சிறுகதை: “சொராச்சியம் கெடச்சிடுச்சு!”

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

முன்குறிப்பு:  என் பாட்டனார்களும், பாட்டியார்களும், அவர்கள் சிறுவயதிலிருந்து வளர்ந்த விதத்தையும், அப்பொழுது நம்நாடு இருந்த நிலைமையையும் விவரிப்பதைக் கேட்பதில் என்னுடைய சிறுவயதில் எனக்குத் தனி உற்சாகம். பாரதத்திற்குச் தன்னாட்சி (சுயராஜ்ஜியம்) கிட்டியபோது நாடு, ஊர், கிராமங்கள் எல்லாம் எப்படி இருந்தன, மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை அவர்கள் வாயிலாக ஓரளவு அறிந்து கொண்டேன். அதுவே இக்கதைக்கு உயிர்கொடுத்தது 
- ஒரு அரிசோனன்

 

“டேய் மண்ணாங்கட்டி! சொராச்சியம் கெடச்சிடுச்சு, தெரியுமாடா ஒனக்கு?” என்று தன்முன் தலையைச் சொறிந்துகொண்டு நின்றவனைப் பார்த்துக் கேட்டான், அந்தச் சிற்றூரின் முடிதிருத்துபவர்கள் மூவரில் ஒருவனான முனியாண்டி.

… ஒரு மாதம் வளர்ந்த தாடி, அள்ளி முடிந்த செம்பட்டைக் கேசம் இரண்டுமே எண்ணெய் கண்டதே இல்லை என்பதைப் பறைசாற்றின. இடுப்பில் கட்டிய, கரும்பழுப்பேறிய லங்கோடு தவிர வேறெதுவும் மண்ணாங்கட்டி என்று அழைக்கப்பட்டவனின் புழுதிபடிந்த உடலில் இல்லை. 

அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு என்ன பெயர் வைத்தனர் என்பது அவனுக்கே தெரியாது. அவன் மூன்று வயதாக இருக்கும்போதே, கிராமத்துக்கு வந்த பெயர் தெரியாத வியாதியில் இருவரும் போய்ச் சேர்ந்துவிட்டனர். இறந்த இருவரின் சடலத்தின் அருகில் அழுதுகொண்டே கிடந்த அவனை யாரோ பார்த்துப் பரிதாபப்பட்டு, தம்முடன் இழுத்துச் சென்றனர். 

சமூகத்தில் அடித்தட்டைச் சேர்ந்தவர் அவன் பெற்றோர். எனவே, யாரும் அவனைப் பரிந்து வளர்க்க முன் வரவில்லை. யாராவது இரக்கப்பட்டுக் கொடுக்கும் உணவை உண்டு வளர்ந்தான். ஐந்து, ஆறு வயதுவரை உடலில் எந்தவித ஆடையும் கிடையாது. யாரோ கொடுத்த பழைய துண்டுதான் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆடையாக இருந்தது.

மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றிய ஒருசிலர் அந்தச் சிற்றூரில் இருந்தனர். அவர்களில் ஒருவரான முத்துசுவாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வி பயிற்றுவித்தார். அங்கு வந்து நின்று கவனித்த அவன் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறித்துப் பார்ப்பான். 

“ஏண்டா மண்ணாங்கட்டியாடா, நீ? பேந்தப் பேந்த முழிக்கறியே! ஒன் பேரு என்ன?” என்று முத்துசுவாமி கேட்டதும், பதில் சொல்ல முடியாது விழித்தவன், தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினான்.

அங்கிருந்த மற்ற பிள்ளைகள் அவனை மண்ணாங்கட்டி என்றே அழைக்கத் தொடங்கினர். அதிலிருந்து அவனுக்கு அப்பெயரே நிலைத்தது. ஒருமாதம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தூரத்தில் நின்று கவனித்தவனுக்கு ஒன்று முதல் பத்துவரை எண்ணத் தெரிந்தது.

