சிறுகதை: ஹோர்முஸ் ஜலசந்தியும் பாலுவின் தாத்தா பேச்சு வார்த்தையும்!

அறிவுரை என்ற பெயரில் தன் உலக அரசியல் கற்பனைகளால் அனைவரையும் துவம்சம் செய்யும் ஒரு தாத்தாவும், அவரிடம் சிக்கித் தவிக்கும் பாஸ்கரின் தவிப்பும் தான் இந்த நகைச்சுவைக் கதை.
Grandfather and Grandson
Grandfather and GrandsonAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

பாஸ்கர் சில மாதங்கள் கழித்து பாலு ஞாபகம் வர நண்பனைப் பார்க்கப் போனான்.

தாத்தா போர்டிகோ அருகில் கட்டிலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.

தாத்தாவுக்கு ஒரு வணக்கம் வைத்தான்.

அவர் நிமிராமலே "இருக்கட்டும்... இருக்கட்டும்... சுந்தர் தானே நீ... இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?"

"நான் பாஸ்கர் தாத்தா... ஒர்க் ஃப்ரம் ஹோம் தாத்தா... கேஸ் தீர்ந்திடுச்சி... கம்பெனியில் போய் நேரா அம்மா விசாரிச்சு வரச் சொன்னாங்க... அதான் இந்தப் பக்கம் வந்தேன்."

"சரி, கவலைப்படாதே... கேஸ் பிரச்சனை சால்வ் ஆகிடும். நேத்து தான் டிரம்ப் கிட்டே பேசச் சொன்னேன்... ஒரு செனட்டர் மூலம் தமிழ்க்காரர் அவர். ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்டிருக்கும் ஒரு தடுப்பு போதும். நீங்க வழியில் இன்னொரு தடுப்பு போடாதீங்கன்னு சொல்லிட்டேன்... அப்புறம் ஓமன் ஒரு கேட் போடுவான். வரிசையா கேட் போட்டால் கேஸ் எப்படி வரும். ஆளாளுக்கு கப்பம் கட்டி வந்தால் சிலிண்டர் பத்தாயிரம் ரூபாய் ஆயிடுமே."

"நல்ல முயற்சி தாத்தா... இப்பவே ரூபாய் ஆயிரம் வருது."

"சரி.... ரிசர்வ் பேங்க்கில் கவர்னர் செக்ரட்டரி வேலை காலியா இருக்குன்னு எஃப் எம் உறவுக்காரர் சொன்னார். சேர்த்து விடறேன் போறியா? அந்தக் காலத்தில் எஃப் எம் கல்யாணத்துக்கு போயி நூறு ரூபாய் மொய் வச்சு வந்தேன்."

"தாத்தா பாலு எங்கே?" எழுந்தான் பாஸ்கர்.

"உன்னை மாதிரியே கேஸ் சிலிண்டர் விவரம் தெரிஞ்சுக்க கம்பெனிக்குத்தான் போயிருக்கான்... உட்காரு வந்திடுவான். பிரான்ஸ் அதிபருக்கு ஒரு லெட்டர் போட்டேன். இந்த மைக்ரோஸாஃப்ட் விண்டோஸை மூடி வைங்க. சீக்ரெட் பூரா ஆராயறான் அவன்... ஓபன் ஸோர்ஸ் லைனைக்ஸுக்கு மாறுங்கன்னு. மேக்ரோனும் ஒத்துக்கிட்டு அரசாங்க டிபார்ட்மெண்ட் பூரா கம்ப்யூட்டர்களில் இனிமேல் லைனக்ஸ் தான்னு ஆர்டர் போட்டுட்டேன்னு போன் பண்ணிச் சொன்னார்."

"தாத்தா பாலு வர நாழியாகும் போல இருக்கே..."

"வரட்டும். வரட்டும். பார்லிமென்ட் தொகுதி வரையறை திட்ட ஐடியாவை முதன் முதலில் சொன்னதே நான் தான். இப்போ இனி தமிழ்நாட்டில் 59 எம்.பிக்கள்... நான் முதலில் சொன்னது ஒரு வார்டுக்கு ஒரு எம்.பி குடுங்க ஒவ்வொரு ஸ்டேட்டிலும் குறைஞ்சது பத்தாயிரம் எம்.பிக்களாவது இருந்தால் தான் டெல்லிக்கு மாநில பிரதிநிதித்துவம் கிடைக்கும்ன்னு... இது ரொம்ப கம்மி."

"நீங்க சொல்றபடி செஞ்சா டெல்லி நகரமே லட்சக்கணக்கில் எம்பிக்களால் ரொம்பி வழியுமே... பார்லிமென்டே ஒரு ஸ்டேடியம் மாதிரி ஆயிடுமே."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சேவை வரியும் பராமரிப்பு செலவும்!
Grandfather and Grandson

"பார்லிமென்ட்டில் டீ 1₹, சாப்பாடு 5₹, டிபன் 2₹, தான் தெரியுமா உனக்கு? நான் டெல்லி போனப்போ வாஜ்பாய் எதிர்லே உட்கார்ந்து கேண்டீனில் சாப்பிட்டேன். போண்டா சட்னி சூப்பரா இருக்கும். அது அந்தக் காலம்"

"அப்போ இத்தனை லட்சம் எம்பிக்களும் போக்குவரத்து, டிபன், காபி, சாப்பாடு செலவு, சம்பளம், பென்ஷன்... தாத்தா! ஒரு இந்தியன் ரயில்வே ஸ்டாஃப் மாதிரி ஆயிடாதா பார்லிமென்ட்."

"இன்னொரு யோசனை கூட வச்சிருக்கேன். அமெரிக்கா மாதிரி இரண்டே கட்சி ஆட்சி. செலவும் குறையும்... மாறி மாறி வருவாங்க."

அப்போது பாலு டூ வீலரை நிப்பாட்டி விட்டு, "எப்போடா வந்தே பாஸ்கர். வா மாடிக்குப் போகலாம்."

துவண்டு போயிருந்த பாஸ்கர், "நான் வந்து ஒருமணி நேரம் ஆச்சு. தெம்பு இல்லேடா. முடிஞ்சா அடுத்த மாசம் வர்றேன்."

"ஓ. தாத்தா கிட்டே பேசிக்கிட்டு இருந்தியா" என்றான் பாலு.

தாத்தா விடவில்லை...

"தம்பி ஹரிதாஸ் படம் மொத்தம் எடுத்தது 18 ரீல்... நான் தான் பதினேழு பாட்டுகளைக் குறைக்கச் சொல்லி 12 ரீல் ஆக்கு... என்ன சொல்ற சேதியை முழுசும் காதில் வாங்காமலே போறான் உன் பிரண்டு சுந்தர்." என்றார் தாத்தா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com