சிறுகதை: அடிமையின் மோகம்!

Tamil short story Adimaiyin Yogam
Two men shaking hands
Published on

மாநகரின் மையத்தில் அமைந்திருந்த அந்தக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்துகொண்டிருந்த சர்க்கஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தனது மனைவியையும் குழந்தைகளையும் கண்டிப்பாக சர்க்கஸிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு வந்திருந்தான் ஜெயகுமார். அதற்காக மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தாசில்தார் அவனை அலைபேசியில் அழைத்தார்.

“ஜெயகுமார்! கலெக்டர் ஃபேமிலி இன்னிக்கி சர்க்கஸ் பார்க்கப் போறாங்க. அவங்கள நீங்கதான் பத்ரமா கூட்டிட்டுப் போகனும். ஒடனே கேம்ப் ஆபீஸுக்குப் போங்க” என்று உத்தரவிட்டார். அதிகாரிகளின் உத்ததரவைத் தட்டிப் பேசிப் பழக்கமில்லாதவன் ஜெயகுமார். அப்படிப்பட்டவன் தனது பிள்ளைகளுக்காகத் தன்னை விட்டுவிடுமாறு மன்றாடினான். விடுப்பு என்றோ அனுமதி என்றோ தேவையில்லாமல் கேட்கக் கூடியவன் அல்ல அவன். அது தாசில்தாருக்கும் நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகள் மிகுந்த எதிர்பார்ப்புன் காத்திருப்பார்களே என்று அவன் மனம் பதறியது. தாசில்தாரிடம் உண்மையைச் சொல்லி தனக்குப் பதிலாக வேறொருத்தரை அனுப்பும்படி கெஞ்சினான்.

“ஜெயகுமார்! உங்களையும் சேர்த்து மொத்தம் அஞ்சு ரெவினியூ இன்ஸ்பெக்டர்ஸ் இருக்கீங்க. அதுல ரெண்டுபேரு மினிஸ்டர்ஸுக்கு விசிட் டியூட்டி பாக்குறாங்க. ஒருத்தர் அலுவலக வேலையா சென்னைக்குப் போயிருக்குறாரு. இன்னொருத்ததர் மெடிக்கல் லீவ்ல இருக்காரு. மிச்சம் இருக்குறது நீங்க மட்டும்தான். நீங்களும் முடியாதுன்னு சொல்லிட்டா அப்புறம் நான்தான் போகணும்,” என்று சற்று கடுப்பாகவே பேசினார் தாசில்தார்.

“என்ன சார்! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுரீங்க! தாசில்தார் போய் இந்த வேலையைப் பார்க்கலாமா! நான் பார்த்துக்கிறேன், சார்!" என்று அடக்கமாகக் கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் கலெக்டர் பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தான் ஜெயகுமார். அங்கிருந்து கலெக்டரின் துணைவியாரையும் குழந்தைகளையும் இன்னோவா காரில் ஏற்றிக்கொண்டு சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஜெயகுமாரும் வாகன ஓட்டுநர் துரைசாமியுமாகச் சேர்ந்து கலெக்டரின் குடும்பத்தாரை முன் வரிசையில் முக்கியப் பிரமுகர்களுக்கான இருக்கைககளில் அமரவைத்துவிட்டு, ஐந்து வரிசைக்குப் பின்னால் வந்து அமர்ந்துகொண்டனர். அந்த இருவரின் கவனமும் கலெக்டர் குடும்பத்தார் மீது குவிந்திருந்தது. அவர்கள் சர்க்கஸை ரசிக்கவில்லை.

ஜெயகுமாரின் மனம் கலக்கமுற்றிருந்தது. தனது மனைவியையும் குழந்தைகளையும் ஏமாற்றிவிட்டதை எண்ணி வேதனைப்பட்டான். மனைவியிடமிருந்து மூன்றுமுறை அலைபேசி அழைப்பு வந்துவிட்டது. அழைப்பை ஏற்கத் தைரியமின்றி பேசாமல் இருந்துவிட்டான். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மனைவியை அழைத்து நிலைமையை விளக்க முற்பட்டான். மறுமுனையில் கோபத்தின் உச்சத்தில் இருந்து கத்தினாள் அவனது மனைவி. பிள்ளைகள் இரண்டும் அழுது தவிப்பதாகச் சொன்னாள். பிள்ளைகளை ஏமாற்றிவிட்டோமே என்ற எண்ணம் ஜெயகுமாரை வதைத்தது.