அதற்குள் தங்கள் சமூக அந்தஸ்துக்குத் சற்றும் தகுதியில்லாத அவன் எப்படி அங்கு மற்ற பிள்ளைகளுடன் படிக்கலாம் என்று பிள்ளைகளைப் பெற்றவர்களில் ஊருக்குப் பெரியவர்களான மெய்யப்பன், ராமசாமி, கிருஷ்ணசாமி, கருப்பையா ஆகியோர் முத்துசுவாமியுடன் சண்டைக்கு வந்தனர். அவனுக்குப் படிப்புச் சொல்லித்தந்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிடுவோம் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்தனர். வேறு வழியின்றி முத்துசுவாமி அவர்களுக்குப் பணிந்துபோக வேண்டியிருந்தது.

மண்ணாங்கட்டியின் படிப்புக்கு அத்தோடு ஒரு முற்றுப்புள்ளி -- இல்லையில்லை, முட்டுக்கட்டை விழுந்தது. அவன் கற்றுக்கொண்டதெல்லாம், மரமேறுவது, எடுபிடி வேலை பார்ப்பது -- அதுவும், அவனது பணியை ஏற்றுக்கொள்பவர் சொல்லிக்கொடுப்பதன் மூலம் நடந்தது.

அதற்குப் பிறகு மண்ணாங்கட்டியின் வாழ்வு மற்றவரின் தயவினால் நடக்கத் தொடங்கியது. குரங்கைவிட வேகமாக மரமேறும் அவனது திறமை தென்னைமரம் வைத்திருப்போருக்குத் தேவைப்பட்டது. இளநீர், தேங்காய்களைப் பறித்துப் போடுவான். அதற்கு வெகுமதியாக ஒரு மரத்திற்கு ஒரு இளநீரோ, தேங்காயோ அவனுக்குக் கிடைக்கும். அவனது அன்றைய வயிற்றுப் பிழைப்பு நிறைவேறிவிடும்.

வாரச் சந்தை பக்கத்து ஊரில் வந்ததால், அங்கிருந்த ஒரு வியாபாரியிடம் தேங்காய் நார் உறிக்கவும், கயிறு திரிக்கவும் கற்றுக்கொண்டான். அவர் பரிதாபப்பட்டுக் கொடுக்கும் பழைய மேல்துண்டு அவனுக்கு மானத்தைக் காக்கும் ஆடையாகவோ, லங்கோடாகவோ (கோமணம்) மாறும்.

அறுவடை காலத்தில் கதிர்களை மூட்டைகட்டவும், மூட்டைதூக்கவும் போய்விடுவான். அதனால் அவனுக்குக் கொஞ்சம் நெல் கிடைக்கும். அதை அரிசிமில்லுக்குச் செல்லும் அய்யாவுக்குக் கொடுத்து அரிசியும், தவிடும் பெற்றுக்கொள்வான் - அவர் சொல்லும் எடுபிடி வேலைகளைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டு. 

அவனிடம் வாங்கும் வேலைக்கு எவரும் கூலி என்று காசு எதையும் கொடுத்ததில்லை. பண்டமாக எதையாவது கொடுப்பார்கள். அவனும்  முகம்சுளிக்காமல் நிறைவுடன் அதைப் பெற்றுக்கொண்டு அந்த கிராமத்தில் வளையவருவான்.

இப்படியே ஆண்டுகள் செல்லச் செல்ல, அவனுக்கு முனியாண்டியின் நட்பு கிடைத்தது. கள்ளம்கபடற்ற அவன்மீது முனியாண்டிக்கும் ஒரு இனமறியாப் பாசம் ஏற்பட்டது. உடன்பிறக்காத தம்பியாக எண்ணினாலும், அதை வெளிக்காட்டமாட்டான்.

மண்ணாங்கட்டியோ, முனியாண்டியைத் தன் இதயபீடத்தில் ஏற்றிவைத்துப் போற்றினான். தனக்குத் தெரியாததைச் சொல்லித் தரும் ஆசானாக மதித்தான்.  அவனை உலகத்திலேயே மிகப் பெரிய அறிவாளியாகவும் எண்ணினான்.

எப்படியோ ஒரு பெண் மண்ணாங்கட்டியுடன் வாழத் தொடங்கினாள். ஒரு கண் பூவிழுந்த, முகமெங்கும் அம்மைத் தழும்பு நிறைந்த அவள், அவனுடன் எப்படிச் சேர்ந்தாள் என்பது தனிக் கதை. 

