சிறுகதை; ஏன்?

Short Story: Yen?
ஓவியம்; மகேஸ்
Published on

-ரிஷபன்

தாடி வைத்திருந்தார். 'எள்ளும் அரிசியும் கலந்த மாதிரி' என்று பாட்டி சொல்கிற மாதிரி தாடி. பறங்கிப்பழ உடம்பு. ஜிப்பா. கருப்புக் கலரில் பேண்ட். மூக்குக் கண்ணாடி.

"அம்பது வயசும்மா..." என்றபோது குரலில் கணீர்.

முன்கூட்டியே தகவல் அறிவித்து இன்றைய ஞாயிறின் பிற்பகலில்...

'ரெண்டு மணிக்கு மேல வரட்டுமா... வசதிப்படுமா...' என்று கேட்டு நிச்சயித்த சந்திப்பு.

வந்தபோது மணி இரண்டரை. காலிங்பெல் சப்தம் அவருக்குப் பிடித்திருக்கிறதாம்.

"சில பேர் வீட்டுல, வந்தவன் திரும்பிப் போனப்புறமும் டிங்டிங்னு அடிச்சு கிட்டிருக்கும்" என்றார் தொற்றிக் கொள்ளும் சிரிப்புடன்.

மணிமேகலை புடைவைக்கு மாறியிருந்தாள். நாற்பத்தி இரண்டு வயசுக்கு விடுமுறை நாட்களில் 'நைட்டி'யே பழகிவிட்டது.

வரப் போகிற சுந்தரமூர்த்தி 'இன்னாரென்று' புலப்படாததால் சம்பிரதாய அனுசரணை.

"சில பேர் ஸண்டே மத்தியானம் தூங்குவா. நான் மியூசிக் கேட்பேன். கர்னாடிக்... வெஸ்டான்... எதுவும் விதிவிலக்கில்லை. முந்தாநாள் புஷ்பவனம் கேட்டேன்..."

ரொம்ப நாள் பழக்கம் போல சுவாதீனமாய் அமர்ந்திருந்தார்.

"நான் புக்ஸ் படிப்பேன்..." என்றாள்.

"தெரியறது... ஷெல்ஃப்ல பார்த்தா... எப்படி டேஸ்ட்... பார்க்கலாமா?"

பதிலுக்குக் காத்திராமல் விருட்டென்று எழுந்தார். ஆன வயசுக்கு கொஞ்சம் கூடவே துறுதுறுப்பு. பாட்டி இருந்தால்... 'புள்ளை இல்லாத வீட்டுல...' ப்ச்... என்னது... எப்ப பார் பாட்டி ஞாபகம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அடிமையின் மோகம்!
Short Story: Yen?

மணிமேகலை சுதாரிப்பதற்குள் சு. மூர்த்தி கையில் புத்தகங்கள். வரிசையிலிருந்து உருவியிருந்தார்.

"முன்னே மாதிரி படிக்க முடியலே. லேசா தலையை வலிக்க ஆரம்பிச்சுருது. பட்... மியூசிக் கேட்டா நோ ப்ராப்ளம்."

வந்து அமர்ந்து கொண்டார்.

"டீ ஆர் காப்பி?"

"டீ..."

ஒரு ட்ரேயில் பிஸ்கட்டும் இரண்டு கப்புகளில் டீயுமாகத் திரும்பினாள்.

"இது நீ போட்டதா..." என்றார் முதன்முறையாய் நேரடியாய் ஒருமையில் விளித்து.

''இல்லே... வாங்கினது..."

சமையலறையை எட்டிப் பார்த்தார்.

"நீட்டா இருக்கு..."

பெட்ரூம் வாசலில் அவர் சற்று முன் தொட்ட மணிக்கொத்து இன்னமும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

டீயை உறிஞ்சினார்.

“ஏன் திடீர்னு அப்படி ஒரு விளம்பரம் கொடுத்தேன்னு தெரிஞ்சுக்கலாமா?"

மணிமேகலை தன் விளம்பர வரிகளை நினைவில் கொண்டு வந்தாள்.

"... அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் 42 வயது மாநிற, சராசரி உயர, அதிக பருமன் இல்லாத பெண்ணுக்கு வரன் தேவை. போஸ்ட் பாக்ஸ் நெ..''

"ரொம்ப சுருக்கம். அப்புறம் உன்னோட லெட்டர்ல விரிவா எழுதினே. ஒரு தம்பி... ஒரு தங்கை ஸெட்டில்டு. அப்பா அம்மா இல்லை. சொந்த ஃப்ளாட். சரியா..."

மணிமேகலை தலையசைத்தாள்.