இதையும் படியுங்கள்:
Science Fiction Story: ஸ்டெலா எனும் 'மனிபோ'!
Tamil short story Adimaiyin Yogam

அதற்குள் ஆட்சியரின் மனைவி முன்வரிசையில் இருந்து அவனை அழைப்பது தெரிந்தது. உடன் அலைபேசியைத் துண்டித்துவிட்டு அருகில் சென்று,

“என்ன வேண்டும், அம்மா!” என்று கேட்டான்.

“பிள்ளைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டும் மூன்று ஐஸ்கிரீமும் வேண்டும்,” என்று அம்மையார் உத்தரவிட, அவற்றை வாங்கிக் கொண்டுவந்து அம்மையாரிடம் கொடுத்துவிட்டுத் தனது இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான் ஜெயக்குமார்.

'இந்த அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதினால்தான் அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் ஓடிப்போய் நிற்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குடும்பத்தைக் கவனிப்பதற்கே நேரமில்லாமல் போகிறது. சர்க்கஸ் போடப்பட்ட நாளிலிந்து பிள்ளைகள் தங்களை சர்க்கஸுக்கு அழைத்துச் செல்லும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தனர். இன்றைக்கு நாளைக்கு என்று நகர்ந்துவிட்டன நாட்கள். இன்று கடைசி நாள். இந்த நேரத்தில் தனது குடும்பத்தாரோடு இக்கூடத்தில் அமர்ந்திருக் வேண்டிய தான் இப்படித் தனியாக வேறு நபர்களுடன் அமர்ந்திருக்கிறோமே' என்று எண்ணி வெட்கமும் வேதனையும் அடைந்தான் ஜெயகுமார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தண்ணீர்ப் பஞ்சம்!
Tamil short story Adimaiyin Yogam

சற்று நேரத்தில் அவனது கவனம் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் குவிந்தது. முன்பெல்லாம் யானை, புலி, சிங்கம் என காட்டு மிருகங்களைக் காட்டுவார்கள். தற்பொழுது மிருக வதைத் தடைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதால் அத்தகைய மிருகங்கள் தற்பொழுது காட்சிப்படுத்தப் படுவதில்லை. இது சற்று ஆறுதலாக இருந்தது ஜெயகுமாருக்கு. ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்ற சூழ்நிலையில் மனிதர்கள் செய்கின்ற சாகசங்கள் மயிர்க்கூச்செறியச் செய்தன. மிகவும் ஆபத்தான வளையங்களைக் கொண்டு பெண் கலைஞர்கள் செய்கின்ற ஜிம்நாஸ்டிக் கலைகள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தின. பெரிய இரும்புக் கூண்டிற்குள் இரண்டு கலைஞர்கள் மோட்டார் சைக்கிளில் படு வேகத்தில் தலைகீழாகவும் குறுக்குவாட்டிலும் சுற்றுவதை ஜெயகுமாரால் பார்க்க முடியவில்லை. மனம் நடுங்கியது. இறுதியாக வந்த பார் விளையாட்டில் எண்ணம் பேதலித்துப் போனான் அவன்.

இவ்வளவு ஆபத்தான விளையாட்டுகளைப் பார்ப்பதில் மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் ஏற்படுகிறது என்று வியந்துகொண்டான். பிழைப்பதற்கு எத்தனையொ வழிகள் இருக்கும்பொழுது சர்க்கஸ்காரர்கள் இப்படித் தினம்தினம் செத்துப் பிழைக்கும் வழியை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டான். ஒருவேளை தன் குடும்பத்தை இன்று அழைத்து வந்திருந்து, குழந்தைகள் நிகழ்ச்சிளைப் பார்த்துக் குதூகலம் அடைந்திருந்தால் மேற்கண்டவாறெல்லாம் மனதிற்குள் அவன் கேள்விகள் கேட்காமல் இருந்திருப்பானோ என்னவோ.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; வெளிச்சம் வெளியே இல்லை!
Tamil short story Adimaiyin Yogam

