கடந்த 08.08.2025 அன்று தமிழக அரசு தனது மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டது. ஒரு மாநிலம் நாட்டில் தனக்கென ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி வெளியிடுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய கல்விக் கொள்கைக்கும், தமிழகம் அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கைக்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கின்றன.
முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் 14 கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு ஒன்று இந்த மாநில கல்விக் கொள்கையை தயாரித்து அளித்துள்ளது.
*தேசிய கல்விக் கொள்கை மாநிலத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மாணவர்கள் தமது தாய் மொழி, ஆங்கிலம், ஒரு பிராந்திய மொழி என மூன்று மொழிகளை படிக்க வகை செய்யும் மும்மொழிக் கொள்கையை பரிந்துரைக்கிறது.
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை இருமொழிக் கொள்கையை வலியுறுத்துவதால் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பள்ளிகளில் படித்தால் போதும் என்கிறது.
புதிய மாநிலக் கொள்கையின்படி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநிலப் பாடத்திட்டம் என அனைத்து பாடத்திட்டத்திலும் படிக்கும் அனைத்து மாணவர்களும் 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். மொழித் திணிப்பை எந்த விதத்திலும் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
*பள்ளித் தேர்வு முறையை பொறுத்தவரை தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் உண்டு. மாணவர்களின் அறிவு திறனைச் சோதனை செய்யப் பொதுத்தேர்வுகள் இதில் அவசியம் என அது கருதுகிறது.
மாநில கல்வி கொள்கையில் இந்த வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். அதே போன்று 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும் இரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, கல்வியை வர்த்தக மயமாக்குவதைத் தடுக்கவே இந்த கொள்கை எனவும் மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*தேசிய கல்விக் கொள்கையில் இளங்கலை கல்லூரி படிப்புகளின் சேர்க்கைகளுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கூட நுழைவுத் தேர்வுகள் உண்டு.
ஆனால்,தமிழக மாநில கல்விக் கொள்கையில் இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.
*தேசிய கல்விக் கொள்கை மருத்துவ சேர்க்கைக்கான நீட் போன்ற தேசிய தேர்வுகளை ஆதரிக்கிறது.
ஆனால், தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை ’நீட்’டை கடுமையாக எதிர்க்கிறது. இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தருவதுடன் அவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்குவதாக தமிழக அரசு வாதிடுகிறது.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதைத் தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதன்மூலம் கல்வித்துறை மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
*தேசிய கல்விக் கொள்கை டிஜிட்டல் கற்றல் மற்றும் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில்,
மாநில கல்விக் கொள்கை அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆங்கில மொழித் திறன்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. உலகளாவிய அளவில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்ய மாநிலக் கல்விக் கொள்கை உதவிகரமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*நிதி அணுகுமுறையை பொறுத்தவரை கல்வியில் அரசு - தனியார் இணைந்து செயல்படுவதைத் தேசிய கல்விக் கொள்கை ஆதரிக்கிறது. நாடு முழுக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே கல்விக் கொள்கை வேண்டும் என்பதையும் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
ஆனால், மாநில கல்விக் கொள்கை மத்திய அரசின் தலையீடுகளை மறுக்கிறது. மாநில கல்விக் கொள்கை தனியார் பங்களிப்பை மறுத்து, அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசே அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
கல்வியை மாநில பட்டியலில் இருக்க வேண்டிய விஷயமாகக் கருதும் தமிழ்நாடு அரசு, தரமான கல்வியை உறுதி செய்யவும், தனியார் துறையை அதிகம் சார்ந்திராமல் இருக்கவும் மாநில அரசுக்கு அதிக அதிகாரங்களைக் கோருகிறது.
எது எப்படியோ படித்த படிப்புக்கு ஏற்ப ஒரு நல்ல வேலையில் அமர்ந்து வருமானத்தைப் பார்ப்பதுவே மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களின் படிப்பின் மூலம் எதிர்பார்க்கும் எதார்த்ததாமான விருப்பமாக இருக்கிறது.