சிறுகதை – வலி!

ஓவியம்; ராமு
ஓவியம்; ராமு

-கிருஷ்ணா

டி வயிற்றில் சுளீர் என்று வலி இழுக்க, வயிற்றைக் கைகளால் அழுத்தியபடி முன்புறம் குனிந்தான் வேலு.

ஒரு மாதமாக இப்படித்தான் விட்டுவிட்டு வலிக்கிறது. முன்னெல்லாம் எப்போதாவது தேர்தல் காலத்து அரசியல்வாதியாய்த் தலைகாட்டிய வலி, இப்போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வலிக்கிறது.

''என்னப்பா ரிக்ஷா?" - அருகில் குரல் கேட்கவே நிமிர்ந்தான்.

ஒரு பெண்மணி எதிரில் நின்றுகொண்டிருந்தாள். பார்த்தாலே பணக்காரக்களை தெரிந்தது முகத்தில். கோதுமை நிறத்தில் தோல். எதிரில் ஒட்டியிருந்த ஹீரோயின் பட போஸ்டரையும், அவளையும் ஒப்பிட்டான் வேலு.

''என்னம்மா, எங்கே போகணும்?"

“மதுரா நர்சிங்ஹோம் போகணும். எவ்வளவு கேட்கற?” என்றாள் கம்பீரமாய்.

வேலுவுக்கு இந்தப் பெண்மணியின் சாயலும், கம்பீரமான குரலும் ரேஸ் குதிரையை ஞாபகப்படுத்தின.

சேட் வீட்டில் அவன் மனைவி வேலை செய்கிறாள். அவன் கூட ஓரிருமுறை அங்கு போயிருக்கிறான். அங்கு ரேஸ் குதிரை வளர்ப்பதைக் கவனித்திருக்கிறான்.

அவன் மனைவி செல்லிதான் சொன்னாள். ஒரு குதிரை விலை லட்ச ரூபாய்க்கும் மேலேயாம். குதிரை பளபளவென்று,  பிடரி முடி சிலிர்த்து, கம்பீரமாய் நிற்கும்.

''நீங்க கொடுக்கறதைக் கொடுங்கம்மா" என்றான், சற்றுத் தடுமாறி.

இந்தத் தொழிலில் இது ஒரு அம்சம். எல்லோரிடமும் கறாராகக் கூலி பேசக் கூடாது.சிலர் தாராளமாகக் கொடுத்துவிடுவார்கள்.

இந்த அம்மாவைப் பார்த்தால் சற்று இரக்க குணம் உள்ளவராகத் தெரிகிறார்.

“ஏறுங்கம்மா" என்று ரிக்ஷாவை ஆடாமல் பிடித்துக்கொண்டான்.

"ஸ்கூட்டரில் வந்தேன். திடீர்னு நின்னு போச்சு. ஏன்னு தெரியலே, ப்ச"! என்றபடி அமர்ந்தாள் ரிக்ஷாவில்.

வேலுவுக்குச் சட்டென்று அந்தப் பெண்மணி யாரென்று தெரிந்து போயிற்று.

அந்த அம்மா ஒரு டாக்டர் என்று கேள்விப்பட்டிருக்கிறான். சில நாள், ஸ்கூட்டரில் இவன் ரிக்ஷா ஸ்டாண்ட் வழியே பறப்பதைக் கண்டு வியந்திருக்கிறான். அவ்வளவு வேகமாய் ஓட்டுவாள்.

ஏறி ரிக்ஷாவை மிதித்தான்.

வலி! வயிற்றைப் பிடித்து இழுத்தது. பல்லைக் கடித்துக் கொண்டான்.

மிதிக்க, மிதிக்க வலி பழகிப் போய் ரிக்ஷா ஓடியது.

"நிறுத்துப்பா!" என்று அவள் சொல்லும்போதே பிரேக்கைப் பிடித்தான்.

கிரீச் என்ற ஒலியுடன் ரிக்ஷா நின்றது. ஆஸ்பத்திரி வாசலில் டோக்கனுடன் காத்திருந்தவர்கள் சற்று பரபரப்பாய் எழுந்து உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.

மீண்டும் வலி. பொறுக்கமுடியாமல் கைகளால் வயிற்றை அழுத்திப் பிடித்தான். முகமெல்லாம் வேதனை.

பத்து ரூபாய் பணத்தை நீட்டியவள் இவன் முகம் காட்டிய வேதனையைக் கண்டு திடுக்கிட்டாள்.

"என்னப்பா?"

"தெரியல்லேம்மா! கொஞ்சநாளா வயித்தைப் பிசையற மாதிரி வலி" என்றான் பரிதாபமாய்.

