சிறுகதை - ஜோடிக் குருவி!

ஓவியம்: கரோ...
ஓவியம்: கரோ...

-உதாதிபன்

காலையில் சீக்கிரமாகவே விழிப்புக் கண்டுவிட்டது எனக்கு. காரணம் குருவிகளின் கீச்,கீச்! நேரம் பார்த்தேன். ஐந்து நாற்பத்தைந்து. திரும்பவும் கண்களை மூடி தூக்கத்தைத் தொடர முயற்சி செய்தாலும் அந்தச் சப்தம் குலைத்தது. இது எங்கிருந்து திடீரென்று வருகிறது?

படுத்தவாறே ஒற்றைக் கையால் ஜன்னலைத் திறந்தேன். பொழுது புலரும் மெல்லிய வெளிச்சத்தில் வேப்பமரம் தெரிந்தது. அதன் உச்சியில் ஒரு கூடு. கூட்டினுள் இரண்டு குருவிகள். ஒன்றோடொன்று மூக்கை உரசியவாறே 'கீச், கீச்!'

இங்கிருந்தே "ஸ்....ஸ்" என்று கத்தினேன். பயனில்லை. எரிச்சல்தான் மூண்டது.

நான் பணிபுரிவது திருச்சியில். அங்கே மேன்சனில் தங்கியிருக்கிறேன். தினம் காலை ஐந்து மணிக்கே எழுந்தால்தான் 'க்யூ'வில் நிற்காமல் குளித்துச் சாப்பிட முடியும். ஏழு மணிக்கெல்லாம் கம்பெனி பஸ் வந்து விடும்.

ஒருவார பரபரப்பிற்குப் பின், சனிக்கிழமை மாலை கிளம்பி கிராமத்திற்கு வந்துவிடுவேன். ஞாயிறு விடுமுறை. அன்றுதான். எட்டு மணி வரை சாவதானமாகத் தூங்கலாம். மறுநாள் நான்கு மணி பஸ் பிடித்து திருச்சி பயணம். இதுதான் நான் வேலையில் சேர்ந்த கடந்த இரண்டாண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சி.

ஜன்னலை மூடிவிட்டுப் போர்வையைத் தலையோடு இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.

'கீச்... கீச்!'

சப்தம் இப்பொழுதும் காதருகிலேயே கேட்பதுபோல இருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் விலகிய தூக்கம் வராமல் போகவே, எழுந்து கீழே வந்தேன்.

"என்ன இது அதிசயமாயிருக்கு. இந்நேரத்துக்கே எழுந்திரிச்சிட்டே?" என்றார் அப்பா. வாயில் கருவேலங்குச்சி. அம்மா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

"வேப்ப மரத்தில் ரெண்டு குருவிங்க கத்திக்கிட்டே இருக்கு... அதான்."

"நேத்துத்தான் கூடு கட்டிச்சி. ரெண்டும் ஜோடிக் குருவிங்கபோல. பிரியறதேயில்ல."

"அது என்ன குருவியோ. முதல்ல கூட்டைப் பிரிச்சி அதை விரட்டணும்" என்றேன்.

"பாவம்ப்பா" என்றாள் அம்மா.

"என்ன பாவம்? வாரத்தில ஒருநாள் இங்க வர்றப்பதான் மனுஷன் நிம்மதியா தூங்க முடியுது. அதுவும் போச்சுன்னா எரிச்சல் வராதா?"

"வேனா இனி கீழேயே படுத்துக்கோ. மாடிக்குப் போக வேண்டாம்."

"ம்ஹும். எனக்கு என் ரூம்தான் சௌகரியம். கூட்டைக் கலைச்சிடணும்."

"சரி... வெள்ளைச்சாமி வந்தா மரத்தில ஏறி கலைக்கச் சொல்லலாம்" என்றார் அப்பா.

இதையும் படியுங்கள்:
இலக்குகளை விரைந்து அடைய உதவும் 8 விதிகள்!
ஓவியம்: கரோ...

வெள்ளைச்சாமி எங்கள் வயலில் வேலை செய்பவன். அன்றைக்குப் பார்த்து உடம்பு சரியில்லை என அவன் வரவில்லை.

குருவிகள் இரண்டும் நாள் முழுக்க கத்திக்கொண்டே இருந்தது. எனது ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

மறுநாள் விடியற்காலை கிளம்பும்பொழுது, "அடுத்த வாரம் நான் வர்றப்ப மரத்தில் குருவிங்க இருக்கக் கூடாது" என்று மறக்காமல் சொன்னேன்.

