சிறுகதை - உள்ளங்கையில் உலகம்!

ஓவியம்: லதா
ஓவியம்: லதா

-மானா பாஸ்கரன்

ஸ்ஸைவிட மனம் வேகமாகப் பாய்ந்தது. எவ்வளவு கனவுகளையும், கற்பனைகளையும் திணித்துக்கொண்டு அந்த கல்லூரிக்குள் நுழைந்தான் பொன்னரசன்! எல் லாமே ஒரு மணி நேரத்திற்கு முன்னால் காற்றில் உமியாய்ச் சிதறிப் போயின.

இதயம் நெருஞ்சி முள் காடாய் ஆகி இருந்தது. மருந்து போட முடியாத ரணம்...

பொன்னரசனுக்கு அழுகை அழுகையாய் வந்தது. பஸ்ஸில் சில முகங்கள் அவன் கண்ணீரின் விலாசம் தேடின.

மனித நாகரிகம் நிலவு வரை நீண்டு இருந்தாலும் மனிதாபிமானம் என்னும் விஷயம் மட்டும் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டது.

நினைவுகள் சுருளச் சுருள அடி வயிறு எரிந்தது.

ராகிங் அது இது என்றெல்லாம் பயமுறுத்தப்பட்டிருந்தது அவனுக்கு. பொன்னரசன் எதற்கும் தைரியம் தயாரித்து வைத்திருந்தான். மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. இந்த ஏழு நாட்களில் யாரும் தன்னைச் சீண்டிப் பார்க்கவில்லை என்ற சின்ன திருப்தி இதயத்தில் வழிந்து கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது.

தோளில் பரமசிவன் மாதிரி ஸ்டெதஸ்கோப் பாம்புகள் தொங்க, வெள்ளை கோட் கைகளில் படுத்திருக்க, அங்கும் இங்கும் வருங்கால டாக்டர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லாக் கண்களிலும் டாக்டருக்குப் படிக்கும் நாசிக் திமிர்...

எந்த மந்திரியின் சிபாரிசும் இல்லாமல், சலவை நோட்டுகள் கை மாறாமல் முழுக்க முழுக்க மெரிட்டில் இடம் கிடைத்திருந்தது பொன்னரசனுக்கு.

பொன்னரசன் - வயக்காட்டில் தனித்து அலைந்தவன்தான். வண்டி ஒட்டி, அறுப்பு அரிவாள் பிடித்து, மனசு உழுத நிலமாய்ப் பதப்பட்டுத்தான் இருந்தது. ஆனாலும் நகரத்து சொகுசுக்கு முன்னால் கிராமம் கை கட்டித்தான் இருக்க வேண்டியிருந்தது.

கையில் ஒரு நோட்டுடன் கல்லூரியின் முதல் வாசல் வழியே சென்று கொண்டிருந்தான் பொன்னரசன்.

திடீரென்று ஒரு குரல் முந்திரி மரத்திற்குக் கீழே இருந்து கூப்பிட்டது. குரல் வந்த திசையில் பார்த்தான். இருபது பேர் இருக்கலாம். படுத்தும், உட்கார்ந்தும் சாய்ந்தும் கிடந்தனர். எல்லோருமே எம்.பி. பி.எஸ். கடைசி வருட மாணவர்கள். அவர்களில் ஏழெட்டு பேர் பெண்கள். யாரோ ஒரு பிரகஸ்பதி முந்திரி மரத்திற்குச் சிகரெட்டால் சாம்பிராணி போட்டுக்கொண்டிருந்தான்.

பொன்னரசன் உள்ளுக்குள் உடைய ஆரம்பித்தான். கால்கள் நகர மறுத்தன. நிச்சயமாய் இது ராகிங் அழைப்புத்தான்...

"என்ன சார், கூப்பிட்டா வர மாட்டீங்களோ?" என்றான் ஒருவன்.

