சிறுகதை; ருக்குமணி வண்டி வருது!

ஓவியம்; நடனம்
ஓவியம்; நடனம்
Published on

-அகிலா கார்த்திகேயன்

ன்று பந்த். எதிர்க்கட்சிகளின் பந்த். அதனால் ஆபீஸ் இருந்தது. பஸ் ஓடவில்லை. பிரதான சாலை வெறிச்சோடியிருந்தது. ஆபீஸை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் நடந்தாக வேண்டும்.

பின்னால் 'ட்ரிங்' கென்று சப்தம் கேட்டுத் திரும்பினேன். சைக்கிளுடன் சாம்பமூர்த்தி நின்றுகொண்டிருந்தார்.

"என்ன சார் நடந்தேவா வர்றீங்க?” என்றார்.

''ஹி.... ஹி..." என்றேன்.

"சார் இந்த சைக்கிளைப் பிடிங்க சொல்றேன்" என்றவர், கைத்தலம் தந்தேன் என்ற பெருமைமிகு பார்வையோடு அந்த வண்டியின் கரங்களை என் கையில் திணித்தார்.

"நீங்க என் சைக்கிள்ல போங்க... நான் தனசேகரன் சைக்கிள்ல டபுள்ஸ் வந்துடறேன்" என்றவர், பின்னால் வந்துகொண்டிருந்த தனசேகரன் வண்டியில் ராணி சம்யுக்தையாகி விருட்டெனப் பறந்தார்.

அடப்பாவி...! மனம் குரங்குப் பெடலாய்க் குதித்தது. இது என்ன சோதனை...வெறுங்கையோடு நடப்பதே இந்த நாற்பது வயதில் மூச்சிரைக்கிறது. இந்த அழகில் மஞ்சுவிரட்டுக் காளையின் மூக்கணாங் கயிற்றைப் பிடித்தாற்போல் இது வேறா....! சாம்பமூர்த்தியைச் சபித்தேன். கூடவே முப்பது வருடத்திற்கு முன்னால்,

"கட்டையிலே போறவனே... உனக்குச் சுட்டுப்போட்டாலும் சைக்கிள் விடவே வரக்கூடாது" எனப் பிடிசாபம் விட்ட 'மடி'ப் பாட்டியையும் சபித்தேன்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
ஓவியம்; நடனம்

னது ஆரம்பகால சைக்கிள் முயற்சிகளில், அநேக தடவை 'இடி'பட்டவள் இந்த மடிப் பாட்டி.

"நாசமாய்ப் போக!" "உன் மேலே இடி விழ" "மூதேவி... படவா" என்றெல்லாம் தோத்திரம் பாடி, அந்தப் பாட்டி விட்ட சாபம்தான், அடுத்த முப்பது வருடங்களாய் முயன்றும் எனக்கு இந்த ‘சைக்கிளாலஜி' (சைக்கிள் டெக்னாலஜி) பிடிபடாமல் செய்துவிட்டது.

அதோடு விட்டிருக்கலாம், அந்த சைக்கிள் முயற்சியை. இருபத்தெட்டில் மறுபடியும் முயன்றிருக்க வேண்டாம்தான். அட, தடிகடா வயதாகிறதே, பகல் வேளையில் கற்றுக்கொண்டால் பலபேர் பழிக்கக் கூடுமே என்று இரவில் வேலைக்குச் சேர்ந்த புதிய ஊரில் துவி சக்கரவண்டியின் பயற்சியைப் புதுப்பித்தேன். என் நண்பன் துணையோடு அந்தப் பிரதான சாலையில் வண்டியில் ஏறி அமர்ந்த நேரம் பார்த்தா தியேட்டரில் முதல் ஆட்டம் முடிந்திருக்க வேண்டும்? "ஓரம்போ... ஓரம்போ" என்று எச்சரித்தும் அது ருக்மிணியின் காதில் விழாமல், படம் பார்த்து விட்டு வந்த உற்சாகத்தில் என் சைக்கிள் மேல் மோதி என்னை வீழ்த்தினாள். உடனே கூட வந்திருந்த அவள் பாட்டி, குய்யோ முய்யோ எனக் கூச்சலிட்டு ஒரு கூட்டத்தைக் கூட்ட, அந்த சிறிய விபத்து ருக்மிணியை என் தலையில் கட்டும் பெரிய விபத்தாக முடிந்தது.