இரக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

''சரி, உள்ளே வா! என்னன்னு பார்ப்போம்" என்று இவள் முன்னே செல்ல,

வயிற்றிலிருந்து கையை எடுக்காமல், லேசாகக் கூன் போட்டபடி இவனும் பின் தொடர்ந்தான்.

ஓர் அறையில் அவள் நுழைந்து பின்னால் வருமாறு சைகை காட்டினாள்.

ஒரு பெண் வந்து பேன், லைட் ஸ்விட்சுகளைத் தட்டிவிட்டாள்.

''உட்காரு" என்று எதிரிலிருந்த சேரைக் காட்டினாள்.

இவனுக்கு உட்காரத் தயக்கமாய் இருந்தது.

"எத்தனை நாளா வலிக்குது?"

"ஆறேழு மாசமாய்" என்று வலிவந்த கதையைச் சொல்லி முடித்தான்.

இதையும் படியுங்கள்:
ருசிக்க ரசிக்க சூப்பர் சென்னா மசாலா கிரேவி!
ஓவியம்; ராமு

அவனை பெஞ்சில் படுக்கச் சொன்னாள். வயிற்றில் நாலைந்து இடங்களில் செங்குத்தாக விரல்களை வைத்து அழுத்தினாள் .

இரண்டு இடங்களில் அவள் அழுத்தும்போது முனகினான் வலியால்.

"காஸ்ட்ரிக் அல்சர் உனக்கு இருக்குப்பா" என்றாள்.

வேலு புரியாமல் பார்த்தான்.

"குடிப்பியா?"

"ஐயையோ, அதுக்கெல்லாம் காசு ஏதும்மா. எப்பவாச்சும் ஓசியிலே கிடைச்சா ...."

''காலையிலே என்ன சாப்பிட்டே?"

தலைகுனிந்தான்.

''சரி, நான் மாத்திரை கொடுக்கறேன் மூணு நாளைக்கு. எழுதியும் தரேன். திரும்பவும் வலிக்கும்போது போட்டுக்க" என்றவளை நன்றியுடன் பார்த்தான்.

"காப்பி, டீ பக்கமே போகக் கூடாது, என்ன? காரமே சாப்பாட்டுல கூடாது.''

''ஐயையோ! டீ தானேம்மா பாதி நாள் சாப்பாடே!"

"அதான் சொல்றேன். பசி நேரத்துல வெறும் டீயைக் குடிச்சதுனால் வாயு உண்டாகி வயித்துல புண்ணாகிடுச்சு" என்றாள் இவனுக்குப் புரிய வேண்டுமே என்று தட்டுத்தடுமாறி தமிழில்.

மாத்திரையை ஒரு கவரில் போட்டுக் கொடுத்தாள். கூடவே ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தாள்.

"சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் இந்த மாத்திரைகளைச் சாப்பிடணும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடு, என்ன?"  என்று சொன்னவளைக்
கையெடுத்துக் கும்பிட்டான்.

மீண்டும் ரிக்ஷா நிறுத்திய இடத்துக்குத் திரும்பினான் யோசனையாய்.

"சாப்பிட்டதுக்குப் பின்னாடி மாத்திரையைப் போட்டுக்க" என்று டாக்டர் சொன்ன வார்த்தைகள் அவனைக் குழப்பின.

"ஒரு வேளை சோற்றுக்கே தாளம்,  ஹும்!" என்ற பெருமூச்சு அவனுள்ளிருந்து புறப்பட்டது.

அப்போதுதான் டாக்டர் ரிக்ஷாவில் வந்ததற்குக் கூலி கொடுக்காதது ஞாபகம் வந்தது.

திரும்பிப் போய்க் கேட்கலாமா என்ற தயக்கத்துடன் உள்ளே நோக்கினான்.

''என்னப்பா, ரிக்ஷா வருமா!" என்று அருகில் குரல் கேட்டது. ஒரு பெரியவரும், கூடவே ஒரு பெண்ணும்.

டாக்டரிடம் கூலியைக் கேட்கக் கூச்சம். கேட்டால் தப்பாய் எடுத்துக்கொள்வார்களோ? ஆனால் கண்முன் தோன்றி மறைந்த அந்த பத்து ரூபாய் நோட்டை விடவும் மனசில்லை.

''என்னப்பா? தூங்கறியா?"

"எங்கே சார் போவணும்?" என்றான் லேசான ஏமாற்றத்துடன்.

சொன்னார்கள். ஏறி அமர்ந்தார்கள்.

