சிறுகதை – வயசு!

ஓவியம்; கோபுலு
ஓவியம்; கோபுலு

-பட்டுக்கோட்டை பிரபாகர்

கிளாசுக்குப் போகப் பிடிக்கவில்லை. காலேஜ் லைப்ரரிக்கு வந்து பேருக்கு ஒரு புத்தகம் எடுத்து விரித்துக்கொண்டேன். கண்கள் கலங்கி எழுத்துக்கள் அசைந்தன.

அம்மா, என்னை நீ புரிந்துகொண்டது இவ்வளவுதானா? பத்தொன்பது வருடங்களாகக் கூடவே இருந்து வளர்த்தும் உனக்கு என் மனசு மட்டும் எப்படித் தெரியாமல் போனது?

வேறு யாராவது சொல்லியிருந்தால் தாங்கிக்கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். நீயா அம்மா அப்படிச் சொன்னாய்? உன் பையன் மேல் அத்தனை அவநம்பிக்கையா? உன் மனத்தில் எனக்கு மரியாதை அவ்வளவுதானா? எத்தனைக் கேவலமாக என்னை எடை போட்டு வைத்திருக்கிறாய்!

தினம் கட் அடித்துவிட்டு ஒரு கும்பல் மோசமான படங்களாகத் தேடித் தேடிப் போய்ப் பார்க்கும். நான் போயிருக்கிறேனா? சைட் அடிப்பதற்காகவே சாயங்காலத்தில் கடைத் தெருவில் ஸ்டைலாக அலைவார்கள். கூப்பிட்டிருக்கிறார்கள். நான் போயிருக்கிறேனா? வரது வீட்டில் நடந்ததைப் போல நம் வீட்டுக்கு வந்து, 'சார், உங்க பையன் என் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான்' என்று எந்த அப்பனாவது கத்தியிருக்கிறானா?

அப்படிப்பட்ட என்னைப்போய் சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை சொல்லி விட்டாயே அம்மா! சாட்டையால் விளாசின மாதிரி இருக்கிறதே! நினைக்க நினைக்க வலிக்கிறதே!

ராத்திரி தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து வந்தவன், அறைக்குள் நீயும் அப்பாவும் பேசுவதைக் கேட்டு நின்றிருக்க மாட்டேன் - பேச்சில் என் பெயர் அடிபடாமல் இருந்திருந்தால்.

'சிவா குழந்தைடி" என்றார் அப்பா.

"வாஸ்தவம்தான். ஆனா வயசுன்னு ஒண்ணு இருக்கில்லே? பஞ்சையும் நெருப்பையும் தெரிஞ்சே பக்கத்தில் வைக்கிறது சரியில்லைங்க" என்றாள்.

பஞ்சு? நெருப்பு? என்ன சொல்கிறாய் என்றே புரியவில்லை.

"என்ன செய்யலாம்னு சொல்றே?"

"சுமதியோட அப்பா தபால் போட்டுருக்கான். சும்மா பார்த்துட்டுப் போறதுக்காக அடுத்த வாரம் வர்றானாம். வந்ததும் அவனோட அனுப்பி வெச்சிட வேண்டியதுதான்."

"இனிமே இவ உங்கப் பொண்ணு சார்னு சொல்லி ஒப்படைச்சுட்டுப் போனான் மங்களம். அவன்கிட்ட என்னன்னு சொல்லச் சொல்றே?"

''அவன் ஒரு பேச்சுக்கு சொன்னா அதுக்காக அவளை காலம் பூரா வெச்சிருக்க முடியுமா? ஒம்போது வயசுல கொண்டாந்து விட்டப்ப அப்படிச் சொன்னான். இப்ப வயசு பதிமூணாச்சு. வயசுக்கு வந்து ஒரு மாசமாச்சி. நல்ல வளர்த்தி வேற. நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்திடுச்சின்னு வைங்க, அவன் எல்லாம் கிராமத்து ஆளு. மானஸ்தன். பெரிய விவகாரமாய்டும்."

"அப்ப நமக்கெல்லாம் மானம் இல்லங்கறியா?"

"மழுப்பாம ஒரு முடிவுக்கு வாங்க!"

