
சட்டம் எல்லோருக்கும் சமம்
என்பதெல்லாம் ஏட்டில்தான்!
அரசியலார்க்கும் அதிகாரிகளுக்கும்
அது எப்போதும் பாக்கட்டில்தான்!
காவலும் நீதியும் கைகட்டி
சேவகம் பண்ணுமாம்!
இந்தியன் என்பதில்
ஏகப் பெருமையாம்!
கர்நாடகா நீர் தராதாம்!
ஆந்திரா அணை கட்டுமாம்!
கேரளாவோ... முல்லைக்கும்
பிறவற்றிற்கும் முட்டுக்கட்டை போடுமாம்!
மக்கள் சேவை செய்ய
சட்ட மன்றம் செல்வோரின்
சொத்துக்கள்தான் கூடுகின்றன!
ஏழைகள் என்றைக்கும் ஏழைகள்தான்!
நாட்டின் கடனும் வட்டியும்
கூடுவதுதான் கண்ட பலன்!
அமைதிப் பூங்கா என்பதெல்லாம்
ஆளுவோரின் வாய்ச் சொல்லில்தான்!
தினந்தினம் வழிப்பறி.. செயின் அறுப்பு..
அடிக்கடி கொலை.. கொள்ளை...
ஒவ்வொரு நாளும் நடப்பதைப் பார்த்து
உறையும் பயத்தில் மக்கள்!
தமிழ் தமிழ் என்கின்றனர்
ஆளுவோரும் எதிரணியினரும்!
இன்னும் சில மாதங்களில்
சென்னை உணவகங்களில்
இந்திதான் பேச்சு மொழி!
இந்தி தெரியாவிட்டால் இல்லை சாப்பாடு!
நதிகளை இணைக்கப் போவதாய்
நாளும் தினமும் வாக்குறுதிதான்!
நாட்டில் நடப்பதென்னவோ...
விவசாயிகள் தற்கொலைதான்!
கல்லணை இன்றும் கல்லாய் நிற்க
முந்தாநாள் பாலமோ முழுதாய் ஆற்றுக்குள்!
ஆளுபவர்கள் ஆட்சியைத் தக்கவைப்பதிலும்
இழந்தவர்கள் மீண்டும் வருவதிலேயே குறி!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
பண்பாடுகள் எல்லாம் பாழாக...
காதலித்துக் கை பிடித்தவர்கள் எல்லாம்
இரண்டாண்டுகளுக்குப் பிறகு...
ஏறி இறங்குவது... இளைப்பாறுவது...
இவையெல்லாம் கோர்ட் படிக்கட்டுகளில்தான்!