சிறுகதை - பறித்த மலர்கள்!

ஓவியம்: மாருதி
ஓவியம்: மாருதி

-டி. ரவீந்திரன்

ந்தடிகள் ஓய்ந்துபோய், உறவினர்கள் எல்லோரும் கிளம்ப, வீடு பழைய இயல்புக்கு வந்தது. ராஜா அந்த சந்தர்ப்பத்துக்கு எதிர்நோக்கியிருந்தாற்போல் குமார் அருகில் நெருங்கினான்.

"அண்ணா மாடிக்கு வர்றியா... கொஞ்சம் பேசணும்."

"என்ன விஷயம்? இங்கேயே சொல்லேன்... அம்மாவுக்குப் பாரேன். அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிட்ட வெட்கம் இன்னும் போகலை. புதுப் பொண்ணாட்டம் மருமகள்கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க."

ராஜா அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை.

சந்தோஷத்தோடு, சந்தோஷமாகச் சில காரியங்களை முடித்துவிட வேண்டும். சில கடினமான விஷயங்களைச் சந்தோஷமான வேளையில் கலந்தால், அதன் வீரியம் இற்றுப்போய் இயல்பாகப் போய் விடுவதுண்டு. அந்தச் சந்தர்ப்பம் இப்பொழுதுதான்; இதை நழுவ விடக் கூடாது.

"மாடிக்கு வா... விரிவாப் பேசணும்." குமார் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். கண்களில் குழப்பம் தெரிய, சேரில் கிடந்த துண்டை எடுத்துத் தோளில் போர்த்திக்கொண்டு ராஜாவைத் தொடர்ந்தான்.

"என்ன ராஜா யோசனை...? செலவு பத்தியா...? எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு என் பங்கைக் கொடுத்துர்றேன்."

"அதிருக்கட்டும். எனக்குத் திருவனந்தபுரத்துக்கு டிரான்ஸ்பர் ஆயிருக்கு, தெரியுமா...?"

சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்த குமார், சட்டென்று நிமிர்ந்து பார்த்து, ''என்னடா சொல்ற...?" என்றான் நம்பாமல்.

"ஆமா... ஏரியா சேல்ஸ் மேனேஜரா பிரமோஷன் ஆயிருக்கு.. அடுத்த மாசம் ஜாயின் பண்ணணும்."

"ஆல் த பெஸ்ட்... அப்போ குடும்பத்தையும் அங்கேயே கொண்டு போகப் போறியா..?"

ராஜா அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் "உனக்கு எப்போதான்
தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்?" என்று மறுகேள்வி கேட்டான்.

''இன்னும் நாலு வருஷமாகலாம். மேலும் எனக்கும் இங்கே வர்றதிலே அவ்வளவு இஷ்டமில்லை ராஜா... டில்லில ஃப்ளாட் ஒண்ணு வாங்கி செட்டில் ஆயிடலாமா? வேண்டாமான்னு குழப்பத்திலே இருக்கேன்."

"நீயும் டில்லிலே இருக்கே. நானும் கேரளாவுக்குப் போகப் போறேன். இந்த சமயத்துல படிப்பு கெட்டுடக் கூடாதுன்னுறதால வாணியையும் பசங்களையும் இங்கேயே விட்டுட்டு நான் மட்டும்தான் திருவனந்தபுரம் போறேன். மேலும்..."

ராஜா பிரச்னையின் ஆரம்பத்திற்கு வந்து மீண்டும் தயங்கினான். இந்த விஷயத்தைப் பின்னொரு சமயம் பேசலாம் என அவனுள் இருந்த 'கனிவு மிக்க ராஜா' அலற, சற்றுக் குழப்பத்துடன் குமாரை நோக்கியபடி இருந்தான்.

"சொல்லு ராஜா... என்ன ப்ராப்ளம்? என்னால உனக்கு ஏதாவது ஆக வேண்டியிருக்கா..?”

"எனக்கு உதவி மட்டுமல்ல குமார். அது உன் கடமையும்கூட!"

