கவிதை: நிலைக்கட்டும் உம்புகழ் சரித்திரத்தில்!

மனிதனை மனிதன் மாய்க்கும் மறத்தினை ஒழிக்க வேண்டும்! மனிதத்தைப் போற்றிக் காக்கும் புனிதத்தை வளர்க்க வேண்டும்!
Peace, unity, and global cooperation
Tamil poetry - Peace, unity, and global cooperation Img credit: AI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

நிலைக்கட்டும் உம்புகழ் சரித்திரத்தில்!

மனிதனை மனிதன் மாய்க்கும்

மறத்தினை ஒழிக்க வேண்டும்!

மனிதத்தைப் போற்றிக் காக்கும்

புனிதத்தை வளர்க்க வேண்டும்!

இரவு பகலாய் முயன்று

இவ்வுலக விஞ்ஞானிகள் யாவரும்

தோற்றுவித்த அனைத்தும் இங்கு

சோக கீதம் பாடத்தானா?

ஐக்கிய நாடுகள் சபை

ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம்

அமைதி மற்றும் ஒத்துழைப்பை (Peace & Cooperation)

அகிலத்தில் நிலை நாட்டத்தானே?

அதுவா இன்று நடக்கிறது?

தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆவதைப்போல்

ஐந்தாறு நாடுகள் அடிக்கின்றகூத்தில்

பூமிப்பந்தன்றோ பொசுங்கியே சுழல்கிறது!

இருநூறுக்கு ஏழேநாடுகள் குறைவாக

உறுப்பினர்களைக் கொண்ட சபை

உருப்படி இல்லாது போனதால்

அமைதியும் சமாதானமும் உலகில்

அலைக்கழிந்து விழி பிதுங்கி

ஒதுங்க இடந்தேடி ஓடிப்பதுங்குகிறது!

ஐநா சபை தன்னின்

படை பலத்தைப் பெருக்குதலே

உடனடி உலகின் தேவை…

உலகநாடுகள் உணர வேண்டும்!

ஒவ்வொரு நாடும் இதற்கு

உடனடியாய் உதவ வேண்டும்!

ஒவ்வொரு கண்டந் தன்னிலும்

உயர்படையை நிறுவ வேண்டும்!

நீதியை மறந்து விட்டு

நிம்மதி இழக்கச் செய்யும்

செயல்களில் இறங்கும் நாட்டை

செயலிழக்கச் செய்ய வேண்டும்!

உறுப்பு நாடுகள் அத்தனையும்

ஒதுக்கியே வைக்க வேண்டும்!

பொருளாதார நிதித் தடைகளை

போட வேண்டும் இரக்கமின்றி!

பொறுமைக்கும் எல்லை உண்டு!

பொய்களும் புனை சுருட்டுகளும்

அரங்கேறி ஆட்சி செய்தால்

அதற்கொரு முடிவு வேண்டும்!

சண்டிகள் வெறித் தெழுந்தால்

சகலத்தையும் அழித் தொழித்து

சமாதானத்தை நிலை நாட்டி

தருமத்தை உயர்த்த வேண்டும்!

இயற்கையாய்ப் பிறந்த மனிதன்

இயல்பாக இறக்க வேண்டும்!

இதையும் படியுங்கள்:
கவிதை: தேர்தல் மை!
Peace, unity, and global cooperation

வார் (War) என்று பெயரிட்டு

வஞ்சனையாய் மனிதர் கொல்லும்

உன்மத்தம் மாள வேண்டும்!

உலகில் நல்அமைதி வேண்டும்!

உலகப் பெருந் தலைவர்களே!

ஒருகணம் சற்றே யோசியுங்கள்!

போர் எதற்கும் முடிவாகாது!

போய்விட்ட நல் வீரர்களை

திரும்பவும் அழைத்து வர

தியரிகள் ஏதும் உம்மிடமில்லை!

பிறந்த மனிதர் அனைவரையும்

பேணிக் காக்கும் உபாயமுண்டு!

மனிதனை மனிதன் மாய்க்கும்

மறத்தினை ஒழிக்க வேண்டும்!

மனிதத்தைப் போற்றிக் காக்கும்

புனிதத்தை வளர்க்க வேண்டும்!

இதனைமட்டும் நீவீர் செய்தால்

நிலைத்திடும் உம்புகழ் சரித்திரத்தில்!

logo
Kalki Online
kalkionline.com