சிறுகதை - புயல்!

ஓவியம்; உமாபதி
ஓவியம்; உமாபதி

ங்கிச் சுழன்று சுழன்று காற்றடித்தது. ரேணுகா ஃபைலை மூடிவைத்து விட்டு எழுந்தாள். மேஜை இழுப்பறையைப் பூட்டிவிட்டு ரேடியோவைத் திருகிவிட்டாள். ‘புயலுடன் கூடிய மழை வேகமாக நகரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.'

காட்! என்ன பண்ணுகிறதோ? க்ரெஷ் மூடியிருப்பார்களோ? ஆயாக்கள் வீட்டுக்குப் போக அவசரப்படுவார்கள்.

ஒருவேளை போக நேரமானால் ப்ரெட் இன்னொரு நேரம் காணுமா? கடவுளே, குழந்தை பசி தாங்காதே. அவசரமாக ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு வேகமாக படியில் இறங்கினாள்.

“ஹலோ...”

திரும்பிப் பார்த்தாள் பார்வதி. குடையுடன் ஈரமாய் நின்றிருந்தாள். இவளை அழைக்க கார் வரும். இவளுடன் தொற்றிக் கொள்ளலாமா?

"வீட்டுக்கா பார்வதி? கார் வருமா?"

"ம். வர்றீங்களா?"

"கட்டாயமா. பஸ் ஓடலையாமே, ரேடியோல சொன்னான்.”

"ஸ்வேதா எங்கயிருக்கு?"

“க்ரெஷ்ல, பயமாருக்கு பார்வதி..."

பார்வதி யோசனையாய் ஊடுருவப் பார்த்தாள். புரிகிறது. என்ன நினைக்கிறாள் என்பது புரிகிறது. சுரேஷ் இருந்தால் இந்த வேதனை இருந்திருக்காது என்கிறாள். ஆனால் ஒத்துவரவில்லையே. என்ன புகுந்தது நடுவில்? தெரியவில்லை. ஏதோ ஒரு புயல். இது போல, ஓங்கிக் காற்று அடித்து எந்தக் கிளை எந்த திசையில் ஒடியுமோ என்கிற நிச்சயமற்ற புயல். கிளை மூன்று வருஷத்தில் ஒடிந்துவிட்டது. இதனால்தான் அதனால்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வானிலை அறிக்கை.

கறுப்பு கோட்டு வக்கீல்கள் நடுவே சுலபமாய் விவாகரத்து வழக்கில் வெற்றி கிடைத்தது. ஒன்றரை வயது ஸ்வேதா. கௌரவமாய் ரேடியோ ஸ்டேஷன் வேலை. ப்ளாட் சொந்தமாய் ஒன்று. போதும்தான். ஆனால், கரண்ட் போனால் பயம் வருகிறது. நடுராத்திரியில் கிளை வீட்டுக் கூரையில் உரசி சப்தமிட்டால் பயம் வருகிறது. புயல் வாழ்க்கையில் வீசியிருக்கக் கூடாதோ என்று தோன்றுகிறது.

புயல், ஈகோ, உடல் மனம் எல்லாம் அழிக்கிற புயல்.

காற்று பலமாய் அடித்தது. ரேணுகா காரில் கண்ணாடியைத் தூக்கி விட்டுக்கொண்டாள். ஸ்வேதா... என்ன பண்ணாகிறாய். தேடுவாள். "ம்மா..." என்று அழுவாள். புயல் காற்றுக்குப் பயந்திருப்பாள். பெரிசானதும் அவள் அம்மா வாழ்க்கையில் வீசிய புயல் புரிந்துபோகும். அப்போது கேட்பாள். சுற்றம் கதை சொல்லிவிடும் அவளுக்கு.

"லவ் பண்ணி கல்யாணம் பண்ணியாமே. பிறகு ஏன் அத்துப் போச்சு?"

என்ன சொல்ல? அவள் பெரிசாவதற்குள் பதிலை யோசிக்க வேண்டும். லவ்தான். அவனும் அப்போது ஆபீசர் கேடர் அடிக்கடி ப்ரோக்ராம் டிஸ்கஷன். சந்திக்க அடிக்கடி சந்தர்ப்பம். சகஜமாய் ஒருநாள் எல்லோரும் கலைய, "ஒரு நிமிஷம்!" என்றான். நின்றவுடன் கூடவந்து நின்றான். கண் எதையோ தேட "ஐ லவ் யூ ரேணு" என்றான். வயசோ என்னமோ அந்த நிமிஷம் மனசு பறந்தது நிஜம். நிறைய மில்ஸ் அன் பூன் படிக்க, பாரதிராஜா படம் பார்க்கத் தோன்றிற்று.