"டாக்டர் பீஸ் இருபது ரூபாய் ஆயிடுச்சு. இன்னும் மாத்திரை, மருந்து வேற வாங்கணும். அது வந்துடுமே நாற்பது, ஐம்பதுன்னு. இந்த மாசம் கடன்தான் வாங்கிச் சமாளிக்கணும்" என்றார் அந்தப் பெரியவர் கவலையான குரலில்

வேலுவுக்குத் துணுக்கென்றது. டாக்டர் ஃபீஸ் இருபது ரூபாயா? தன்னிடம் ஒரு பைசாகூட வாங்கிக் கொள்ளவில்லை.

வர்களை இறக்கிவிட்டதும் மூன்று ரூபாய் கூலி கிடைத்தது.

வயிற்றில் மீண்டும் வலி, வேலு மாத்திரையைப் பார்த்தான்.

அய்யர் கடையில் இட்லி வாங்கிச் சாப்பிடலாமா? என்று யோசித்தான்.

டாக்டர் சொல்லியிருக்கிறாரே, ஏதாவது சாப்பிட்டபின்தான் மாத்திரையை முழுங்க வேண்டும் என்று.

வேண்டாம்! வீட்டுக்குப் போகலாம்.

இதையும் படியுங்கள்:
பரவசமூட்டும் கங்ரோலி துவாரகா கோவில்!
ஓவியம்; ராமு

செல்லி சேட் வீட்டிலிருந்து பழைய சோறு ஏதாவது எடுத்து வந்திருக்கலாம். மூன்று ரூபாயை அவளிடம் கொடுத்தால் ராத்திரி சாப்பாட்டுக்கு உதவும். மகன் ராசுவுக்கு ஏதாவது வாங்கித் தரலாம், பாவம்!

ரிக்ஷாவை மிதித்தபடி வீட்டை நெருங்கினான். வீட்டுக்குள் பேச்சு சப்தம் கேட்டது.

"இதோ என் புருஷன் வந்துடுச்சு" என்றாள் செல்லி பரவசமாய்.

சேட் வீட்டு அம்மா நின்று கொண்டிருந்தாள், அவன் குடிசையின் உள்ளே.

''மச்சான், அம்மாவுக்குக் கலர் வாங்கிட்டு வா. ஓடு!"

"வேணாம் செல்லி."

"சும்மா இருங்கம்மா. வராதவக வந்திருக்கீக" என்று இவனை விரட்டினாள்.

கடையில் கலர் பாட்டில் விலை கேட்டான். இரண்டரை ரூபாய் கொடுத்து ஆரஞ்சு கலர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.

"அந்த உறிஞ்சற குழாய் கொண்டாரலியா?"

''பரவாயில்லை செல்லி" என்று பெருந்தன்மையுடன் அந்த அம்மாள் பாதி பாட்டிலைக் குடித்துவிட்டு மீதியை மிச்சம் வைத்தாள்.

"மதியமே வேலைக்கு வந்துடு செல்லி அதைச் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.சாயந்திரம் ஊருக்குப் போறோம்" என்றபடி விடை பெற்றாள்.

"டேய் ராசு" என்று மகனை அழைத்து, பாட்டிலில் மீதமிருந்த கலரைக் கொடுத்தாள் செல்லி

அவனும் சந்தோஷமாய் அதைக் குடித்தான்.

"செல்லி, பழைய தண்ணி, சோறு ஏதாச்சும் இருக்குதா?"

"இல்லியே மச்சான். மதியம் சேட்டு வீட்டுக்குப் போறேன்ல. அவக ஊருக்குப் போறதுனால நிச்சயமா மிஞ்சற சோறு கிடைக்கும்" என்றாள் நம்பிக்கையுடன். வேலு சோர்வுடன் வெளியே நடந்தான் .

வயிற்றில் வலி பிசைந்தது. கை அனிச்சையாய் வயிற்றை அழுத்திப் பிடித்தது.

கால்கள் நேராக நாயர் கடையை நோக்கிச் சென்றன.

"என்னப்பா வேலு, சாயா போட வா?" என்று வரவேற்றார்.

டீ குடிக்காதே என்று டாக்டர் சொன்னது நினைவில் ஆடியது.

வயிற்றில் வலி ஒரு பக்கம்,  பசி ஒரு பக்கம். சிங்கிள் டீ அடித்து,  ஒரு பீடி புகைத்தால் இரண்டு மணி நேரத்துக்குப் பசிக்காது.

தலையை ஆட்டினான் வேலு, நாயரைப் பார்த்து.

பின்குறிப்பு:-

கல்கி 02 மே  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com