ஒருவழியாக சர்க்கஸ் முடிவடைந்தது. கலெக்டர் குடும்பம் காரில் ஏறிக்கொள்ள, கார் கலெக்டர் பங்களாவை வந்தடைந்தது. அந்த நேரம் பார்த்து கலெக்டர், பங்களாவிலிருந்து வெளியில் வந்து நின்றார். அவரைக் கண்டவுடன் காரிலிருந்து இறங்கிய ஜெயகுமார் பயபக்தியுடன் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு காருக்குப் பின்புறம் போய் நின்றுகொண்டான். துரைசாமி காரை நிறுத்துவதற்காக ஷெட்டிற்கு எடுத்துச் சென்றான். கலெக்டர் தனது மனைவி மக்களோடு பேசிக்கொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டார். துரைசாமியும் ஜெயகுமார் வசிக்கும் அதே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்தான் வசித்து வருகிறான். எனவே அவனையும் உடன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதற்காக ஜெயகுமார் காத்துக்கொண்டிருந்தான்.

மனைவி மக்களை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றிய தீவிர ஆலோசனையில் மூழ்கியிருந்தான். பிள்ளைகள் அப்பா எங்கே என்று கேட்டு அவர்களது அம்மாவைத் துளைத்து எடுத்திருப்பார்கள்; மனைவி என்மேல் உள்ள கோபத்தில் பிள்ளைகளை அடித்துக்கூட இருக்கலாம்; பிள்ளைகள் இந்த நேரத்தில் அழுதுகொண்டிருக்கக் கூடம் என்றெல்லாம் நினைக்க நினைக்க ஜெயகுமாருக்கு மனம் கனத்துப்போய் இருந்தது.

அவன் அப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதில், கலெக்டர் திடீரென பங்களாவிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஜெயகுமாருடன் கைகுலுக்கி “தேங்க் யூ ஜெயகுமார்! பிள்ளைகளுக்கு நல்லபடியா சர்க்கஸ் காண்பிச்சுட்டு வந்திருக்கீங்க!” என்றார். குலுக்கிய கையை விடுவித்துக்கொண்டு ஜெயகுமாரின் தோளைத் தொட்டு, “குட் நைட் ஜெயகுமார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் பங்களாவிற்குள் சென்றுவிட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இனிப்பில் கசப்பு!
Tamil short story Adimaiyin Yogam

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இந்த அரிய நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் பொழுதே துரைசாமியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். ஆனானப்பட்ட கலெக்டரே அவரது வாயால் தன்னுடைய பெயரை உச்சரித்து, கைகுலுக்கி நன்றி சொன்னார் என்றால் அது சாதாரண விஷயமா, ஜெயகுமார் போன்றோர்க்கு!? இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்ததற்கு துரைசாமி வடிவத்தில் வலுவான சாட்சிவேறு இருக்கிறதே! சொல்லவா வேண்டும் ஜெயகுமாருக்கு! நாளைக்கு அலுவலகத்திலுள்ள அத்தனை பேரிடமும் சொல்லிப் பெருமிதம் கொள்ளலாமே!

இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத ஜெயகுமார், “கலெக்டர் என் பேரச் சொல்லி கூப்பிட்டார், துரைசாமி! கை குடுத்தார்; என் தோளத் தட்டினார்…” என்று நிலைகுலைந்து பேசினான்.

“நானும் பாத்துக்கிட்டுத்தான் சார் இருந்தேன்” என்றான் துரைசாமி சிரித்துக்கொண்டே.

இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிப் பறந்தார்கள். ‘என்ன, நாளைக்கு மனைவியையும் பிள்ளைகளையும் கடைக்கு அழைத்துக்கொண்டு சென்று மனைவிக்குப் புடவையும் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்புகின்ற உடைகளையும் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டால் போகிறது. அவர்கள் நிச்சயம் சமாதானம் அடைந்துவிடுவார்கள்’ என்று எண்ணிக்கொண்டான் ஜெயகுமார்.

அவனது வாகனம் சாலையில்தான் போய்க்கொண்டிருந்தது. பெருமிதம் கொண்ட அவனது மனமோ வானத்தில் பறந்து கொண்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com