

நாட்டில் தெரு நாய்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர் சங்க காலம் முதல் இன்றுவரை நாய்களின் நன்றியும் வீரத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். நேபாள வெள்ளத்தில் மோப்ப நாய்களின் சேவை, கோயம்புத்தூரில் இளம்பெண்ணை காப்பற்றிய தெரு நாய்கள் போன்ற சம்பவங்கள் மூலம், நாய்களின் குறை அல்ல; மனிதர்களின் பராமரிப்பு பிழையே பிரச்சினை என வலியுறுத்துகிறார்.
சமீப காலத்தில் நாட்டின் பல இடங்களிலும் நாய்களின் தொல்லை அதிகரித்து விட்டதையும், பாதசாரிகளும் பைக் ஓட்டுபவர்களும் பதம் பார்க்கப்படுவதையும் செய்திகள் விலாவாரியாக விளம்பி, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றனர்.
பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியரும் நாய்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி, கூட்டணி போட்டு அவை கூத்தடிப்பதையும் சில ஊடகங்கள் வீடியோ வாயிலாக விரிவாக்கித் தருகின்றன.
‘நன்றியுடைய விலங்குகளில் நாய் முதன்மையானது’ என்பர். மனிதர்களுக்குத் துணையாகவே அது எப்பொழுதும் வாழ்ந்து வருகிறது என்பதற்குச் சங்க காலத்திலிருந்தே சான்றுகள் உள்ளன. வீரத்துக்கும், வேட்டைக்கும், காவலுக்கும் பெயர் பெற்ற விலங்கு அது.
‘வால் குலைக்கும் நாயின் நட்பு வேண்டும்’ என்பதும் ‘வளர்த்தவன் தன்னை அடித்தாலும் நாய் நன்றியுடன் தன் வாலை ஆட்டும்!’ என்பதும் முதுமொழிகள்.
ஞாளி, ஞமலி, கத நாய் மற்றும் செய்நாய் என்ற பெயர்களிலும் நாய்களைச் சங்க நூல்கள் அழைத்து ஆசீர்வதிக்கின்றன.
‘கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்’ என்ற புறநானூற்றுப் பாடல் வேடனுக்கும் அவன் நாய்க்குமுள்ள பாசப் பிணைப்பை பறைசாற்றுகிறது.
குறுந் தொகையோ, ’மூங்கிலின் முளை போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட பெரிய நகங்களை உடைய வேட்டை நாய்’ என்று வர்ணிக்கிறது. ’உடும்பு, முயல் மற்றும் மான்களை வேட்டையாட நாய்கள் பயன்பட்டதாக’ நற்றிணை மற்றும் ஐங்குறுநூறு பகர்கிறது. முல்லை மற்றும் மருத நிலங்களில் நாடோடிகளாய் வாழ்ந்தவர்களின் வேட்டைக்கு உதவிய நாய்கள், அவர்கள் ஓரிடத்தில் சமுதாய அமைப்பில் சேர்ந்து வாழ ஆரம்பித்ததும் அவர்களின் ஆநிரைகளைக் காக்கும் பொறுப்பை ஏற்றனவாம். தங்கள் உரிமையாளர்களை எதிகளிடமிருந்தோ அல்லது விலங்குகளிடமிருந்தோ காக்கும் தீரச் செயலில் உயிரையும் தியாகம் செய்த நாய்களுக்கு நடுகல் இடும் வழக்கமும் இருந்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
உதாரணம், எடுத்தனூர் நடுகல். விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டு ஒன்று தன் எஜமானனுக்காக உயிரை விட்ட ‘கோவிவன்’ என்ற தியாக விலங்கிற்கு நடுகல் நடப்பட்டதை விளக்குகிறது. இது நடந்தது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில்.
சமீபச் செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளின் உண்மை நிலையை விளக்குகின்றன. உலகையே உலுக்கிப் போட்ட நேபாள வெள்ளத்தில் நேபாளக் காவல் துறையின் மோப்ப நாய்களான (Sniffer Dogs) ராக்கி (பெல்ஜியன் ஷெப்பர்ட்), ஜம்போ (ஜெர்மன் ஷெப்பர்ட்) மற்றும் டீப்சி ஆகியவை சேற்றுக்குள் அமிழ்ந்திருந்த 26 பேரைக் கண்டு பிடிக்க உதவியுள்ளன. அவலம் என்னவென்றால் அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதுதான்! அது அவற்றின் தவறல்லவே!
அதோடு மட்டுமல்ல. நேபாளத்தின் திரிசூலி பஜார் பகுதியில் தன் எஜமானரைத் தேடி நாயொன்று இரவும் பகலுமாக ஊண் உறக்கமின்றி அலைந்து திரிவதாக வரும் செய்திகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன!
போன வாரத்தில், கோயம்புத்தூரில் அப்பாவி இளம்பெண்ணைக் குடிகாரக் காமுகன் ஒருவன் கெட்ட நோக்கில் நெருங்கியபோது, அங்கிருந்த இரண்டு தெரு நாய்களே அவனைக் கடித்துக் குதறி தெறிகெட்டு ஓடச்செய்து அப்பெண்ணைக் காப்பாற்றியுள்ளன!
‘பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட தெய்வமே!’…
வளர்த்த பிள்ளையும் மாறிவிடும்
வாழும் உறவும் ஓடிவிடும்
வாயில்லாத உயிரை வளர்த்தால்
காடு வரைக்கும் கூட வரும்!’
என்று கவிஞர் கச்சிதமாகவே எழுதியுள்ளார்.