குமார் அணைந்து போயிருந்த சிகரெட்டை வீசியெறிந்து விட்டு, இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு, நிதானமாக “சொல்லு என் கடமை என்னன்னு?" என்றான்.

"அப்பா, அம்மாவை உன்கூட டில்லிக்கு அழைச்சிட்டுப் போயிடு."

சொல்லி முடிப்பதற்குள் ராஜாவுக்கு வெந்நீர் குளத்தைத் தாண்டினதுபோல் வேர்த்துப்போய் உடல் நடுங்கியது. காய்ந்துபோன உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு, குமாரைப் பார்த்தான். குமார் அவனை லட்சியம் செய்யாமல் குனிந்தபடி புகை விட்டுக்கொண்டிருந்தான்.

"என்ன யோசிக்கறே...?"

''ம், அதுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சு...?"

"என்னாலே முடியலை குமார். அம்மாவையும், அப்பாவையும் வைச்சுக்கிட்டு சிசுருஷை பண்ண முடியலை... பைனான்ஸும் ரொம்ப டைட்டா இருக்கு. மேலும்..."

"உனக்கும் அப்பாவுக்கும் சண்டையா..?”

"அதெல்லாம் இல்லை. ஆனா, இனிமே வந்திடும்னு தோணுது. இப்போ சின்ன, சின்ன விஷயத்துக்கெல்லாம் தப்பு கண்டுபிடிக்கிறார். காப்பி நேத்து மாதிரியில்லை. சாதம் போடறப்போ ஏன் இப்படி பாறை, பாறையா பேர்த்து வைக்கறேன்னு வாணிகிட்டே கோபிச்சுக்கறார். என் இடம் அவருக்குப் புளிக்க ஆரம்பிச்சிட்டதுன்னு நினைக்கறேன்.''

குமார் அருகில் வந்து, தோழமையாகக் கைகளைத் தோளில் போட்டுக்கொண்டு தட்டிக் கொடுத்தான்.

"வயதானா அப்படித்தான் ராஜா. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ."

தோளிலிருந்த கைகளைச் சட்டென்று குலுக்கலில் விடுவித்துக்கொண்டு, புரியாம பேசறே குமார். இத்தனை வருஷம் உன்கிட்டே இதைப் பத்திப் பேசியிருக்கேனா...?"

"சரி... அப்பாவை நான் கூட்டிப் போறேன். ஆனால் அம்மாவை முடியாது.”

"இல்லை; அவங்களையும் அழைச்சிட்டுப் போயிடு."

“அது முடியாது. அம்மாவுக்கும் ரேணுகாவுக்கும் அவ்வளவா ஒத்துப் போகாது ராஜா. இன்னொரு தடவை நல்லா யோசித்துப் பாரு. வயசானவங்ககிட்டே சின்ன, சின்னக் குறைங்க இருக்கத்தான் செய்யும். நா ஏன் இவ்வளவு சொல்றேன்னா டில்லி அப்பாவுக்கு பிடிக்காது. இங்க அவர் பழைய ஃப்ரெண்ட்ஸ், உறவு இவங்களையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கும் போதும், தெரிஞ்ச இடத்தைச் சுத்தி வந்திட்டிருக்கும்போதும் அவருக்குக் கோபம் வருதுன்னா அங்கே போய் லோன்லியா ஃபீல் பண்ண ஆரம்பிச்சார்ன்னா ரொம்ப கஷ்டமாயிடும்.”

''உனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லு. நீ ஜாலியா டில்லியைச் சுத்தணும். அந்த சுதந்திரம் எனக்கு வந்துடக் கூடாது. நீ யோசிக்கலை. மன்னி என்ன சொல்வாளோன்னு பயப்படறே. வேண்டுமானா அவங்ககிட்டே நானே கேட்கறேன்."

பற்றவைத்த எண்ணெயாய்க் கோபம் வந்தது குமாருக்கு.