''என்னடா சாரு? பெரிய மரியாதை. இப்ப நான் கூப்பிடுறேன் பாரு - டேய் நார்த்தங்கா தலையா இங்க வாடா!" என்றான்,  இன்னொருவன்.

மெள்ள, நடுங்கும் இதயத்தோடு அவர்கள் அருகில் சென்றான் பொன்னரசன்.

அவனைப் பார்த்து "அட்டேன்சன்...." என்றது சிகரெட் வாய்.

சுற்றியிருந்த மருத்துவ மாணவர்கள் எல்லாம் கொல்லென்று சிரித்தார்கள்.

''ஏண்டா அவனே வாத்து மாதிரி நடக்கிறான். அவன்கிட்டே போய் தேசிய கீதத்துக்கு நிக்கிற மாதிரி நிக்கச் சொல்றியே!"

பொன்னரசனுக்கு முந்திரி மரத்தைப் பிடுங்கி எல்லோரையும் அடிக்க வேண்டும் போலிருந்தது.

கண்ணாடி அணிந்த ஒருவன் எழுந்து வந்து "அண்ணாத்தே உன் பேரு என்னாலே" என்றான்.

''பொன்னரசன்."

"என்னது பொன்னரசனா? ஏண்டா டேய்! லிக்னைட் கலர்ல இருந்துகிட்டு... பொன்னரசனா? இன்னிலேர்ந்து நீ கருப்பரசன்."

ஸ்டெதஸ்கோப்பைத் தூக்கிப் போட்டுப் பிடித்து, தனது அல்ப சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டாள் ஒரு மாணவி.

"டேய் டேய் குழந்தையை ரொம்ப டாவடிக்காதீங்கடா... ஏன் கண்ணு உனக்குப் பாடத் தெரியுமா?"

"தெரியாது சார்."

''பிரேக்கு, டிஸ்கோன்னு சொல்றாங்களே அதுல ஏதாவது தெரியுமா..."

"தெரியாதுண்ணே."

ஓவியம் ; லதா
ஓவியம் ; லதா

"என்னடா அண்ணன் முறை கொண்டாடுறே!" கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை."ஏண்டா உனக்கெல்லாம் டாக்டர் படிப்பு ? உங்க ஊரு கொல்ல பக்கமெல்லாம் மூலிகை நிறைய இருக்குமே. அதைப் பறிச்சு வச்சுக்கிட்டு நாட்டு வைத்தியராகிட வேண்டியதுதானே...!"

'சரியான ஐடியா... தனுசு..." சிரிப்பு வானம் உரசியது.

பொன்னரசன் கூனிக்குறுகி நின்றான். அவன் வாழ்வின் எந்த திசையிலும் இதைப் போன்ற பரிகாசத்தைச் சந்தித்ததில்லை.

'சரி கருப்பரசா... நீ நல்ல புள்ளையா நான் சொல்றதைச் செய்வியாம். உன்னை விட்டுடறோம். அப்புறமா நாம் ப்ரண்ட்ஸாயிடுவோம். நீ என்ன பண்றே அதோ இருக்கு... பாஸ்கட் பால் போர்டு அதை ஓடிப் போய்த் தொட்டுட்டு வா பார்ப்போம்..."

அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்ற நினைப்பில் ஓடப்போன பொன்னரசனை ஒருவன் தடுத்தான்.

“சும்மா ஓடிப் போய்த் தொட்டால் போதுமா?  இதோ நீ போட்டிருக்கப் பாரு சொக்கா, பேண்ட் இதெல்லாம் கழட்டிட்டு ஜட்டியோட ஓடணும்...'

இதையும் படியுங்கள்:
கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க பயனுள்ள 6 டிப்ஸ்!
ஓவியம்: லதா

பொன்னரசனின் காது வழியே கடப்பாறை செருகப்பட்டது.

மெள்ள கண்ணீர் துளிர்விட ஆரம்பித்தது. அடக்கிக்கொண்டான்.