எல்லாம் கொஞ்ச நாள்தான். கல்யாணமாகிக் கொஞ்ச நாள்தான். லேசாக இற்றுப்போனது, முழுசாய் யாருமற்ற தனி மனுஷியாய்ச் சுழல வேண்டியிருக்கிறது.

இப்போது அவன் பெரிய பதவிக்குப் போய்விட்டான். ஆபீசில் சந்திக்க நேர்ந்தால் ஸ்நேகமற்ற புன்னகைகள். மூன்று வருஷம் கூட இருந்தாயே என்கிற சிறிய சிறிய தடயம்கூட இல்லாத புன்னகை. உயிரில்லாத செத்த உடல்போல ஜீவனற்ற புன்னகை.

கார் திடீரென்று நின்றுபோனது. ரேணுகா எட்டிப் பார்த்தாள். பெரிய மரம் இரண்டு துண்டாக ரோட்டின் நடுவில் கிடந்தது. பின்னாள் அந்த கார்கிட்டே வந்து நின்றது. இனி என்ன செய்ய? கார் போகாது.

“நான் இறங்கிடுறேன் பார்வதி. ஆட்டோ பார்த்துக்கிறேன்."

"மழையாருக்கே ரேணு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எப்படியும் க்ளியர் பண்ணிருவாங்க."

"வேணாம் பார்வதி. ஸ்வேகா தேடும். எப்படியாச்சும் போணும்.தாங்க்யூ.'"

மரத்தைத் தாண்டி வந்தாள். கால் செருப்பு பிசுபிசுப்பாயிற்று. எதிர்த்த தெருவில் லாரி மீது லேம்ப் போஸ்ட் விழுந்து கிடந்தது. கடவுளே! க்ரெஷ்கூட முடுக்குதான். பக்கத்தில் நிறைய மரமிருக்கும். ஸ்வேதா... முட்டிக்கொண்டு கண்ணில் நீர் வந்தது. உறவை விட்டிருக்கக் கூடாதோ?

ஸ்கூட்டரில் யாரோ ஒருத்தர் குழந்தையைக் கூட்டிப் போனார். சேர்ந்திருந்தால் இப்படி ஸ்வேதாவும் வந்திருப்பாள். எதற்காகப் பிரிந்தேன்? அற்ப விஷயங்கள்தான். விட்டுக் கொடுத்திருக்கலாமோ?  ஸ்வேதா... கடவுளே! மரம் க்ரெஷில் விழுந்திருக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் வெங்காயத்தை பச்சையாக உண்பதால் இத்தனை நன்மைகளா?
ஓவியம்; உமாபதி

ஆட்டோ மீட்டருக்கு மேல் இருபத்தைந்து ரூபாய் கேட்டான். வேறு வழியில்லை. மனசில் பயமும் அழுகையும் தொற்றிக்கொள்ள ஏறி உட்கார்ந்தாள். க்ரெஷ் பக்கம் மரம் எதும் விழவில்லை. மனசில் நிம்மதி த்வனிக்க உள்ளே போனாள். மேட்ரன் மட்டும் உட்கார்ந்திருந்தாள்.

"ஸ்வேதாவைக் கூப்பிடுங்க."

"போயாச்சே... யாருமில்லையே."

"யார் கூட்டிட்டுப் போனா. நான் வந்தாத்தானே விடணும். ஏன் விட்டீங்க?"

"அவ அப்பா வந்திருந்தார் மேடம்.”

இன்றைக்கு என்ன கிழமை?  சனிக் கிழமையா?  இல்லையே, சனிக் கிழமைதான் க்ரெஷில் இருந்து ஸ்வேதாவை வீட்டுக்கு சுரேஷ் கூட்டிப் போவான். சனி, ஞாயிறு மாலை அவனுடன். ஞாயிறு வீட்டுக்கு வந்து விட்டுவிடுவான்.

அவுன் வீட்டுக்கு இப்போது கூட்டிப் போயிருப்பானோ? அங்கே எப்படி போக?  ரேணுகா - ஈகோவை அழி, அங்கே போ. நன்றி கூறு. பிறகு ஸ்வேதாவைக்
கூட்டி வா.