ஊருக்கு வெளியில் கண்மாய்க் கரையிலுள்ள ஒரு வேப்பமரத்துக்கு அருகில் பனை ஓலைகளால் கூரைவேய்ந்து எட்டடிக் குச்சு கட்டிக்கொண்டான், மண்ணாங்கட்டி.  இதனால் கண்மாய் மதகைக் காவல் காக்கும் பணி அவனுக்குக் கொடுக்கப்பட்டது…

… தன்னையே பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்ற மண்ணாங்கட்டியை நோக்கி, “என்னடா மண்ணாங்கட்டி! நான் ஒனக்குப் பெரிய விசயத்தச் சொல்லுறேன். நீ பேய் முளி முளிச்சிக்கிட்டிருக்கியேடா?” என்று செல்லமாக அதட்டினான், முனியாண்டி.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்தாமே இது! உங்களுக்குத் தெரியுமா?
ஓவியம்: தமிழ்

“சொராச்சியமா, அப்படீன்னா இன்னா, அண்ணாச்சி? அது எங்கேந்து கிடச்சுது? அது இன்னா, சாப்பிடற துன்பண்டமா?” காவிபடிந்த பற்களைக் காட்டியபடி கேட்டான், மண்ணாங்கட்டி.

“மண்ணாங்கட்டினு ஒனக்கு வச்ச பேரு சரிதான்டா! எப்பப்பாரு, தீனிலயே ஞாபகம் ஒனக்கு,” என எள்ளி நகையாடிய முனியாண்டி, எச்சிலை உமிழ்ந்தான்.

“நா என்னத்தக் கண்டேன், அண்ணாச்சி?  ஒங்கள மாதிரி திண்ணப் பள்ளில நாலு வருசமா படிச்சேன்? நா அங்கிட்டு வரப்படாதுன்னுதான் வெரட்டி அடிச்சுப்பிட்டாகளே!” என்று அலுத்துக்கொண்டான் அவன்.

“சொராச்சியம்னா நம்மள நாமே ராசாங்கம் பண்ணறதுடா?” முனியாண்டி விளக்க முயன்றான்.

“அப்படீன்னா இதுவர யாரு ராசாங்கம் பண்ணினாக?” அவனுக்கு ராஜாங்கம் என்பது என்னவென்று புரியாவிட்டாலும், அதுவும் தெரியாது என்று தன் அறியாமையை முனியாண்டிக்குக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

“வெள்ளைக்காரங்கடா, மண்ணாங்கட்டி! மகாத்துமா காந்தி அவங்ககூடப் போராடி நமக்குச் சொராச்சியம் வாங்கிக் கொடுத்தாரு, தெரியுமா ஒனக்கு?” பெரிய உண்மையை அவனுக்கு விளக்கியதுபோல பெருமிதத்துடன் கூறினான், முனியாண்டி.

“வெள்ளைக்காரங்களா? அவுக எப்படி இருப்பாக? நம்ம பெரியவூட்டுப் பொம்பளங்கமாரி வெளுப்பா இருப்பாகளா? அவனுகளைப் பார்த்திருக்கீங்களா, அண்ணாச்சி?” என்று கேட்டான்.

“நான் எங்கடா அவனுகளப் பாக்கறது? நாந்தான் பக்கத்து டவுனுக்குக்கூடப் போனது கிடயாதே!”  என்ற முனியாண்டி, “அது சரி, எங்கடா இந்தப் பக்கம் வந்தே?” என வினவினான்.

“மூணு நாளா எதுவும் சாப்பிடலே, அண்ணாச்சி. கண்ண இருட்டிக்கிணு வருது.  எனக்கு இல்லாட்டாலும் போகுது. இன்னும் மூணு நாளுகூட தண்ணியக் குடிச்சிட்டுத் தள்ளிடுவேன். பாவம் எம் பொஞ்சாதியும் பட்டினிதான். எங்க ரெண்டுபேரயும் விட்டுத்தள்ளுங்க, அண்ணாச்சி. கொளந்ததான் பாவம், அதுக்குப் பாலு கொடுக்கக்கூட அவ ஒடம்புல சத்தில்ல. ரெண்டு நாளாப் பாலு வத்திப்போச்சு. வெறும் தண்ணிய எப்படி கொளந்தக்குக் கொடுக்கறது? உங்ககிட்ட  பசும்பாலோ, எருமப் பாலோ, இருந்தாக்க ஒரு கொவள கொடுங்க அண்ணாச்சி, புண்ணியமாப் போகும்!”