"என்னடா... போ மாட்டியா?"

"வேண்டாம் சார். லேடீஸ்லாம் இருக்காங்க, வேண்டாம் சார் என்னை விட்டுடுங்க" கலங்கிய இதயம் கையெடுத்துக் கும்பிட்டது.

"டேய்... நீ எவ்வளவு நேரம் நின்னாலும் விட மாட்டோம்... நாங்க சொன்னதைச் செஞ்சாதான்... டேக் இட் ஈஸி.

எதை எளிதாக எடுத்துக்கொள்வது? அவமானத்தையா? கதறக் கதற மனசு பிழியப் படுவதையா? சக மனிதனின் உணர்ச்சிகளுக்குக் கொள்ளி வைப்பதையா? எதை எளிதாக எடுத்துக்கொள்வது?

"சார் நாமெல்லாம் துடிச்சிக்கிட்டிருக்கிற உயிரைக் காப்பாத்தற படிப்பு படிக்கிறோம். நீங்களே ஒரு உயிரைத் துடிக்க வைச்சுப் பார்க்கலாமா? " பொன்னரசனின் கோபம் வார்த்தைகளில் வழிந்தது.

"டேய் தனுசு. சாமியார் டாக்டருக்குப் படிக்க வந்திருக்கார் டோய்...."

இனி இந்த கவரிங் மனிதர்களிடம் எதைச் சொல்லியும் பிரயோசனம் இல்லை. சட்டையை அவிழ்த்தான் பொன்னரசன்... கூட்டம் மொத்தமும் முதுகுத் தண்டு நிமிர்த்திக் கொண்டது. பாண்டை அவிழ்க்கும்போது பூமி பிளக்காதா என்று தோன்றியது.

"டேய் துணி ஜட்டிடா...! சரியான நாட்டுச் சரக்குடா ...!"

"ஏன் கண்ணு, பி அண்ட் சி மில்லு தொறந்துட்டாங்களே அங்கேயே போய்த் துணி வாங்கிட்டு வந்தியா... பேல் எவ்வளவுப்பா?"

'சாடிஸம்' தன் வாய் பிளந்து, பல் காட்டிச் சிரித்தது. ஆறாவது அறிவை மறக்க அடித்த வக்ர சந்தோஷங்கள் அங்கே தலைவிரித்திருந்தன!

"ம்... கமான் ரெடி... ஓடு" உத்தரவு இடப்பட்டது. தன்னை நொந்துகொண்டே ஓடினான் பொன்னரசன்.

''மெள்ள ஓடி பாஸ்கட்பால் போர்டைத் தொட்டு, திரும்பி ஓடி வந்து, அவசர அவசரமாக பேண்ட், சட்டையைப் போட்டுக்கொண்டான்.

னி இந்த மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடருவது என்பது அவமானம். மனசு செத்துப் போனது பொன்னரசனுக்கு. வெட்கமும், வேதனையும் சரிவிகிதத்தில் அவனைச் சாகடித்தன. முந்திரி மரங்கள்கூட கேலியோடு பார்ப்பதுபோல் பட்டது.

பஸ்ஸின் நிதானம்கூட பொன்னரசனுக்குக் கோபமூட்டியது. தன்மானம் அறுந்து தொங்க, கசங்கிய காகிதமாய்த் தன்னை உணர்ந்தான். இனி இந்தக் கல்லூரியில் - எப்படிக் காலெடுத்து வைத்து நடப்பது? முந்திரி மர இடுக்குகளிலிருந்து 'டேய்... துணி ஜட்டி' என்று சப்தம் வரலாம். பொன்னரசன் என்கிற என் அப்பனும், ஆத்தாளும் ஆசையோடு வைத்த பேர் அழிந்து கருப்பரசன் நிரந்தரமாகலாம்.

