முட்டுனா... கொம்பு முளைக்குமா? பொடுகு முளைக்குமா?

Dandruff problem
Dandruff problem
Published on

தலையில் திடீரென்று அரிப்பு. பொடுகோ? வெயில் அதிகம், அதனால் தலையில் வியர்வை கோத்துக் கொண்டு பொடுகு உற்பத்தியாகிறதோ?

எத்தனை ஜீவராசிகள், இக்கிணியூண்டு உயிரினங்கள்…. இதையெல்லாம் படைத்தது யார் என்ற ஆராய்வதைவிட, பொடுகைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும் என்று தீர்மானித்தேன்.

அதற்கு முன் நோய் முதல் நாட முயன்றேன். எப்படிச் சேர்ந்திருக்கும் இந்தப் பொடுகு? எப்போதாவது கடை, மார்க்கெட், வங்கி என்றுதான் போய்வருவேன். அங்கேயும் யார் தலையுடனும் முட்டிக் கொள்ளவில்லை. (‘ஒரு தரம் முட்டினால் இன்னொரு தரம் முட்டிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கொம்பு முளைக்கும்‘ என்ற சம்பிரதாயம், ‘பொடுகு முளைக்கும்‘ என்ற பயத்தால் உருவாகியிருக்கும். முதல் முட்டலில் தலை மாறிய பொடுகு, அடுத்த முட்டலில் முந்தைய தலைக்கே போய்விடும் என்ற எதிர்பார்ப்பும் காரணமாக இருக்கலாம்!)

பேரப் பிள்ளைகளும் தலை சொறியவில்லை – பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்காது!

வழக்கமான தலை எண்ணெய், ஷாம்புவுக்கு பதிலாக வேறு பிராண்ட் மாற்றிய துரோகத்தால், முந்தையவை இட்ட சாபமோ?

சொறிதலால், தலையிலிருந்து ஏதோ துகள்கள் விழுந்தன. நிச்சயம் பொடுகுதான். குளிநீரில் அழுக்கு சேர்ந்திருக்குமா? ஓவர் ஹெட் டாங்க்கை சுத்தம் செய்தால் சரியாகிவிடுமா?

தற்செயலாக அண்ணாந்து பார்த்தேன். மின்விசிறி இறக்கைகளின் ஓரத்திலிருந்து சடையாக அழுக்கு ‘விழட்டுமா?‘ என்று கேட்டுக் கொண்டிருந்தது. ஓ, புரிகிறது. மின்விசிறி சுழலும்போது, வெகு நாட்களாக அதை சுத்தப்படுத்தாத கோபத்தில் அழுக்குத் துகள்களை என் தலையில் கோப ஆசிர்வாதமாகப் பொழிந்திருக்கிறது!

உடனே வரிந்து கட்டிக் கொண்டு, ‘கோடா‘ ஸ்டூலைப் போட்டு மேலேறி, பாசத்துடன் இறக்கைகளைத் துடைத்து விட்டேன்.

இப்போது மின்விசிறி கூடுதல் வேகத்துடன் சுழல்கிறது, தலையில் அரிப்பும் இல்லை! அட, எத்தனை அற்பமான காரணத்துக்கு எப்படியெல்லாம் விபரீதமாக மூலத்தைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன்!

இந்த சமயத்தில் நான் சில நாட்களுக்கு முன் படித்த ஒரு அமெரிக்கரின் அனுபவம் நினைவுக்கு வந்தது:

அவர், இருபது ஆண்டுகளாக அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர், ‘‘சார், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறது உங்க உடம்பு. ஆமாம், உங்கள் இத்தனை வருட தலைவலிக்கு உங்களுடைய விதைப்பைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான் காரணம். அவற்றை ஆபரேஷன் செய்து நீக்கிவிட்டால் தலைவலி முற்றிலுமாக மறைந்துவிடும்,‘‘ என்றார்.

மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை, எம்.டி.க்குப் பின்னாலும் என்னென்னவோ பட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் டாக்டர்... தப்பாகவா டயக்னாஸ் பண்ணுவார்? ‘வெறும் நாலு லட்ச ரூபாய் கட்டணத்தில் நீக்கிவிடலாம்‘ என்று அசால்டாகவும் சொல்ல, வந்தவர் எதிர்கால பயம் போவதற்கு அந்தத் தொகையையும், விதைப்பைகளையும் பணயம் வைத்தார்.

இதையும் படியுங்கள்:
ஜெய்ப்பூரில் ஜம்மென்று சுற்றிப் பார்க்க வேண்டிய 6 முக்கியமான இடங்கள்!
Dandruff problem

ஆபரேஷன் முடிந்தது. அதிசயமாகத் தலைவலியும் போயே போச்!

சில நாட்கள் கழித்து, அவர், ஒரு தையல்காரரிடம் தனக்கு சூட் தைத்துக் கொடுக்கும்படிகேட்டார். பல்லாண்டு அனுபவம் வாய்ந்த தையல்காரர், ‘‘உங்களுக்கு 44 சைஸ் சரியாக இருக்கும்,‘‘ என்றார். கூடவே ஒரு மாடல் எடுத்துக் கொடுக்க, அது கச்சிதமாகப் பொருந்தியது கண்டு வியந்தார் வாடிக்கையாளர். ‘‘எல்லாம் அனுபவம்தான் சார்,‘‘ என்று அவருடைய வியப்புக்கு விடையளித்தார் தையல்காரர்.

அடுத்து சட்டையின் முழுக்கைப் பகுதி 34 என்றும், கழுத்துச் சுற்றளவு 16.5 என்றும் சொன்னபோது அசந்துவிட்டார் வாடிக்கையாளர். பிறகு, ‘‘சரி, எனக்கு அண்டர்வேர் வேண்டும்…‘‘ என்று அவர் ஆரம்பிக்கு முன்னாலேயே ‘‘சைஸ் 36 ‘‘ என்றார் தையல்காரர்.

‘‘மாட்டிகிட்டீங்களா, உங்க அனுபவம் இப்ப பலிக்கலே. நான் 18 வயதிலிருந்து 34 சைஸ்தான் பயன்படுத்துகிறேன்,‘‘ என்று அவர் அனுமானம் பொய்த்துப்போன உற்சாகத்தில் சொன்னார் வாடிக்கையாளர்.

‘‘சாரி சார். அப்படி நீங்கள் உடுத்தவே கூடாது. ஏனென்றால் 34 சைஸ், ரொம்ப டைட். விதைப்பைகளை மேல் நோக்கி இறுக்கும். அதனால் முதுகுத்தண்டின் அடிப்பாகம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி தாங்க முடியாத தலைவலியால் அவதிப்படுவீர்கள். என் அனுபவப்படி உங்களுக்கு 36 சைஸே சரி,‘‘ என்றார் தையல்காரர்.

வாடிக்கையாளர் டமாலென்று மூர்ச்சித்து விழுந்தார்.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகன்னாதர் கோயில் மூன்றாவது படியில் உள்ள மர்மம்... கால் வைத்தால் போச்சு!
Dandruff problem

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com