மீண்டும் அலுவலக சக்கரம்.

காலை பதினொரு மணிக்கு ஜி.எம். இண்டர்காமில் பேசினார்.

"மிஸ்டர் அசோக்! மெட்ராஸ்லயிருந்து அர்ச்சனான்னு ஒருத்தர் இங்க மாற்றலாகி வந்திருக்காங்க. உங்களுக்கு அசிஸ்டெண்ட் யாருமில்லேன்னு சொன்னீங்களே...இவங்களை 'போஸ்ட்' பண்ணிடட்டுமா?"

"தாராளமா சார்... தேங்க் யூ!"

இரண்டு நிமிடத்தில் அர்ச்சனா வந்தாள். இளம் மஞ்சள் நிற சேலை. ரவிக்கை. பொட்டு, முத்து மாலை, வளையல், ஒற்றை ரோஜா எல்லாமே மஞ்சள்தான். அவளின் முகம் கூட அதே நிறமாய்த் தெரிந்தது. அந்த முகத்தில் இனம்புரியாத வசீகரம். "குட்மார்னிங் சார்!"

"குட்மார்னிங். இப்பதான் ஜி.எம். சொன்னார். உட்காருங்க. ஐ ஆம் அசோக்!"

"தெரியும் சார்."

"எப்படி?"

''நம்மோட கம்பெனி மேகசீன்ல மாசா மாசம் கவிதை எழுதுவீங்களே. ரொம்ப நல்லாயிருக்கும் சார்."

பன்னீரில் நனைவதைப்போல் உணர்ந்தேன் .

அவள் செய்ய வேண்டிய வேலை குறித்து சுருக்கமாக விவரித்தேன். மதியம் இருவரும் கேன்டீனிற்கு ஒன்றாகப் போனோம்.

"எங்கே தங்கப் போறீங்க? லேடீஸ் ஹாஸ்டல்லேயா..."

"நோ... நோ... எங்க பேரண்ட்ஸ் இங்கதான் சார் இருக்காங்க. அதனாலதான் மெட்ராஸ்லயிருந்து மாற்றல் வாங்கிட்டு வந்தேன்."

"அப்படியா?"

ரண்டு தினம் கழித்து என்னை அவளது வீட்டிற்கு அழைத்துப் போனாள். வெள்ளிக்கிழமை மதியம் கேன்டீனை தவிர்த்து வெளியே ஹோட்டலில் சாப்பிட்டோம்.

சனிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்ததும் என்னுடனேயே வந்து என்னை பஸ் ஏற்றி வழியனுப்பி விட்டுப் போனாள்.

பேருந்து பயணம் முழுக்க அர்ச்சனாவின் எண்ணமே சந்தோஷமாய் ஆக்ரமித்தது.

ஒன்பது மணிக்கு கிராமம். சூடாய் இட்லி, வெங்காய சட்னி. அம்மாவின் கை மணத்தை ருசித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினேன்.

மறுநாள் சீக்கிரமாகவே விழிப்புக் கண்டுவிட்டது. காரணம் அதே குருவிகள்.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள மிக பிரபலமான காபி வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க!
ஓவியம்: கரோ...

ஜன்னலைத் திறந்தேன். கூட்டிற்கு வெளியே அவற்றின் தலை தெரிந்தது. சாம்பலும், கறுப்பும், கலந்த நிறம். ஆரஞ்சு நிற அலகுகள் உரசிக் கொள்ள, இரண்டும் 'கீச்... கீச்... என்றது. தங்களுக்குள் பேசிக் கொள்கிறதோ!

சிறிது நேரம் அதனையே ரசித்துவிட்டு எழுந்து கீழே இறங்கினேன். அம்மா எதிர்ப்பட்டாள்.

"இன்னிக்கும் குருவி தூக்கத்தை கெடுத்துடுச்சா... நீ ஊருக்குப் போன அன்னிக்கே பேத்தி பிறந்திருக்கான்னு சொல்லிட்டு வெள்ளைச்சாமி வெளியூர் போய்ட்டான். இன்னும் வர்ல. அதனாலதான் கூடு அப்படியே இருக்கு. அவன் திரும்பி வந்ததும் முதல் வேலையா பிரிச்சிப் போடச் சொல்லிடறேன்."

"அந்தக் குருவிங்களை விரட்ட வேண்டாம். கூடு அப்படியே இருக்கட்டும்" என்றேன்.

அம்மா என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 08 அக்டோபர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com