"இன்ஃபாக்ட்... நான் ஒரு விடோயர். கல்யாணம் ஆகி ஒரே வருஷம்... போயிட்டா. முதல் டெலிவரி... தாயும் குழந்தையும்... ஆண் குழந்தை... மூன்றரைக் கிலோ இருந்துதாம்...''

சு.மூர்த்தி கண்ணாடியைக் கழற்றியது இயல்பாக இருந்தது. கண்களைத் துடைக்கவில்லை.

"அப்புறம் வேற கல்யாணம் செஞ்சுக்கப் பிடிக்கலை. அப்படியே இருந்துட்டேன். தம்பி, தங்கை எனக்கும். அவங்களும் ஸெட்டில்டு... ப்ச்... எனக்குத்தான் எங்கேயும் ஒட்டலே..."

டிபன் ஏதாவது செய்யவா.' என்றாள்.

"ம்... என்ன செய்யலாம்..."

"ரெடி மிக்ஸ் இருக்கு..."

"வேணாம்... அலுத்துப் போச்சு.''

"ஓ... சமையல் நீங்கதானா?"

சிரித்தார். பற்களின் பளீர்.

"ஆளை வேலைக்கு வச்சா... அவ இஷ்டத்துக்கு நான் மாறணும்... ஏன் வம்பு?"

"பஜ்ஜி... போண்டா... ஒத்துக்குமா?"

கேட்டபிறகு அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.'வயசானவர்' என்பதைச் சுட்டுகிற மாதிரி.

''ஓக்கே... உனக்குப் பிடிச்சது எதுவானாலும்..."

'' உனக்குப் பிடித்தது... ' அவளுக்குப் பிடித்தது. சற்று அதீத உணர்ச்சிதான். ஆனாலும் இத்தனை வருஷங்களில் கேள்விப்பட்டிராத பிரயோகம்.

இதையும் படியுங்கள்:
மக்கள் உங்களை இன்னும் சரியா புரிஞ்சுக்கலை தலைவரே!
Short Story: Yen?

"தேங்காய் சட்னி அரைச்சிடறேன். மார்னிங் சாம்பார் கூட இருக்கு...".

எழுந்தாள்.

"நான் வேணா... ஹெல்ப்..."

"பரவாயில்லே... லைட் டிபன்தானே..."

டேப் ரிகார்டரை எதிரில் வைத்தாள்.

"எப்பவோ வாங்கின நாலஞ்சு கேசட்தான் இருக்கு..." என்றாள் சங்கடமாய்.

அரைமணியில் டிபன் ரெடி. இடையிடையே பேச்சு. இப்போது வார்த்தைகள் இன்னமும் இலகுவாய் எல்லை ஏதுமற்று இயல்பாய்ச் சுழன்றன.

"புடைவை உனக்குக் கஷ்டமா இருக்கு... '' என்றார் அவள் படும் சிரமம் பார்த்து.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே...''

"நோ ரெஸ்ட்ரிக்ஷன்... நீ, நீயாகவே இரு... ''

கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

"உன்னோட தம்பி... தங்கை... என்ன சொல்லுவாங்க?"

''உங்க தம்பி... தங்கை?"

"ம்..." தோளைக் குலுக்கினார்.

"மறுக்க மாட்டாங்கன்னு தோணுது. என் விருப்பம்தானே... இப்ப உன்னை நேர்ல பார்த்தப்புறம்..."

"பார்த்தப்புறம்...?"

"ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கியே... ஐயாம் பிஃப்டி இயர்ஸ் ஒல்டு..."

லேசாய்ச் சிரித்தார்.

மணிமேகலை மௌனமாய் இருந்தாள்.

தினாறு வருஷங்களுக்கு முன்.. ஒரு பெண் பார்த்தல் படலம். 'அம்மா, அப்பா இல்லாதவா... சரி...  தம்பி, தங்கையை கரையேத்தணும். சரி, ஆனா பொண்ணைப் பார்த்த... வயசானவா மாதிரி இருக்காளே?'

"என்ன... யோசனை..."

''ஒண்ணுமில்லே..." என்றாள்.

"சொல்லு. என் கேள்விக்கு நீ இன்னமும் பதிலே சொல்லலே...திடீர்னு இப்ப எதனால அந்த விளம்பரம்? அதுவும் என்னைப் போய் சூஸ் பண்ணி பதில்... இப்ப கூட விருந்தோம்பல்... என்னம்மா..."

இதே புரிந்து கொள்ளுதல், அனுசரித்தல் விட்டுக் கொடுத்தல், சக மனிதநேயம் எல்லாம். அந்த வயசுக் காலத்தில் அமையாமல் போனதுதான் என்று எதை எதையோ யோசித்து.. சொன்னாள்.

“தனிமை... தனிமைதான் என்னால தாங்க முடியலே..." லேசாய்க் கண் கலங்கியிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 29 செப்டெம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com