இப்படி அக்காலம் தொடங்கி இக்காலம் வரை வரலாற்றில் இடம் பிடித்து வரும் நாய்களிடம் தற்பொழுது மக்கள் வெறுப்பை உமிழ்வதற்குக் காரணம், நிச்சயமாக அவையல்ல.
அவற்றைச் சரியாக வளர்க்கவும், ஆடு, மாட்டைப் போல் அவற்றைப் பேணிக் காக்கவும் தவறிய நாமே! அதிலும் இங்கு தெரு நாய்களைப் பேணுவார் மிகக் குறைவே. அவற்றுக்குச் சரியான உணவோ, பாதுகாப்போ இல்லை. வீட்டில் மிஞ்சியதைப் போடுவோரே அதிகம். அவை நோய்வாய்ப்பட்டால் கவனிக்க யாருமில்லை.
சொந்தமாக நாய் வளர்ப்போர் கூட அவற்றை முறையாகக் கவனிப்பதில்லை.
அவற்றுக்கெனத் தனியான இடமோ, அவற்றிற்கென தயாரிக்கப்படும் பிரத்யேக உணவுகளையோ வழங்குவதில்லை. முறையான மருத்துவச் சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனால் மேலை நாடுகளில் நாய்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் சீராட்டப்படுகின்றன. அவற்றுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி நிறுவனங்கள் பல இடங்களிலும் செயல்படுகின்றன. நம்மூரில் செயல்படும் ‘கிட்ஸ் கேர்’ சென்டர்கள் போல் அங்கு ‘டாக்ஸ் கேர்’ சென்டர்களும் செயல்படுகின்றன.
சூரிக்கிலும், டாம்பாவிலும் வீட்டிற்கு ஒன்றிரண்டு நாய்கள் இருந்தாலும் அவற்றின் குரைக்கும் சப்தத்தைக் கேட்கவே முடியாது. வீட்டினர் அவற்றை வெளியே வாக்கிங் செல்ல அழைத்து வரும்போதுதான், அவர்கள் வீட்டில் நாய்கள் இருப்பதே நமக்குத் தெரிய வருகிறது. அவை மலம் கழித்தால் அதை லாவகமாக எடுப்பதற்கு பிளாஸ்டிக் பைகளையும், அவற்றைப் போடுவதற்கு நாய்மலத் தொட்டிகளையும் ஆங்காங்கே நிறுவியுள்ளார்கள். ரயில்களில் அவை ஓரமாக அமர்ந்து பயணம் செய்வதைப் பார்க்கும் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது!
நமது நாட்டிலோ எல்லாம் தலைகீழ்! நான் பார்த்தவரை நாயுடன் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் எவரும் அதன் மலத்தை எடுத்துக் குப்பைக்கூடையில் கூடப் போடுவதில்லை. தன் வீட்டு நாயை அடுத்தவர் வீட்டு ஓரத்தில் மலம் கழிக்கச் செய்ததற்காகச் சண்டைகள் கூடச் சிலர் போடுவதுண்டு.
வீட்டிற்கு வரும் திருடர்களை மட்டுமல்ல; புலி, கரடி, காட்டெருமை போன்ற விலங்குகளையும் உள்ளே வர விடாமல் தடுப்பதில் நாய்களுக்கு இணை வேறில்லை!
இரவில் வீட்டினுள்ளே நுழைய முயன்ற கொடிய விஷமுள்ள பாம்பை வெளியே விரட்ட முயன்ற நாயொன்று, அதனால் கடிக்கப்பட்டு இறந்து போன செய்தியையும் நாம் படித்திருக்கிறோம். வீட்டாரைக் காப்பாற்றத் தன்னையே பலி கொடுத்த அந்த நாயைத் தெய்வமென்று போற்றல் அல்லவா முறை!
நம் தமிழ்நாட்டில் ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி, ராமநாதபுரம் மந்தை ஆகிய நாய் வகைகள் பிரபலமானவை. வேட்டைக்கும், வீரத்திற்கும், காவலுக்கும் இவை ஏற்றவை.
மிகவும் நன்றியுள்ள இந்த ஜீவன்களைக் காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். நம் தமிழ் நாட்டில் கால் நடை வளர்ப்புத் துறை செயல்பட்டு வருகிறது. ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் வளர்ச்சியிலும், நோய்த் தடுப்பிலும் கவனம் செலுத்தும் அத்துறையின் கீழ் நாய்களின் நலம் காத்தலும் சேர்க்கப்பட வேண்டும்.
குறிப்பாகத் தெரு நாய்களின் நடமாட்டம், அவற்றின் அபரிமித வளர்ச்சிக் கட்டுப்பாடு, நோய்த் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே போதுமானது.
விலங்குகள் எப்பொழுது மனிதர்களைத் தாக்க முற்படுகின்றன?அவை பசித்திருக்கும் போது; நோய் வாய்ப்பட்டு அவதியுறும் போது மற்றும் அவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது. இவற்றிலிருந்து அவற்றுக்கு விடுதலை கிடைத்தாலே அவை ஓரளவுக்குச் சாந்தி பெற்று விடும். நாய்களும் விலங்குகள் தானே! சாந்தி பெற்ற அவற்றால் சமுதாயம் அமைதி பெறும்! அதுதானே இன்றைய தேவை!
இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நீண்டகால பந்தத்தைப் புரிந்து கொண்டு, சமூகத்தில் நிலவும் நாய் அச்சுறுத்தலைச் சுமுகமாகவும் மனிதநேயத்துடனும் எதிர்கொள்வதற்கான தெளிவான பார்வையைப் பெறலாம்.