“ஏண்டா மண்ணாங்கட்டி! நான் என்ன வூட்டுல எருமையையும், பசுமாட்டையுமா கட்டிவச்சுப் பால் கறந்துக்கிட்டு இருக்கேன்னா நெனக்கறே! சிலபேரு வூட்டுல பசுமாடு இருக்கும். பசுமாட்ட வச்சு பால் வாபாரம் செய்யறவருகூட பெரிய மனுசங்களுக்கு மட்டுந்தான் பாலு விக்கறாரு. வெவசாயம் பண்ற அய்யாவு எருமைமாடு வச்சு அவுக தேவைக்கு பாலு கறந்துக்கறாரு. நாம எங்கடா பாலையும், தயிரையும் கண்டோம்?” என்று அலுத்துக்கொண்டான், முனியாண்டி.

“அண்ணாச்சி, நீங்கதான் பெரியமனுசங்க வூட்டுக்குச் சவரம் செய்யப் போறீங்களே!  அவுக சிலதபா உங்களுக்கு மிஞ்சினதக் கொடுத்திருக்கலாமில்ல?” என்று கேட்டுப்பார்த்தான், மண்ணாங்கட்டி. அவனது நப்பாசை அவனுக்கு…

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

அந்தச் சிற்றூரில், பலர் வீட்டுக்கு முகச் சவரம் செய்து சிகை திருத்துவதற்கும், கைம்பெண்களின் தலைமுடியை மழிப்பதற்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வீட்டுக்குப் பின்வழியாகச் சென்றுவருவான், முனியாண்டி. மாதம் ஒருமுறை அரிசி, சிலசமயம் மிஞ்சிப்போன சோறு, பால், மோர்கூட அவனுக்குக் கிடைக்கும். ஆண்டுக்கு ஒருமுறை விள்ளாமல் விளியாமல் ஒவ்வொரு வீட்டிலும் அவனுக்கு ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுப்பார்கள். தீபாவளியன்று பழைய வேட்டியும், புடவையும் கிடைக்கும்.

தன் பணியை மனநிறைவுடன் செய்யச் செல்லும் முனியாண்டிக்கு மன உளைச்சல் தரும் ஒரு பணி பதினைந்தே வயதான ஒரு இளம் கைபெண்ணின் தலைமுடியை மழிப்பதுதான். அவளது கணவன் அல்பாயுளில் இறந்தவுடன் வயதுக்கு வராமல் பதிமூன்று வயதான அவளின் நீண்ட கூந்தலைக் கத்தரித்துத் தலையை மழிக்கும்போது அவளுடன் சேர்ந்து அவனும் குமுறிக்குமுறி அழுதான். ஏறத்தாழ அவள் வயது இருக்கும்போது, நோய்வாய்ப்பட்டு இறந்துபோன தன் மகளின் நினைவு அவனை வாட்டியது…

… “அடே மண்ணாங்கட்டி! விசயத்தை முளுக்கக் கேளுடா. சொராச்சியம் கிடச்சதுனால, நம்மமாரி சனங்க அல்லாருக்கும் மெய்யப்பன் ஐயா ஒரு வேட்டி துண்டும், ராமசாமி ஐயா ஒரு சீலையும் கொடுக்கறாங்க. பெரிய ஐயா முத்துசாமி, தலா பக்காப்படிக்கு ஒரு படி (இரண்டு லிட்டர்) அரிசி அளந்து விடறாரு.


நீ கிராமத்துக் கோவிலாண்ட போனீன்னா மூணு படி அரிசியும், வேட்டி துண்டு, சீலை வாங்கிட்டுச் சந்தோசமா வரலாண்டா. அங்கிட்டு கருப்பையா ஐயாகிட்டக் கொளந்தைக்குப் பாலு வேணும்னு கெஞ்சி அளுதீன்னா, சொராச்சியம் கிடச்ச சந்தோசத்துல அவரு பாலே கொடுத்தாலும் கொடுப்பாரு,” என்று முனியாண்டி  சொன்னது மண்ணாங்கட்டியின் காதில் தேனாகப் பாய்ந்தது.

