
உலகில் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு மாற்றத்தை அவர்களின் வாழ்வில் ஏதேனும் ஒரு நாள் ஏற்படுத்தும். அந்த வகையில் காந்திஜியின் வாழ்வில் அவரை தலைகீழாய் மாற்றிய ஒரு நாள் தான் 7 ஜூன் 1893.
இந்தியாவின் தந்தை யார் என்று கேட்டால் தற்போது பலரும் 'மகாத்மா காந்தி' என்று சொல்வார்கள். சாதாரன மோகன் கரம் சந்த் காந்தியை தேசப்பிதா மகாத்மா காந்தியாக இந்தியாவிற்கு பெற்றத் தந்த அந்த நாள் தான் 7 ஜூன் 1893.
அகிம்சை வழியில் இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்று தந்த அந்த மாபெரும் மனிதர், தன் வாழ்நாளில் 25 சதவீதம் வாழ்ந்த இடம் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர். காந்தி வாழ்ந்தது மொத்தம் 79 ஆண்டுகள். இங்கிலாந்து நாட்டின் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் பெற்ற பாரீஸ்டர் பட்டத்துடன் தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி காலடி வைத்த போது அவருக்கு வயது 24. அதிலிருந்து 20 ஆண்டுகள் அவர் வாழ்ந்தது டர்பன் நகரில் தான்.
அங்கு தான் அவர் முதன் முதலில் நிறவேற்றுமையின் கொடுமையையும், அடிமை வாழ்க்கையின் அவலத்தையும் கண் முன் கண்டார். 1893 ம் ஆண்டு, தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் உள்ள தாதா அப்துல்லா என்ற வியாபாரியின் வழக்கு விஷயமாகத்தான் இந்தியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்றார் காந்தி.
காந்தியின் விருப்பத்தின் பேரில், பிரெட்டோரியா நகரத்தின் வட பகுதிக்கு செல்வதற்காக, காந்திக்கு முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் தாதா அப்துல்லா. அந்த நீராவி ரயில் என்ஜின் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு ஐரோப்பியர் காந்தி பயணம் செய்து கொண்டிருந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வருகிறார். வெள்ளையர் அல்லாத எவரும் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யக் கூடாது என்று கூறி காந்தியின் உடைமைகளை வெளியே எறிந்து, காந்தியை வெளியேற்றுகிறார். அந்த ரயில் நிலையம் பீட்டர் மேரீட்ஸ்பெர்க்.
இந்த சம்பவம் மட்டும் அன்று நடந்திருக்காவிட்டால் அகிம்சை என்ற ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை நாம் அறிந்திருக்க மாட்டோம். காந்தி எல்லோராலும் கொண்டாடப்படும் தேசப்பிதாவாக மாறியிருக்க மாட்டார். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய அந்த நிகழ்வு ஜூன் 7,1893 ன் இரவு நேர ரயில் பயணம் தான்.
அந்த ஒரு சம்பவம் தான் காந்தியை நிறவேற்றுமைக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிக் கொணர உதவியது. அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் காந்தி வசித்தது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள். இந்த விஷயங்களை எல்லாம் காந்தியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களைப் பற்றி, அவர் தனது சுயசரிதையில் எழுதினார்: "குளிர் மிகவும் கசப்பாக இருந்தது. என் மேலங்கி என் சாமான்களில் இருந்தது. ஆனால், நான் மீண்டும் அவமதிக்கப் படக்கூடாது என்பதற்காக அதைக் கேட்கத் துணியவில்லை. அதனால் நான் உட்கார்ந்து நடுங்கினேன்".
இந்த சம்பவம் தனது 'உரிமைகளுக்காக' போராடுவதற்கான தனது 'கடமையை' உணர அவருக்கு அறிவூட்டியது என்று அவர் மேலும் கூறுகிறார். நன்கு அறியப்பட்ட ரயில் சம்பவங்கள் காந்தியின் வாழ்க்கையை மாற்றி, அவரது சத்தியாக்கிரகக் கருத்துக்கு ஒரு ஊக்கியாக மாறியது. தென்னாப்பிரிக்காவிலும் பின்னர் இந்தியாவிலும் அநீதிகளுக்கு எதிரான காந்தியின் வன்முறையற்ற எதிர்ப்பின் தொடக்கமாகவும் இது அமைந்தது.
இந்த நாள் தான் அகிம்சை முறையில் என்னை போராட வைத்தது என்ற அவர் சொன்ன வாசகத்துடன் - அந்த ரயில் நிலையம் அமைந்திருந்த பீட்டர் மேரீட்ஸ்பெர்க் நகரத்தில் - அவரது சிலை கம்பீரமாக அந்த நகரின் பிரதான சாலையில் இன்றும் நிற்கிறது.