

தீர்த்தக்கரை சிற்றூரில் நிகழ்ந்துகொண்டிருந்த விசித்திரம், மக்கள் மனங்களில் அச்சத்தின் கருமேகங்களாகச் சூழ்ந்திருந்தது. பகல் நேரத்துச் சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலும், இரவின் மங்கிய நிலவொளியிலும், மின்விளக்குகளின் செயற்கை வெளிச்சத்திலும் திடீரெனத் தரையில் ஆண், பெண் உருவங்களில் கரிய நிழல்கள் தோன்றின. ஆளே இல்லாமல் உருவாகிற அந்த நிழல்கள் முதலில் ஊரெங்கும் நடமாடிக்கொண்டிருந்தன; பிறகு வீடுகளுக்குள் புகுந்து மறையலாயின. அது என்ன, ஏன் இப்படி நிகழ்கிறது என்று யாருக்கும் புலப்படவில்லை. ஊரார் வியந்தனர்; சம்பந்தப்பட்ட வீடுகளின் குடியிருப்பாளர்கள் குழம்பினர்.
நிழல்கள் புகுந்த வீடுகளில் துர்சம்பவங்களும் துக்க காரியங்களும் நிகழ்ந்தன. குடும்பத்தலைவன் கடுமையான நோய்க்கு ஆளானான்; மகள் விபத்தில் சிக்கினாள்; மகனின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தது. விவசாய நிலங்கள் வறண்டன. வீட்டின் வளர்ப்புப் பிராணிகளும் பறவைகளும் மர்மமான முறையில் இறந்தன. மக்கள் பீதியடைந்தனர்.
இது ஏதோவொரு தீய சக்தி என்பது புரிந்தது. தூரத்து மலையடிவாரத்தில், ஆவிகளை அடக்கும் வித்தைகளில் கைதேர்ந்த மாந்தரீகர் ஒருவர் வசித்துவந்தார். தீர்த்தக்கரையின் மூத்தவர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை நாடினர்; நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது.
மாந்தரீகரும் மிகுந்த குழப்பத்தோடு கேட்டுவிட்டு, “இப்படிப்பட்ட வினோதமான மாய சக்தியை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. இது சாமானியமான துர்சக்தியல்ல; பேய்கள், பூதங்கள், பிரம்ம ராட்சசர்களைக் காட்டிலும் கொடியது என்று தோன்றுகிறது,” என்றார்.
தீர்த்தக்கரைப் பெருசுகள் இன்னும் அரண்டு, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
மாந்தரீகர் பத்மாசனமிட்டு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். சில கணங்களில் அவரது உடல் உதறி நடுங்கியது; திடுக்கிட்டுக் கண்கள் திறந்தார்.
“அவை உங்கள் பாவத்தின் நிழல்கள்!” - அவரது குரலில் இகழ்ச்சி தொனித்தது.
வந்திருந்தவர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். 'பாவத்தின் நிழல்களா? இதுநாள் வரை பயந்த தீய சக்தி, மாய மந்திரம் என எண்ணியது தங்கள் பாவங்களையா?' என அவர்கள் மனம் பதறியது.
“இதற்குப் பரிகாரம் உண்டா, சாமி?” ஒரு கிழவர் நடுங்கும் குரலில் கேட்டார்.
மாந்தரீகரின் முகம் மேலும் இறுகியது. “இல்லை, பாவங்களுக்கான பரிகாரம் செய்கிற எந்த முறைகளும் இந்த நடமாடும் நிழல்களிடம் செல்லுபடியாகாது. ஆகவே, அதன் தண்டனைகளை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.”
அந்தப் பதில் சம்மட்டியடியாக அவர்களின் தலையில் இறங்கியது; நம்பிக்கையின் கடைசிச் சுடரும் அணைந்தது.
தீர்த்தக்கரை கிராமம் முழுதும் மயான அமைதி குடிகொண்டது. ஊரார் முகங்களில் மரண பயத்தின் ரேகைகள் படர்ந்தன. நிழல்கள் இன்னும் அடர் கருமையாகி வேகமாக நகர்ந்தன. முன்பு வீட்டினுள் நுழைந்து மறைந்த அவை, இப்போது வீட்டின் சுவர்களில் ஊர்ந்தன; கூரைகளில் நடனமாடின; மரக்கிளைகளில் கைகளால் தொங்கி ஊஞ்சலாடின. மனிதர்கள் அதைக் கண்டு மிரட்சியுற்றனர்.
நிழல்கள் ஊடுருவிய வீடுகளில் துயரங்கள் மேலும் வலுப்பெற்றன. நோய்கள் தீவிரமடைந்தன; வயல்களில் பயிர்கள் கருக, கால்நடைகள் மடிந்தன. பணம், பொருள், நிலம் யாவும் கரைந்துபோயின. வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ மரணம் ஏற்பட்டு, ஊரில் இழவுகள் நிரந்தரமாயின.
பாவங்களின் நிழல்கள் மக்களின் வாழ்க்கையைத் தின்று அசைபோட்டன. செழித்த நிலங்களும் பெருக்கெடுத்து ஓடிய ஆறும், இன்று அவர்களது பாவங்களைச் சுமந்து வாடின.
தீர்த்தக்கரை கிராமம் வாழும் கல்லறையானது; மக்கள் நடமாடும் பிணங்களாயினர். நிழல்கள் சில நேரங்களில் மங்கலாகவும், சில நேரங்களில் அடர்ந்ததாகவும் அவர்களுக்கிடையே ஊடாடிக்கொண்டிருந்தன.
“பாவத்தின் நிழல்களிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒரே வழி ஊரைவிட்டுப் போவதுதான்,” என்று ஊர் சனம் பலரும் புலம்பெயரலாயினர். அப்போது அவர்களில் மிகச் சிலருக்கு மட்டும் நிழல் விழாததும், சிலரின் நிழல்கள் முன்னே ஓடி நின்று கொக்கரித்து, “வா… வா…! உனக்கு முன்னே நான் அங்கே சென்று காத்திருப்பேன்!” எனக் கையசைப்பதும் ஊரில் தங்கியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.