"தேவையில்லை... நாளைக்கு அப்பாவுக்கும் சேர்த்து டிக்கெட் ரிசர்வ் பண்ணிடறேன். அவர்கிட்டே விஷயத்தைச் சொல்லி எங்ககூட அனுப்ப வேண்டியது உன் பொறுப்பு."

“அம்மா..?”

"அவங்களை இங்கேயே வைச்சுக்கோ..."

குமார் சொல்லிவிட்டு வேகமாகக் கீழிறங்கிப் போனான்.

இதையும் படியுங்கள்:
கமகமக்கும் முருங்கைப்பூ பிரியாணி!
ஓவியம்: மாருதி

ராஜாவுக்குக் களைப்பாக இருந்தது. காலை முதல் அலைந்த அலைச்சலில், லேசாகக் காய்ச்சல் அடிப்பது போலிருந்தது.

பேண்ட்டை அவிழ்த்துப் படுக்கையில் எறிந்துவிட்டு, கைலிக்கு மாறினான். காலண்டரில் கிழிக்காமல் இருந்த தேதியைக் கிழித்து, கசக்கி எறிந்தான்.

டேபிளில் கிடந்த கவரை உடைத்தான். டில்லியிலிருந்து அப்பா எழுதியிருந்தார்.

டில்லி வாழ்க்கை மாறுதலாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ராஜாவின் திருவனந்தபுர வாழ்க்கையைப் பற்றியும் கேட்டிருந்தார்.

திருவனந்தபுர வாழ்க்கை...?

இனம் புரியாத எரிச்சல் மனம் முழுவதும் வியாபித்தது. திருவனந்தபுரத்தில் கழிந்த இந்த ஒரு மாதமே ஒரு யுகம் போலிருந்தது. நேரம், காலம் தெரியாமல் பெய்துகொண்டிருக்கும் மழையும், சாலையில் எப்பொழுதும் காயாமல் இருக்கும் ஈரமும் ராஜாவுக்குச் சலிப்பைக் கொடுத்தன.

இந்த வாரத்திற்குள் வாணியிடம் மூன்று முறை பேசியாகிவிட்டது. இன்றும் பேசலாமா...? என யோசித்தவன், வேண்டாம் என உடனே எண்ணத்தை மாற்றினான். பேச்சின் முடிவில் வாணியின் குரலில் அழுகை எட்டிப் பார்க்கும். இந்தப் பத்து வருட தாம்பத்யத்தில் ஒரு நாள் கூட அவளைப் பிரிந்து இருந்ததில்லை.

காலிங்பெல் இசைக்க, எழுந்து கதவைத் திறந்தான். ரூம் பாய் நின்றிருந்தான்.

"எந்தா சார் மீல்ஸ் கொண்டாரவா...?"

"வேண்டாம்."

சிவப்பு, சிவப்பாய், கொட்டைப் பாக்கு உருவத்தில் சாதத்தைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.

வாணியின் கைப்பக்குவம் யாருக்குமே வராது. மல்லிகைப் பூவாய், ஆவி பறக்க அவள் பரிமாறும் சாதத்திற்கு எங்கும் இணையில்லை.

வாணியின் நினைவும், குழந்தைகளின் நினைப்பும், வேலையில் நாட்டமில்லாமல் செய்தது. அவர்களைப் பிரிந்து, இப்படி கஷ்டப்படுத்தும் இந்தப் பதவி உயர்வு தேவைதானா என்கிற எண்ணம் எழுந்தது.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், எத்தனை குதூகலமாக இருக்கும்! குழந்தைகளின் விளையாட்டும், சிரிப்பும், வாணியின் பராமரிப்பும் எத்தனை சுகமாக இருக்கும்.

ராஜா சட்டென்று தீர்மானித்தான். மேனேஜர் வீட்டுக்கு போன் செய்து தனக்கு உடல் நலமில்லாததால் ஊருக்குப் போவதாகச் சொன்னான். டிராவல்ஸுக்கு போன் செய்து சென்னைக்கு டிக்கெட் ஒன்று புக் செய்துவிட்டு உடமைகளைத் தயார் செய்ய ஆரம்பித்தான்.

