

1. ரிவர்ஸ் கியர்!
அந்த ஐவரின் கார், சாலையோரம் இருந்த நவீன ரெஸ்டாரண்ட் முன் நின்றது.
நண்பனின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கான நீண்ட தூரப் பயணமது.
இறங்கினார்கள்.
உள்ளே சென்றார்கள்.
வாஷ் ரூம் சென்று பிளாடரை க்ளீன் செய்தார்கள்.
முகம், கை, கால் கழுவினார்கள்.
மெயின் ஹாலுக்கு வரும் வழியில் அந்த அறை வாசலில் இருந்த போர்டைப் படித்தார்கள்.
“இந்த ஹாலிலும் அனைத்து ஐட்டங்களும் சப்ளை செய்யப்படும். ஆனால் இங்கு சாப்பிடுபவர்களுக்கான பில் தொகையை உங்கள் சந்ததியினரிடமிருந்து நாங்கள் வசூலித்துக் கொள்வோம். சங்கடம் இல்லாமல் உள்ளே சென்று, விரும்பியவற்றை வயிறாற உண்டு மகிழுங்கள்!”
“ஓ! அப்படியானால் நாம் காசு கொடுக்காமலே ஒரு கட்டு கட்டலாம் போலிருக்கே!”
காரை ஓட்டி வந்த ரவி சொல்ல, மற்ற நால்வரும் ஆமோதித்தார்கள்.
கதவைத் திறந்தார்கள்.
முகத்திலடித்த ஏசியை ரசித்தபடி உள்ளே சென்றார்கள்.
கூட்டம் அதிகமில்லை.
அறுவர் டேபிளில் ஹாயாக அமர்ந்தார்கள்.
அவரவர் விருப்பப்பட்டதை ஆர்டர் செய்தார்கள்.
வெயிட்டர்கள் பிசியானார்கள்.
அந்த ரெஸ்டாரண்டின் ஸ்பெஷல் அயிட்டம் என்னவென்று கேட்டார்கள்.
அதனை ஐந்து பேருமே ஆர்டர் செய்தார்கள்.
ஐஸ்க்ரீம், ப்ரஷ் ஜூஸ், பீடா என்று எதையும் விடாமல் ஆர்டர் செய்து, அசத்தலாகச் சாப்பிட்டார்கள்.
வயிறுகள் போதும், போதும் என்றதையும் பொருட்படுத்தவில்லை அவர்கள். ரவிதான் அவசரப்படுத்தினான்.
”போதும்டா! இன்னும் நெறைய தூரம் போகணும். ஏற்கெனவே நாம லேட்! இப்படியே லேட் பண்ணினா அவன் நாம இல்லாமலே தாலி கட்டிடுவான்!”
“உண்மைதான்! போதும். புறப்படலாம். சீக்கிரம் வாங்க! பில்லை நம்ம பிள்ளைங்களுக்கிட்டதானே வசூல் பண்ணுவாங்க!” என்றபடி புறப்பட்டவர்களை, வாட்ட சாட்டமான வெயிட்டர் கையில் பில்லுடன் தடுத்து நிறுத்தினார்.
“சார்! இந்தாங்க பில்!”
“என்னது பில்லா? போர்டுல எங்க சந்ததியினர்க்கிட்ட வசூலிக்கிறதாத்தானே போட்டிருக்கீங்க? இப்ப பில்லை நீட்டுறீங்க?”
“ஆமா சார். அது முழுக்க முழுக்க உண்மைதான். இந்த பில் இப்ப நீங்க சாப்பிட்டதுக்கு இல்ல. இதை ஒங்க சந்ததியினர்க்கிட்ட பின்னாலே வசூலிச்சிக்கிடுவோம். ஆனா இந்த பில், ஒங்க முன்னோர்கள் சாப்பிட்டதுக்கானது! அதை நீங்கள்தானே சார் க்ளீயர் பண்ணனும். அதானே சார் முறை!”
“பில் அமௌண்ட் எவ்வளவுங்க?”
“ரொம்ப ஒண்ணுமில்ல சார். ரூ15,275.35 மட்டுந்தான்! நாங்க ஜி.எஸ்.டி யெல்லாம் சேர்க்கிறதில்லை சார்!
அவர்கள் சிலையானார்கள்!