வந்த ஆட்டோவிலேயே வீட்டுக்குப் போனாள். முகம் கழுவி வேறு சேலை மாற்றிக்கொண்டாள். வாசலில் கார் சத்தம் டயர் தேய நின்று, பின் கிளம்பினதில் விலகிப் போனது. ஸ்வேதா 'ம்மா'  என்று கத்திக்கொண்டு நுழைந்தாள்.

"நீ ஏன்மா வரலை? அப்பாதான் வந்தார்."

"என்ட்ட ஏதும்மா கார்?  பார்வதி ஆன்ட்டிகூட வந்தேன்மா. மரம் ரோட்ல விழுந்திடுச்சு. பிறகு ஆட்டோ வச்சு க்ரெஷுக்கு வந்தேனா அங்க நீயில்லை. சரி டிரெஸ் பண்ணிட்டு வந்து கூட்டிக்கலாமேனு நினைச்சேன். டிபன் சாப்பிடுறியா?" "அப்பா ஸாண்ட்விச் கொடுத்தாரு. போர்ன்விடா குடிச்சேன்ம்மா. அப்பாட்ட புதுசா ஒரு ப்யானோ இருக்கும்மா."

“ம்.”

சேர்ந்திருந்திருந்தால் இவளால் தினமும் ப்யானோ வாசிக்க முடியும். நான் பண்ணியது தப்போ? மழை என்றதும் கூட்டிக்கொண்டு விட வேண்டும் என்றால் அவனிடம் இன்னமும் அன்பு இருக்கிறது.

நாளை ஆபீஸில் அவனிடம் நன்றி சொல்ல வேண்டும். என்ன சொல்வான்? ஆச்சர்யமாயிருக்கும் அவனுக்கு.

கண்ணைச் சுகமாய் ஒரு தூக்கம் தழுவிற்று.

றுநாள் காலையில் மழை வெறித்திருந்தது. லேசாய் ஒரு பூத் தூறல், ஸ்வேதாவை க்ரெஷில் விட்டு விட்டு ஆபீஸ் போனாள், பார்வதி முன்னதாகவே வந்திருந்தான்.

"என்ன பார்வதி... சீக்கிரம் வந்துட்டீங்க?"

"ம்... ரெக்கார்டிங் இருக்கு, நேத்து எப்படி போனீங்க?

"ஆட்டோல. கூட கேட்டான்."

"ஸ்வேதா அழாம இருந்தாளா?

"அவ அப்பா கூட்டிட்டுப் போய்ட்டார்.”

ஒரு நிமிஷ மௌனம். பார்வதி. "வரேன்" என்றான்.

ரேணுகா நேராக சுரேஷ் அறையைப் பார்த்தாள். ஏதோ பைலை பார்த்துக்கொண்டிருந்தான். சிமெண்ட் கலரில் கோடு போட்ட ஸ்லாக்ஸ். முதல் கல்யாண நாளுக்கு ரேணுகா கொடுத்தது. இன்னும் வைத்திருக்கிறானா?  நெஞ்சுக்குள் சில்லென்று ஒரு காற்று வீசிற்று.

கதவை லேசாகத் தட்டினாள். அவன் அனுமதிக்க உள்ளே போனாள். ஆச்சர்யமாய் சுரேஷ் பார்த்தான். லேசாகக் கீழ் உதடு விரியச் சிரித்தான். என் பின்னாடி அலைகிறாய் பார் என்று நினைக்கிறானோ? அவ்வளவு அன்பிருக்கிறவன் நேற்று வீட்டுக்குள் வந்திருக்கலாமே? நீயாகப் போகாதே ரேணுகா. உன் கௌரவம், ஈகோ விட்டுக் கொடுக்காதே. அவன் கீழிறங்கி வரட்டும்.

இதையும் படியுங்கள்:
பேக்கரி டேஸ்ட்டில் வாழைப்பழ கேக் செய்யலாம் வாங்க!
ஓவியம்; உமாபதி

"என்ன விஷயம்?''

"ரெக்கார்டிங் பில்ஸ்ல கையெழுத்துப் போடணும். எப்ப வரலாம்?"

ரேணுகா நேற்றைய தினத்தை மறந்தாள். மறுபடி மனசுக்குள் ஒரு புயல் வீச ஆரம்பித்தது.

பின்குறிப்பு:-

கல்கி 03  ஜன்வரி  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com