ராஜாவைப் பார்த்ததும் குழந்தைகள் இரண்டும் ஓடி வந்து கால்களைக் கட்டிக்கொள்ள, வாணி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"என்னங்க... என்ன உடம்புக்கு...?" பதறியபடி ஓடிவந்து சூட்கேஸைப் பெற்றுக்கொண்டு, நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

''ஒண்ணுமில்லை... வாணி... உங்களை யெல்லாம் பார்க்காம இருக்கமுடியலை... அதான் கிளம்பி வந்துட்டேன்.''

"எங்களுக்கும் அப்படிதாங்க. ஒண்ணு நீங்க இங்கேயே வந்திடப் பாருங்க. இல்லை நாம எல்லோரும் திருவனந்தபுரத்துக்கே போயிடலாம்."

"பார்க்கலாம் வாணி... ஆமாம் எங்கே அம்மாவைக் காணோம்?''

''உடம்பு சரியில்லை... ரூம்ல படுத்திருக்காங்க.''

ராஜா பக்கத்து அறைக்குள் நுழைந்தான். போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த தாயின் அருகில் அமர்ந்து "அம்மா" என்றான்.

சலனமில்லாமல் இருக்கவே, கை வைத்து அசைத்தான். கண் திறந்து ராஜாவைப் பார்த்ததும் "எப்பப்பா வந்தே?" என்றாள்.

போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தவளைப் பார்த்ததும் அதிர்ந்தான் ராஜா.

இது அம்மாதானா...? ஒரு மாதத்துக்குள் இத்தனை முதுமையா...?

கண்கள் குழிகளாகி... கன்னம் வற்றிப்போய், வறுமையில் உழன்றவளைப் போல தளர்ச்சியுடன்... அம்மாவா... இது...?

“என்னம்மா... என்னாச்சு... உங்க உடம்புக்கு...?"

''ஒண்ணுமில்லைப்பா... வயசாயிடுச்சுல்லே..."

அம்மாவின் குரல் கமறலாக ஒலிக்க, கண்களில் மெலிதாக நீர்க்கோடு படர, தலை குனிந்துகொண்டாள்.

ராஜாவுக்குப் பளீரென்று உறைத்தது.

இதையும் படியுங்கள்:
தேங்காய் பூவின் மருத்துவ மகத்துவம்!
ஓவியம்: மாருதி

அம்மாவின் இந்த நிலைமைக்குக் காரணம் புரிந்தது. அப்பாவின் பிரிவு, இவளை நிலைகுலையச் செய்துவிட்டது. நாற்பதாண்டு இணைப்பைச் சட்டென்று பிரித்ததில் ஏற்பட்ட பாதிப்பு.

பத்தாண்டு குடும்ப வாழ்க்கையின் சிறு பிரிவே என்னைத் திணறடிக்கும்பொழுது, அம்மாவின் நிலைமை எப்படியிருக்கும்!

வாழ்வின் கடைசிக் காலத்தைச் சந்தோஷமாக, ஒருவருக்கு மற்றவர் துணையாக, மகிழ்ச்சி பொங்க, பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டு, இத்தனை நாட்கள் உழைத்த உழைப்புக்கு ஓய்வாக இருக்க வேண்டியவர்களை, சுயநலத்தில் பிரித்தது சரியா...?

வெளியே வந்தான். குழந்தைகள் இரண்டும் விளையாடிக்கொண்டிருக்க, வாணி அடுப்படியில் இவனுக்குப் பிடித்ததைத் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

''வாணி, நான் போஸ்டாபீசு வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்."

"என்னங்க? என்ன விஷயம்?"

"குமாருக்குத் தந்தியடிச்சு அப்பாவை இங்கே திருப்பி அனுப்பச் சொல்லப் போறேன்."

வாணி தலையசைத்துச் சிரித்தாள். அதில் இவனைப் புரிந்துகொண்ட அர்த்தமிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 22  நவம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com