
நள்ளிரவு நேரம், இலேசான மழைத்தூறல். அமாவாசை இரவு. சிந்தனைச் செல்வன்... நான் தான். கட்டுமஸ்தான இளைஞன். இது தமிழகத் தலைநகரில் எனது மூன்றாவது இரவு. ஆனால், முதல் நாளைய இரவில் இருந்த தெளிவு நேற்றைய இரவே காணாமல் போய்விட்டது. கல்லூரி வரை சென்றிருந்த நான் சினிமா, ஊடகம் என பள பள கனவுகளுடன் தான் சென்னை வந்திருந்தேன்.
முதல் நாளைய அலைச்சலில் ஏமாற்றம் தான் கிடைத்தது. இருப்பினும், நாளைய நம்பிக்கையுடன் தொடருந்து நிலைய உறக்கம் தெளிவைத் தந்தது. ஆனால், இரண்டாவது நாள் மாலைப் பொழுதில் விரக்தி வந்திருந்தது. அந்த நேரம் பார்த்துத்தானா அந்த மழமழ இளைஞன் வரவேண்டும்? தாடி இல்லை. மீசை இல்லை. மென்மையான முகம். ஆனால், மனசு மட்டும் சொர சொர.
இரண்டாவது நாளைய இரவின் நிகழ்ச்சிகள் மனதிற்குள் வரிசையாய் நிழலாடின.
“நண்பா” (என்ன அழகான உச்சரிப்பு) அழைத்தது அவன் தான். ஹால்ஸ் ஹனி லெமன் சுவைத்து விட்டுப் பேசியிருப்பானோ?
விரக்தியான மனது மெல்லிய மயிலிறகால் வருடப்பட்டது போலிருந்தது.
“என்ன?” இது நான். மிகக் கவனமான பதில்.
“உங்களுக்காக ஒரு உயர்வான பணி காத்திருக்கிறது. சகோதரர் உங்களை அழைத்து வரச் சொன்னார்” அந்த மழமழ இளைஞன்.
“யார் அந்தச் சகோதரர்?” மனதில் எழுந்த கேள்வி உள்ளேயே அழிந்தது. ஏதோ மந்திரத்தால் கட்டுப்பட்டவன் போல பின் சென்றேன்.
நிழலான சந்துகள். இருளான இருப்பிடம். ஆனால், அவர்களது பேச்சு மட்டும் உன்னதம். வன்முறைக்குத் தூண்டினார்கள். காரணம் கூறினார்கள். சமத்துவம், ஊழல் எதிர்ப்பு என நிறையப் பேசினார்கள். வார்த்தைகளில் வர்ண ஜாலம் இருந்தது. இல்லை… இல்லை… உண்மை இருந்தது. அதனால் தான் மனசு மறுத்தும் கூட தலை சரி என்று மேலும் கீழும் அசைந்தது.
அந்த இடம் வந்து வெளியே வந்ததும் மனசுக்குள் ஒரு நீயா? நானா? நடந்து கொண்டேயிருந்தது. ஏசு, புத்தர், காந்தி, லெனின், மார்க்சு, சுபாஷ் சந்திர போஸ், வள்ளுவன், பாரதி, வள்ளலார், விவேகானந்தர் என்று மாறி மாறி வந்து வாதிட்டாலும் தீர்ப்பு மட்டும் சொதப்பலாகவே இருந்தது.
என்னிடம் ஏதோ பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பது போல் மூன்றாவது நாள் இரவில் இறுமாப்பாய் (வெளியில் மட்டும்) நடந்து கொண்டிருக்கிறேன். இது சென்னை நகரின் ஒதுக்குப்புறம். நான் செய்ய வேண்டியதெல்லாம் தெளிவாக என் மூளைக்குள் நேற்றைய இரவில் செலுத்தப்பட்டு விட்டது. நான் இன்று புரட்சிக்காரன். இன்று மட்டுமே புரட்சிக்காரன். இந்தக் காரியம் முடிந்தவுடன் எனக்கு கிடைக்கப்போகும் பணத்துடன், தமிழ்நாட்டின் மூலை ஒன்றில் இருக்கும் கிராமத்தில் யாரோ, எவராய். இல்லை நானாய், சிந்தனைச் செல்வனாய்.
அதோ அந்தக் கார் வருகிறது. லிஃப்ட் கேட்கிறவனாய் நான்.
அது கருப்புப்பணம் பதுக்கி, சுரண்டலின் பேருருவாய் இருக்கும் ஒரு பணக்கார, தொழிலாளர் விரோத முதலையின் (அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள்) கார். கார் தயங்கி நிற்க, காரினுள் ஆன் செய்த இருபது நொடிகளில வெடிக்கப்போகும் டைம்பாமை நழுவ விட்டு விலக எத்தனிக்கையில் பாழாய்ப் போன என் வலிப்பு நோய் வேலையைக் காட்டத் தொடங்கியது. நான் கீழே விழுந்து இழுத்துக் கொண்டிருக்கிறேன். ஓ. அந்த மனிதர் (முதலை?) ஓடி வந்து என்னைக் காரினுள் எடுத்துச் சென்று கையில் அகப்பட்ட இரும்பைக் கொடுக்க 'டமால்' எனச் சிதறியது.
அந்நொடியில் ”வன்முறை இருபுறமும் கூர்மையாக்கப்பட்ட ஆயுதம். அது பயன்படுத்துகிறவனையும் அழித்து விடும்” என்று அறிஞர் அண்ணா வந்து நீயா? நானா? நிகழ்வை நிறைவு செய்தார்.