

மாற்றம் ஒன்றே மாறாதது. இதை மேடைப் பேச்சுகளில், பொது இடங்களில் சிலர் பயன்படுத்துவார்கள். அப்படின்னா என்ன...?மாற்றம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். மாறலேன்னா அதுக்கு பேரு மாற்றம் இல்லை என்பதே அதன் அர்த்தம்.
வேறு ஒரு மாற்றத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது தமிழ்த் திரையுலகில் நடந்த சில மாறிப் போன விஷயங்களை தான். டைட்டில் தொடங்கி கிளைமாக்ஸ் வரை நடந்தவைகளை....
டைட்டில் மாறிப்போச்சு:
'யாரையும் அழ வைக்காதே..' இப்படி ஒரு படம் மக்கள் திலகம் அவர்கள் நடிக்க, உமையாம்பிகை புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்க, ப.நீலகண்டன் டைரக்ஷனில் உருவாகிக் கொண்டு இருந்தது. கதைக்கு அந்த தலைப்பு பொருத்தமாக இல்லை என்று முடிவு செய்து மிகச் சிறப்பான 'நீதிக்குத் தலைவணங்கு' என்ற டைட்டிலை வைத்தார்கள். 'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்' என்ற கருத்துள்ள பாடலோடு வெளியாகி அனைவரையும் கவர்ந்த வெற்றிப் படமாக அமைந்தது.
பாட்டு மாறிப்போச்சு:
'என் கேள்விக்கென்ன பதில்' அழகான இளமையான, வாலிப கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெற்ற பாடல். இரு வேறு விதமாக சில வரிகள் மாற்றப்பட்டு இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
மேற்கத்திய இசையில் தொடங்கி இடை இடையே ஹம்மிங் வருவது போல முதலில் ஒலிப்பதிவு செய்து படமாகிவிட்டர்கள். ஆனால், தயாரிப்பாளர் ஏவி. எம். அவர்கள் கதை களத்திற்கு ஏற்றது போல பாடல் காட்சி அமைப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்து மாற்றி எடுக்கச் சொன்னார். ஆரம்ப இசை முதல் ஹம்மிங் எல்லாமே முற்றிலும் மாற்றப்பட்டது.
அந்த பாடலின் கடைசி பாராவில்..
"அனுபவம் உண்டானால் இந்த ரகசியம் புரியாதோ
பெண்மையின் சந்நிதியில் வந்து பார்த்தால் தெரியாதோ
மடி மேலே அழகுச் சிலை
இதழ் ஓரம் பருவச் சுவை
இடை மேலே பருவச் சுமை
இதுதானே இனிய கதை..."
என்று வாலி அவர்களால் எழுதப்பட்டது.
கடைசி நான்கு வரிகளும் கீழ்க்கண்டவாறு மாற்றப்பட்டன:
"அலைப் போல குழல் அசைய
சிலை போல நடை பயில
வளை ஓசை இசை கொடுக்க
வருவேனே இணைந்திருக்க..."
என்று புதிய வரிகளை இன்னும் அழகாக எழுதித் தந்தார்.
இரண்டு பாடல்களும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் சிறப்பாக மெல்லிசை மன்னரால் இசையமைக்கப்பட்டது. இணையத்தில் இரண்டு பாடல்களும் உள்ளன.
தலைகீழா மாறிப்போச்சு:
A.V.M. தயாரிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த படம் 'மெல்லத் திறந்தது கதவு'. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இணைந்து இசையமைத்த படம் இது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ஆனால், படம் எதிர்பார்த்த துவக்கத்தை கொடுக்க வில்லை. படத்தின் முதல் பாதியில் தனது முறைப் பையனான மோகனை காதலிக்கிறார் ராதா. ஹீரோ அவர் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அதற்கு காரணமாக தனது பழைய காதலை சொல்கிறார். (ஃபிளாஸ்பேக்கில் வரும்) அந்த காதலியாக அமலா நடித்திருப்பார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி இனிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது. இதை தெரிந்து கொண்ட இயக்குநர் இரண்டாம் பாதியை (ஃபிளாஸ்பேக் காட்சிகளை) முன்னால் கொண்டு வந்து ராதா வரும் காட்சிகளை பின்னால் கொண்டு சென்றார். முதல் முறையாக தலைகீழ் மாற்றம் நடந்தது. வேறு எந்த படத்திற்கும் இப்படி ஒரு மாற்றம் நடக்கவில்லை.
அன்றைய தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முதலில் பழைய படியும் சில மாதங்களுக்கு பிறகு மாறுதல் செய்யப்பட்டதும் ஒளிபரப்பப்பட்டது. ஒருவேளை இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் எப்படி வெளியிடுவார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.
சில மாறுதல்கள் தவிர்க்க முடியாது. சில மாறுதல்கள் தியேட்டர்களில் பணிபுரிந்த அப்போதைய சிறந்த ஆப்ரேட்டர்-எடிட்டர்களால் மாறிப் போனது.