"வயசுக்கு வந்துட்டாளே ஒழிய, என்ன தெரியும் அவளுக்கு? உன்னை அம்மான்னுதான் கூப்புடறா. என்னை அப்பான்னுதான் கூப்புடறா. அவனை சிவாண்ணான்னுதான் கூப்புடறா. குடும்பத்தில ஒருத்தியா பழகிட்டு இருந்தா, ஏன் நீ இப்படி விகல்பமாய் பார்க்கறே?"

"அய்யோ! நான் சொல்றது உங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. இன்னைக்கு விகல்பமா எதுவும் இல்லை. நாளைக்கு விகல்பமா எதுவும் நடந்துடக் கூடாதுன்றதுதான் என் கவலை!"

"அளவுக்கு மீறி கற்பனை பண்ணிக்கிட்டு கவலைப்படறியோன்னு எனக்குப் படுது."

"நீங்க எதுலயும் அலட்சியம்! எல்லாமே மேம்போக்குதான் உங்களுக்கு காலம் அப்படி இருக்குங்க. சின்னஞ்சிறுசுங்க. அவங்க சும்மா இருந்தாலும் வயசு சும்மா இருக்க விடாது!"

"சரி சரி. சுமதியை அனுப்பிச்சிரலாம். ரெண்டு செட் பாவாடை, தாவணி வாங்கி, ரெண்டாயிரம் பணம் வைச்சிக் கொடுத்து அனுப்பிச்சிரலாம்."

"ரெண்டாயிரம் என்ன, மூவாயிரம் வேணாலும் கொடுங்க. அதெல்லாம் நான் வேணாம்னு சொல்லவே இல்லை. சம்மதிச்சிங்களே, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்றாயே, அந்த நிமிடத்திலிருந்து எனக்கு நிம்மதி போய்விட்டது அம்மா!

அப்பா என்னைப் புரிந்து வைத்துள்ள அளவுக்கு நீ என்னைப் புரிந்து வைத்துக் கொள்ளவில்லையே...

சுமதி யார்? இத்தனூண்டு குட்டி. 'சிவாண்ணா, சிவாண்ணா' என்று பேசும்போது இன்னும்கூட மழலை இருக்கிறது. அவளைப் போய்... நான்?

என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நீ எப்படியம்மா நினைத்துப் பார்த்தாய்?

இது ஒரு பெரிய அவமானம் எனக்கு! யோக்யன் என்று ஊரிலும், உறவினரிடமும் நண்பர்களிடமும் பெயர் வாங்கி என்ன பிரயோஜனம்? பெற்ற தாய் நீ என்னை சந்தேகப்பட்டு விட்டாயே...

இதையும் படியுங்கள்:
சமைத்து உண்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் 10 காய்கறிகள்!
ஓவியம்; கோபுலு

லைப்ரரியை மூடப்போகிற நேரத்தில் புறப்பட்டு, பஸ் ஸ்டாப் போகாமல் பக்கத்துப் பூங்கா போய் இருட்டிப் போன கறுப்பு ஆகாயத்தை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு மிகத் தாமதமாக வீட்டுக்குத் திரும்பினபோது மணி எட்டரையோ, ஒம்போதோ ஆகிவிட்டது.

"என்னடா இவ்வளவு லேட்டு?" என்றார் டீ.வி.யிலிருந்து திரும்பிய அப்பா.

"ஆமாம். லேட்டாயிடுச்சி" என்று விட்டு என் அறைக்கு வந்தேன்.

உடனே அம்மா உள்ளே வந்து, "என்ன சிவா, என்ன பதில் இது? காலேஜ் விட்டு எங்க போயிருந்தே?" என்றாள்.

திரும்பி அம்மாவை லேசாக முறைத்து, "ம்? ஊர் மேயப் போயிருந்தேன்" என்றேன்.

அம்மா அதிர்ந்து போய், ''சிவா, நீதானா பேசறது?"

பதில் பேசாமல் ஷூ கழற்றிப் போட்டு, லுங்கிக்கு மாறினேன்.

''காலேஜ்ல புரொபசர் எதுவும் திட்டிட்டாரா?"

''யாரும் திட்டலை. எல்லாரும் என்னை நல்லாத்தான் புரிஞ்சி வெச்சிருக்காங்க. போதுமா?'' என்று வெடித்தேன் .