அதற்குப் பிறகு சைக்கிளைக் கண்டாலே 'சைக்கிளாஜிகலாக' ஒரு பயம் வர, அதை ஓட்ட முயற்சி செய்வது அவ்வளவு உசிதமல்ல என்று விட்டுவிட்டேன். ஆனால், எனக்கு சைக்கிள் விடத் தெரியாது என்ற ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பது என்பது, பஞ்சரான டயரில் காற்று ஏற்றுவது போன்ற கஷ்டமான சமாசாரமாக இருந்தது.

இதற்கு முன் வேலை செய்த அலுவலகங்களிலெல்லாம் நான் மட்டும்தான் 'சைக்கிள் லோன்' போடாத ஆசாமியாக இருந்திருக்கிறேன். ஏன் என்று கேட்பவர்களுக்கு "நான் எந்த லோனையும் அவெய்ல் பண்றதில்லை... சம்பளம் முழுசா வர வேணாமா?" என்று பொய் சொல்லப் போய், அதை மெய்ப்பிக்க வேண்டி, நாக்கில் நீர் ஊற, எந்த ஆபீஸ் லோனையும் அனுபவிக்க முடியாத பரிதாபத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.

சென்னைக்கு மாற்றலாகி வந்து மூன்று வருடங்களாகின்றன. இன்றுதான் இக்கட்டாய் இப்படி மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் இந்த சாம்பமூர்த்தியால் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அனேகமாக எல்லோரும் பஸ்ஸில் ஆபீஸ் வந்து போய்விடுவதால், என் இயலாமை பற்றி யாருக்கும் தெரிந்ததில்லை.

அதுவும் இன்றோடு இந்த ஆபீஸை விட்டு வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும் நிலையில், எனக்கு சைக்கிள் விடத் தெரியாது என்பதை பறைசாற்ற வேண்டாமென்ற எண்ணத்தில்தான் என்னை தேற்றிக்கொண்டு ஆபீஸை நோக்கித் தள்ளிக்கொண்டிருந்தேன். சரட்.... சரட் .... சைக்கிள் ஈனஸ்வரமாக சப்தம் போட்டது. சாம்பமூர்த்தியின் முப்பாட்டனார் காலத்து சமாசாரம்.... சுத்த காயலான் கடைப் பண்டம்... ஆத்திரத்தோடு காற்றை இறக்கிவிட்டேன்.

இதையும் படியுங்கள்:
சுவையான நெய்சோறு- சிதம்பரம் ஸ்பெஷல் கத்திரிக்காய் கொத்சு!
ஓவியம்; நடனம்

"என்ன சார் இத்தனை லேட்?" என்று நான் நினைத்தவாறே சாம்பமூர்த்தி கேட்டார்.

"அட என்னப்பா சைக்கிள்லே காத்தே இல்லாம குடுத்துட்டு வந்துட்டயே!" முகத்தில் ஒரு போலி எரிச்சலோடு அலுத்துக்கொண்டேன். சைக்கிளைப் பார்த்துவிட்டு சாம்பமூர்த்தியும் 'உச்சு' கொட்டி, சாரி சார் என்றார். நான் என் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டேன்.

அன்று மாலை, மாற்றலாகிப் போகும் எனக்குப் பிரிவு உபசாரம் நடந்தது. என் மேல் எல்லோருக்கும் ஒரு தனி அபிமானமுண்டு. மணி சார்தான் நான் வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துவிட்டார். இதற்கு வசூல் செய்ய ஆரம்பித்தவர் திக்குமுக்காடிப் போய்விட்டிருக்கிறார். 'நான் நீ' என்று ஆளாளுக்கு இருபது, ஐம்பது என்று போட்டதில், ‘டீ பார்ட்டி’க்கு ஏகப்பட்ட ஐட்டங்கள்.

வழக்கமான உபசார வார்த்தைகளைப் பேசி முடித்துவிட்டு, மணி என்னிடம், "சார், உங்களுக்கு ஒரு சின்ன பிரஸன்ட்....!” என்றார்.

ஆஹா, என்னவாய் இருக்கும்? அந்தச் சின்னப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். பளபளப்பாய் ஒரு சாவி. என் ஆவல் கண்ணில் தெரிய மணி, வாசல்புறத்தைச் சுட்டிக் காட்டினார்.

அங்கே -

பளபளவென்று புத்தம் புது சைக்கிள்! சைக்கிள் செயினால் அடிபட்டவனாய் மயங்கி விழுந்தேன்!

பின்குறிப்பு:-

கல்கி 09  ஜனவரி  1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com