“அப்படியா, அண்ணாச்சி! இப்பவே ஓடிப்போயி வாங்கிட்டு வந்துடறேன். மூணு படி அரிசியா? ரெண்டு வாரம் தினோம் ரெண்டு வேளை வயிறு ரொம்ப கஞ்சி காச்சிக் குடிக்கலாம். எம் பொஞ்சாதி என் பளய துண்டைத்தான் கட்டிக்கிட்டிருக்கா. புதுச் சீலையா? ரொம்ப சந்தோசமா இருக்கு, அண்ணாச்சி! நமக்குச் சொராச்சியம் வாங்கித் தந்தவுக ரொம்ப நல்லா இருக்கணும், அண்ணாச்சி! நாலஞ்சு மாசத்துக்கு ஒரு தபா இப்படி சொராச்சியம் கெடச்சுதுன்னா நம்ம பாடு நல்லாயிடும், அண்ணாச்சி!” மனம் உருகி தழதழத்த குரலில் பதில்சொன்னான், மண்ணாங்கட்டி.

இதையும் படியுங்கள்:
அருகில் உள்ளவரால் உறுதியாகும் வெற்றி… காரணம்?
ஓவியம்: தமிழ்

“எலே மண்ணாங்கட்டி! இப்படி லங்கோட்டோடவா பெரிய மனுசங்க இருக்கற எடத்துக்குப் போவே? கொறஞ்சது ஒரு துண்டயாவது இடுப்புல கட்டிக்கிட்டுப் போடா.  மூணு படி அரிசியக் கையிலயா வாங்கிட்டு வருவே? அதுக்கு ஒரு பையி எடுத்துக்கிட்டுப் போடா,” என அறிவுரை வழங்கினான், முனியாண்டி.

“அண்ணாச்சி! நா துண்டுக்கு எங்கிட்டுப் போவேன்? என் துண்டத்தான் பொஞ்சாதி கட்டிக்கக் கொடுத்துப்புட்டேனே! நீங்கதான் பளய, கிளிஞ்ச துண்டு ஒண்ணு கொடுங்க அண்ணாச்சி! நா லங்கோட்டில அரிசி வாங்கிட்டு வந்துடறேன்,” என்று கெஞ்சினான். 

“போடா போ! நானே மேல் துண்டு இல்லாமக் கஸ்ட்டப்படுறேன். நீ வெரசா ஒன் குடிசக்குப் போயி, ஒம் பொஞ்சாதிகிட்ட இருக்கற துண்ட வாங்கிக் கட்டிக்கிட்டு, கலயத்தையும் எடுத்துக்கிட்டுப் போடா! வெரசாப் போ. இல்லேன்னா, அங்கிட்டு எல்லாந் தீந்துடப் போவுது,” என்று திசைதிருப்பினான், முனியாண்டி.

வேறு வழியில்லாமல் தன் குடிசையை நோக்கி விரைந்தான் மண்ணாங்கட்டி. மனைவியை ஆடையில்லாமல் விட்டுவிட்டுச் சேலை தானம்வாங்கச் செல்வது முறையா என்று தனக்குள் குழம்பிய அவன் கண்ணில் அந்தக் கம்பத்தில் தொங்கிய துணி தென்பட்டது.

“அடா, இவ்வளவு நல்ல துணியப் போயி இப்படித் தொங்கவிட்டிருக்காகளே!” என்று மனதில் நினைத்தவன், “கருப்பண்ணசாமிதான் இன்னிக்கு நமக்கு வளி விட்டிருக்காரு!” என்ற மகிழ்ச்சியுடன் கம்பத்தில் விடுவிடென்று ஏறி, அந்தத் துணியை அவிழ்த்து எடுத்து, கம்பத்திலிருந்து இறங்கி, இடுப்பில் சுற்றிக்கொண்டான்.  பக்கத்திலிருந்த பனைமரத்திலிருந்து இரண்டு இலைகளையும், பாளையையும் பிய்த்து எடுத்துக்கொண்டான். ‘அரிசி, பால் கொண்டுவர இவைதான் சரியா இருக்கும்,’ என்பது அவன் எண்ணம்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவில்பக்கம் சென்ற அவனைப் பார்த்தவுடன், “திருட்டுப் பயலே! இப்படியா அநியாயம் செய்வே!” என்று ஒருவர் கையிலிருந்த தடியால் அவனை ஓங்கி அடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த மற்றவரும் அவனை தங்கள் கையில் கிடைத்ததைக்கொண்டு சாத்து சாத்தென்று சாத்தினர்.

