
மனிதர்களைக் காப்பாற்ற வா!
இளைஞனே! இனியவனே!
உன் கண் சிமிட்டலுக்காகத்தான்
உலகம் காத்திருக்கிறது!
அன்று...மெரினாவில் நீ...
ஜல்லிக்கட்டு வேண்டி...
இருந்த தவத்தை...
இவ்வுலகமே ரசித்தது!
-ஆம்! அது போராட்டமல்ல!
உயர்ந்த தவம்!
குடியில்லை! கூத்தில்லை!
கொஞ்சும் மங்கையர் அருகிருந்தும்
வரம்பு மீறிய வார்த்தைகள் கூட இல்லை!
கொட்டிய பனியிலும் நடுக்கிய குளிரிலும்
கொள்கைப் பிடிப்புடன் குரங்கு மனத்தையும்
அடக்கி வைத்தே ஆளுமை செய்தாய்!
அரசியல்வாதிகளின் ஆசைவார்த்தைகளில்
நாங்கள் ஏமாந்ததே நிஜம்!
இனாமாகச் சிலவற்றை...
எங்களுக்குக் கிள்ளிக் கொடுத்துவிட்டு
அவர்கள் அள்ளிச் சென்றதை
இப்போதல்லவா அறிகிறோம்!
பொருட்களை மட்டுமல்ல...
பொங்கி வந்த காவிரியின்
மணலையுமல்லவா அள்ளிக் காசாக்கி
அடாவடி செய்கிறார்கள்!
அவர்களின் அடிவருடிகளாக
அதிகாரிகளும் ஆகிப் போனதல்லவா
எமது உச்சகட்ட சோகம்!
எல்லோரையும் பார்த்து...
இயலாமையில் தவிக்கின்றோம்!
இளைஞனே! நீதான் எங்கள்
இறுதி இலக்கு!
நெஞ்சில் உரத்துடன்
நேர்மைத் திறத்துடன்
மாட்டைக் காப்பாற்றிய நீ...
மனிதர்களைக் காப்பாற்ற வா!