"இப்படி எல்லாம் பேச மாட்டியே, என்னடா ஆச்சு உனக்கு?"

"யார் யார் எப்போ எப்படிப் பேசுவாங்கன்னு யாருக்குத் தெரியும்?" என்று கட்டிலில் விழுந்தேன்.

அம்மா நெற்றியில் தொட்டுப் பார்த்து,"உடம்பு சரியில்லையா? சுடற மாதிரி இருக்கே. ஜுரம் வருதா? என்னடா சிவா? சொல்லேன். கஷ்டமா இருக்கில்லே? ஃப்ரண்ஸோட எதாச்சும் தகராறா? யாராச்சும் உன்னைத் தப்பாப் புரிஞ்சுகிட்டு கோவிச்சுக்கிட்டாங்களா?"

"ஃப்ரண்ட்ஸ் தப்பாப் புரிஞ்சுக்கிட்டா போய்ட்டுப் போகுதுன்னு விட்டுடலாம்!"

"பின்னே யாரு உன்னை என்ன சொன்னாங்க?"

என்னால் அதற்கு மேல் அடக்கி வைக்க முடியாமல் பொங்கிவிட்டேன்.

"நேத்து தண்ணி குடிக்க எழுந்து வந்தப்போ நீயும், அப்பாவும் பேசிட்டிருந்ததை யதேச்சையாக் கேட்டுட்டேன்மா!"

"என்ன பேசினோம்? என்ன கேட்டே நீ?"

"அந்த சுமதியை நீ ஊருக்கு அனுப்பி வை, அனுப்பாமப் போ. எனக்குக் கவலை இல்லை. ஆனா ஊருக்கு அனுப்பறதுக்குக் காரணம்னு ஒண்ணு சொன்னியே... நொந்துட்டேம்மா, ச்சே! என்னம்மா என்னைப் புரிஞ்சிட்டிருக்கே நீ? எத்தனை கேவலமா நினைச்சுட்டே? கூசிப் போய்ட்டேம்மா!"

அம்மா ஆடிப்போய் நின்றாள்.

"சொல்லும்மா. எப்படிம்மா நீ என்னை மோசமா நினைக்கலாம்? என்னைப் பத்தி ஏதாச்சும் ஒரு சின்ன புகார் உண்டா? எதை வெச்சு என்னை அப்படி எடை போட்டே? பளார்னு அறை வாங்கின மாதிரி இருக்கும்மா. என் மனசு கிடந்து துடிக்கிதும்மா."

அம்மாவால் பதில் எதுவும் பேச முடியவில்லை.

அறை வாசலில் நின்று அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பா, மெதுவாக உள்ளே வந்தார்.

"மங்களம், உலகத்தில எங்கயோ யார் வீட்லயோ ஒரு தப்பு நடந்தா, அந்த மோசமான விஷயத்தை முன்னுதாரணமா எடுத்து வச்சிக்கிறது ரொம்பத் தப்பு. புருஷன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை வந்து சில பேர் டைவர்ஸ் வரைக்கும் போயிடறாங்க. அந்த சில பேரை உதாரணமா எடுத்துக்கிட்டு கல்யாணம்னு செஞ்சாலே டைவர்ஸ் வரும்னு நம்பறது சரியா? அவனோட குமுறல் ரொம்ப நியாயமானது. பதில் சொல்லு அவனுக்கு" என்றார்.

கிட்டே வந்த அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டு, "உன் வேதனை புரியுதுப்பா. நான் உன்னை இப்பவும் தப்பா நினைக்கலைடா. சின்ன வயசாச்சேங்கிறதால முன் ஜாக்கிரதை பண்றதா நினைச்சுக்கிட்டு ஏதோ சொல்லிட்டேன். வருத்தப்பட்டுக்காதே. இதை இத்தோட விட்டுட்டு எப்பவும் மாதிரி இருடா. ஏங்க, சுமதி இங்கேயே இருக்கட்டுங்க" என்றாள் .

னாலும் நான் அன்று முழுக்க கொஞ்சம் பிகுவிலேயே இருந்தேன். இரண்டு நாளில் எல்லாம் சரியாகிப்போய் அன்று காலேஜில் முத்தமிழ் மன்றத்திற்காக மேடையேறி புல்லாங் குழல் வாசித்து ஏராளமான பாராட்டுக்களுடன் வீட்டுக்குத் திரும்பியபோது இருட்டி மணி ஏழரையாகி விட்டது.