“சாமி, நா என்னத்தைங்க திருடிப்பிட்டேன்னு என்னை அடிக்கறீங்க?” என்று முனகினான், மண்ணாங்கட்டி. கதறி அழக்கூட அவனுக்குத் தெம்பில்லை.

“ஏண்டா படவா, இங்கேதான் வேட்டி, துண்டு இனாமாக் கொடுக்கறோமில்ல! அதை வாங்கிக் கட்டறதை விட்டுட்டு, இடுப்பில சொராஜ்ஜியக் கொடியவா கட்டிப்பே!” 

மேலும் மேலும் விழுந்த அடிகளையும், உதைகளையும் தாங்க இயலாது தரையில் விழுந்தான், மண்ணாங்கட்டி. ஒருவர் அவன் இடுப்பில் கட்டியிருந்த துணியை -- பாரதத்தின் மூவர்ணக்கொடியை -- உறுவினார். உடம்பெல்லாம் குருதி ஒழுக மண்ணில் உருண்டு புரண்ட மண்ணாங்கட்டிக்குக் தலை சுற்றியது. நினைவு வற்றியது. கண் இருட்டியது. இமைகள் மூடிக்கொண்டன. 

“இந்த அடியும் ஒதையும் வாங்கறதுக்குத்தான் சொராச்சியம் கெடச்சுச்சா?” என்று பொங்கிப் பொங்கி அழுதான், மண்ணாங்கட்டி.

“நிறுத்துங்கடா, சுயராஜ்ஜியம் கிடைச்ச இந்த சந்தோஷமான நேரத்திலே, பாவப்பட்ட ஒருத்தனை அடிச்சாடா கொல்லுவீங்க? தள்ளிப் போங்கடா, போக்கத்த பயலுகளா!” என்றபடி அங்கு வந்து அந்தக் கும்பலை விரட்டியவர், தன் செம்பிலிருந்த நீரால் மண்ணாங்கட்டியின் முகத்தில் தெளித்தார்.

மெல்லக் கண்களைத் திறந்த மண்ணாங்கட்டிக்குத் தெரிந்தது பெரிய ஐயா என்ற முத்துசுவாமியின் முகம்தான். அவனை மெல்லக் கைதூக்கிவிட்ட அவர் தன் உத்தரீயத்தை அவனிடம் கொடுத்து, “கட்டிக்கடா, மண்ணாங்கட்டி!” என்று கனிவுடன் கூறினார்.

சமூகத்தில் ‘உயர்ந்த இடத்தில்’ இருக்கும் பெரிய ஐயாவே தன்னைத் தொட்டுத் தூக்கிய வியப்பும், அதிர்ச்சியும் தாங்காமல் மண்ணாங்கட்டியின் உடம்பு வெடவெடவென்று நடுங்கியது.

“நான் எதையும் திருடல சாமி. சொராச்சியம் கெடச்சதுக்கு தலைக்கு ஒரு படி அரிசியும், வேட்டி-துண்டும், பொட்டப் புள்ளக்குச் சீலையும் தர்றதாச் சொன்னாக, சாமி. இங்கிட்டு வெறும் லங்கோட்டோட வரக்கூடாதுன்னுட்டுதான் கம்பத்துல தொங்கின நாலு மொளம் துண்ட எடுத்துக் கட்டிட்டு வந்தேன், சாமி. ஆருக்கும் ஒபயோகமில்லாமத் தொங்கற துணியை எடுத்துக் கட்டிக்கிட்டது திருட்டா, சாமி?  மூணு நாளா நானும் எம்பொஞ்சாதியும் பட்டினி, சாமி. கொளந்தைக்குக் கொடுக்க பாலுகூட இல்லாம அவ வத்திப் போயிட்டா, சாமி. நீங்கதான் எங்களக் காப்பத்தனும், சாமி,” திணறித் திணறிக் கெஞ்சிய அவன் கண்களில் நீர் வழிந்தது.

