சிறுகதை – பயணம்!

ஓவியம்; ஜெ...
ஓவியம்; ஜெ...

-சாருகேசி

கிராமத்துக்கு காரில் புறப்படும்போது அம்மா ரொம்பவும் உற்சாகமாக இருந்தாள். கண்கள் மலரச் சிரிப்பும், சந்தோஷமுமாக இருந்தாள். "நீ பிறந்த வீட்டைக் காண்பிக்கிறேன், பார்!" என்றாள் நெகிழ்ச்சியுடன். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டான்.

"அதெல்லாம் இப்போ இடிந்து சிதிலமாகியிருக்கும் அம்மா!" என்றான். "இல்லை என்றால் யாரானும் சுலைமானோ, ஜேக்கப் ஜார்ஜோ அதை வாங்கி, அடையாளமே தெரியாமல் மாற்றியிருப்பார்."

இருபது வருடங்களுக்கு அப்புறம் சொந்த கிராமத்துக்குப் போகும் சிலிர்ப்பு.

வயல் வெளிகள் வலப்புறமும் இடப்புறமும் பச்சைப் பசேல் என்று காரின் பாய்ச்சலில் சுருண்டன. காற்று அலைக் கழிக்கும் ஓலைகள் இடையே இளநீர்கள் குலுங்க, தென்னை மரங்கள் வழிவிட்டன. நெளிந்து நெளிந்து ஓடும் ஆறுகளின் சலசலப்பு துல்லியமாகக் கேட்டது. அறுநூறு கிலோ மீட்டர் பயணமும் அலுக்கவே இல்லை. கோவையைத் தாண்டியதுமே, கேரளத்தின் இயற்கை வளம் மனசை இதமாக வருடிக் கொடுத்தது. "முதலில் கணபதியான் கோவில். அப் புறம் லட்சுமி வீடு. பிறகு ராமநாதன் மாமா வைப் பார்த்து விசாரித்துவிட்டு அன்றைக்கே திரும்பி விடலாம்!" என்றாள் அம்மா.

"அவரைப் பார்க்காமல் வரக்கூடாது என்று குறைந்த பட்சம் பத்துத் தடவை சொல்லி விட்டார் அப்பா" என்றான் கிருஷ்ணன்

நாகரிகம் ஏதோ சுண்டு விரலால் மட்டுமே தொட்ட மாதிரி,  அங்கங்கே ஒவ்வொரு நவீன வீடு. மற்றபடி கிராமத்தின் இலக்கணம் இம்மியும் மாறாத தெருக்களும், வீடுகளும், எட்டிப் பார்க்கும் மாமிகளும்...

கோயிலில் யாருமே இருக்கவில்லை அந்த வேளையில். பத்தடி தள்ளியிருந்த வீட்டிலிருந்து, நிறுத்திய காரைப் பார்த்துவிட்டு குருக்கள் வந்தார். பூஜை செய்து விபூதி-குங்குமம் கொடுத்தபோது, அம்மா கிருஷ்ணனிடமிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை வாங்கி, கற்பூரம் மெலிதாகச் சுடர்விட்ட தட்டில் வைத்தாள்.

"எங்கேருந்து... பம்பாயா... தில்லியா?" என்றார் குருக்கள்.

"மெட்ராஸ்."

காரைத் தெற்குக் கிராமத்துக்குக் கொண்டுவர டிரைவரிடம் சொல்லிவிட்டு, வயல் வரப்பில் விழாமல் நடந்து, முதல் வீட்டுத் திண்ணையில் எட்டிப் பார்த்து, "லட்சுமீ..." என்று சன்னமான குரலில் அம்மா அழைத்தாள்.

''எந்த லட்சுமியைக் கூப்பிடுகிறீர்கள்?'' என்று உள்ளேயிருந்து குரல் வந்தது. தொடர்ந்து வந்த பெரியவர், கையை உயர்த்திக் கண்களுக்கு மேலாகப் பிடித்தபடி அம்மாவைப் பார்த்தார்.

"லட்சுமி போயாச்சே!" என்றார் கரகரப்பாக.

"எங்கே?"

பெரியவர் மேலே கையைக் காண்பித்தார், பேசினால் குரல் உடைந்து போய், அழுகுரல் வெளிப்படுமோ என்று பயந்து.

"இவன் என் பிள்ளை. கிருஷ்ணன்" என்றாள் அம்மா சட்டென்று. குளிக்கப் போகும்போதும், விளையாடவும் கூடவே வந்த அந்த நாள் சிநேகிதியின் மறைவு தாக்கிய சோகம் வெளிப்படாது சமாளிக்கும் முயற்சியும் அதில் தெரிந்தது.

இதையும் படியுங்கள்:
சாபத்தையே சாதகமாக்கிக் கொண்ட வானரங்கள்!
ஓவியம்; ஜெ...

"இவன் பிறந்த வீடு இது!'' என்று பக்கத்து வீட்டைக் காண்பித்தாள் அம்மா. "இவனுக்கு வீட்டைக் காட்டலாம் என்று நினைத்தேன்."

"அதை வக்கீல் ரெண்டு வருஷம் முன்னால் விற்று விட்டாரே! இப்போ பூட்டிக் கிடக்கிறது. சாவிகூட இங்கே தரவில்லை!" என்றார் பெரியவர்.

அம்மாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. கிருஷ்ணனுக்கும் தான்.

"ராமநாதன் இருக்கிறாரோ?'' என்று கேட்டாள் அம்மா, தயங்கி. "இருக்கார். படுக்கைதான். நாலு வீடுகள் சேர்ந்தாற்போல் எதிரே தெரிகிறதே, அதில் முதல் வீடு.''