கதவு திறந்த சுமதியின் முகத்தில் சோகம் பார்த்து, "என்ன? என்ன ஒரு மாதிரியா இருக்கே?" என்றேன்.

''விழுப்புரம் மாமா இல்லே? அவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆய்டுச்சாம். தந்தி வந்துச்சி சிவாண்ணா. அம்மாவும் அப்பாவும் உடனே புறப்பட்டுப் போனாங்க!"

"அடப்பாவமே! முப்பது வயசுதான் ஆகுது அவருக்கு. பெரிய அளவுல காயமாமா?"

"அதெல்லாம் தெரியலை!"

"அப்பா என்ன சொல்லிட்டுப் போனார்? நானும் இப்ப புறப்பட்டுப் போகணுமா?"

"வேணாம்னு சொல்லிட்டாரு. காலைல வந்துடுவோம்னு சொன்னாரு."

"சரி, முகம் கழுவிட்டு வர்றேன். தட்டெடுத்து வை. செமப் பசி."

இதையும் படியுங்கள்:
அடுத்த மனிதரில் உங்களைத் தேடாதீர்கள்!
ஓவியம்; கோபுலு

முகம் கழுவி, உடை மாற்றி வந்து திவ்யமாக சாப்பிட்டேன். சுமதியும் சாப்பிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து, "சொல்லவே இல்லையே? இன்னைக்கு காலேஜ்ல புல்லாங்குழல் வாசிக்கப் போறதாச் சொன்னீங்களே, வாசிச்சீங்களா சிவாண்ணா?" என்றாள்.

"அட்டகாசம் பண்ணிட்டேன் சுமதி. என்ன கைத்தட்டல் தெரியுமா? 'ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலே லோ'ன்னு உருக்கோ உருக்குன்னு உருக்கிட்டேன்!"

"எங்கே, எங்கே எனக்காக ஒரு தடவை வாசிச்சுக் காட்டுங்களேன் சிவாண்ணா!"

நான் புல்லாங்குழல் எடுத்து வந்து தரையில் சப்பணங்கால் போட்டு அமர்ந்து காலேஜில் வாசித்த மாதிரியே வாசித்தேன்.

"அய்யோ! ரொம்ப நல்லா வாசிக்கிறீங்கண்ணா. நான் வாசிச்சுப் பார்க்கட்டுமா?"

''ம்... பாரேன்?"

அவள் புல்லாங்குழலைத் தப்பாகப் பிடித்து அடுப்பூதுவதுபோல உஸ்ஸ், உஸ்ஸ் என்று ஊதியது சிரிப்பை வரவழைத்தது.

"மண்டு. அப்படியில்லை. கத்துக்கணும்னு ஆசையா இருக்கா சொல்லு. கத்துத் தர்றேன்!"

"ஆசையாத்தான் இருக்கு!"

''இப்படி வந்து உக்காரு.''

அருகில் வந்து உட்கார்ந்த அவள் கைகளைப் பிடித்து புல்லாங்குழலின் ஓட்டைகளில் விரல்களை அமைத்து உயர்த்தி அவள் உதட்டில் வைத்து, ''ம். வாசி" என்றபோது,  அவளிடமிருந்து சோப்பு வாசனை வந்தது.

என்னுள் ஏதோ ஜிலீரென்று உணர்ந்தேன். என் முழங்கை ரொம்ப யதார்த்தமாக அவள் மார்பில் உரசிக் கொண்டிருப்பதை இப்போதுதான் உணர்ந்து... ஆனால் கையை நான் ஏன் விலக்கிக் கொள்ளவில்லை?

"என்ன சிவாண்ணா அப்படிப் பார்க்கறீங்க?'' என்றாள் சிரித்து.

சரேலென்று விலகி, "அப்புறம் கத்துத் தர்றேன். தூக்கம் வருது" என்று அவசரமாக அறைக்கு வந்து படுத்துக் கொண்ட நான் பதட்டமாக இருந்தேன். எவ்வளவு நல்ல பையன் நான்? திடீரென்று என்ன ஆயிற்று எனக்கு?

பின்குறிப்பு:-

கல்கி 29  அக்டோபர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com