இதையும் படியுங்கள்:
கொடிய நோய்களைத் தீர்க்கும் திருக்கிளியனூர் அகஸ்தீஸ்வரர்!
ஓவியம்: தமிழ்

“ராமசாமி, நீங்க கும்பிடற பெருமாளின் குழந்தைகள்னுதானே மகாத்மா இவங்களுக்கு ஒசத்தியா ஹரியின்ஜனங்கனு பேரு வைச்சார்?” என்ற முத்துசுவாமி, மற்றவர்கள் பக்கம் திரும்பி, “இவனைப் படிக்கக்கூட கூடாதுன்னு நீங்க எல்லோரும் பிடிவாதம் பிடிச்சு அறிவில்லாதவனாச் செஞ்சுட்டீங்க. அப்படி இருந்தும், நாம இருக்கற எடத்துக்குக் கோவணத்தோட வரக்கூடாதுங்கற மரியாதை இவனுக்குத் தெரிஞ்சிருக்கு. இவனுக்குச் செக்குனு தெரியுமா, சிவலிங்கம்னு தெரியுமா? குண்டியை மறைக்கத் துணி வேணும்னு கம்பத்திலே தொங்கற தேசக்கொடியை எடுத்துக் கட்டிண்டு வந்திருக்கான். நாம வேட்டி துண்டு கொடுக்கறதுக்கு முன்னாலே, பாரதமாதாவே, அவனுக்குத் தன் ஆடையைக் கொடுத்திருக்கான்னுதான் நேக்குத் தோன்றது.

“மெய்யப்பன்! இவனை மாதிரி திக்கில்லாத ஜனங்களைத்தான் நாம நன்னாக் கைதூக்கிவிடணும். அதுதான் மகாத்மா நமக்குச் படிச்சுப் படிச்சுச் சொல்லிக் கொடுத்தது. மாத்திக் கட்டிக்ககூட வழியில்லாத இவனுக்கு ரெண்டு செட் புடவையும், வேஷ்டி துண்டும் கொடுங்கோ. கருப்பையா, இந்தச் சொம்பிலே பசும்பால் கொண்டுவாங்கோ. அப்படியே இவனுக்குக் குடிக்க மோரும் கொடுங்கோ. டேய், சுப்பாணி, உன் சாக்குப் பையிலே இவனுக்குப் பக்காப்படி நாலு படி அரிசி அளந்துபோடு. பாரத் மாதா கீ ஜய்!” 

அவரது அன்புக் கட்டளைக்கு அனைவரும் அமைதியாகக் கீழ்ப்படிந்தனர். 

வாயெல்லாம் பல்லாக, “சொராச்சியம் இதுதானா, சாமி? கும்பிடறேன், சாமி. நமக்கு அடிக்கடி சொராச்சியம் கெடக்கணும், சாமி! பாரத மாத கீ சய்!” என்று மனம்நிறைந்து ஆர்ப்பரித்தான்.

மெய்யப்பனும், ராமசாமியும் கொடுத்த வேட்டிகள், துண்டுகள், சேலைகள், கருப்பையா கொடுத்த பால் சொம்பு, முத்துசுவாமி சொல்லி சுப்புணி கொடுத்த நான்கு படி அரிசிப் பை இவைகளைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு, ஒரு சொம்பு மோரையும் குடித்ததால் வந்த தெம்புடன் ஓட்டமும் நடையுமாகத் தன் குடிசைக்கு விரைந்தான், மண்ணாங்கட்டி.

“இந்தா புள்ள, பூங்காவனம்! இங்க பாரு! சொராச்சியம் கிடச்சதுனால என்னென்ன கொண்டாந்திருக்கேன் பாரு! நம்ம கொளந்தைக்குப் பசும்பாலு, உனக்கு ரெண்டு புதுச்சீலை, எனக்கு ரெண்டு வேட்டி துண்டோட. பை நிறய நாலு படி அரிசியும் கொணாந்திருக்கேன், புள்ள! நமக்கு விடிவு காலம் வந்திருச்சு, புள்ள!” என்று மகிழ்வுடன் இறைந்து கத்தியபடியே தன் குடிசைக்குள் நுழைந்தான் மண்ணாங்கட்டி.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com