2. ரிவர்ஸ் கியர் 2.0
ரயில் பிரயாணம் அப்பொழுதெல்லாம் புகைப்படம் ஒட்டாத சீசன் டிக்கட் மட்டுந்தான். அந்த நண்பர்கள் இருவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள். மாம்பலத்திலிருந்து பீச் ஸ்டேஷன் சென்று, பாரீஸ் கார்னரில் பணி செய்தார்கள். தினசரி ரயிலில் சென்று வந்தார்கள்-மாதாந்திர சீசன் டிக்கட்டில். இருவருக்கும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகள்.
பூஜை விடுமுறையில், ஊரிலிருந்து அவர்கள் மச்சான் இருவரும் வந்திருந்தார்கள்.
இவர்கள் இருவரின் நட்பைப்போலவே, வந்த ஓரிரண்டு நாட்களிலேயே ரவியும் சிவாவும் நட்பை வளர்த்துக் கொண்டார்கள். இருவரும் இளம் வயதினர். சென்னையைச் சுற்றிப் பார்ப்பதில் ஏகப்பட்ட ஆர்வம்.
அன்று விடுமுறை தினம். எனவே அவர்கள் அலுவலகம் செல்லவில்லை. இதுதான் தக்க சமயம் பாரீஸ் கார்னரைச் சுற்றிப் பார்க்க என்று முடிவெடுத்த இளைஞர்கள் இருவரும், மாமாக்களின் சீசன் டிக்கட்டுகளுடன் மின்சார ரயிலில் ஏறி விட்டார்கள்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று செல்வதை ரசித்தபடி, ஏக உற்சாகத்தில் மிதந்தனர் இருவரும். கடைசியாகக் கடற்கரை நிலையத்தில் ரயில் நின்றதும் சந்தோஷமாக இறங்கினார்கள்.
வெளியில் செல்ல எத்தணிக்கையில் ஒருவர் டிக்கட் கேட்க, சிவா சீசன் டிக்கட்டைக் காண்பிக்க, சந்தேகப்பட்ட பரிசோதகர் அவரை மட்டும் அலுவலகம் அழைத்துச் சென்றார். அங்கு, "டிக்கட் யாருடையது?" என்று கேட்க, "என்னோடதுதான்" என்று அவர் மென்று விழுங்கியபோதே பரிசோதகருக்கு உண்மை புரிந்து விட்டது.
"அப்படியா?" என்ற நமட்டுச் சிரிப்புடன் "எங்கே சைன் பண்ணுங்க பார்ப்போம்!" என்று ஒரு தாளை நீட்ட, சிவா தடுமாற்றத்துடன் மாமா பேரை எழுத, டிக்கட்டில் இருந்த சைனுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்தது. "அப்படி ஓரமா ஒக்காரு தம்பி! ஃபைன் கட்ட பைசா இருக்கா?" என்றபடியே அடுத்தவரை விசாரிக்க ஆரம்பித்தார் பரிசோதகர்.
ரொம்ப நேரம் வெளியில் காத்திருந்தும் அலுவலகத்தின் உள்ளே சென்ற சிவா திரும்பாததால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்ற ரவி, அங்கு ஏழெட்டுப் பேருடன் சிவா அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், தைரியத்தை விடாமல், பரிசோதகரிடம் சென்று, "சார்! சிவா என்னோட நண்பன்தான்! ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வந்தோம்!அவனை விட்டுடுங்க சார்" என்று கேட்க,
"அப்படியா சார்! நீங்க சொன்னா விட்டுட வேண்டியதுதான்! சரி! ஒங்க டிக்கட்டைக் கொஞ்சம் காட்டுறீங்களா?" அவசரமாகப் பேண்ட் பாக்கட்டிலிருந்து சீசன் கார்டை எடுத்த ரவி, அவரிடம் கொடுத்தான். "இது ஒங்களுதுதானா?" என்று அவர் கேட்டதும் "ஆமா சார்!" என்ற சொல்லே நடுங்கிப் போய் வர, "சரி! இதுல ஒரு சைன் பண்ணுங்க" என்றதும், திகைத்த ரவி, மாமா கையெழுத்தைப் போட முயற்சிக்க, அது கோணல் மாணலாகச் சதி செய்தது!
"ஓ! நீங்களும் அவர் மாதிரிதானா? அவசரத்ல நான் ஒங்களை வெளியிலயே விட்டுட்டு வந்திட்டேனா? போங்க! நண்பர் பக்கத்ல போயி ஒக்காருங்க? அபராதம் கட்ட காசு இருக்குல்ல!"
ரவி, சிவா இருவர் கண்களும் குளமாகின!