
“நம்மைச் சுற்றியிருக்கும் ஆகாயம் சுதந்திரமாயிருக்க வேண்டும். நம்மைச் சுற்றி அடிக்கும் காற்று சுதந்திரம் என்று வீசவேண்டும். பட்சிகள் சுதந்திரம், சுதந்திரம் என்று சப்திக்க வேண்டும். நம்மை ஒருவர் அணுகினால் சுதந்திர தாகம் கொள்ளவேண்டும். அவ்விதம் நாம் சுதந்திரர்களாக ஆகவேண்டும். உலகத்தில் உயர்ந்த விஷயம் யாது? மோக்ஷம். மோக்ஷம்தான் விடுதலை, விடுதலையே சுதந்திரம். இந்த ஜன்மத்தில் எனக்கு மோட்சம் தேவையில்லை; எனது நாடு விடுதலை பெறவேண்டும்....”
இப்படியான ஆத்ம சிந்தனையோடு குரல் எழுப்பியவர், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தமிழக மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படுகின்ற தியாகசீலர் சுப்பிரமணிய சிவா. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் “சிவம்” என்றும், “சிவா” என்றும் அன்பர்களால் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா, மதுரை மாவட்டம் வத்தலகுண்டு கிராமத்தில் ராஜம் ஐயர் -நாகலட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாக 04-10-1884இல் பிறந்தார். பன்னிரண்டு வயது வரை மதுரையில் கல்வி கற்ற சிவம், பின்னர் திருவனந்தபுரம் சென்று மேற்படிப்பைத் தொடர்ந்து, ஓராண்டுக் காலம் கோயம்புத்தூரிலும் கல்வி பயின்றார். பதினைந்தாவது வயதளவில் (1899இல்) திருமணம் நடைபெற்றது. சிவா தம்முடைய பதினெட்டாம் வயதில் (1902இல்) திருவனந்தபுரத்தில் உள்ள கொட்டாரக் கரையில் சதானந்த சுவாமிகள் என்கிற ராஜ யோகியைச் சந்தித்து அவரிடம் சில காலம் ராஜயோகம் பயின்றார்.
தேசபக்திக் கனல் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கிய 1906-07இல் திருவனந்தபுரத்தில் “தர்ம பரிபாலன சமாஜம்” என்ற அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களைக் கூட்டுவித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி தேசீய உணர்ச்சியை வளர்க்கும் திருப்பணியில் பெரிதும் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகச் சிவாவின் செயல்கள் அமைந்ததால், திருவனந்த புரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் கால்நடையாகவே ஊர் ஊராகச் சென்று தேசீயப் பிரசாரம் செய்ய முற்பட்டார்.
1908இல் தூத்துக்குடிக்கு வந்து வ.உ.சி.யைச் சந்தித்து இருவரும் இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நெல்லைச் சீமையில் தேசீயத்தை வளர்த்தனர். இக்காலக்கட்டத்தில் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டிருந்த வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிபின் சந்திர பாலர், 6 மாதகால சிறைவாசத்திற்குப் பிறகு, 1908 மார்ச் 9ம் தேதி விடுதலை செய்யப்பட, அந்த நாளை மிகப்பெரிய சுயராஜ்ய நாளாக கொண்டாடப்பட வேண்டும் என வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் திட்டமிட, அதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது. அத்தடையை மீறி நெல்லையில் தைப்பூச மண்டபத்திலே வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் பேசுகிறார்கள். 12,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அக்கூட்டத்தில் வெள்ளைக்காரர்களை விரட்ட வேண்டும், சுதேசி பொருட்களை ஆதரிக்க வேண்டும் என சூளுரைக்கப்பட்டது. இந்நிலையில், 1908ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மூவரும் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு மார்ச் 13ம் தேதி திருநெல்வேலியில் ஏற்பட்ட கிளர்ச்சியே 'திருநெல்வேலி புரட்சி' என்றழைக்கப்படுகிறது.
ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் 7-7-1908இல் சிறைவாசத் தண்டனை சிவாவிற்குக் கிடைத்தது. 2-11-1912இல் விடுதலையடைந்த சிவா சென்னையில் குடியேறி எழுத்துத் தொழிலைக் கைக்கொண்டார். ஏப்ரல் 1913இல் ‘ஞானபாநு’ எனும் மாதப் பத்திரிகையைத் தொடங்கி, அதில் ஆன்மீகக் கட்டுரைகளை எழுதலாயினார். 15-5-1915இல் மனைவி மீனாட்சியம்மை மறைவிற்குப் பிறகு, சிவா தம்மை முழுமையாக நாட்டிற்கே அர்ப்பணித்துக்கொண்டார். ஜூன் 1916இல் ‘ஞானபாநு’ இதழ் நின்றதன் பின்பு, “பிரபஞ்சமித்திரன்” என்ற வாரப் பத்திரிகையைச் ஆரம்பித்துச் சிறிது காலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதி வரலானார்
1916-1919 காலக்கட்டத்தில் சிவா எழுத்துலகில் தம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார்; ஞானரத்னம். பகவத் கீதா சங்கிரகம், சங்கர விஜயம், மத்வ விஜயம், ராமாநுஜ விஜயம் முதலிய நூல்களை எழுதினார். சிவாஜி, தேசிங்கு நாடகங்கள் இயற்றினார். ‘நவீன சுந்தரி அல்லது நாகரிக தடபுடல்’ என்ற என்ற நவீனத்தை சிருஷ்டித்தார். பாரதத்தில் பிறந்தவர்கள் பாரத ஜாதியினர், வணங்கும் தெய்வம் பாரத தேவி, அவர்கள் மதம் ‘பாரதீயம்’ என்ற கொள்கையைப் பரப்ப ‘பாரதாசிரமம்’ ஸ்தாபித்தார்.
1921இல் ஒத்துழையாமை இயக்கத்தில் சிவாவும் அவரது 19 சிஷ்யர்களும் சிறை புகுந்தனர். ‘வட இந்தியாவில்தான் கிளர்ச்சி, தென்னிந்தியாவில் இல்லை’ என்று பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சர்க்கார் சொன்னபோது, உறுப்பினர் ஒருவர் ‘தமிழ்நாட்டில் சிவம் கோஷ்டியைப் பாருங்கள்!’ என்றிருக்கிறார். இக்காலக்கிரமத்தில் சந்நியாசியைப் போல் காவி உடையைத் தரித்துக்கொண்ட சிவா, தன் பெயரை ‘ஸ்வதந்திரானந்தர்’ என மாற்றிக்கொண்டார்.
17-11-1921இல் இரண்டாம் முறையாக ராஜத் துரோகக் குற்றத்திற்காக, ஆங்கிலேய அரசு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. திருச்சி சிறையில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் விடுதலையானார். 1924இல் சென்னையில் சிவா தங்கியிருந்தபோது கடற்கரையில் பேசிய பேச்சுக்காக அரசின் அடக்குமுறைக்கு ஆளானார். ஆனால் இவை எதற்கும் அஞ்சாமல், ‘இதர தேச பக்தர்கள் பேசும் காலத்து அவர்களுக்கு முன்னால் நிற்பது சட்டம்; பின்னால்தான் தேசம். ஆனால் என்னைப் போலொத்தவர்கள் பேசும் காலத்து எனக்கு முன்னால் நிற்பது தேசம்; பின்னால்தான் சட்டம். வார்த்தை வாயிலிருந்து வரக்கூடாது’ உள்ளத்திலிருந்து எழ வேண்டும்...’ என அவரது சூளுரை தொடர்ந்தது.
1925இல் பாரதமாதா கோவில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால், மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்தார். சுதேசிய எழுச்சியின் நாற்றங்காலாக விளங்கிய அவர், சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பாக 23-07-1925 வியாழக்கிழமை அன்று தனது 44வது வயதில் காலமானார். சுப்பிரமணிய சிவா மறைந்து இன்றோடு (23-07-2025) நூறாண்டுகள் நிறைகிறது.