மாணவிகள் - எதை நினைத்துத் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டு நடந்தாலும் நம்மைப் பற்றிக் கிசுகிசுப்பது போலவே படும்...

சட்டென அந்த முடிவுக்கு வந்தான் பொன்னரசன்.

இனி அந்தக் கல்லூரியில் நுழைய நமக்குத் துணிவில்லை. சாவதுதான் முடிவு. இந்த உடம்புல உயிர் இருக்கணுமா? சே... எவ்வளவு அவமானம்!

எல்லா திசைகளும் அடைத்துக்கொண்டன. சீக்கிரம் ஊர் போய் மரணத்தை எட்டிப் பிடிக்க வழி தேடினான்.

இதையும் படியுங்கள்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான 10 உபயோகமான டிப்ஸ்!
ஓவியம்: லதா

'தாம்புக் கயித்துல தொங்கிட வேண்டியதுதான்.' 'அவமானமும், அசிங்கமான அர்ச்சனைகளும் மட்டுமல்ல என் சாவுக்குக் காரணம். இனி - இதைப் போன்ற கல்லூரி அட்டூழியங்கள் ஒழிய வேண்டும். டாக்டர் தொழில் என்பது புனிதமான தொழில் துடித்துக் கொண்டிருக்கும் உயிரை எழுப்பி உட்கார வைக்கும் ஜீவ கடமை. மனுஷ சேவை. அந்தப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இன்னொரு மனுஷனைத் துடிதுடிக்க வைத்து, கூனிக்குறுகி நிற்கும் அந்த ஜீவனைப் பார்த்துக் கை கொட்டும் நிலை ஒழியணும். என் சாவு மருத்துவக் கல்லூரி மாணவர்களில் ஒரு சிலரையாவது திருத்தும் என நம்புகிறேன்.

ம்மையப்பனில் இறங்கி, குழிக் கரைக்குக் கால்நடையாய்ப் போனான்.

நடக்க முடியவில்லை. மனசின் ரத்தம் சிந்தி உடல் துவண்டிருந்தது. ந....ட...ந்தான். வீட்டை நெருங்கினான். வீட்டு வாசலில் பெரிய பித்தளை அண்டா. அதன் பக்கத்தில் சொம்பு ... கையலம்ப வைத்திருந்தது. வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அப்படி வைப்பது வழக்கம். இன்று என்ன? வீட்டின் வாசல்படியேற ஓடி வந்தார் பெரியப்பா

"வா...வாப்பா பொன்னு... நம்ம குடும்பத்துல யாருமே ஏழாங்கிளாஸைத் தாண்டல. நீ டாக்டருக்குப் படிக்கிறே.நம்ம பரம்பரைல எல்லாருமே படிக்காத பசங்கனு யாரும் விரலு நீட்ட முடியாதுப்பா." காது வரை வாய் விரிந்தது பெரியப்பாவுக்கு.

பெரியப்பாவின் மகிழ்ச்சிக்கு இவனால் பதில் கொடுக்க முடியவில்லை. உள்ளே சென்றான். உள்ளே எல்லா சொந்தக்காரர்களும் இருந்தார்கள். அப்பா ஓடி வந்தார். அவரின் முகத்திரை முழுதும் சந்தோஷ படலம்

''வா பொன்னரசா. என்ன திடீர்னு? சரி என்ன எல்லாரும் வந்திருக்காங்கன்னு பார்க்கிறியா? ஒண்ணுமில்ல நீ டாக்டருக்குப் படிக்கிறதுக்காக நேர்ந்துகிட்டு, கோயில்ல படைச்சுட்டு, விருந்து வைக்கலாம்னு நம்ம உறவு முறை அத்தனைக்கும் கடுதாசி போட்டு வர வழைச்சேன். ஒன்னையும் கூப்பிடலாம்னுதான் பார்த்தேன். நீ இப்பத்தான் காலேஜ்ல சேர்ந்துருக்க. அதுங்காட்டியும் லீவு போட வேண்டாம்னுதான். உனக்கு நிறைய படிப்பு இருக்கும்..."

