கவிதை: நீயுமா நீரே!

சமீபத்தில் நடந்த நேபாள பெருவெள்ளம் குறித்த கவிதை!
நேபாள பெருவெள்ளம் | Nepal flood
நேபாள பெருவெள்ளம் | Nepal floodImage credit: Gemini AI
Updated on
Kalki Strip
Kalki Strip

அனலாய்க் கொதித்துலகை அப்படியே விழுங்கிவிடும் 

அணுகுண்டை எண்ணியே அகிலம் பதைத்துன்னை

நம்பிக் கிடக்கையிலே நயவஞ்சகமாய் நீயும் 

அடித்து வெளுக்கின்றாய்!அதனையும் விஞ்சுகின்றாய்!

தண்ணீரே நீயின்றித் தரணியில் புல்கூட

வேரூன்றி நிற்காது!விபரமறி மனிதர்களும் 

உன்னால்தான் வாழ்கின்றார் உறவுகளில் மகிழ்கின்றார்

எந்நாளும் உன்துணையை இதயத்தில் மதிக்கின்றார்!

தமிழகத்தில் பெய்யென்று தன்மையாய் வேண்டிட்டோம் 

கர்நாடகாவில் பெய்தாலும் களித்தே வரவேற்றோம்

டெல்டா விவசாயிகள் டேஞ்சரில் தவிக்கின்றார்

ஆனாலும் நீயோ அனைவரையும் மறந்துவிட்டு

நேபாளம் சென்றதேனோ!நிம்மதியைக் கெடுத்ததேனோ!

நம்பியோரைக் கைவிடுதல் நயவஞ்சகம் என்றே

தெரியாதா உனக்குந்தான் தெரிந்துகொண்டே நீயுந்தான்

பாதகம் செய்தாயே!பரபரக்க விட்டாயே!

முப்பதுநாள் பெய்யளவை மூன்றுமணி நேரத்தில் 

கொட்டித் தீர்க்கின்றாய் குவலயத்தை அழிக்கின்றாய்!

கட்டிப் பார்த்துக் கனிவாய் வாழ்ந்திருந்த 

வீடுகளை நீயும் வினாடியில் மூழ்கடித்து 

மீளாத் துயரில் வேதனையில் ஆழ்த்திவிட்டுப்

போகின்றாய் என்றும் போகாத தனிவழியில்!

உன்கரையில் வீடுகட்டி உன்னோடே வாழ்ந்தோரை

இரக்கமே யில்லாமல் வதைப்பதில் நியாயமில்லை!

நீயோடக் கரையுண்டு நீள்பாலம் மிகவுண்டு

உனக்குத் துணையாக உயர்மீன் பலவுண்டு

பண்டிகைக் காலங்களில் பரமனாய் உனைநாங்கள்

பூஜித்து மகிழ்வதுண்டு! புண்ணிய நதிகளென்று 

தாயாய் உனையென்றும் தரணியில் உயர்த்தியே

உளத்தில் மதிப்பதுண்டு! உவகை மிகக்கொண்டே

தீர்த்தமாய் உன்னைத் தீங்கறியாக் கோயில்களில் 

பாவித்தே உனக்குப் பவித்திரத்தைத் தருவதுண்டு!

இதையும் படியுங்கள்:
முத்தான மூன்று கவிதைகள்...!
நேபாள பெருவெள்ளம் | Nepal flood

வளர்த்தகடா மார்பில் வலுவுடனே பாய்வதைப்போல் 

வளர்ந்தபிள்ளை வரம்பின்றி வயதான பெற்றோரை

மதிப்பின்றி நடத்தி மகிழ்வதனைக் கொல்வதுபோல் 

‘யூ டூ ப்ரூடஸ்’ என்று நட்பே பகையாக

கட்டி வந்தவளே கணவனுக்கு எதிரியாக 

மாறும் இவ்வுலகில் மாறினாயோ மழையேநீயும் 

நன்றிகெட்ட மனிதனின் நயவஞ்சகப் பழக்கத்தை

விட்டுவிடு நீயும்!வீம்பி்ல் வீழாதே!

நேபாள பெருவெள்ளம் | Nepal flood
நேபாள பெருவெள்ளம் | Nepal floodImage credit: Gemini AI

அறம்பாடித் தீயோரை அழித்தனராம் எம்முன்னோர்

மறமிக்க மற்றோரோ மனமுவந்து மதியாரை

பலமிக்கத் தம்கரத்தாலே பயந்தோட விட்டனராம்

எழிலான இவ்வுலகை ஏழையரை நல்லவரை

பலிவாங்கும் அனைவருமே பகைவர்தான் எங்களுக்கு!

எங்களுக்குப் பாசமுண்டு ஏகமாய் நன்றியுண்டு

நன்றிகெட்ட எவருமே நலத்தோடு வாழ்ந்ததில்லை

உன்நலத்தைக் காத்திடவே உடனடியாய்த் திருந்திவிடு!

ஐஸ்கட்டி உருகினால் ஆதரவைத் தரவேண்டும் 

நீராகமாறித் தாகம் போக்க வேண்டும் 

பேயாகமாறிப் பெரும் வீடுகளைப் பாலங்களை

அடித்திழுத்துப் போவதல்ல அதனுடைய முழுவேலை!

பொதுவாக ஊர்காக்கும் பொதுப்பணியில் தங்களையே

அர்ப்பணிக்கும் மக்களுக்கு நீரே பெருந்துயரை

நீங்காத துன்பத்தைக் கொடுத்தே சரித்திரத்தில் 

கொடுமை செய்பவனாய் மாறியதுஏனோ மாரியே!

இதையும் படியுங்கள்:
கவிதை: முதுமையின் முகவரி
நேபாள பெருவெள்ளம் | Nepal flood

கொட்டித் தீர்க்கும் கோபத்தைக் குறைத்துக்கொள்!

பட்டிதொட்டிகளும் பகல் இரவாய் நீருக்கு

அலையும் நிலையினையே அடியோடு ஒழித்துவிடு!

மாதம் மும்முறையாய் மகிழ்வாய் நீபெய்தால் 

மகிழுமே இவ்வுலகம்! மடியில் உனைத்தாங்கி

பிள்ளைக்கும் மேலாகப் பெருமையுடன் கொஞ்சிடுவர்!

நின்று நிதானமாய் நீபெய்தால் நீளுலகம் 

நிம்மதியில் ஆழ்ந்துவிடும்!நிதமும்உன்னை வணங்கிவிடும்!

logo
Kalki Online
kalkionline.com