கான்னு தோணித்து. என்ன சாதிச்சோம் ரெண்டு பேரும். ரெண்டு பேருடைய ஐடியாவும் தோத்துப் போச்சுன்னுதான் தோணித்து. காலம் எல்லாரையும் குப்பையாத் தூக்கி வெளிய போட்டுடுத்து. கவிதை எனக்கு மட்டுமேன்னு சொன்ன என் கர்வமும் விதண்டாவாதம்னு தெரிஞ்சுது. காலம் அதுக்குள்ள கடந்து போச்சு. இனி ரெண்டு பேரும் ஆசைப்படறதுல ஒண்ணுமில்லைன்னு புரிஞ்சுண்டோம். எழுதறதையே விட்டுடலாம்னு முடிவு பண்ணோம். கடைசியில அவனுக்கு எல்லாமே திகட்டிப் போச்சு. நான் அந்தச் சுவையே வேண்டாம்னு ஒதுங்கிண்டேன். என்ன அடைய நெனச்சோம்னு தெரியாமலேயே போயிட்டுது."

உள்ளே கடிகார மணியடித்தது. பத்து! இங்கேயிருந்து மௌண்ட் ரோடு போவதற்குள் பதினொன்று ஆகிவிடலாம். கல்யாணராமனுக்குப் போன் செய்து தகவல் வேறு சொல்லவேண்டும்

"அப்போ நான் கெளம்பறேன். நாளைக்குக் காலையில வரேன். கொஞ்சம் எழுதி வச்சுடுங்க. ரொம்ப பெரிசா வேணாம். புல்ஸ்கேப்ல ரெண்டு பக்கம் வந்தாப் போதும். போட்டோ கிடைச்சாலும் நல்லது. கொஞ்சம் பாருங்களேன்."

"சரி."

றுநாள் காலை எழுதிவைத்திருந்தார். நுணுக்கி நுணுக்கி. இரண்டு பழைய போட்டோக்களையும் வைத்திருந்தார். எல்லாம் அழகாய் கவருக்குள் போட்டு, மேலே ஆசிரியர், பத்திரிகை பெயர், முகவரி எல்லாம் தெளிவாய்.

அடுத்த வாரம் வழக்கம்போல் வெள்ளியன்று இதழ் வெளியானது. உத்தண்டராமனின் இரங்கல் அதில் இல்லை. கடைசி நேரத்தில் ஒரு பக்க விளம்பரம் வந்ததென்று, இரங்கலைத் தூக்கி விட்டார்கள். கணே ஷுக்கு அதன் தலைப்பு ஞாபகம் வந்தது. 'பெருங்கூட்டத்தில் ஒருவன்!'

பின்குறிப்பு:-

கல்கி 02  ஏப்ரல் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com