"எனக்குத் தெரியும். ஞாபகம் இருக்கிறது" என்றாள் அம்மா. புறப்பட்டபோது இருந்த உற்சாகத்தில் ஒரு துளி அந்தக் குரலில் வெளிப்பட்டது.

'நாலு வீடுகளை ஒரு சேரக் கட்டி, எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே தாழ்வாரம் போல்... என்ன வகைக் கட்டட அமைப்பு இது?' என்று கிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, முதல் வீட்டுத் திண்ணையில், கட்டிலில் படுத்திருந்த பெரியவரைப் பார்த்தாள் அம்மா.

"ராமநாதனா? ராமநாதன்தானா...?" என்று கேட்டாள் ரொம்பவும் சுவாதீனமாக.

போர்வையை சிரமத்துடன் விலக்கிவிட்டு, மெல்ல எழுந்தார் ராமநாதன்.

"யாரு,  தங்கமா? தங்கம் குரல் மாதிரி அல்லவா இருக்கிறது?"

"தங்கம்தான்," என்றாள் அம்மா. "என்ன உடம்புக்கு?"

"உடம்புக்குப் பெரிதாக ஒண்ணும் இல்லை" என்று சொல்லிவிட்டு, சற்றே நிறுத்தி, உள்ளே கையைக் காட்டினார் ராமநாதன். வாசலிலிருந்து உள்ளே செல்ல முடியாமல் கதவு சாத்தியிருந்தது. கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன் உள்ளே படுக்கவில்லை? வெளியே இப்படிப் படுத்தால் மழை, வெயில் எல்லாம் அடிக்காதா?'' என்று கேட்டாள் அம்மா.

ராமநாதன் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

மூன்றாவது வீட்டிலிருந்து ஒரு பெண், எவர்சில்வர் தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டுவந்து, ராமநாதன் கையில் கொடுத்தாள். கொடுத்துவிட்டு, "நீங்கள் எல்லாம் யார்?" என்பது மாதிரி ஒரு பார்வை பார்த்தாள் .

"அப்பாவோட ஃப்ரெண்டு ராமநாதன்... நாங்கள் மெட்ராசிலேருந்து வரோம்" என்றான் கிருஷ்ணன்.

ராமநாதன் மெதுவாகச் சாப்பிட்டு, தம்ளரிலிருந்து இரண்டு விழுங்கு தண்ணீரைக் குடித்துவிட்டு, தட்டிலேயே கையைக் கழுவி, வாயைத் துடைத்துக் கொண்டார்.

சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்த பெண் விடை பெறுகிற மாதிரி ஒரு புன் சிரிப்புச் சிரித்துவிட்டு, தட்டை எடுத்துக் கொண்டு மெதுவாகப் போய், கண் பார்வையிலிருந்து மறைந்தாள்.

''உம் பிள்ளை எங்கே?"

"ஆபீஸ்" என்றார் ராமநாதன். "பாலக்காட்டில்."

"உங்கள் மருமகள் எங்கே? அவள் சாதம் போட மாட்டாளா?" என்றாள் அம்மா. ஒரு சின்னக் கோபம்கூட அந்தக் குரலில் தொனித்ததை கிருஷ்ணன் உணர்ந்தான்.

"நித்தியம் இதுதான் வழக்கம்!" என்றார் ராமநாதன், "ஏதோ மூணாம் வீட்டுலேருந்து, மனசிறங்கி ஜானகிதான் என் பெண் மாதிரி வந்து வேளா வேளைக்குக் காபியும் சாப்பாடும் தருகிறாள். இந்த வீட்டுக் கதவு திறக்காது. என் பிள்ளை வரும்போது திறந்தாலும், என்னைக் கவனிக்க மாட்டாள் என் நாட்டுப் பெண்!"

இதையும் படியுங்கள்:
அறியாமையும் கை கொடுக்கும்..!
ஓவியம்; ஜெ...

பெரிய பெரிய ஆரஞ்சுப் பழங்களையும் கொத்துக் கொத்தாக திராட்சையையும் அவர் கட்டிலருகே வைத்தாள் அம்மா. "சாப்பாடு கொண்டு வரும்போது அந்தப் பெண்ணிடம் உரித்துத் தரச் சொல்லிச் சாப்பிடுங்கள்!"

திரும்ப காரில் ஏறி உட்கார்ந்து கிளம்பிய பிறகு அம்மா எதுவுமே பேசவில்லை. கிராமத்தை விட்டுத் தாண்டியதும், கணபதியான் கோயில் கண்ணிலிருந்து மறைந்தது.

"உன் அப்பாவிடம் ராமநாதன் பற்றி எதுவும் சொல்லாதே! சௌக்கியமாக இருக்கிறார் என்று மட்டுமே சொல்லு. இரண்டு பேரும் உசிருக்கு உசிரா பழகினவர்கள். கேட்டால் தாங்காது அவருக்கு!" என்றாள் அம்மா.

புறப்பட்டபோது இருந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் தலைகீழாக மாறிய சூழ்நிலையில் கிருஷ்ணனின் மனசு வெகுவாகக் கனத்தது.

ஒரு பெரிய கண்ணீர்த்துளி அம்மாவின் கண்களிலிருந்து இறங்கி, அவள் அணிந்திருந்த கண்ணாடியில் படாமல் தப்பி, வலது கையில், இரண்டு வளைகளுக்கு இடையே விழுந்து தெறித்தது.

பின்குறிப்பு:-

கல்கி 20  நவம்பர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com