''என்ன பொன்னரசா... சௌக்கியமா?" தேனாம்படுகை மாமா தோள் தட்டினார்.

அவருக்கு ஒரு சின்ன புன்னகை மட்டுமே பதிலாக்க முடிந்தது அவனால். கொல்லையில் ஏதோ வேலையாக இருந்த அம்மா ஓடி வந்தாள்.

"என் ராஜா! வந்துட்டியா! நீ இல்லாம இதைச் செய்யுரோமேன்னு நினைச்சேன். நீயே வந்துட்டே. என்ன ராசா முகம் ஒருபாடு வாட்டமா இருக்கு?" தாய்க் கோழி கண்டு பிடித்துவிட்டது...

''ஒண்ணுமில்லம்மா நான் நல்லாத்தான் இருக்கேன்."

''ஏண்டி புள்ளைய வந்ததும் வராததுமா கிண்டுற? பொன்னரசா ஓடிப் போய் நம்ம - மூலாங் கொளத்துல விழுந்து குளிச்சிட்டு சீக்கிரம் வா. உன் கையாலே.. எல்லாருக்கும் பரிமாறலாம்..."

"சும்மா இருங்க... இத்தனை நாளுந்தான் என் ராசா இந்தப் புழுதி தண்ணில குளிச்சுது. இப்ப என் புள்ள டாக்டரு.ராசா...

நான் பம்புல அடிச்சாந்து ஊத்துறேன் நீ குளிப்பா... உங்கப்பாருக்கு மூளை கெட்டுப் போச்சு.''

இதையும் படியுங்கள்:
தலைமைப் பண்பை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை முன்னேற்றுவது எப்படி?
ஓவியம்: லதா

பொன்னரசனின் காயத்திற்கு யாரோ மெள்ள மருந்திட்டு, கட்டு போடுவது போலிருந்தது. மன வலிக்கு யாரோ ஆறுதல் ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது.

'பதினைந்து வருஷமா நம்ம வீட்டுக்கு வராத பெரியப்பா லெட்டர் போட்டு அழைக்கப்பட்டிருக்கார். சாதாரண சண்டையில்லை. அப்பாவைச் செருப்பால அடிச்ச பெரியப்பா. பத்து வருஷமா தொடர்பு அறுந்து போயிருந்த மாமா... என் அம்மாவை... தன் சொந்த அக்காவை - நாவு கூசாமல் கெட்ட வார்த்தைகளால் திட்டிய அதே மாமா... அழைக்கப் பட்டிருக்கிறார். இதோ இந்த மூலாங்குளம் என் மனசோடயும், ஒடம்போடயும் ஒண்ணா கலந்தது. அதுல குளிக்கக் கூடாது இன்னுமே... என்கிறாள் அம்மா...

எல்லாமே கனவு! என் மேல் நம்பிக்கை வைத்துக் கட்டப்பட்ட பளிங்குக் கனவுகள். என் வளர்ச்சியின் மீது அவர்களுக்குள்ள நசுங்கி போகாத நம்பிக்கைகள். நான் நம்புவதை விட அவர்கள் என்னை மலையாய் நம்புகிறார்கள். பதினைந்து வருஷ செருப்படி தழும்பு மறைந்து போய்விட்டது. கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிய வடு அழிந்து போய் விட்டது. சே... அப்பா, மாமாவோட தழும்புகளே மறைஞ்சு போய் விட்டன. நம்மளோட மெடிக்கல் காலேஜ் சம்பவம் சின்ன கீறல்தான்.'

ரணம், ரத்தம், எல்லாம் மறந்து பொன்னரசன் நங்கூரமானான்! அவனின் போராட்டம் ஆரம்பமானது.

பின்குறிப்பு:-

கல்கி 18  அக்டோபர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com